மண்டூர் கிராமமும் நுண் அரசியலும் | தினகரன் வாரமஞ்சரி

மண்டூர் கிராமமும் நுண் அரசியலும்

மட்டக்களப்பென்றாலே அனைவருக்கும் ஞாபகத்துக்கு வருவது மட்டுநகர் வாவியே. மட்டு வாவியைஅடிப்படையாக கொண்டே எழுவான் கரை, படுவான் கரை எனும் பிரிப்புகள் (சூரியன் உதிப்பது எழுவானாகவும் மறைவது படுவானாகவும் கொள்ளப்படுகிறது) இடம்பெற்றுள்ளன. மட்டு. மாவட்ட பட்டிருப்பு, போரதீவு ஆகியவற்றை பட்டிருப்பு பாலமும் உலக நாச்சி அரசாட்சி புரிந்த ஆரையம்பதி, கொக்கட்டிச்சோலையினை மண்முனைப் பாலமும், கல்லடி மட்டக்களப்பினை மட்டக்களப்பு பாலமும் புதூர் வவுணதீவினை வலையறவுப் பாலமும் பிரிக்கின்றன.

குருக்கள்மடம், அம்பிளாந்துறை, குறுமண்வெளி, மண்டூர், கிண்ணையடி முருக்கன்தீவு ஆகிய கிராம மக்கள் எழுவானிலிருந்து படுவான்கரையினை கடக்க முறையான மார்க்கமின்றி இற்றைவரை இயந்திரப்படகுப் பாதையினையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கட்டுரை குறுமண்வெளி,மண்டூர் பாதையினை மண்டூர் கிராமத்தின் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை விபரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்த காலப்பகுதியில் மண்டூர் பிரதேசத்தின் ஒருபகுதி காடு அடர்ந்த பிரதேசமாகவும், மற்றொரு பகுதி சோலையாகவும் ஆலயத்தின் முன் பகுதி களப்பாகவும் இருந்துள்ளாதாக அறியமுடிகிறது. வேடர்கள் காட்டு வழியினால் வேட்டையாட வரும்போது தில்லை மரத்தில் தங்கவேலாயுதம் ஒன்றைக் கண்டு அதனையே வழிபட்டு வந்ததாகவும் முற்குகரின் வன்னிமை ஆட்சிக்குட்பட்டதாகவும் விளங்குகின்றது.

தில்லை மரத்தில் இருந்த வேலை வைத்து சிறு சுவர் அமைத்து அவ்வேலையே எமது மூதாதையர்கள் வழிபட்டு வந்தனர். மண்டூர் முருகனாலயத்தின் மூலமூர்த்தியாக மூலஸ்தானத்தில் தங்கவேல் ஒன்று காணப்படுவதை மண்டூர் குடிவழி ஆலயப் பரம்பரையினருக்கூடாக அறிய முடிகிறது.

நாகர்களுக்குள் இருந்த மண்டூநாகன் எனும் தலைவன் இவ் ஊர் மக்களையும் ஆலயத்தையும் நெறிப்படுத்தியதாலும் இப் பிரதேசம் மண்டூ மரங்கள் நிறைந்த மண்டூச் சோலையாக இருந்ததாலும் இவ்வூர் மண்டூர் என அழைக்கப்படலாயிற்று.

மண்டூக்கோட்டைமுனை மண்டூர் என மருவியுள்ளதாகவும் அறிய முடிகிறது.

மட்டு. மாவட்டம் இலங்கையின் கிழக்கு கரையோரமாகவும் மண்டூர் கிராமம் வாவி நீர்ப்பரப்பை ஒட்டியதாகவும் மட்டு.மாநகரின் தெற்கே சுமார் 30 மைல்கள் தூரத்திற்கப்பாலே மண்டூர்க் கிராமம் அமைந்துள்ளது.

மட்டு. மண்டூர் பிரதேசம் நீண்ட பாரம்பரியங்களையும் வழிபாட்டு முறைகளையும் அதனோடு இணைந்த பண்பாட்டையும் கட்டிக்காக்கின்ற பழம்பெரும் பிரதேசமாக மண்டூர் திகழ்கிறது.

மட்டக்களப்பு வாவியே குறுமண்வெளி மண்டூர் ஆகிய இரு கிராமங்களை பிரித்து நிற்கின்றது. சுமார் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இரு ஊர்களுக்கும் இடையேயான போக்குவரத்து மார்க்கம் தோணி, வள்ளம், படகு என வளர்ச்சியடைந்து தற்பொழுது இயந்திரம் பொருத்தப்பட்ட பாதையாக செயற்பட்டு வருகின்றது.

மட்டு. மாவட்ட ஆரையம்பதி, மண்முனைப் பாலத்தினூடாக கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, நாவிதன்வெளி, சம்மாந்துறை மற்றும் வீரமுனை ஆகியவை மிகப் பிரதான படுவான்கரை பாதை மார்க்கமாகவுள்ளது. அம்பாறையிலிருந்து மட்டு மாவட்டம் செல்லும் பொதுமக்கள் வெள்ளகாலங்களின் போது இப் பாதையினை பயன்படுத்துவதில் பல்வேறு அசெளகரியங்களுக்குள்ளாகின்றனர்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கறுத்தப்பாலம் மண்டூர் மற்றும் வெல்லாவெளி ஆகிய இரு கிராமங்களை இணைக்கும் முதன்மையான பாலமாக இது இருக்கின்றது. இப்பாலத்தின் புனரமைப்புப் பணிகள் ஆமை வேகத்தில் மந்த கதியில் இடம்பெறுவதாக செயலகப் பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போதைய கறுத்தப் பாலம் பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் 1935 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பலகைகளாலும் 1980களில் கொங்கீறீட் பாலமாகவும் அமைக்கப்பட்ட இப்பாலம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தின் போது, மதகு நீரினால் மூழ்கப்பட்டு பாலத்தின் அடித்தள தூண்கள், சுவர்கள் உடைந்து வெடிப்புகள் ஏற்பட்டு கனரக வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதனால் படுவான்கரை பிரதேச வாழ்மக்கள் மட்டக்களப்பு, அம்பாறை உட்பட பல்வேறு பிரதேசங்களுக்கு செல்லவுள்ளோர் பல்வேறு அசெளகரியங்களுக்குள்ளாவதாக தெரியவருகிறது.

மழை வெள்ள காலங்களில், போரதீவுப்பற்று செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டூர் குறுமண்வெளிப் பாதை இயங்காத வேளைகளில், வெல்லாவெளி மற்றும் கிட்டங்கினை பாதை மார்க்கத்தினை பயன்படுத்தும் பொதுமக்கள் வெள்ள நீரில் அடித்து, இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.

வெல்லாவெளி கறுத்தப் பாலம் உட்பட தாம்போதிகள் மற்றும் கிட்டங்கிப் பாதை மார்க்கம் ஆகியவை டிசம்பர் மாத காலப்பகுதியில் பெருவெள்ளத்தினால் மூழ்கடிக்கப்படுவதனால், குறித்த பாதையினை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன சாரதிகள் ஆகியோர் கல்முனை, களுவாஞ்சிக்குடி ஆகிய நகரப்புறங்களுக்கு அவசர தேவையின் நமித்தும் செல்லும் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர்.

மண்டூர், குறுமண்வெளி இயந்திரப் படகு மார்க்கம் கடந்த ஐம்பது வருட காலத்துக்கு மேலாக கொந்தரத்து அடிப்படையிலேயே இயங்கி வருகின்றது.

ஐம்பது வருட காலத்துக்கும் மேலாக இயங்கிவரும் பாதையில் பொதுமக்கள் தவிர வேறு வாகனங்களையோ இதர பொருட்களையோ கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

Comments