மேற்குலகுக்கு எச்சரிக்ைகயாக அமைந்த ரஷ்யாவின் இராணுவ ஒத்திகை | தினகரன் வாரமஞ்சரி

மேற்குலகுக்கு எச்சரிக்ைகயாக அமைந்த ரஷ்யாவின் இராணுவ ஒத்திகை

நடந்து முடிந்த வாரத்தில் உலக அரசியல் போக்கில் ரஷ்யா தலைமையிலான போர்ப் பயிற்சி முதன்மையான செய்தியாக உள்ளது. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர் மிகப் பிரமாண்டமான போர் ஒத்திகை என்ற பிரகடனம் உச்சரிக்கப்படுகின்றது. அவ்வாறே அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும் குறிப்பிடப்படுகிறது. அவ்வகையில் இக்கட்டுரையானது ரஷ்யாவின் மிகப்பிரமாண்டமான போர் ஒத்திகை ஏற்படுத்தக்கூடிய அரசியல், இராணுவ பலக்கோட்பாட்டினை மதிப்பீடு செய்கின்ற நோக்கத்தினை கொண்டதாக உள்ளது.

ரஷ்யாவினுடைய வரலாற்றில் இதுவரை இல்லாதளவிற்கு, மிகப்பெரிய இராணுவ பயிற்சியான Vostok 2018 நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. கிழக்கு சைபீரியாவில் அடுத்த வாரம் வரை நீடிக்கும் இப்பயிற்சியில் 3 இலட்சம் வீரர்களும் 3600 இராணுவ வாகனங்களும் ஆயிரம் விமானங்களும் 80 போர் கப்பல்களும் ஈடுபடவுள்ளன. மேலும் 900 டாங்கிகளும் இப்போர்ப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும் என்றது. அண்மைக்காலத்தில் ரஷ்யா படைகளோடு இணைக்கப்பட்ட ஏவுகணைகள், D- 80, D 90 பீரங்கிகள், SU 34, 35 போர் விமானங்கள் ஆகிய நவீன போர் தளபாடங்கள் இப்பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இப்பயிற்சியில் சீனாவும், மொங்கோலியாவும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சீனா 3200 போர் வீரர்களையும் உலங்கு வானுர்திகளையும் இப்பயிற்சியில் ஈடுபடுத்தியிருப்பதோடு மொங்கோலியா 1000 இற்கும் மேற்பட்ட படைவீரர்களை இப்பயிற்சியில் ஈடுபடுத்த உடன்பட்டுள்ளது.

இத்தகைய போர்ப் பயிற்சி இச்சந்தர்ப்பத்தில் ஏன் மேற்கொள்ளப்படுகின்றது என்பது பிரதானமான கேள்வியாகும். உலக அரசியலில் அமெரிக்கா உட்பட்ட மேற்குலத்திற்கு எதிராக இப்போர் ஒத்திகை மேற்கொள்ளப்படுவதாக ஊடகங்களாலும் ஆய்வாளர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. அண்மைக்காலமாக ரஷ்யா, அமெரிக்காவிற்கு எதிரான நடைமுறைகளையும் முதன்மைப்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக மேற்காசிய அரசியலில் மத்திய ஆசியா சார்ந்த குடியரசுகளில் அமெரிக்காவின் தலையீட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் விதத்தில் செயல்பட்டு வருகின்றது. சிரியா விவகாரம் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்குமான முரண்பாட்டை தீவிரப்படுத்திய விவகாரம் என குறிப்பிடமுடியும். காரணம் சிரியா மேற்காசியா அரசியலில் நிர்ணயமான சக்தி என்பதை கடந்த ஆறு வருடம் நடந்த உள்நாட்டு யுத்தம் நிறுவியுள்ளது. மேற்காசியா முழுவதையும் தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சியில் கவனம் செலுத்திய அமெரிக்கா, அரபு வசந்தத்தின் ஊடாக மேற்காசியா ஆட்சியாளர்களை அழிவிற்குள்ளாக்கி புரட்சி என்ற பெயரில் அமெரிக்க மேலாதிக்கத்தின் அடிவருடிகளை அரசியலில் அமர்த்த திட்டமிட்டது. அதனை முறியடிக்கும் களமாக சிரியா விளங்குகின்றது.

சிரியாவும், ரஷ்யாவும், ஈரானும், சீனாவும் இணைந்து அந்த முறியடிப்பை வெற்றி கொண்டன. இத்தகைய முறியடிப்பு போருக்கு ரஷ்யாவின் ஜனாதிபதி புட்டினே தலைமை தாங்கினார். உக்ரைனில் ஆரம்பித்து இட்லிப் பிராந்தியம் வரையிலான ரஷ்யாவின் நகர்வானது அமெரிக்காவை அப்புறப்படுத்தும் அல்லது துடைத்து அழிக்கும் சமர் ஒன்றிற்கான பாதையாகவே புட்டினால் கருதப்பட்டது. தற்போது அதன் இறுதி இலக்கான இட்லிப் பிராந்தியம் சிரிய, ரஷ்யா கூட்டினால் கையகப்படுத்தும் நிலைக்குள் காணப்படுகின்றது. இவ்வாறு மேற்காசியா பிராந்தியம், மத்திய ஆசிய பிராந்தியம் என்பன ரஷ்ய அணியின் செல்வாக்கிற்குள் அகப்பட்டதற்கு இவ்வணி ஏற்படுத்திக் கொண்ட இராணுவ பலக் கோட்பாடே காரணமாகும்.

உலக அரசியலில் யதார்த்தவாத கோட்பாடே இராணுவ பல கோட்பாட்டை முழுமையாக கொண்டது. இந்திய யதார்த்தவாத கோட்பாளர்கள் இராணுவ பல கோட்பாட்டின் உலகளாவிய தரிசனம் பற்றி அதிகம் முதன்மைப்படுத்துகின்றனர். உலகம் பொருளாதார கோட்பாடுகளுக்கு அப்பால் உலகமயவாக்கம் இராணுவ பல கோட்பாட்டையும் உலகம் தழுவிய தளத்தில் பிரயோகப்படுத்தி வருகிறது. இதற்கான உலகமயப்படுத்தல் அரசியல், பொருளாதார, இராணுவ இருப்புக்களை நேர்கணியத்தில் நிறுத்தியுள்ளது. பொருளாதாரத்திற்கு மட்டுமே உலகமயமாக்கம் என்ற சிந்தனை முதன்மைப்படுத்தப்பட்ட போதும் அது இராணுவத்திற்கும் பொருந்தக்கூடியது என்பதை மறுக்கமுடியாது. இராணுவ வாதம் மேலாங்கி இருக்கின்ற இருபத்தியோரம் நூற்றாண்டில் ரஷ்யா கிழக்கு, மத்திய, மேற்கு ஆசியாவை மட்டுமன்றி முழு உலகத்தையும் இராணுவ பலக் கோட்பாட்டினால் ரஷ்யாவின் கீழ் உட்படுத்த திட்டமிட்டு இருக்கின்றது. அத்தகைய திட்டமிடல் இரு பரிமாணங்களில்வெளிப்படுத்தப்படுகிறது.

தாக்குதல் தந்திரோபாயம் ரஷ்சியாவின் போர் ஒத்திகை மூலம் தனது இராணுவ பலத்தை எதிரிகளுக்கும் உலகத்திற்கும் தெரியப்படுத்தும் விதத்தில் இதனை மேற்கொண்டுள்ளது. அதிகார சமநிலையில் ரஷ்யா அடைந்து கொண்ட அண்மைக்கால பலவீனங்களை சரி செய்யும் விதத்திலும் மீள எழுச்சி அடைந்துள்ளது என்பதை கோடிட்டு காட்டவும் இப் போர் ஒத்திகையை ரஷ்யா பயன்படுத்தியுள்ளது. இது ஒரு வகை போர் என்றே வர்ணிக்கப்படுகின்றது.

சைபீரியாவில் ரஷ்யா ஒரு தாக்குதலை நிகழ்த்துகின்றது. இதே போன்று ஒரு தாக்குதலை அது உலகத்தின் எப்பாகத்திலும் மேற்கொள்ள தயாராகவுள்ளது. எதிரி நாடுகள் இது தொடர்பான விழிப்பையும் எண்ணத்தையும் பெறவேண்டும் என்பதற்காகவே இத்தகைய தாக்குதலை ஒத்திகையாக முன்மொழிந்துள்ளது.

தற்காப்பு தந்திரோபாயம் என்பது தான் சார்ந்து இருக்கும் நாடுகளையும் தனக்கான அணியினையும் அவற்றிக்கு எதிரிகளால் ஏற்படுகின்ற நெருக்கீடுளையும் எதிர்கொள்வதற்கான உபாயம் ஆகும். குறிப்பாக சிரியாவின் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் இறுதிப் பிரதேசமான இட்லிப் பிராந்தியத்தில் சிரியா அரசும் ரஷ்யாவும் இணைந்து தாக்குதல் நடத்துகின்ற போது அமெரிக்காவின் எச்சரிக்கைகளுக்கும் ஐ.நாவின் வேண்டுகோள்களுக்கும் பதில் அளிக்க வேண்டியது பொறுப்பாண்மை என்பதை ரஷ்யா உணர்ந்துள்ளது. இந்த ஒத்திகை மூலம் அத்தகைய பிராந்தியங்கள் மீது அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளால் எதிர்கொள்ளப்படும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் முகமாகவே தற்காப்பு தந்திரோபாயத்தை பிரயோகிக்க ரஷ்யா முயலுகின்றது. இது இப்பிராந்தியத்தில் மட்டுமன்றி புவியினுடைய எந்த பாகத்திலும் அண்டவெளியிலும், கடலிலும் கூட எதிரிகளை எதிர்கொள்கின்ற விதத்திலேயே போர் ஒத்திகை வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகத்தில் இவ்வகை ஒத்திகையின் ஊடாக எச்சரிக்கை விடுவது முதல் பிரயோகமாக அமைந்தாலும் அமெரிக்காவின் தலையீட்டை தவிர்ப்பதற்கு இம்மாதிரியான அணுகுமுறைகள் மட்டும் போதாது என்பது ரஷ்யா விளங்கிக் கொண்ட ஓர் அம்சம். அதனால் இதனை ஒரு இராஜதந்திர தளத்திலும் பிரயோகிக்க முயற்சிக்கின்றது. இது அமெரிக்காவை மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒரு இராஜதந்திர செய்தியாகவே அமைந்திருக்கின்றது. ஆனால் ரஷ்யா கட்ட முயற்சிக்கும் இராணுவவாத சிந்தனை என்பது அமெரிக்கா எதிர்கொண்டு இருக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் எழுப்பப்பட்டுள்ள ஒரு விடயமாகவே உள்ளது. அமெரிக்கா பொருளாதார ரீதியிலும், வர்த்தக அடிப்படையிலும் நெருக்கடிகளை சந்தித்து இருக்கும் சந்தர்ப்பத்திலும் அமெரிக்க ஜனாதிபதியின் ஆட்சிக்கு எதிராக எழுந்திருக்கும் சர்ச்சைகள் புட்டினுக்கு வாய்ப்பான செய்தியாகும்.

ரஷ்யாவும் அதன் ஜனாதிபதி புட்டினும் வெளிப்படுத்துகின்ற இராணுவ ஒத்திகை மூலம் மிக நேர்த்தியானதொரு காலத்தில் மிகத் தந்திரோபாயமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. புட்டின் சிறந்த ராஜதந்திரி என்பது சிரியா விவகாரத்தை அவர் கையாளுகின்ற ஆரம்ப காலகட்டத்திலிருந்தே அறிய முடிகின்றது.

உலக அரசியலின் போக்கை மாற்றத்துக்குள்ளாகியது, சிரிய துறைமுகம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டமை மூலம் நிரூபணமாகியது. அவ்வாறே அமெரிக்கா முன்வைத்த ஐ.எஸ் இற்கு எதிரான பயங்கரவாதம் என்ற குற்றச்சாட்டை புட்டின் அங்கீகரித்துக் கொண்டமை, என்ற இரண்டு சம்பவங்களும் அமெரிக்காவின் சுமூகமான பயணத்தையும் ஆக்கிரமிப்பு உத்திகளையும் எல்லையற்ற விஸ்தரிப்புக்களையும் தடுப்பதற்கான முயற்சிகள் ஆகின. இதுவே சர்வதேச அரசியல் போக்கை புதிய தளத்திற்கு இட்டுச்சென்றது. அமெரிக்காவின் இராணுவ பலப் பிரயோகத்தை எதிர்கொள்ளக்கூடிய சக்தியாக ரஷ்யா தன்னை மாற்றிக்கொண்டதோடு மட்டுமன்றி அதனை அதன் புவிசார் அரசியல் தளத்தில் பிரயோகிக்கவும் ஆரம்பித்துள்ளது. ஒருவகையில் புட்டின் உலக அரசியலில் புவிசார் அரசியல் பற்றிய எண்ணத்தின் முக்கியத்துவத்தை மீள முதன்மைப்படுத்த ஆரம்பித்துள்ளார். இது படிப்படியாக அமெரிக்காவின் இராணுவ பலத்திற்கு சவால் விடுவதாகவே உள்ளது

எனவே, ரஷ்சியா மேற்கொண்டு வரும் பிரமாண்டமான இராணுவ ஒத்திகை மீள உலக மாற்றத்தின் திசைக்கான ஆரம்ப புள்ளியாக உள்ளது. இதில் சீனா, மொங்கோலியா இணைந்திருப்பதும் ஈரான் சிரியா, துருக்கி, வடகொரியா ஆதரவு அளித்திருப்பதும் அதன் கூட்டுப் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. இத்தகைய ஒத்திகை இராணுவ சமநிலையில் ரஷ்யாவின் பக்கம் வலுவையும் அதன் நட்பு நாடுகளுக்கொரு உந்து விசையையும் கொடுப்பதோடு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நெருக்கடி மிக்க நகர்வாகவும் அமைந்துள்ளது. இவ் ஒத்திகை இராணுவ இராஜதந்திரத்தின் ஒத்திகையாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இவற்றின் மூலம் எதிரியின் தலையீட்டையும் சுமூகமான நகர்வுகளையும் தகர்ப்பதில் வெற்றிகரமான ஒரு விலை ரஷ்யாவிற்கும் அதன் கூட்டு சக்திகளுக்கும் கிடைத்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்பன பொருளாதார சவாலுக்குள் சிக்குண்டு இருக்கும் போது மேலும் ஒரு நெருக்கடி யை ரஷ்யா ஏற்படுத்தியுள்ளது. இதனை மேற்கு வெற்றி கொள்வது என்பது கடினமானது.

 

 

 

Comments