அரசியல் தீர்வைத் துரிதப்படுத்த இந்தியாவின் அழுத்தம் அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் தீர்வைத் துரிதப்படுத்த இந்தியாவின் அழுத்தம் அவசியம்

இந்தியாவுக்கான நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்ளும் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் இலங்கை இனநெருக்கடிக்கு விரைவான தீர்வை பெற்றுக்கொள்வதற்கு காத்திரமான பங்களிப்பைச் செய்யுமாறு இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க விருப்பதாக நம்பிக்கையான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

கடந்த காலங்களில் அரசாங்கங்கள் அளித்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படாத நிலையில் சிறுபான்மை மக்களும் சிறுபான்மைக் கட்சிகளும் நல்லாட்சி அரசு மீது வைத்த நம்பிக்கை கூட நலிவுற்றுக் காணப்படுவதாகவும் அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் அரசு காய்நகர்த்தல்களையே முன்னெடுத்து வருவதாகவும் சிறுபான்மைக் கட்சிகள் விசனத்தை வெளிக்காட்டியுள்ளன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று புது டில்லிக்கான நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்கின்றது.

இந்த விஜயத்தில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் அமைச்சர் மனோ கணேசன், ஈழமக்கள் ஜனநாயக்கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

பொது எதிரணி சார்பில் தினேஷ்குணவர்தனவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்த போதிலும் தங்கள் தரப்புக்கு எதிர்க்கட்சித் தலைமை பதவியை வழங்க சபாநாயகர் மறுத்ததனை காரணம் காட்டி இந்த அழைப்பை அவர் நிராகரித்துள்ளார். இந்த நிலையில் 9 பேர் மட்டுமே இந்த விஜயத்தில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி பயணமாகும் இக்குழு எதிர்வரும் 14ஆம் திகதி வரை அங்கு தங்கிநிற்கும், இவர்கள் அங்கு நிற்கும் காலத்தில் இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள், உட்பட பலரையும் சந்தித்துப் பேசவுள்ளனர். குழு புதுடில்லியில் பாராளுமன்றத்துக்கும் விஜயம் செய்யவுள்ளனர். அதே சமயம் பெங்களூருக்கும் செல்ல விருக்கின்றனர்.

சபாநாயகர் தலைமையில் குழு உத்தியோகபூர்வ சந்திப்புக்களில் பங்கேற்கும் அதேசமயம் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் தனிப்பட்ட சந்திப்புக்களையும் மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுபான்மைக் கட்சிகள் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் மனோகணேசன், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனும் முக்கிய அரசியல் தலைவர்களுடனும் தனிப்பட்ட ரீதியில் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதன்போது இலங்கையில் புரையோடிப் போயிருக்கும் இனநெருக்கடிக்கு துரிதமாக தீர்வைப்பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தியா முழுமையாகத் தலையிடவேண்டுமென அழுத்தம் கொடுக்க சிறுபான்மைத்தரப்பு தீர்மானித்துள்ளது. 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்றேனும் இனநெருக்கடிக்குத் தீர்வு பெற்றுத்தரப்படுமென அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் எதுவுமே இன்று வரையில் நிறைவேற்றப்படாததைக் குழுவினர் இந்தியத் தலைவர்களுக்கு நினைவூட்டி உடனடியாக இதுவிடயத்தில் தலையிடுமாறு அழுத்தம் கொடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மலையகம் வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகள். அவர்களது பொருளாதாரக் கட்டமைப்பை மேலோங்கச் செய்வதற்கான வேலைத்திட்டமொன்றையும் கோரவுள்ளதாகவும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோரவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடபுலத்தில் மேலும் பல வீட்டுத்திட்டங்களைப் பெற்றுத்தர வேண்டுமெனவும் மீளக் குடியேறும் மக்களின் வாழ்வாதாரத்தை மேலோங்கச் செய்வதற்கான ஒத்துழைப்புகளைக் கோரவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments