வேடிக்கையும் விளையாட்டும் தற்கொலையும் | தினகரன் வாரமஞ்சரி

வேடிக்கையும் விளையாட்டும் தற்கொலையும்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களுடைய தேவைகளைப் பற்றிச் சிந்திப்பதில்லை. இது குறித்து அரசாங்கத்துடன் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு பலமாக முன்வைக்கப்படுகிறது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அதற்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம். அதற்குப் பிறகு மேலும் மேலும் கூட்டமைப்பின் மதிப்பு கீழிறங்குவதற்கும் அதனுடைய முரணான நிலைப்பாடுகளும் செயற்பாடின்மையுமே காரணமாகும்.

இதனால் அரசியற் தீர்வும் கிட்டவில்லை. மக்களின் நாளாந்தப் பிரச்சினைகளும் தீரவில்லை.

தேர்தல் மேடைகளில் பேசப்பட்ட அரசியல் கைதிகள் விவகாரம், காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினை, சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த விரிவாக்கம், மாகாணசபை, உள்ளூராட்சி சபைகள் போன்றவற்றின் வினைத்திறனின்மை என்று ஏராளம் விடயங்களில் கூட்டமைப்பு ஆக்கபூர்வமாகச் செயற்படவில்லை என்பது பகிரங்கமானது.

அப்படிச் செயற்பட்டிருந்தால் இவற்றில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றமாவது எட்டப்பட்டிருக்கும்.

ஆகவே அரசியல் ரீதியாகவும் கூட்டமைப்பினால் பெறுபேறுகளை எட்ட முடியவில்லை. அப்படி இவற்றுக்குத் தீர்வைக்காண முடியவில்லை என்றால், போராடியிருக்க வேணும். போராடுவதாக இருந்தால் அரசை எதிர்க்க வேண்டும். ஆனால், அந்த நிலையில் இன்று கூட்டமைப்பினர் இல்லை.

பதிலாக வடக்குக் கிழக்கெங்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சிகளில் முன்னின்று பங்கு பற்றுகிறார்கள். ஜனாதிபதியும் பிரதமரும் பிற அமைச்சர்களும் வரும்போது வரவேற்பதற்கு நீ முந்தி, நான் முந்தி என முண்டியடிக்கிறார்கள். அதேவேளை வடக்குக் கிழக்கிலும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தப்படாமல் விடப்பட்டதைப் பற்றி வாயே திறக்காதிருக்கிறார்கள்.

இது ஏன்?

அரசியல் தீர்வையும் அதனோடிணைந்த விடயங்களையும் ஒரு பக்கம் வைப்போம். மக்களுடைய நாளாந்த வாழ்க்கைக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலாவது ஏதாவது உருப்படியான முயற்சிகளை எடுக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லையே. அதைப்பற்றி யாராவது பேசினால், அல்லது அதற்காக யாராவது முயற்சித்தால், அவர்களை அரசாங்கத்தின் ஆட்களாக, ஒத்தோடிகளாக, துரோகிகளாக, இன விரோதிகளாகப் பார்க்கிறார்கள். அவ்வாறு சமூகத்துக்குச் சித்திரிக்கிறார்கள். இதைச் சனங்களும் எந்தக் கேள்வியும் இல்லாமல், சிந்திக்காமல் விழுங்கி விடுகிறார்கள். இவ்வளவுக்கும் அரசாங்கத்தின் நிழலில் இருப்பது கூட்டமைப்பினரே.

இந்த மாதிரியான இரண்டக நிலையினால் இன்று வடக்குக் கிழக்கில் வேலையில்லாப் பிரச்சினை வளர்ந்து கொண்டிருக்கிறது. இளைய தலைமுறையினருக்கு வேலையில்லை என்றால் அது சமூக வன்முறையை உருவாக்கும். இதற்கு ஆதாரமாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோரில் அதிக எண்ணிக்கையானவர்கள் இளையதலைமுறையினரே என்று நீதிமன்றத் தகவல்களும் சமூகவியல் துறையினரின் அவதானங்களும் தெரிவிக்கின்றன. இவர்களைப் பற்றி ஆராய்ந்தால் எவருக்கும் நிரந்தரமான தொழில் இல்லை. குறிப்பிடத்தக்க வருமானம் இல்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் இவர்களை வேறு சக்திகள் தாராளமாகக் கையாளவே செய்யும். பிறகு அந்தச் சக்திகளைக் குறை சொல்லிப் பயனில்லை.

இதனால் இந்த இளைஞர்கள் அணிகளாகவோ குழுக்களாகவோ சேர்ந்து சமூக வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். இதைக் கவனித்து இளையவர்களைத் தொழில்துறையில் ஈடுபடுத்துவதற்கான பொறிமுறைகள் எதுவும் தமிழ்ச்சமூகத்திடம் இல்லை. அதற்கான கட்டமைப்பு எதுவும் கிடையாது. இதைக்குறித்து அரசியல் தலைமைத்துவத்தில் இருக்கும் கூட்டமைப்பின் கைகளிலும் கூட எந்த மாதிரியான சிந்தனையும் இல்லை.

மட்டுமல்ல, மக்களின் சமூக வளர்ச்சிக்கான உள்ளக அபிவிருத்தி பலவும் செய்யப்படாமலே கிடக்கிறது. உள்ளூர் வீதிகள் – குறிப்பாக வன்னியிலும் கிழக்கின் உள்கிராமங்களிலும் உட்தெருக்களில் பலவும் – புழுதியாகவே உள்ளன. தமிழ்ச் சமூகத்தின் பொருளாதாரம் மேலும் மேலும் வீழ்ச்சியடைந்து செல்கிறது. இதைப்பற்றிப் பேச முற்பட்டால் நாங்கள் உரிமை அரசியலையே செய்கிறோம். அதற்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். சலுகை அரசியலைச் செய்வதற்கு நாம் தயாரில்லை. சலுகை அரசியலைச் செய்ய முற்பட்டால் – வேலையில்லாப் பிரச்சினை, வீதி அமைத்தல், பொருளாதார அபிவிருத்தி பற்றி எல்லாம் பேச முற்பட்டால் - அதை வைத்தே அரசாங்கம் எங்களுடைய உரிமைக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்து விடும் என்கிறார்கள்.

இதைச் சனங்களும் நம்புகிறார்கள். தமிழ்ச்சமூகத்தின் அறிஞர்களும் நம்புகிறார்கள். அப்படி நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படியென்றால் சனங்களின் தேவைகளை யார் நிறைவேற்றிக் கொடுப்பது? சனங்களுடைய பிரச்சினைகளுக்கு யார் தீர்வு காண்பது? என்று கேட்டால், எங்களுக்கு ஒரு நிரந்தத் தீர்வு வரட்டும். அதற்குப் பிறகு, நம்மை நாமே சுயமாக ஆட்சி செய்வோம். அப்பொழுது எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம். அதற்குப் பிறகு சனங்களுக்குப் பிரச்சினைகளே இருக்காது” என்கிறார்கள்.

இதைக் கேட்கும்போது, ரஜனிகாந்தோ அர்ஜூனோ சினிமாவில் பேசும் வசனத்தைப் போலத் தோன்றுகிறதா? அல்லது ஏதோ மந்திரத்தால் மாங்காய் விழும் என்று சொல்வதைப்போல இருக்கிறதா?

நிச்சயமாக அப்படித்தான். இதுதான் ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல் நிலவரம். தீர்வு வந்த பிறகு பார்ப்போம் என்ற அருள் வாக்கு அரசியல்.

ஆனால், இதனை விடுதலை இயக்கங்கள் எதுவும் அன்று ஏற்றுக்கொள்ளவில்லை. அவை அரசியல் தீர்வையும் (அரசியல் விவகாரங்களுக்கான போராட்டத்தையும்) மக்களின் வாழ்க்கையையும் (வாழ்க்கைக்கான தேவைகளையும்) சமநிலைப்படுத்தியே தமது வேலைத்திட்டங்களை மேற்கொண்டன. இன்று அந்த இயக்கங்களின் வழிவந்தவர்கள் சுயமிழந்த நிலையில் இந்தப் பண்பை, இந்த அடிப்படையை மறந்து விட்டார்கள் என்பது துயரம். வெட்கம்.

இது ஒன்றும் புதியதல்ல. எல்லாமே உங்களுக்கும் தெரியும்.

ஆனாலும் இப்படிச் சாட்டுப் போக்குகளைச் சொல்லிச் சொல்லியே காலத்தைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்தத் தமிழ் அரசியல்வாதிகள். இதையிட்டு எந்தக் கேள்வியுமில்லாமலே அதிகாரத்தில் தொடர்ந்தும் இருக்கிறார்கள்.

இது எப்படி?

இதற்குத்தான் வலுச்சேர்த்துக் கொண்டிருக்கிறது இன உணர்வை மையப்படுத்திய அரசியல் கதையாடல்கள். அரசைப் பற்றிய எதிர்மறையான கதைகளை – எதிர்ப்புணர்வை ஓயாமல் ஊட்டிக் கொண்டேயிருப்பது. அரசு என்பது அநீதியான அமைப்பு என்ற கதையாடல்.

இலங்கை அரசு இனவாத மயப்பட்டிருக்கிறது என்பது உண்மையே. அதனுடைய அரசியலமைப்புத் தொடக்கம், பாராளுமன்ற நடைமுறைகள். அரச நிர்வாக அடுக்குகள், படைத்துறை என எல்லாமே இனவாதமயப்பட்டேயிருக்கின்றன.

அப்படியென்றால் இதை எதிர்கொள்வது எப்படி? இதைத் தோற்கடிப்பது அல்லது இதை வெற்றிகொள்வது எப்படி? என்று சிந்திக்காமல் வெறுமனே எதிர்ப்புணர்வை உமிழ்ந்து கொண்டிருப்பதால் எதுவுமே நடந்து விடாது. காகம் திட்டி மாடு சாவதில்லை அல்லவா.

எனவே அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கான வழிகளைப் பற்றிச் சிந்திக்க வேணும். அதைக் கண்டறிய வேணும். அப்படிக் கண்டறியும் வழிமுறைகளின் ஊடாக எல்லாப் பக்கத்தாலும் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குவதே ஒரே வழி.

அதனுடைய ஜனநாயக மீறல்களின் வழியாக நெருக்கடிக்குள்ளாக்குவது. அதனுடைய பொருளாதாரக் குறைபாடுகளின் வழியாக நெருக்கடிக்குள்ளாக்குவது. அதனுடைய இனப்பாரபட்சத்தின் வழியாக நெருக்கடிக்குள்ளாக்குவது. ஊழல், மத ஆதிக்கம் உள்ளிட்ட ஆட்சிக்குறைபாடுகளின் வழியாக நெருக்கடியை உண்டாக்குவது. வேலையில்லாதோரின் போராட்டங்கள் வழியாக, தொழிற்சங்கங்களின் எதிர்ப்புகளின் வழியாக என பலமுனைகளில் நெருக்கடிக்குள்ளாக்கும்போது அரசாங்கம் கீழிறங்கிப் பணியவே வேண்டும். இதற்கு நாட்டிலுள்ள ஏனைய நட்புத் தரப்புகளுடன் ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் தேவை. அதற்கான நட்புச் சக்திகளை அடையாளம் கண்டு, அவற்றோடு உறவாடல்களைச் செய்ய வேண்டும்.

இதுவே பொருத்தமான அரசியல் பணி.

இதை விட்டு விட்டு இனவாத அடிப்படையிலான – அரச எதிர்ப்புப் பெருங்கதையாடல்களைச் செய்வதால் எந்தப் பயனும் கிட்டப்போவதில்லை. முன்னரைப்போல தனித்து, தமிழ் அரசியலை முன்னெடுக்கும் நிலை இன்றில்லை. அதற்கான சர்வதேசச் சூழலும் இன்றில்லை. உள்நாட்டுச் சூழலும் இல்லை.

தமிழ்ச்சமூகத்தின் அகநிலையும் அதற்கானதாக இல்லை. அந்த அகநிலையை மாற்றியமைக்க முடியும். அப்படி ஒன்று உள்ளதெனில் அதையிட்டு யாரும் பகிரங்கமாக விவாதிக்க முன்வரலாம். அவர்கள் அதற்கான வழிமுறைகளையும் நடைமுறைச் சாத்தியங்களையும் சொல்ல வேண்டும்.

அதில்லாமல் அப்படிக் கருதுகின்றவர்கள் யதார்த்த அரசியலைக் குறித்துச் சிந்திப்போரில்லை. கற்பனையில் குதிரையோடுகின்றவர்கள். அவர்கள் களைக்க மாட்டார்கள். அவர்களுடைய குதிரைகளும் களைக்காது. அவை ஓடினால்தானே களைப்பதற்கு?

ஆனால், இந்தப் பெருங்கதையாடல்களை – யதார்த்த முரண்களை மறுத்துப் பேச முற்பட்டால் அதை எதிர்க்குரல், கலகக்குரல் எனப் பார்க்காமல், பிரச்சினைகளை உருவாக்கும் குரல், இனத்துக்கு எதிரான குரல், அரச ஆதரவுக்குரல், ஒத்தோடிக்குரல் என்றெல்லாம் சொல்லிப் புறக்கணிக்க வைத்து விடுகிறார்கள். அல்லது தனிமைப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.

இதைக் கடந்தும் பேச முற்படும் தரப்பினரை அரசாங்கத்தின் ஏஜென்டுகள், சலுகைக்கு விலைபோனவர்கள், துரோகிகள் என்று சொல்லி ஓரம் கட்டிவிடுவார்கள். இது தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்திலிருந்து வந்த குணம்.

ஆனால், 1960 களில் ஐ.தே.க அரசாங்கத்தோடு ஆட்சியில் பங்கேற்றிருந்தது இதே தமிழரசுக்கட்சி. அதில் அமைச்சுப் பொறுப்புகளையும் ஏற்றிருந்தது. பிறகு 1980 களின் தொடக்கத்தில் மீண்டும் ஐ.தே.கவுடன் மாவட்ட அபிவிருத்திச் சபையில் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அடையாளத்தின் கீழ் அரசோடு இணைந்து செயற்பட முனைந்தது. அதைப் போராளி இயக்கங்கள் தடுத்ததால் தவிர்க்க முடியாமல் ஒதுங்கியது. இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க அரசோடு தமிழரசுக் கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்தோடு சேர்ந்தியங்குகிறது.

அப்படியிருந்தும் அரசியற் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதிலும் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் அது பொறுப்பற்ற விதமாகவே நடந்து கொண்டிருக்கிறது.

மக்களின் தேவைகளைப் பெறுவது ஒன்றும் சலுகையல்ல. அதுவும் மக்களுடைய உரிமைகளேயாகும். மக்கள் தங்கள் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமைகள்.

இதை விளக்குவதும் இதைப் பெற்றுக் கொடுப்பதுமே மக்கள் பிரதிநிதிகளின் கடமை. இதற்காகவே கட்சிகளும் தலைமைகளும் உள்ளன. அரசியல் என்பது மக்கள் தமது வாழ்க்கைக்கான அடிப்படைகள் அனைத்தையும் பெறுவதற்கான வாய்ப்புகளையும் வழிவகைகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதேயாகும். இதற்கான கொள்கை, இலக்கு, வழிமுறை, திட்டமிடல், செயற்பாடு என தெளிவான வரைபடமிருக்கு.

தமிழ் அரசியலில் இவை எதுவுமில்லாமலே வெறும் வார்த்தைகளுடன் ஒரு விளையாட்டு நீண்டகாலமாக நடந்து கொண்டிருக்கிறது. செயற்பாடுகளும் விளைவுகளுமில்லாத – வெற்றி கிட்டாத விளையாட்டு. இந்த வார்த்தை விளையாட்டின் பின்னால் இழுபடுகின்ற சமூகமாகவே தமிழ்ச்சமூகம் உள்ளது. குறிப்பாக வடக்குக் கிழக்கு வாழ் தமிழர்கள். இந்தத் தமிழர்கள் வடக்குக் கிழக்கிற்கு வெளியே கொழும்பிலோ புலம்பெயர் நாடுகளிலோ வாழலாம். எந்த மாற்றமும் இல்லை. அச்சில் வார்க்கப்பட்டதைப்போல ஒரே மாதிரியாகவே சிந்திக்கிறார்கள். ஒரே மாதிரியே செயற்படுகிறார்கள்.

Comments