கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்கள் பேரியக்கம் | தினகரன் வாரமஞ்சரி

கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்கள் பேரியக்கம்

கட்சி அரசியலை விட்டு மக்கள் பேரியக்கமாக தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து எமக்கேற்ற தீர்வொன்றை அரசாங்கத்திடம் முன்வைத்துப் பெறுவது என்ற மாற்று வழி தன்னைச் சிந்திக்க வைத்துள்ளது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வருங்கால அரசியல் பயணம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனது எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் தன்னிடம் தற்போது நான்கு மாற்றுவழிகள் தரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் அவை தொடர்பான விளக்கங்களையும் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் தெரிவிக்கையில்,

ஒன்று திரும்பவும் வீட்டிற்குச் சென்று எனது ஓய்வு வாழ்க்கையைத் தொடர்வது.

இரண்டாவது,ஒரு கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் நிற்பது.

மூன்றாவது, புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பது.

நான்காவது, கட்சி அரசியலை விட்டு தமிழ் மக்கள் பேரவையை ஓர் உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்றி உள்நாட்டு வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வொன்றை முன் வைத்துப் பெற முயற்சிப்பது.

இந் நான்காவதாகக் கூறப்பட்ட விடயம் என் நண்பர் ஒருவரால் முன்வைக்கப்பட்டது. கட்சி அரசியலிலிருந்து என்னை வெளியேற்ற அவரால் கொண்டுவரப்பட்ட ஒரு சதியாக எண்ணி அதனை தட்டிக்கழிக்க முடியவில்லை. ஆனால் நான்காவது மாற்று வழி என்னைச் சிந்திக்க வைத்துள்ளது என்றும் குறிப்பட்டார்.

கட்சி சாரா பேரியக்கங்கள் பல நாடுகளில் மக்களின் ஒத்துழைப்புடன் பல அரசியல் மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றன. அதைப்பற்றி இன்றைய தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் கருத்து கூற வேண்டும். புதிய கட்சி தொடங்குவது பற்றியும் எல்லோரதும் கருத்தை அறிய ஆவலாய் உள்ளேன்.

கட்சி தொடங்குவது இலகுவானது, அதை நடத்துவது சிரமமானது. மேலும் கட்சிகளைப் பதிவு செய்யப் பல காலம் ஆகலாம். தேர்தல்கள் வந்தால் எந்தச் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற கேள்வியும் எழும்.

வரலாறு உங்களுக்கு வழங்க முன்வந்துள்ள தலைமைப் பாத்திரத்தை நீங்கள் ஏற்று முன்னெடுக்கத் தயாரா? எனத் தமிழ் மக்கள் பேரவையும் மக்களும் நீண்ட காலமாக என்னிடம் கேட்டு வருகின்றார்கள். இதற்குப் பதில் அளிக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருப்பதை ஏற்றுக் கொள்கின்றேன் என்றும் வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பித்த வடக்கு மாகாணசபை தலைமைப் பதவி அதிகாரபூர்வமாக இன்னமும் சில வாரங்களில் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து தமிழ் தேசிய அரசியல் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்து வருகின்றேன். இது தொடர்பில் பேரவையுடனும் அனைத்து தமிழ் தேசிய கொள்கை சார் அமைப்புக்களுடனும் இணைந்து உரிய முடிவை விரைவில் அறிவிக்கவுள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் செயலகம் பலாலி வீதியில் திறந்து வைக்கப்பட்டது இதில் கலந்துகொண்டபோதே அவர் தனது எதிர்கால அரசியல் பயணம் பற்றித் தெரிவித்தார்

வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கிணேஸ்வரன் எதிர்காலத்தில் அரசியலிருந்து ஒதுங்கமுடியாது என்பதை வலியுறுத்தியுள்ள தமிழ்மக்கள் பேரவையானது புதியகட்சிஒன்றை ஆரம்பிப்பதா?அல்லது இருக்கும் ஒரு கட்சியில் இணைந்து பணியாற்றுவதா? என்பதை விக்கினேஸ்வரனே தீர்மானிக்கவேண்டும் எனவும் தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

Comments