பாக். பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு | தினகரன் வாரமஞ்சரி

பாக். பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு

பாகிஸ்தானின் 22 ஆவது பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (வயது 65) நேற்று பதவியேற்றார்.

இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி மாம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இம்ரான் கானை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றனர். பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் ஜூன் 25இல் நடந்தது. இதில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி 116 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

தேர்தல் முடிந்த பின்னர் 9 சுயேச்சை எம்பி.க்கள் இம்ரான் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததால் பலம் 125 ஆனது. தேர்தல் கமிஷன் ஒதுக்கீடு இடங்கள் 60ல் ஓட்டு சதவீதம் அடிப்படையில் இம்ரான்கான் கட்சிக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 158ஐ தொட்டது. இதேபோல் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சிக்கு மொத்தம் 82 இடங்களும், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 53 இடங்களும் கிடைத்தன. பாகிஸ்தான் பாராளு மன்றத்தில் நியமன உறுப்பினர்கள் உள்பட மொத்த எண்ணிக்கை 342.

இதில், பிரதமராக தேர்வு செய்யப்பட வேண்டிய நபர் மொத்தம் 172 உறுப்பினர்களின் ஆதரவை பெற வேண்டும். இம்ரான் கட்சிக்கு பலசிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதையடுத்து, பிரதமர் தேர்தலில் இம்ரான்கானை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையில் 11 கட்சிகள் இணைந்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் நிறுத்தப்பட்டார். நேற்றுமுன்தினம் பிரதமர் தேர்தல் வாக்கெடுப்பு நடந்தது.

இதில் எம்பிக்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். இதில் இம்ரான்கான் 176 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்று பாகிஸ்தான் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். ஷாபாஸ் ஷெரீப்புக்கு 96 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான்கான் நேற்று பதவியேற்றார். அவருக்கு அதிபர் மாம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து பங்கேற்ற்றார்.

Comments