விளையாட்டுக்கள் மூலம் பிரபலமாகி நாட்டுக்கு தலைமை தாங்கும் பிரபலங்கள் | தினகரன் வாரமஞ்சரி

விளையாட்டுக்கள் மூலம் பிரபலமாகி நாட்டுக்கு தலைமை தாங்கும் பிரபலங்கள்

விளையாட்டின் மூலம் பிரபலமாகி நாட்டுத் தலைவர்களாக தங்களை உருவாக்கிக் கொள்ளும் வழக்கம் அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி ஜோர்ஜ் வொஷிங்டனின் காலம் முதல் இருந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஆப்ரஹாம் லிங்கன், தோமஸ் முட்ரோ வில்சன், தியடோர் ருஸ்வேல்ட், டிவையிட் டேவிட் ஐயிக், ஜோர்ஜ் டபிள்யூ புஷ், ரோனால்ட் றேகன், ஜோர்ஜ் வோகர் புஷ், பராக் ஒபாமா, இங்கிலாந்தின் சர். அலெக் டக்ளஸ் ஹோம், ஜோன் மேஜர், அவுஸ்திரேலியாவின் பொப் நோவிக் போன்ற நாட்டுத் தலைவர்கள் பல்வேறுபட்ட விளையாட்டுகளில் தேசத்துக்காக சர்வதேச போட்டிகளில் மிளிர்ந்தவர்கள். அந்தவகையில் அண்மையில் பாகிஸ்தான் நாட்டில் இம்ரான் கான் கிரிக்கெட்டினால் பிரபலயமாகி நாட்டின் தலைவராகியுள்ளார். இன்று உலகில் பல விளையாட்டு வீரர்கள் விளையாட்டின் மூலம் பிரபல்யமாகி பின் நாட்டின் தலைவராக மாறி தற்போது நாடாளும் சில விளையாட்டு வீரர்களின் விபரம்.

இம்ரான் கான் (பாகிஸ்தான்)

உலகின் சனத்தொகை கூடிய நாடுகளில் ஐந்தாவது இடத்தில் பாகிஸ்தானுள்ளது. அங்கு சுமார் 21 கோடி மக்கள் வாழ்கின்றனர். பாகிஸ்தானில் கடந்த 25ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் டெஹ்ரிக் ஈ. இன்சாப் கட்சி வெற்றிபெற்றது. அக்கட்சி கடந்த 1996ஆம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. அக் கட்சியை ஆரம்பித்து அதற்கு தலைமை தாங்கியவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான இம்ரான் கானாகும். அந்நாட்டின் அடுத்த பிரதமராக இவரே பதவியேற்கவுள்ளார். 1952ஆம் ஆண்டு பிறந்த இம்ரான் கான் பாகிஸ்தான் அணியில் சகலதுறை வீரராக வலம் வந்தவர். இவர் 1971 முதல் 1992ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவ்வணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்ததோடு தலைமைப் பொறுப்பையும் எற்று சிறப்பாக அணியை வழிநடத்தினார். இவரின் தலைமையின் கீழ் 1992ம் ஆண்டு பாகிஸ்தான் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

இவர் 88 டெஸ்ட் போட்டிகளில் 3807 ஓட்டங்களையும், 362 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார். மேலும் 175 ஒருநாள் போட்டிகளில் 3079 ஓட்டங்களையும், 182 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். நாட்டுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது சர்வதேச கிரிக்கெட் வீரர் இம்ரான் கானாவார்.

ஜோர்ஜ் வெயான் (லைபீரியா)

ஜோர்ஜ் டொவ்லன் மானேஹ் ஓபோன்க் அவுஸ்மன் வெயான் 1996ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் லைபீரியாவின் 25வது ஜனாதிபதியாவார். இவர் இவ்வருட ஆரம்பித்தில் ஜனாதிபதியாகத் தேர்வானார். இவர் அந்நாட்டின் பிரபல்யமான உதைபந்தாட்ட வீரராவார். இவர் 1987- 2007 காலப் பகுதியில் கால் பந்தாட்ட உலகில் பிரபல்யமான வீரராகத் திகழ்ந்தார்.

இவர் 60 சர்வதேச போட்டிகளில் 22 கோல்கள் புகுத்தியுள்ளார். இவர் பிரான்ஸின் மொனோகோ, பரீஸ் ஹெயின்ட் ஜர்மயீன், மார்சேய், இத்தாலியின் ஏ. சி. மிலான், இங்கிலாந்தின் செல்சி, மென்செஸ்டர் சிட்டி ஆகிய கழக்களுக்காக திறமையாக விளையாடியுள்ளார்.

இவரின் திறமையின் காரணமாக சர்வதேச கால்பந்து சம்மேளத்தினால் (பிபா) இரு முறை சிறந்த வீரராகவும், ஆபிரிக்க பிராந்தியத்தின் மிகச் சிறந்த வீரராக இரு முறையும் விருது பெற்றுள்ளார்.

டுயிலாயேபா

மாலியிலிகாஓய் (சமோவா)

இவர் 1945 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1998 ஆம் ஆண்டு முதல் சமோவாவின் 7வது பிரதமராகக் கடமையாற்றி வருகிறார். இவர் அந்நாட்டின் சிறந்த ரக்பி வீரராவார். இவர் மெய்வல்லுநர் விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர்.

இவர் மட்டுமே பதவியில் இருக்கும் போது போட்டிகளில் பங்கு பற்றிய நாட்டுத் தலைவராவார். இவர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது தென் பசுபிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றி ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளாடிமிர் புட்டின் (ரஷ்யா)

1952ஆம் ஆண்டு பிறந்த இவர் ரஷ்யாவின் 33வது பிரமதராவார். இவர் 1999 ஆம் ஆண்டு முதல் இதுவரை அந்நாட்டின் தலைவராக இருந்து வருகிறார். இவர் பிரபல ஜூடோ வீரராவார். தனது 11 வயதிலிருந்து இவ்விளையாட்டில் ஈடுபட்டுள்ள இவர் இவ்விளையாட்டில் கறுப்புப் பட்டி பெற்றார். மேலும் இவர் பனி ஹொக்கி மற்றும் பனிச்சறுக்கு விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

Comments