மலையகப் பகுதிகளிலும் தமிழ்மொழி அமுலாக்கம் நடைமுறைக்கு வருமா? | தினகரன் வாரமஞ்சரி

மலையகப் பகுதிகளிலும் தமிழ்மொழி அமுலாக்கம் நடைமுறைக்கு வருமா?

அரச கரும மொழிகள் திணைக்கழத்தின் செயற்பாடுகள் குறித்து தமிழ் மொழி பேசுவோர் திருப்தியடைய முடியாது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரசகரும மொழிகள் சம்பந்தப்பட்டத்துறை அமைச்சராக மனோ கணேசன் இருக்கிறார். துணிச்சலும் துடிப்புமிக்க இவர், முகத்துக்கு நேரே தனக்குச் சரியென பட்டதைச் சொல்பவர். ஆயினும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்ற கொள்கையை வலியுறுத்தும் அவரது அமைச்சுக்கூடாக அரச கரும மொழிகள் சம்பந்தமான சட்ட வரைபுகள் சரியான முறையில் பின்பற்றப்படுவதாய் இல்லை. இதில் அரசு இயந்திரத்தின் முடக்கமோ அல்லது அதிகாரிகள் தரப்பிலான அசமந்தமோ இருப்பது என்னவோ உண்மை.

அரச விளம்பரங்கள், ஆவணங்கள், சுற்று நிரூபங்கள், அறிவிப்புப் பலகைகள், கடிதத் தொடர்பாடல்களில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ஆட்சிக்கு வரும் சகல அரசாங்கங்களும் இது குறித்துப் போதிய கவனம் செலுத்துவதாயில்லை. குறைந்தபட்சம் தவறாக எழுதப்படும் மொழி குறிப்புகள் கூட திருத்தப்படுவதாய் இல்லை. அரசியலமைப்பு சட்டப்படி இந்நாட்டின் அரச கரும மொழியாக சிங்களமும் தமிழும் இருக்கின்றது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. இந்த ஏற்பாடு வெளிப்பார்வைக்கு தமிழ் மக்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதாக ஒரு எண்ணக் கருவை தோற்றுவிக்கவே செய்யும். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமாகி கொண்டிருக்கின்றதா என்பதே கேள்வி.

மலையகத் தமிழ் மக்கள் 15 இலட்சம் வரையிலானோர் வாழ்கிறார்கள். இவர்கள் மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் வாழ்கிறார்கள். மாவட்ட ரீதியில் நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, மாத்தளை போன்ற 15 இற்கும் அதிகமான பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் நிலையில் இவர்களுக்கான மொழியுரிமை சேவை அரசியல் சட்ட அமைப்பின்படி பெறமுடியாதுள்ளது என்பது கவலைக்குரிய விடயமாகும்.

எனினும் 1944 ஆம் ஆண்டளவில் உருவான சுய மொழி சிந்தனையானது ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை அகற்றி சிங்களம் தமிழ் மொழிகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பது போன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தியது. ஆனால் இதுவே பின்னர் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட வழி வகுத்தது. 1956 ஆம் ஆண்டுக்கு பிறகு மொழியை அடிப்படையாக கொண்டே இன எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

அரசியல் அமைப்பு சட்டத்தின் 22 (1) ஆம் உறுப்புரைக்கமைய 41 பிரதேச செயலகப் பிரிவுகளில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதில் 28 பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகப் பிரிவுகளாகும். இவை நுவரெலியா, பதுளை, கேகாலை, காலி, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவைகளாகும். இது தவிர 2005அம் ஆண்டு, 12.5 சதவீதமான சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்கள் மேலும் சிலவற்றில் இருமொழி அமுலாக்கத்துக்கான சட்ட உரிமை வழங்கப்பட்டது.

இவ்வாறான ஏற்பாடுகள் எல்லாம் இடம்பெற்று கால் நுற்றாண்டைக் கடந்துவிட்ட போதிலும், இவை உரிய முறையில் நடைமுறைபடுத்தப்படாமை விசனத்துக்குரியதே. சட்ட வரைபுக்குள் வந்து விட்ட ஒரு நடைமுறையை செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மட்டத்திலான தடைகள் இதுவரை நீக்கப்படாமலே உள்ளது. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டான் என்னும் நிலைமையே காணப்படுகின்றது. சமூகங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டை உருவாக்கும் நோக்கோடு அமைக்கப்பட்ட மொழி ஆணைக்குழு (2005) விதந்துரைத்த திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.

இவ்வாறான கண்துடைப்பு நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவே இருக்கின்றன. தமிழ் மொழி மீதான புறக்கணிப்புகள் திட்டமிடப்பட்டமையாகவே தொடர்கின்றன. மலையக மக்களுக்கு வாக்குரிமை, குடியுரிமையிருந்தும் தமது தாய் மொழி மூலம் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு ஓரங்கட்டப்படுவது நியாயமானதல்ல.

நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்ந்தாலும் இங்கு சகலமும் சிங்கள மொழியிலேயே நடக்கின்றது. மலையக மாவட்டங்களில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவுகூட மலையக மக்களுக்கென்று இல்லை. இன விகிதாசாரப்படி சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டிய நிர்வாக ஏற்பாடுகள் நடைபெறாமை குறித்து எவருமே கரிசனை காட்டுவதாயில்லை. வெறும் கோரிக்கைகளாகவும் அறிக்கைகளாகவுமே காலம் விரயமாகி கொண்டிருக்கின்றது. பெயருக்கு அரச கரும மொழியாக மட்டுமே தமிழ் மொழியிருப்பது வேதனைக்குறியது.

சட்ட வரைபுகள் மூலம் வழங்கப்பட்டுள்ள தமிழ்மொழிக்கான பாவனை உரிமை மலையகத்திலுள்ள அரச திணக்களங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. மலையக மக்கள் தாய் மொழியான தமிழை மட்டும் பேசவும் எழுதவும் கூடிய சமூகமாக விளங்குகிறார்கள். சிலர் எழுதவோ வாசிக்கவோ முடியாதவர்களாகவும் இருக்கின்றார்கள். அதேநேரம் இவர்கள் தமது முக்கிய தேவைகளை பெற்றுக்கொள்ள அரச சேவையை நாடிச் செல்கிறார்கள். ஆனால் அரச காரியாலயங்கள் முற்றுமுழுதாக சிங்களமயமாகவே உள்ளதால் இவர்கள் படும் அவஸ்தை சொல்லுந்தரமன்று. கறிவேப்பிலை போல சிற்சில அரச காரியாலங்களில் தமிழ், அல்லது தமிழ் தெரிந்த அதிகாரிகள் ஊழியர்கள் காணப்பட்டாலும் இவர்களில் சிலர் தமது பொறுப்பினை ஒழுங்காக செய்வதில்லை.

குறிப்பாக சேவைக்காக தம்மை நாடி வரும் தமிழ் மக்களை உருட்டிப்பார்க்கும் மனப்பான்மை கொண்டவர்கள் இவர்கள். அநேகமாக அரச காரியாலங்களுக்கூடாக வழங்கப்படும் விண்ணப்பப்படிவங்கள் தனிச் சிங்கள மொழியிலேயே பெரும்பாலும் இருக்கின்றன. சிலவற்றில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழி காணப்படும்.

 

இன்னும் சிலவற்றில் தமிழும் சிங்களமும் மட்டுமே இடம்பெறும். ஆனால் சிங்கள மொழியில் நிரப்பப்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சிங்கள மொழியில் மட்டுமே பணியாற்றக் கூடியவர்களாக இருப்பதே இதற்குக் காரணம்.

இந்நிலைமை காரணமாக சேவையை நாடிச் செல்வோர் நிரப்பவேண்டிய பத்திரங்களோடு தடுமாறவேண்டியள்ளது. அல்லது பணம் கொடுத்து பூர்த்தி செய்ய வேண்டி நேரிடுகின்றது. மக்களோடு நேரடி தொடர்பாடல் மூலம் கடமையாற்ற வேண்டிய நிலையிலிருப்போர். தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் பரிச்சயம் கொண்டிருப்பது அவசியம். அப்போது தான் பெற்றுக் கொள்ள வருவோரின் தேவையைச் சரியாக இனங்கண்டு சேவையை வழங்கக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் பொது மக்களுக்கேற்படும் சிரமம், கால தாமதம், அலைகளிப்புகளிலிருந்து விதிவிலக்கு கிடைக்கும். இதற்காக தமிழர் அல்லது தமிழ் மொழியில் கடமையாற்றக்கூடிய ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டியது முக்கியம். தவிர ஒருவர் தமக்குப் பரிச்சயமானதாய் மொழியில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும்போதோ அல்லது பெறும்போதோ தான் சரியான முறையில் வெளிக்கொணரவும் உள்வாங்கிக் கொள்ளவும் கூடியதாக இருக்கும். சரியான தகவல் என்ற நம்பகத்தன்மையும் உறுதிசெய்யப்படும்.

இதேவேளை அரச அலுவலங்கள், வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் அநேகமாக சிங்கள மொழியில் மட்டுமே பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றன. தப்பித்தவறி தமிழ் இருக்கிறதோ என்று வாசித்துப் பார்த்தால் தலைச்சுற்றும் அத்தனை எழுத்துப் பிழைகள். தவறான உச்சரிப்புகள். ஆங்கில எழுத்துக்களைப் பொறிப்பதில் காட்டப்படும் அக்கறை தமிழ் எழுத்துக்களைக் கையாள்வதில் காட்டப்படுவது கிடையாது. தவிர இன்றும் கூட அரச அலுவலகங்கள், திணைக்களங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் சிறுபான்மையினத்தவரை அல்லது தமிழ்மொழி பேசுவோரை இளக்காரமாக எண்ணிப் பேசுவதும் அலட்சியமாக நடத்துவதும் திட்டுவதும் தொடரவே செய்கின்றது.

இம்மக்களும் சமமாக மதிக்கப்படவேண்டியவர்கள். நடத்தப்பட வேண்டியவர்கள் என்னும் உணர்வு கிஞ்சித்தும் காணப்படுவது இல்லை. மலையக பகுதிகளில் தேர்தல் அலுவலகம் போன்ற அத்தியாவசிய இடங்களில் தமிழில் கருமமாற்றக்கூடியவர்கள் அல்லது தமிழ் தெரிந்தோர் இல்லாதிருப்பதால் தமிழ்பேசும் மக்களின் பெயர்களில் எதாவது ஒரு பிழை இருப்பது நிச்சயம். இதனால் அட்டையில் ஒரு பெயரும் வாக்காளர் அட்டையில் ஒரு பெயருமாக சிரமப்பட வேண்டியுள்ளது. சிலருக்கு இதன் காரணமாக வாக்களிக்கும் வாய்ப்பு மறுக்கப்படவும் செய்கின்றது. இது வாக்காளர் பதிவிலும் வாக்களிப்பு வீதத்திலும் வீழ்ச்சியை ஏற்படுத்தவே செய்யும். உண்மையில் இம் மொழி பாவனைப் பிரச்சினையால் அத்தியாவசிய தேவை என்றால் கூட அரச காரியாலயங்கள், திணைக்களங்களுக்குப் போக மலையக மக்கள் தயங்கவே செய்கின்றார்கள். அதை ஒரு உபாதையாகவே கருதுகின்றார்கள். இது சீர்செய்யவேண்டிய ஒரு பிரச்சினை.

நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் அரச நிறுவனங்களுடன் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழி மூலம் தொடர்பு கொள்ளக்கூடிய அரசியல் சட்ட வரைபிலான அங்கீகாரம் மலையக மக்களுக்கும் நடைமுறையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யவேண்டியது காலத்தின் தேவையாயிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் நிறைவு பெறுவதற்கு முன்பே அமைச்சர் மனோா கணேசன் முன்மாதிரி மாற்றமொன்றை ஏற்படுத்திக் காட்ட வேண்டும் அதுவே மக்களின் எதிர்பார்ப்பு.

 பன். பாலா

Comments