கன்னங்கர தேசிய பாடசாலையின் தமிழ்ப் பிரிவுக்கு மூன்றுமாடிக் கட்டடம் | தினகரன் வாரமஞ்சரி

கன்னங்கர தேசிய பாடசாலையின் தமிழ்ப் பிரிவுக்கு மூன்றுமாடிக் கட்டடம்

இலவசக்கல்வித் தந்தையின் பெயரில் இயங்கிவரும் மத்துகம சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர தேசிய பாடசாலையில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்று வருவதுடன் 200 ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். இப்பாடசாலை சகல வசதிகளையும் கொண்டதுடன் தரம் 6 முதல் க.பொ.த சா/த வரையில் தமிழ்ப்பிரிவொன்றும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு தமிழ்ப்பிரிவொன்று இயங்கிவந்த போதிலும் வெளியில் பெரும்பாலானோருக்கு தெரியாதிருக்கிறது. போதிய இடவசதி ஏனைய வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் எந்தவொரு அபிவிருத்தியையும் காணாமல் பெயரளவில் மட்டுமே இயங்கி வந்துள்ளது. இவ்வாறு இயங்கிவந்த தமிழ்ப்பிரிவுக்கென கல்வி அமைச்சினால் சுமார் 300 இலட்ச ரூபா செலவில் அமைக்கப்பட்ட 48x40 அளவிலான மூன்று மாடிக்கட்டடம் கடந்த 2.08.18இல் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் வித்தானகே ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஆர். யோகராஜன் தலைமையில் தமிழ்ப்பிரிவுக்கென 3 மாடிக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது தமிழ்ப்பிரிவுக்கென தனியாக கட்டடமொன்று உருவாவதை விரும்பாத சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக கட்டிட நிர்மாண வேலைகள் தடைப்பட்டது. அப்போது தமிழ்ப்பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த எம்.எம்.எப். கதீஜா மேற்கொண்ட முயற்சியினால் கட்டுமானப்பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு கீழ்மாடி பூர்த்தியடைந்த நிலையில் 2011இல் சிங்கள பிரிவுக்கு வழங்கப்பட்டு அது இயங்கிவந்தது. கைவிடப்பட்ட நிலையில் இருந்த 1ம், 2ம் மாடிப்பகுதிகள் பின்னர் பூர்த்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை காலமும் போதிய இடவசதியின்றி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பழைய கட்டடத்துக்குள் கட்டுண்டு கல்விகற்று வந்த மாணவர்களுக்கு புதிய கட்டடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதே தவிர இங்கு மலசலகூட வசதிகள், இதர வசதிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மூன்று மாடிக்கட்டடம் என்று கூறும்போது இங்குள்ள கீழ்மாடி சிங்கள பாடசாலையின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முதலாம், இரண்டாம் மாடிகள் மட்டுமே தமிழ்ப்பிரிவின் கல்வி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படக்கூடியதாக உள்ளது. மத்துகம, சென்.மேரிஸ் தமிழ்ப்பிரிவுக்கென அமைத்துக் கொடுக்கப்பட்ட மூன்றுமாடிக் கட்டடத்திலும் இதேபோன்றதொரு நிலையே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மத்துகமவில் தனித் தமிழ்ப்பாடசாலையொன்று அமைக்கும் முயற்சியில் அமைச்சர் மனோ கணேசன் ஈடுபட்டு வருவதுடன், தமிழ்ப் பாடசாலையொன்று சுயாதீனமாக இயங்க இடமளிக்கப்படல் வேண்டும் என கடந்த 24.7.2018ல் களுத்துறை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் குறிப்பிட்டிருந்தார்.

கன்னங்கர தமிழ்ப்பிரிவில் 130 மாணவர்கள், 7 ஆசிரியர்கள் இருக்கின்றனர். விஞ்ஞானம், சரித்திரம் மற்றும் இந்துசமய பாடத்துக்கான ஆசிரியர்கள் கிடையாது. இங்கு இந்து சமயப் பாடத்துக்கென ஆசிரியர் ஒருவர் இருந்த வரலாறே கிடையாது. தமிழ்ப்பிரிவுக்கென பொறுப்பாக ஆசிரியரொருவர் நியமிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றபோதிலும் நிர்வாக நடவடிக்கைகள் யாவும் தேசியப் பாடசாலையின் அதிபரின் கீழேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப்பிரிவுக்கு அடியும் இல்லை, நுனியும் இல்லை. நடுப்பகுதி மட்டுமே உள்ளது. இப்பாடசாலையின் நிலை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது என புதிய மாடிக்கட்டடத்தை திறந்துவைத்து உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், இப்பாடசாலையைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இங்கு நேரில் வந்து பார்வையிட்டதன் பின்னரே இதன் நிலை பற்றி தெரிந்துகொண்டேன். கன்னங்கர பாடசாலையில் நாலாயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 200 ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் தமிழ்ப்பிரிவில் 130 மாணவர்களும், 7 ஆசிரியர்களும் மட்டுமே உள்ளனர்.

இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தமிழ், சிங்களம் இரண்டுமே ஒன்றாக சமமாக செல்ல வேண்டுமாயின் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் தொகை அதிகரிக்கப்படல் வேண்டும். இங்கு தேவையான ஆசிரியர்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அடுத்துவரும் வருடங்களில் இங்கு க.பொ.த உயர்தரம் ஆரம்பிக்கப்படும்.

பெருந்தோட்டப் பாடசாலைகளில் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக மேலும் 3500 ஆசிரியர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த பிரதேசத்தில் இந்த நியமனம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

எல்லா மாகாணங்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், மேல் மற்றும் தென் மாகாணங்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் பட்டதாரிகளை நியமிக்க உள்ளோம். இந்த நியமனம் எங்களுக்குத் தேவையில்லையென்று கூறுகின்றனர்.

மேல் மாகாண சபை உறுப்பினர் ஜகத் வித்தானகே மாகாண சபைக் கூட்டத்தில் இதுபற்றி பேச வேண்டும். சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரவினால் ஏற்படுத்தப்பட்ட இலவசக் கல்வித்திட்டத்தினால் இன்று இந்நாட்டில் 45 இலட்சம் மாணவர்கள் இலவசமாக கல்விகற்று வருகின்றனர்.

கிராமப்புற தோட்டப்புற மாணவர்கள் பல்கலைக்கழகம் வரையில் சென்று கல்விகற்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

Comments