சொந்த உறவுகளையும் வெட்டிவிடும் | தினகரன் வாரமஞ்சரி

சொந்த உறவுகளையும் வெட்டிவிடும்

‘மணியத்தின்’ இறந்துபோன செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனான் சுரேஷ். சமையலறைக்குள் சமைத்துக் கொண்டிருந்த தனது மனைவிடம் ஓடிப் போய் “அய்யோ பாருங்க நமது மணியம் இறந்து விட்டாராம்” என்று மணியம் இறந்து போன செய்தியை தனது மனைவியிடம் தெரிவித்தான். “ச்சா... இறந்து விட்டாரா... இப்ப கிட்டத்துளதானே நம்பளை சந்தித்துவிட்டுப் போனாரு” எனக் கூறி மனைவி வருத்தப்பட்டாள். இப்போது கணவன், மனைவி இருவருமே மணியத்தோடு பழகிவந்த அந்த நாட்களைப் நினைத்து உரையாடிக் கொண்டு சோகத்தில் ஆழ்ந்து போயிருந்தனர். அவசர அவசரமாக வீட்டு சாமான்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு மணியத்தின் மரண சடங்குகளில் கலந்து கொள்வதற்கான ஆயத்தங்களில் அவ்விருவரும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

‘இறப்பு’ என்பது இன்றைய காலத்தில் சாதாரணமான ஒன்றுதான். இன்று எத்தனையோ பேர், நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று நாள்தோறும் இறந்துபோன செய்திவந்து கொண்டேதான் இருக்கிறது.

இந்நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் எத்தனை எத்தனையோ அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, திடீர்திடீரென புதைக்கப்பட்டார்கள். இவற்றை பலர் அறிந்திருக்கவில்லை. பலருக்கு தெரிந்தும் அவற்றைக் காணும் சந்தர்ப்பம் கூட கிடைக்கவில்லை. இன்று யுத்தங்களும் போராட்டங்களும் நடைபெறும் உலக நாடுகளை நாம் கண்ணுற்றால், அங்கும் கூட எவ்வித குற்றச்செயல்களிலும் சம்பந்தப்படாத சிறுவர், சிறுமிகள் உட்பட அப்பாவி மக்கள் பலர் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இவையனைத்துமே இன்று சாதாரண செய்திகளாக மாத்திரம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றை இன்று எத்தனை பேர் கண்டு கொள்கிறார்கள் என்பதே கேள்வியாகும்.

இந்த வகையில் பார்த்தால் இன்று இறப்பு என்பது சர்வ சாதாரணமாகி விட்டதொன்றாகவே கருதப்படுகிறது.

ஆனால்!

‘மணியம்’ இறந்து போன செய்தி சுரேஷின் காதுகளில் விழுந்த உடனேயே அதிர்ந்து போய் விட்டான் சுரேஷ். காரணம் அவ்விருவரும் அவ்வளவு நெருக்கமாகவும் நட்பாகவும் பழகியவர்கள்.

மணியம், சுரேஷ் இருவருமே நல்ல நண்பர்கள். இவர்களது நட்பும் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல. இருவருமே சுமார் அரை நூற்றாண்டு காலமாக பழகி வந்தவர்கள். ஆரம்பகாலத்தில் இருவருமே ஒன்றாக ஒரேயிடத்தில் தொழில் செய்தவர்கள். மணியம் சுரேஷைவிட வயதில் குறைந்தவானாக இருந்தாலும் சுரேஷுக்கு முன்பே மணியம் மணம் முடித்தவன். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒருவளைத் துணைவியாக் கொண்டிருந்தான். இவ்விருவருக்கும் இருபெண் பிள்ளைகள் இருந்தனர்.

சுரேஷ்தான் காதலித்த ஒருவளையே திருமணம் செய்து கொண்டான். சுரேஷின் மனைவியின் பெற்றோர்கள் ஆரம்பத்தில் இவர்களின் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர். எனினும்தான் விரும்பியவளை மணம் முடித்துக் கொண்ட சுரேஷுக்கு திருமணம் முடித்த பிறகு தங்குவதற்குக் கூட வீடு ஒன்று கிடைக்காத சமயத்தில் மணியம்தான், தனது வீட்டில் இவர்களுக்கு இடம்கொடுத்து உதவினான் என்பதை சுரேஷும் அவனது மனைவியும் என்றுமே மறந்ததில்லை.

மணியம் மிகவும் இனிமையாகவும் சுவாரஷ்யமாகவும் பழகுபவன். எப்போதுமே கலகலப்பாகவிருந்தவன். எவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற சுபாவம் கொண்டவன். ஆரம்பத்தில் தனது மைத்துனர் ராமையா மிகவும் ஏழ்மையிலும் கஷ்டத்திலும் வாழ்ந்த காலத்தில் அவனை தனது நண்பர் ஒருவரிடம் கூட்டிச்சென்று அவன் ஒரு சிறு வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான உதவிகளை செய்தான். பின்பு ராமையா தனது வியாபாரத்தில் முன்னேறி பெரும் சொத்துக்களை சம்பாதிக்கும் நிலைக்கு உயர்ந்தான்.

மணியம் அவனது மனைவி பிள்ளைகள் ஆகியோர்கள் மீதும் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தான். இரு பிள்ளைகளையும் நன்றாக கல்விபயில வைத்து அவர்கள் இருவரையும் அரசாங்க உத்தியோகத்தில் சேர்த்து மகிழ்ந்தான். மூத்தமகளுக்கு தனது உறவினர் ஒருவரின் மகனைத் திருமணம் செய்துவைத்த அவன், அவனது இளையமகளின் திருமணத்தை தனது மைத்துனர் ராமையாவின் விருப்பப்படி அவரின் ‘வியாபார’ ஸ்தலத்தில் வேலை செய்த ஒருவருக்கு மணம் முடித்து வைத்தான்.

காலவோட்டத்தில் சுரேஷின் மைத்துனன் ராமையா மேலும் செல்வந்தனானான். ஆனால் பழையவர்களையும் பழைய விடயங்களையும் மறக்கலானான். தனக்கு உதவியவர்கள், தான் ஆரம்ப காலத்தில் இருந்த ஏழ்மை நிலை போன்ற எல்லாவற்றையும் மறந்த அவன் மற்றவர்களோடு அன்பாக பழகுவதையும் கூட விட்டுவிட்டு கடுகடுப்பாக நடந்துகொள்ள ஆரம்பித்தான். பணத்தின் மூலம் எவரையும் விலை கொடுத்து வாங்கிவிடலாம் அல்லது தனக்குக் கீழ் அடிபணியவைத்துக் கொள்ளலாம் என்ற மமதையை வளர்த்துக் கொண்டிருந்தான்.

இவ்வாறான நிலையிலேயே ஒருநாள் மணியத்திடமிருந்து சுரேஷுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

“எப்பிடி நல்லா இருக்கிறீங்களா... வீட்டுல அக்கா சுகமாக இருக்காங்களா” என்று கேட்டு விட்டு “நாங்கள் இப்போது மைத்துனர் ராமையாவோடு முன்மாதிரி இல்லை. அவருக்கு இப்போது எங்களைக் கண்டாலே பிடிப்பதில்லை. எங்களோடு பேசுவதையும் வெறுக்கிறார். நாங்கள் அவரது வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருப்பதனால் அவரை அடிக்கடி காணும்படியான தர்மசங்கட நிலையிலிருக்கிறோம்” என்று கூறிய மணியம் சற்று பேசுவதை நிறுத்திக் கொண்டார். அவரால் தொடர்ந்து பேசமுடியாமல் அவரது நா வறண்டு போன நிலை தென்பட்டது.

மீண்டும் அவர் தொடர்ந்தார். “மைத்துனர் ராமையாவின் மனைவி எனது மனைவியின் தங்கைதான் ஆனால் அவரும் எங்களைக் கண்டால் வெறுப்பாக நடந்து கொள்கிறாள். எனது மைத்துனர் அவரையும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார் என நினைக்கிறேன். எனவே, தொடர்ந்தும் நாம் அவரது பக்கத்து வீட்டிலிருப்பது நல்லதல்லதானே... அதனால்தான் வேறு வீடு ஒன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். அநேகமாக இன்று இந்த வீடு எமக்குக் கிடைத்துவிடும். நாங்கள் இனிமேல் இந்த வீட்டில்தான் குடியிருப்போம்” என்று அவசர அவசரமாக பேசினான்.

மணியம் கூறியவற்றை செவிமடுத்த சுரேஷுக்கு இப்போது விஷயம் ஒருவாறு விழங்கிவிட்டது. ‘ஆட்டைக் கடித்துமாட்டைக் கடித்து, இப்போது மனிதனையே கடிக்கும’ கதையைப் போல் அவனது மைத்துனன் நடந்து கொண்டிருப்பான் என்று அவன் யூகித்துக் கொண்டான்.

“ஏன் உங்கள் சின்ன மகள் அங்குதானே இருக்கிறாள். அவள் உங்களுக்கு உதவி செய்வதில்லையா நீங்கள் அங்கு செல்லவில்லையா” என்று மீண்டும் கேட்டேன். “இல்லை அங்கு செல்லவில்லை அங்கும் எனது மகளும் மருமகனும் மனம் மாறிய நிலையில் உள்ளனர். மருமகனும் எனது மைத்துனரிடம் வேலை செய்வதால் மைத்துனரின் கட்டுப் பாட்டிலேயே இருக்கிறார். இருவருமே எங்களோடு சரியாகப் பேசுவதில்லை. எங்களோடு எவ்வித தொடர்புகளையும் வைத்துக் கொள்வதுமில்லை. முன்னரெல்லாம் அடிக்கடி எம்மோடு தொலைபேசியில் பேசுவார்கள். எங்களை வந்து பார்ப்பார்கள். ஆனால் இப்போது எங்களோடு அறவே பேசுவதைத் தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை... சிலவேலை அவர்களுக்கும் இப்போது பண ஆசை வந்திருக்கலாம். என்ன செய்ய நான் அன்போடு வளர்த்த எனது பிள்ளையே இவ்வாறு மாறிவிட்டதை நினைக்கும் போது இந்த உலகில் வாழ்வதே தேவையில்லைபோல் உணர்கிறேன்” என்று கூறி கவலைப்பட்டான் மணியம்.

“சரி... சரி... பிள்ளைகள் தானே எல்லாம் சரியாகிவிடும். பிள்ளைகள் உங்களைத் தேடி வருவார்கள் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள் என்று அவருக்கு ஆறுதல் கூறினேன்”.

சில மாதங்களுக்குப் பிறகு மணியம் என்னைக் காண எமது வீட்டுக்கு வந்தார் மணியம். முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி நொண்டி...நொண்டிக் கொண்டு வீட்டுக்குள் நுளைந்த அவர் மிகவும் சுகவீனமுற்று களைத்துப் போயிருந்தார்.

வீட்டிற்கு மனைவியோடு வந்திருந்தவர் என்னோடும் எனது மனைவியோடும் கலகலப்பாக கதைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது மனதில் ஏதோ சோகம் காணப்பட்டது தெரிந்தது. நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்த அவர்கள் மிகவும் வேதனையான கதை ஒன்றைக் கூறினர். அதனைக் கேட்ட எங்களுக்கு கண்களில் நீர் வடிய ஆரம்பித்தது. “வேறு ஒன்றும் இல்லை பாருங்க. நானும் மனைவியும் கடந்த ‘பொங்கல்’ தினத்தன்று எங்கள் சின்னமகள் வீட்டுக்குப் போனோம். அங்கு வாசற்படியில் நின்று கொண்டிருந்த எங்கள் மகள் எங்களைக் கண்ட உடன் குடு...குடு... என்று வீட்டுக்குள் ஓடினாள். அவள் ஓடியபின் எங்கள் மருமகன் முன்னால் ஓடிவந்தார். எங்களை அன்போடு வீட்டுக்குள் அழைப்பதற்காகத்தான் ஓடிவருகிறார்கள் என்று நாம் மகிழ்சியோடு வாசற்படியில் நின்று கொண்டிருந்தோம்.

மருமகன் முன்னேவர எங்கள் மகள் அவருக்கு பின்புறமாக நின்று கொண்டு எங்கள் பேரப்பிள்ளையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அப்போது எனது மனைவி “ராஜா... எப்பிடி இருக்கீங்க... ஓடி வாங்க பாட்டிகிட்ட” என்று சொல்லி பேரப்பிள்ளையைத் தூக்கப்போனால். அதற்குள் “நீங்கள் எதற்கு இங்க வந்தீங்க... இங்கிருந்து போய் விடுங்க நீங்க உள்ளே வர வேண்டாம்" என்று கூறிய எனது மருமகன், எனது மகளைப் பார்த்து “நீ ஏன் இப்போ பிள்ளையைத் தூக்கிக் கொண்டு இங்கே வந்த பிள்ளையை கொண்டுகிட்டு ஓடு உள்ளே" என்று தனது மனைவியைப் பார்த்து சத்தமிட்டவன். “மாமா இப்போது வருவார் அவர் வந்தால் பிரச்சினையாகிவிடும் நீங்கள் இங்கிருந்து போய் விடுங்கள்” என்று கடுகடுப்பான குரலில் எங்களை ஏசி வீட்டுக்குள் கூட நுழைய விடாமல் வீட்டுக் கதவை மூடிவிட்டு எங்களை அங்கிருந்து அனுப்பிவிட்டனர்” என கண்ணீர் மல்க கூறினான்.

“இப்போது எங்களிடம் வசதி வாய்ப்பு ஒன்றும் இல்லை அவர்கள் இப்போது எனது பணக்கார மைத்துனரின் கட்டுப்பட்டிலேயே இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் எங்களை அங்கிருந்து துரத்தியுள்ளார்கள் என்ன செய்ய” என்று கூறி மிகவும் வேதனைப்பட்டார்கள் அவ்விருவரும்.

இதுதான் நாங்கள் மணியத்தை இறுதியாக சந்தித்த சந்தர்ப்பம். இன்று அவர் மரணமாகி இவ்வுலகைவிட்டுப் பிரிந்துவிட்டார்.

சுரேஷும் அவரது மனைவியும் ‘மலர்ச்சாலை’ ஒன்றில் நடைபெற்ற மணியத்தின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொண்டு சோகத்தோடு வீடுதிரும்பினர்.

‘பணம் பாதாள மட்டும் பாயும்’ என்பது உண்மைதான்! ஆனால் சில வேளைகளில் பணம் சொந்த உறவுகளையும் கூட வெட்டிவிடுகிறதே என்பதை நினைக்கும் போது எவ்வளவு வேதனையாக விருக்கிறது!!

மாத்தளை ராம்

Comments