தொழிற்சங்கங்களுக்கு அரசு மீண்டும் அழைப்பு | தினகரன் வாரமஞ்சரி

தொழிற்சங்கங்களுக்கு அரசு மீண்டும் அழைப்பு

ரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வுக்கோரிக்கைக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கிடையில் உரிய தீர்வு பெற்றுத்தரப்படுமென உறுதியளித்திருக்கும் அரசாங்கம் அதனையேற்று உடனடியாக வேலைக்குத்திரும்புமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது. இது குறித்து கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்கங்களை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கும் அழைத்திருக்கின்றது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முடிவெடுக்கவேண்டிய பொறுப்பு நிதியமைச்சிடமே தங்கியிருப்பதால் ரயில்வே ஊழியர் விடயத்தில் போக்குவரத்து அமைச்சு எதனையும் செய்யமுடியாதிருப்பதாக கூறியிருக்கின்றது. ரயில்வே ஊழியர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்பாத பட்சத்தில் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்த அரசு தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர் வேலை நிறுத்தம் தொடர்பாக எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ரயில் சேவை எப்போது சீரடையும்? என்று போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்கவிடம் தினகரன் வாரமஞ்சரி சார்பில் கேட்கப்பட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்தாவது; ரயில்வே ஊழியர் தொழிற்சங்கங்களுடன் நேற்றும் (இன்று) கூட பேசினோம். அவர்களை உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு அழைத்தோம்.

ஆனால், அவர்கள் தமது கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டால் மட்டுமே கடமைக்குத்திரும்ப முடியுமென விடாப்பிடியாக இருக்கின்றனர். உண்மையிலேயே ரயில்வே ஊழியர் சம்பள அதிகரிப்பு விவகாரம் போக்குவரத்து அமைச்சிடம் தங்கியிருக்கவில்லை. அது நிதியமைச்சிடமே உள்ளது. அனைத்து அரசு ஊழியர்களதும் சம்பள விவகாரம் தொடர்பாக முழு அளவிலான முடிவு எட்டப்படவேண்டும். அதற்காக விசேட ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னரே இறுதி முடிவெடுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை நிதியமைச்சு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், ரயில்வே ஊழியர்கள் சம்பள விவகாரத்துக்கு மட்டும் உடனடித் தீர்வு காணப்பட முடியாதுள்ளது. ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் நிதியமைச்சால் நிராகரிக்கப்பட்டுள்ளது. புதியதொரு பத்திரத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கவுள்ளோம். அதன் பின்னர் அடுத்த மூன்று மாதங்களுக்கிடையில் உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்போம். அதுவரையில் பொறுமைகாத்து உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு கோரியுள்ளோம். ஆனால் தொழிற்சங்கங்கள் இதில் பிடிவாதப்போக்கை கடைப்பிடிப்பதையே காணமுடிகிறது. ரயில் ஊழியர்கள் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்களானால் அவர்களது சம்பளம் நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படலாம். அதே சமயம் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக கடமைக்குத்திரும்பாத பட்சத்தில் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டு அது குறித்த கடிதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் ஜனாதிபதி கையெழுத்திட்டு அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டால் ஊழியர்களின் தொழில் குறித்து எந்தப் பொறுப்பையும் அரசு ஏற்கமாட்டாது.

சம்பள அதிகரிப்பு குறித்த அமைச்சரவைப் பத்திரம் வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனை உபகுழு நியமித்து இரண்டு மாதங்களுக்கிடையில் அதன் முடிவு எட்டப்பட்டதும் அடுத்த மூன்று மாதங்களுக்கிடையில் உரிய தீர்வைப்பெற்றுக் கொடுப்போம். அதுவரையில் ரயில் ஊழியர்கள் தமது வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடன் கடமைக்குத் திரும்பவேண்டும் என பிரதியமைச்சர் தெரிவித்தார்.

அதே சமயம் பொது மக்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோளில் முடிந்தளவு மக்கள் இ.போ.ச மற்றும் தனியார் பஸ்களில் தமது பயண வசதிகளை மேற்கொள்ளுமாறும், ரயில் சேவையை நம்பியிருக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார். தற்போது நாட்டில் தனியார் போக்குவரத்துச் சேவையை 75 இலட்சம் மக்கள் பயன்படுத்துகின்றனர். இ.போ.ச பஸ்களை 25 இலட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். வழமையாக 5 இலட்சம் பேர் மட்டுமே ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இவர்களும் பஸ்சேவையை அல்ல மொத்த வாகனங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். மக்கள் எதிர்கொள்ளும் பயண அசௌகரியங்களை நிவர்த்திக்க அடுத்து வரும் நாட்களில் உரிய நடவடிக்கைகளை எடுக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இ.போ.ச விடம் 5500 பஸ்வண்டிகள் மட்டுமே இருப்பதால் மேலதிக சேவைகளை முழுமையாக பெற்றுக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. என்றாலும் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற நிலையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையை அதிகரிப்பதற்கு மாற்று நடவடிக்கை குறித்து அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது எனவும் பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

பயணிகள் போக்குவரத்துச் சேவை சீர்குலைந்து போயுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு நாட்டு நலனை மனதில் எடுத்து ரயில்வே ஊழியர்கள் உடன் கடமைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்கின்றோம். எப்படியும் அடுத்த மூன்று மாதகாலத்துக்குள் உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்க அரசு உத்தரவாதமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வேலை நிறுத்தம் அரசுக்கு மட்டும் நெருக்கடியை தோற்றுவிக்கவில்லை.

பொது மக்களையும் பாரிய அசௌகரியங்களுக்குள் தள்ளிவிட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் தமது நலன்களை மட்டும் பார்க்க முற்படக்கூடாது பொது மக்கள் குறித்தும் சந்திக்கமுன்வர வேண்டும் எனவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Comments