பெருந்தோட்ட குடும்பங்களுக்கு காணி உரிமை இல்லாததால் வீடமைப்பு திட்டங்கள் தாமதம் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட குடும்பங்களுக்கு காணி உரிமை இல்லாததால் வீடமைப்பு திட்டங்கள் தாமதம்

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நிர்மணிக்கப்பட்ட வீடுகள் இன்று கையளிக்கப்படுகின்றன. இதில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் உங்களது முன்னெடுப்புகள் எவை?

இந்திய வீடமைப்பை குறித்து பேசும் போது, அதன் வரலாற்றையும் நோக்க வேண்டும். வடக்கு கிழக்கு யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த வடக்கு கிழக்கு மக்களுக்கு இந்திய அரசு ஐம்பதாயிரம் வீடுகளை கட்டிக்கொடுக்க முன்வந்த வேளையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களும் இவ்வீடுகள் குறித்து கோரிக்ைக முன் வைத்தனர். இதன் போது ஆறாயிரம் வீடுகள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டன. இங்கு இரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்தியா இதுவரை ஏதுவும் செய்ததில்லை. இந்திய அரசு நாலாயிரம் வீடுகளை மலையக பகுதிகளுக்கு கட்டிக்ெகாடுக்க முன்வந்தது. நாற்பதாயிரம் வீடுகள் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கும், ஆறாயிரம் வீடுகள் முஸ்லிம்களுக்கும், நாலாயிரம் வீடுகள் மலையக மக்களுக்கும் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

இத்திட்டம் 2012 இல் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு பகுதிகளில் நாற்பதாயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டிருந்தன. ஆனால் மலையகத்திற்கான வீடமைப்புத் திட்டத்திற்கான ஒரு அடிக்கல்லும் நாட்டப்பட்டிருக்கவில்லை என்பது கவலைத்தரும் விடயமாகும். இப்படியான சூழ்நிலையிலேயே 2015 ஜனவரி 8 ஆம் திகதி நல்லாட்சி அரசூடாக பொறுப்புக்களை ஏற்றோம்.

பெருந்தோட்ட உட்கட்டமைப்பமைச்சு என்ற பெயரில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பினை ப. திகாம்பரம் ஏற்றார். அவ்வேளையில் அரசால் 300 மில்லியன் ரூபாய் நிதி வீடமைப்புக்ெகன ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனூடாக முன்னூறு வீடுகளே கட்டிக்ெகாடுக்கப்பட்டன.

இந்தியாவினால் மலையக மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்திய வீடமைப்பு குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் பேசினோம். அவர்களின் திட்டத்தின்படி பயனாளிகளே இந்த வீடமைப்புத் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும்.

அதாவது பயனாளிகளே வீடுகளை கட்டிக்கொள்ள வேண்டும் என்பதே இந்திய வீடமைப்புத் திட்டத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்கான நிதியினை பயனாளிகளுக்கு இந்திய அரசு நேரடியாகவே வழங்கும். பயனாளிகள் தமது காணியில் வீடுகளை கட்டிக்ெகாள்ள வேண்டும்.

2012 ஆம் ஆண்டு மலையக பயனாளிகளுக்கு வீடுகளை கட்டுவதற்கு காணியில்லாத நிலைமை நிலவியது. இதுவே இந்திய வீடமைப்புத் திட்டம் தாமதிக்கக் காரணம் என்பதை கண்டறிந்து, மலையக பயனாளி ஒவ்வொருக்கும் காணி உரிமையை வழங்கி, வீடுகளை அமைக்க நடவடிக்ைக எடுத்தோம். அதாவது காணி எப்போது பயனாளிக்கு கிடைத்த தோ அப்போதே இந்திய வீடமைப்பு திட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்திய உதவியுடனான பயனாளிகளின் வீடமைப்புத் திட்டம் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டி, வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா டன்சினன் தோட்டத்தில் முதலாவது அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று (12) அங்கேயே திறப்பு விழா நடைபெறுகிறது.

இந்த வீடமைப்பு திட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?

இந்த வீடமைப்பு திட்டத்திற்கு அப்போதிருந்த கால்நடைகள், இளைஞர் வலுவூட்டல் அமைச்சு முயற்சிகள் எடுத்திருந்தது. ஆனால் திட்டத்தை செயற்படுத்தவில்லை. அவர்கள் தோட்டக் கம்பனிகளுடன் பேசி, வீடுகள் கட்டுவதற்கான காணிகளை ஒதுக்கீடு செய்ய இருந்தனர். அவர்களின் திட்டத்தின்படி முதலாவது தொகுதியில் 1134 வீடுகளும் இரண்டாவது தொகுதியில்ஏனைய வீடுகளும் கட்டப்பட ஏற்பாடாகியிருந்தது. இத்திட்டத்தில் நாம் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தாமல் அப்படியே கட்டுவதற்கும், அவர்கள் தெரிவு செய்த பயனாளிகளுக்ேக வீடுகள் கிடைக்கும் விதத்திலும் முன்னெடுக்கப்படுகிறது. நான் சவால் விடுகிறேன், முன்பு அதிகாரத்திலிருந்தவர்கள் எங்கேயாவது ஒரு அடிக்கல் நாட்டியுள்ளனரா? இந்த வீடமைப்பு திட்டம் நடைமுறைக்கு வராமைக்கு ஒரே காரணம் பயனாளிகளுக்கு காணியுரிமை இல்லாததே.

இவ்வீடமைப்பு திட்டங்கள் எங்கே? எந்தளவில் நடைபெறுகின்றன?

இவ்வீடமைப்பு திட்டத்தின்படி நுவரெலியா டன்சினன் தோட்டத்தில் 404, எல்பொடயில் 100, பொகந்தலாவையில் 150, டயகமவில் 150, பதுளை நாராங்கலை, டெஜர்வத்தை ஆகிய இடங்களிலேயே மேற்குறிப்பிட்ட 1134 வீடுகள் கட்டும்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எல்பொட, டயனம ஆகிய வீடமைப்பு திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டன. டன்சினன் பெரியளவிலான வீட்டத்திட்டம் இன்னும் முடிவடையவில்லை. இந்த வீடுகளை ஒப்பந்த அடிப்படையில் கட்டுவதில்லை. பயனாளிகளின் பங்களிப்புடன் அவர்களினால் நேரடியாக கட்டப்படுவதால் கிராமம் கிராமமாகக் கட்டப்பட்டு வருகிறது. டன்சினனில் 150 வீடுகள் பூரணமாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டுக்கான காணி உரிமையை வழங்குகின்றோம். பயனாளிகளுக்கு நேரடியாக இந்திய அரசு பணம் கொடுப்பதால் அவர்களின் கண்காணிப்பின் கீழ் இந்த வீட்டினை முழுமையாக கட்டிமுடிப்பார்கள்.

இந்த வீடமைப்பு திட்டத்திற்கான முழுமையான நிதி எவ்வளவு?

இந்த வீட்டுத்திட்டத்தினை கட்டுவதற்கு இந்திய அரசு ஒன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வழங்கும். இதில் நிலத்தினை தயார்படுத்துவதற்கு எதுவிதமான செலவினையும் செய்யமுடியாது. நிலத்தினை தயார்படுத்துவதற்கு தோட்ட நிர்வாகம் முப்பதாயிரம் ரூபா மட்டுமே கொடுக்க ஒத்துழைப்பு வழங்கியது, இந்த பணம் போதாமையால், அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சினூடாக ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபா வழங்க முன்வந்துள்ளது. இதனூடாக வீடு கட்டுவதற்கான நிலத்தினை தயார்படுத்தி வீட்டுத்திட்டத்தினை முன்னெடுக்க வசதி ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலம் அரசாங்கத்தினால் இலவசமாகவே வழங்கப்படுகிறது. இதனால் இந்த வீட்டின் பெறுமதி பதினொரு இலட்சம். இந்த பணமும் நிலமும் ஒட்டுமொத்தமாக இலவசமாகவே வழங்கப்படுகிறது. நிலத்தின் பெறுமதி இடத்திற்கு இடம் வேறுப்பட்டதாகும். இதனை இலங்கை இந்திய வீடமைப்புத் திட்டம் என்று குறிப்பிடுவதே சரியானது.

ஒரு குறிப்பிட்ட மாவட்டத்துக்கு மாத்திரமே வீடமைப்புத் திட்டம் செயற்படுத்தப்படுவதாாகக் கூறப்படுவது பற்றி...

இந்த வீடமைப்புத் திட்டம் ஊவா, மத்திய மாகாணம் என்ற ரீதியிலேயே ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்டது. மலையகம் என்பது ஊவா, மத்திய மாகாணம் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் உள்ளது. அதனடிப்படையில் நாலாயிரம் வீட்டுத்திட்டதை இந்த மாகாணத்திற்கு வெ ளியே கொண்டு செல்ல முடியாது என்ற நிலையுள்ளது.

மீதமுள்ள வீட்டுத் திட்டத்தை தாங்கள் இரண்டு மாவட்டத்துக்குள் மட்டுப்படுத்தாமல் இப்பகுதியிலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்க வுள்ளோம். இதில் கண்டி, மாத்தளை, மொனராகலை ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்கும்.

இந்திய பிரதமர் இலங்கை வந்த போது, மேலதிகமாக பத்தாயிரம் வீட்டுத்திட்டத்திற்கு வாக்குறுதியளித்துள்ளார்.

அந்த வீட்டுத்திட்டத்தை முழுமையாக மலையகத்தில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல், தென் மாகாணங்களுக்கும் விஸ்தரித்துள்ளோம். இந்தியாவின் பதினான்காயிரம் வீடமைப்புத் திட்டத்தை முழுமலையகத்திற்கும் விஸ்தரிக்கவுள்ளோம். இதற்கான உடன்படிக்ைக இன்றைய தினம் செய்துகொள்ளப்படும்.

பயனாளிகளுக்கு நிதி எப்படி வழங்கப்படுகிறது?

இப்போது பயளாளிகள் ஒவ்வொருவரும் தோட்ட கூட்டுறவு வங்கி உடாக வங்கி கணக்கினை ஆரம்பித்து, நேரடியாக இந்திய அரசு ஊடாக வங்கிக்கணக்கில் வைப்புச் செய்யப்பட்டு, அந்த பணத்தினையே வீட்டுக்காக பயன்படுத்துகின்றனர். இப்பணத்திற்கு உத்தரவாதம் இந்திய அரசும் பயனாளிகளுமே. இந்திய அரசு முகவர் (ஐ.ஏ) நிலையத்தினூடாக இப்பணத்தை பயனாளிகளுக்கு வைப்புச் செய்து, வீட்டு கட்டுமானப் பணிகளைக் கண்காணிக்கின்றது. முன்பு இப்பணத்தினை அப்போதைய அமைச்சு கோரியது. அதனாலேற்பட்ட இழுபறியே இந்த வீடமைப்பு திட்டம் பின்னடைவு காணக் காரணமாகியது.

இவ்வீடமைப்பு திட்டத்தினூடாக உங்களுக்குச் சார்பானவர்களுக்ேக வீடு வழங்குவதாக குற்றச்சாட்டப்படுகிறதே?

அதனை நான் முற்றாக மறுக்கிறேன். அவர்களின் திட்டப்படி குறிக்கப்பட்ட 1134 வீடுகளும் அவர்களின் பட்டியலில் உள்ள பயனாளிகளின் பெயர்களுக்ேக வழங்கப்படுகின்றன. 2866 வீடுகளை தெரிவு செய்யும் போது, தோட்ட நிர்வாகம் அங்காங்கே பயனாளர்களைத் தெரிவு செய்தது. அதனை விடுத்து, லயத்துக்கு பதில் தனிவீடு என்பதே எமது கோரிக்ைகயாகும். இதனை இந்திய அரசுக்கும் அறித்துள்ளோம். அவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். லயன்களை அகற்றி அவற்றில் வசிப்பவர்களுக்கே தனிவீடு கொடுக்கப்பட வேண்டும். இந்த லயத்தில் பலதரப்பட்ட கட்சிகள் சார்ந்தவர்கள் வாழலாம் என்பதையும் அறிவுறுத்தினோம். இதனை நடைமுறையில் காண்பிப்பதற்கு இந்திய உயர்ஸ்தானிகர் இங்கு வந்த போது, அவரை அழைத்துக் கொண்டு மடக்கும்புற தோட்டத்திற்குச் சென்று காட்டினோம். உயர்ஸ்தானிகர் ஏற்றுக் கொண்டார் இது நியாயமான கோரிக்ைகயாகும்.

தோட்ட தொழிலாளர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கவில்லையே?

தோட்டத் தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தால் நிறுவனமாயமாக்கப்பட்ட மக்கள். எல்லோருக்கும் இலங்கையில் ஒரு பதிவுதான். ஆனால் தோட்ட மக்களுக்கு இரண்டு பதிவுகள். ஒன்று அரச பதிவு. இரண்டாவது தோட்டப் பதிவு. தோட்டத்தில் பிறந்தவர்கள் தோட்டத்தில் வேலை செய்யாவிட்டாலும் இவர்களின் பெயர்ப் பட்டியல் கிராம சேவகர்களிடம் இருக்கும். எப்போது கூட்டு ஒப்பந்தம் உருவாகியதோ அன்றுதான் தோட்டத் தொழிலாளர்கள் அங்காடித் தொழிலுக்கு சென்றார்கள். அதாவது 1992 ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்பே தொழில் பாதுகாப்பு அற்றுப் போனது. அதிகமான தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பின்றி தவிக்கலானார்கள். அதற்கு முன்பு விருப்புடனே தோட்டத்திலிருந்து வெளியேறினர். இப்போது நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே வெளியேறுகின்றனர். எமது கலாசாரமாக வருவது ஆசிரியர் தொழில் மற்றுமே. அமைச்சு சம்பந்தபட்ட விடயமாக இருந்தால் தொழில் வாய்ப்பு வழங்கலாம். இது அபிவிருத்தி அமைச்சு மட்டுமே. பொது வர்த்தக அமைச்சு இல்லை. எமது அமைச்சு ஊடாக ஒரு அரச நிறுவனம் இல்லை என்பதும் ஒரு துர்பாக்கியமானதே.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே அதிகார சபையினை அமைச்சர் கோரியுள்ளார். அமைச்சியிருந்தாலும் நிறுவனமில்லை. 2006 தோட்ட உட்கட்டமைச்சு இல்லாதொழிக்கப்பட்டிருந்தது. 2015 நல்லாட்சி அரசினூடாகவே இந்த உட்கட்டமைச்சு மீண்டும் உருப்பெற்றது. இப்போது மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தியைப் பெற்றுள்ளன. நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது.

 

அமைச்சர் இருபத்தையாயிரம் வீடு கட்டிக்ெகாடுக்கப்படும் என்று கூறியுள்ளாரே?

ஆம். அவற்றில் இந்திய அரசு பதினான்காயிரம் வீடுகளை மட்டுமே கட்டிக்ெகாடுக்கும் . ஏனையவை இலங்கை அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்படுகிறது. இதுவரை ஐயாயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எமக்கு ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வீடுகளை கட்டுவதற்கான அனுமதியுண்டு. இந்த வருடத்தில் இருபத்தையாயிரம் வீடுகள் கட்டுவதற்கான அனுமதியுண்டு. ஆனால் நிதியில்லை என்பதே குறைபாடு. இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை தருவார்கள். இதனூடாக இரண்டாயிரம் வீடுகளைத்தான் கட்டமுடியும். ஆனால் அனுமதி பெறுவதுதான் முக்கியமானது. இதற்கான நிதியினை பெற்று வீட்டுத் திட்டத்தினை செயல்படுத்துவோம்.

 

போல் வில்சன்

Comments