சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 'தவித்த முயல்' அடிக்க முனையும் தொழிற்சங்கங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி 'தவித்த முயல்' அடிக்க முனையும் தொழிற்சங்கங்கள்!

தொடரூந்துப் பணியாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் நிலையில் பல்லாயிரக்கணக்கான பயணிகள் அசௌகரியங்களுக்கு முகங் கொடுத்துள்ளதுடன் மில்லியன் கணக்கில் அரசாங்கத்திற்கு பணரீதியான நஷ்டமும் வியாபாரச் சுற்றாடலில் (Business enviorment) பின்னடைவுத்தன்மையும் ஏற்பட்டுள்ளன.

திடீரென முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கை காரணமாக அரசதுறை மற்றும் பொதுத்துறை பணியாளர்கள், கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பேரூந்துச் சேவைகளை மேலதிகமாக மேற்கொள்வதன் மூலமும் மாற்று வழிகளூடாக குறைந்தபட்சம் காரியாலய தொடருந்துகளை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அவை போக்குவரத்துச் சேவைகளை திருப்திகரமாக சமாளிக்கப் போதுமானவையல்ல.

கடந்தவாரம்தான் வைத்திய அதிகாரிகளின் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பொன்றும் இடம்பெற்றிருந்தது. பாதுகாப்பு, போக்குவரத்து, நீர், மின்சாரம், சுகாதாரம் எரிபொருள் என்பன மக்களின் அன்றாட வாழ்க்கையின் உயிர்நாடிகள். இத்துறைகளில் ஈடுபட்டுள்ளோரை அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ளோராகக் கொள்வதே மிகப்பொருந்தும். இந்நிலையில் தொடரூந்துச் சேவைகளை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் உரிமைகள் நீண்டகாலத் தொழிற்சங்கப் போராட்டங்கள் வாயிலாகவே பெற்றுக்கொள்ளப்பட்டன என்பது ஒன்றும் இரகசியமல்ல. உழைப்புடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள் இலங்கையைப் பொறுத்தமட்டில் தொழிலாளர்களுக்கு சார்புடையதாகவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கூடிய கரிசனையுடனும் செயற்படுத்தப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

ஜனநாயக பாரம்பரியங்களைப் பின்பற்றும் ஒருநாட்டில் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஜனநாயக உரிமைகளின் ஓரங்கமாகவே கணிக்கப்படுகிறது. இலங்கையைப் பொறுத்தமட்டில் தொழிற்சங்கங்களுக்கும் அவற்றின் நடவடிக்கைகளுக்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. அதனை ஆய்வு செய்வது இக்கட்டுரையின் நோக்கமன்று. மாறாக இவ்வாறான நடவடிக்கைகளில் பொருளாதாரப் பாதிப்புகள் பற்றி உசாவுவதே இதன் நோக்கம்.

சம்பள உயர்வு பணிசார்ந்த நிலைமைகளின் முன்னேற்றம் போன்ற கோரிக்கைகளை தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான காரணங்களாக இருப்பதைக் காண்கிறோம். இத்தகைய நடவடிக்கைகள் ஒரு கடும்போக்கு சர்வாதிகார ரீதியான ஆட்சியாளருக்கு எதிராகவோ அல்லது மிகப் பலவீனமான ஒரு அரசாங்கம் ஆட்சியிலிருக்கும்போதோ அதிக எண்ணிக்கையில் இடம்பெறுவதை நாம் காணமுடியும். குறிப்பாக ஜனநாயக ரீதியில் செயற்பட விரும்பும் அரசாங்கங்கள் பதவியில் இருக்கும் காலப்பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகள் முனைப்புடன் இடம்பெறும்.

மஹிந்தராஜபக்ஷ அரசாங்க காலப்பகுதியில் இவ்வாறாக தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு காட்டப்பட்ட எதிர்வினைகளை பொதுமக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டிருக்க மாட்டார்கள் என நம்புவோமாக. தற்போதைய அரசாங்கம் சட்டரீதியிலும் ஜனநாயக ரீதியிலும் இப்பிரச்சினையை கையாள விரும்புவதுபோலத் தெரிகிறது.

பொதுமக்கள் படும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை ஜனாதிபதியும் அமைச்சர்களும் அழைப்புவிடுப்பதைக் காணமுடிகிறது. இது ஒரு நல்ல ஜனநாயக பாரம்பரியமாகவும் அணுகுமுறையாகவும் பார்க்கப்பட்டாலும் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணிக்குத் திரும்ப முடியாது என சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிக்கை விடுவதையும் காணமுடிகிறது. இதனால்தான் தொடரூந்து சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனஞ்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடரூந்து பணியாளர்களின் கோரிக்கைகள் நியாயமானதா இல்லையா என்ற விவாதம் ஒருபுறமிருக்க இவ்வாறான ஒரு தொழிற்சங்க நடவடிக்கைக்கு முன்னறிவித்தல் விடுக்கப்பட்டதா? அதற்குரிய ஜனநாயக வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதி நாட்டின் மாணவர்களின் முக்கியமானதொரு பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியாகத் தெரிவு செய்யப்பட்டதேன்? என்பன போன்ற காரணிகள் குறித்து கவனஞ் செலுத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு உச்சபட்ச அசௌகரியத்தை ஏற்படுத்தி அதன்மூலம் தமது கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் 'தவித்த முயல் அடிக்கும்' நடவடிக்கையாகவே இப்பணிப் புறக்கணிப்பை நோக்க வேண்டியுள்ளது.

அதேபோன்றே அரச வைத்திய அதிகாரிகளின் "சிங்கப்பூர் _ இலங்கை வர்த்தக ஒப்பந்தத்திற்கு" எதிரான தொழிற்சங்க நடவடிக்கைகளையும் நோக்க வேண்டியுள்ளது. தமது தனியுரிமை ஏகபோக உரிமைகள் பறிபோய்விடுமோ என்ற அச்சமே வைத்திய அதிகாரிகள் இதனை எதிர்க்கக் காரணம். உலகமயமாக்கல் இடம்பெற்றுவரும் சூழலில் வெளியூர் வைத்திய அதிகாரிகளின் சேவைகளைப் பெறுவது ஒன்றும் தீண்டத்தகாத விடயமல்ல. எனினும் வைத்திய அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கைகள் அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைகளை வேண்டிநிற்கும் நோயாளிகள் குறித்து சற்று கருணையுடன் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்டதையும் ஈண்டு குறிப்பிடுதல் பொருந்தும்.

ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலவியபோதிலும் அடிக்கடி தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெறுவது நல்லாட்சிக்கான ஆரோக்கியமான அடையாளமன்று. குறிப்பாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாட்டின் வியாபாரப் புறச்சூழலையும் வியாபார நம்பத் தன்மையையும் மோசமாகப் பாதிக்கும்.

முன்பெல்லாம் வைத்தியர்களை மிக உன்னதமான நிலையில் வைத்து நோக்கிய சமூகம் இப்போது அவர்களை அருவருப்புடன் நோக்குகிறது. தொடரூந்துப் பணியாளர் மீதான பொதுமக்களின் ஆத்திரம் வெளிப்படும் விதத்தை சமூக வலைத்தளங்களை பார்வையிட்டால் காணமுடிகிறது. சமூகம் வன்முறை நோக்கி நகரக்கூடிய அபாயகரமான ஒரு நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.

1980 ஜுலை மாதம் ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கம் வேலைநிறுத்தக்காரர்களுக்கு வழங்கிய தண்டனை பற்றி இன்றும் பேசுகிறார்கள். ஜனநாயக ரீதியில் அது ஒரு கரும்புள்ளியாகப் பார்க்கப்பட்டாலும் தொழிற்சங்கங்கள் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொண்ட சம்பவமாகவும் அதனைக் கருதமுடியும். சுமார் ஒரு இலட்சம் தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். அத்தகைய நிகழ்வு இலங்கையில் மீண்டும் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ஆனால் இரும்புக் கரம்கொண்டு அவற்றை அடக்கியதை வரலாறு கூறும்.

சிங்கப்பூரின் சிற்பி லீ குவான்யூ சிங்கப்பூர் விமான சேவையின் விமானிகள் சேவை நிறுத்தம் செய்தபோது ஆற்றிய எதிர்வினை, சர்வ பிரசித்தம். மூடிய அறையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை; அதில் அவர் காட்டிய உறுதிப்பாடு காரணமாக வாலைச் சுருட்டிக்கொண்டு விமானிகள் வேலைக்குத் திரும்பினர். அதுவும் ஒரு ஜனநாயக நடவடிக்கையாக அமையாவிட்டாலும் நாட்டின் பொருளாதாரத்தை நாட்டின் கீர்த்தியை சிதைக்கும் நடவடிக்கைக்கு எதிராக நாட்டின் தலைவர் பொறுப்புடன் எடுத்த ஒரு நடவடிக்கையாகவே இதைப்பார்க்க முடியும்.

மறுபுறம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள் பொதுமக்களுக்கு அதி உச்ச அசௌகரியத்தை ஏற்படுத்தவே முயல்கின்றன. பணிப்பகிஷ்கரிப்பு தொழிற்சங்க நடவடிக்கைகளின் இறுதி ஆயுதமாக இருக்க வேண்டுமேயன்றி எடுத்த எடுப்பிலேயே வேலைநிறுத்தம் அறிவிக்கும் தொழிற்சங்கங்களின் தொழில் ஒழுக்கம் பற்றி மீளாய்வு செய்வது பொருத்தம். இத்தகைய தேசவிரோதிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியிலேயே பதில் வழங்குவது பொதுமக்களைப் பொறுத்தமட்டில் விரோத செயலல்ல.

மறுபுறம் அரசாங்கம் என்ற வகையில் விரைந்து செயற்பட வேண்டிய கட்டாயமுண்டு. காலம்கடத்தும் உபாயத்தைக் கையாள்வதன்மூலம் அதிக பாதிப்புக்களே உருவாகும். கடந்தகாலங்களில் தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் வழங்கிய தீர்வுகளை நோக்குமிடத்து "இவற்றை முன்னரே வழங்கியிருக்கலாமே" என்று எண்ணத் தோன்றுகிறது. இதுதான் தீர்ப்பென்றால் அதை நாட்கள் கடத்தி அதன்மூலம் உச்சபட்ச பாதிப்பு ஏற்பட்ட பின்னர் அதனை

வழங்குவதை விடுத்து பொருத்தமான முடிவுகளை பொருத்தமான நேரத்தில் எடுப்பதன் மூலம் ஏற்படும் சீரழிவைத் தடுக்கலாம். அரசாங்கம் அதைச் செய்வதாகத் தெரியவில்லை.

இவ்வாறு தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் கண்ணாமூச்சி ஆடுவதால் பொருளாதாரத்திற்கு ஏற்படும் குறுங்கால மற்றும் நீண்டகால பாதிப்புக்கள் மிக அதிகம். தற்போதைய தொடரூந்துப் பணியாளர்களின் பகிஷ்கரிப்பைக் கண்ட வெளிநாட்டு உல்லாசப் பயணிகளில் பலர் மீண்டும் இலங்கைக்கு வரப்போவதில்லை. இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள உத்தேசித்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையை பொருத்தமான ஓர் இடமாகக் கருதப்போவதில்லை.

ஆக, இந்த ஆட்டத்தின் பாதிப்புக்கள் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுடன் நின்றுவிடப் போவதில்லை. ஜப்பானில் பேரூந்துப் பணியாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பொன்று இடம்பெற்றது. ஆனால் அத்தனை பேரூந்துகளும் கால அட்டவணைப்படி இயங்கின. பணியாளர்கள் பயணிகளிடம் பயணக்கட்டணம் மட்டும் வசூலிக்கவில்லை. அவர்களுக்குத் தெரியும் எங்கே அடிக்க வேண்டுமென்று!

 

கலாநிதி எம். கணேசமூர்த்தி,

பொருளியல்துறை,

கொழும்புப் பல்கலைக்கழகம்.

Comments