கலைஞர் ஒரு ஃபீனிக்ஸ் பறவையின் மரணம் | தினகரன் வாரமஞ்சரி

கலைஞர் ஒரு ஃபீனிக்ஸ் பறவையின் மரணம்

தமிழர்களுக்கு சுயமரியாதை சிந்தனைகளைத் தந்தவர் பெரியார். அவர் வழிவந்தவர்களே பின்னர் 1949ஆம் ஆண்டு சென்னை ரொபின்சன் பூங்காவில் தி.மு.க வை ஆரம்பித்தனர். 1967 தமிழக சட்டசபைக்கான தேர்தலில் காங்கிரசை வீழ்த்திய தி.மு.க ஆட்சியை அமைத்தது. தி.மு.க தான் போட்டியிட்ட 173 இடங்களில் 138 ஆசனங்களைக் கைப்பற்றியது. 233 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 49 இடங்களையே கைப்பற்றியது.

பெரும் ஆரவாரத்துடன் முதல்வராக அறிஞர் அண்ணா பதவியேற்றதும் அவரிடம் மக்கள் பெருமளவு எதிர்பார்த்தார்கள். ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அண்ணா, 1969ஆம் ஆண்டு பெப்ரவரி இரண்டாம் திகதி நள்ளிரவு காலமானார். பெப்ரவரி 4ஆம் திகதி அண்ணாவின் பூதவுடன் அரசு மரியாதைகளுடன் மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

பின்னர் திராவிட இயக்கத்தின் தந்தையாகக் கருதப்படும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 1973டிசம்பர் 24ஆம் திகதி வேலூர் மருத்துவமனையில் மரணமானார். அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் மு. கருணாநிதி.

தனது குருவான தந்தை பெரியாரின் நல்லடக்கத்தை அரச மரியாதைகளுடன் நடத்தி முடிக்க வேண்டும் என்பது கலைஞரின் விருப்பம். தான் முதல்வராக இருக்கும் சமயத்தில் பெரியாரின் இறுதிக் கிரியைகள் சாதாரண மனிதருக்கு நடத்தப்படுவதைப்போல நிகழுமானால் அது தனக்கு இழுக்காக அமையும் எனக் கருதிய கலைஞர் கருணாநிதி, தன் தலைமைச் செயலாளரை அழைத்து, அரச மரியாதைகளுடன் பெரியாரின் இறுதிக் கிரியைகள் நடைபெற வேண்டுமென உத்தரவிட்டார். சரியெனச் சொல்லி தன் அறைக்குச் சென்ற அரசு செயலாளர், சுவரில் எறியப்பட்ட பந்தைப்போல முதல்வரின் அறைக்குத் திரும்பி வந்தார்.

“சேர், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது” என்றார் தலைமைச் செயலாளர்.

“என்ன சிக்கல்?”

“தந்தை பெரியார் தன் வாழ்நாளில் எந்த அரசு பதவியையும் வகித்தவர் அல்ல. ஒரு சமூக சேவையாளர் மட்டுமே. அரசு விதியின்படி சாமானியருக்கு அரச மரியாதை வழங்க எமக்கு அதிகாரம் கிடையாது. அப்படிச் செய்தால் அது விதிமுறை மீறலாக அமையும்!”

இதைக் கேட்ட கலைஞருக்கு சுர்ரென கோபம் பீறிட்டது. அடக்கிக் கொண்டு, “சரி, நீங்கள் சொல்வதையே எடுத்துக் கொண்டாலும், காந்திஜி தன் வாழ் நாளில் எந்த அரசு பதவியை வகித்தார்? இறக்கும்போது அவர் சாமானியன் தானே! அவருக்கு மத்திய அரசு பூரண அரச மரியாதைகள் தந்து தகனம் செய்யவில்லையா? நான் சொல்கிறேன். நீங்கள் போய் ஆக வேண்டியதைப் பாருங்கள். நான் மிகுதியை பார்த்துக் கொள்கிறேன். அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்வதன் மூலம் இந்த ஆட்சியே பறிபோனாலும் அது எனக்கு பரவாயில்லை!” என்று அழுத்தமாகக் கூறிய கலைஞர் தலைமைச் செயலாளரை போகச் சொன்னார்.

தந்தை பெரியாரின் இறுதிக் கிரியைகள் அரச மரியாதைகளுடன் நடைபெற்றன. அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி கலைஞரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

இத்தகைய கலைஞர் மறைந்ததும் அவரை எங்கே அடக்கம் செய்வது என்ற பிரச்சினை கிளம்பியது. அதாவது, வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடி வாழ்ந்த கலைஞர் இறந்த பின்னரும் தனக்கான உறங்கும் இடத்தையும் போராடித்தான் பெற வேண்டியிருந்தது என்பதே வேடிக்கையான வினோதம்தான்.

அவருக்கு அரச மரியாதை தரப்பட வேண்டும் என்பதில் எவருக்கு மாற்றுக் கருத்து இருக்கவில்லை. ஆனால் சென்னை மரீனா கடற்கரையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற விருப்பத்தை ஸ்டாலின் எடப்பாடியிடம் வெளியிட்டபோது, அதில் சிக்கல் இருப்பதாக அவர் சொல்லவே தி.மு.க அதிர்ந்துபோனது.

சென்னை கடற்கரையில் அடக்கம் செய்யக்கூடாது என ஒரு விதி இருக்கிறது. மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது விதி மீறல் எனச் சொல்லி டிரபிக் ராமராமி உட்பட சிலர் வழக்குகளை தாக்கல் செய்து அவை விசாரணையில் உள்ளன. இந்த நிலையில் கடற்கரையில் கலைஞரை அடக்கம் செய்வதில் சிக்கல் இருக்கிறது என்பது தமிழக அரசின் வாதமாக இருந்தது.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் பெருவாரியான மக்கள் அண்ணா நினைவிடத்துக்கு அண்மையிலேயே கலைஞர் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். விரைவாக தி.மு.க செயல்படவே, ஜெயலலிதாவின் அடக்கத்தை கேள்விக்குள்ளாக்கிய அனைத்து வழக்குகளும் ஒட்டுமொத்தமாக வாபஸ் பெறப்பட்டன. தி.மு.க சார்பாக சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட நீதிமன்றம், கடந்த எட்டாம் திகதி காலையில், கலைஞரின் பூதவுடன் அண்ணா சமாதி வளவுக்குள் அடக்கம் செய்யப்படலாம் என உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் இதை எதிர்த்து அ.தி.மு.க அரசு மேன்முறையீட்டுக்குப் போகவில்லை. வீம்புக்கு அப்படிச் செய்தால் அது தனது செல்வாக்குக்கு மற்றொரு அடியாக அமையும் எனக் கருதிய எடப்பாடி அரசு, அரசுமுறை மரியாதைகளுடன் கிரியைகள் நடைபெறுவதற்கு எந்த இடையூறும் செய்யவில்லை. அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு, ஒரு நாள் துக்க தினமும் அனுஷ்டிக்கப்பட்டது.

அண்ணா மறைந்தபோது சென்னை வானொலியில் கலைஞர் ஒரு இரங்கல் கவிதையை எழுதிப் படித்தார். அதில்,

“எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றாயே அண்ணா. அந்த இயத்தை இரவலாகக் கொடுத்திடு. நான் உன்னிடம் திரும்பி வரும் போது அதைப் பத்திரமாய் எடுத்து வந்து உன் காலடியில் சேர்த்திடுவேன் அண்ணா’ என்று குறிப்பிட்டிருந்தார் கலைஞர். அண்ணாவிடம் அளித்திருந்த இந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றி வைத்ததைப் போலவே, இறுதியாக முதல்வர் பதவி வகித்தபோது, பெரியாரின் இதயத்தில் தைத்திருந்த ‘முள்ளை’ அவர் எடுத்தெறியவும் செய்தார்.

பெரியார் அரசியல் கட்சியொன்றை நடத்தாததால் அவரால் மக்களைத் திரட்டி போராட மட்டுமே முடிந்தது. போராட்டத்தின் இலக்குகளை எய்துவதற்கு அரசியல் சக்தி அவசியப்பட்டது. 1967இல் அவரது சீடர்கள் தி.மு.க வழியாக அரசைக் கைப்பற்றியதும், பெரியாரின் கொள்கைகள் சட்டங்களாக உருவெடுத்தன. கலப்பு திருமணம் சட்ட பூர்வமானதோடு சீர்திருத்த திருமணமும் சட்டமானது. விதவைகள் மறுவாழ்வு திட்டத்தை கலைஞரே கொண்டு வந்தார். ஆனால் பெரியார் விரும்பிய ஆனால் அவர் காலத்தில் சட்ட ரீதியாக அமுலுக்கு வராத ஒரு கோரிக்கைதான், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது. இது தன் நெஞ்சில் முள்ளாக உறுத்துகிறது என்று சொல்லியிருக்கிறார் பெரியார். ஏனெனில் பிராமணர்கள் மட்டுமே பூசகர்களாகலாம். எந்த சாதியைச் சேர்ந்தவரானாலும் அவருக்கு கோயிலில் அர்ச்சகராக பணியாற்றும் உரிமை இருக்க வேண்டும் என்பது பெரியாரின் கொள்கை.

எனவே, பெரியாரின் இதயத்தைத் தைத்த முள்ளை எடுத்தெறியப் போவதாகக் கூறிய கலைஞர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை சட்ட சபையில் நிறைவேற்றினார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. சுப்பிரமணியம் சுவாமி போன்றோர் இச்சட்டத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்து. இடைக்காலத் தடை உத்தரவையும் பெற்றனர். எனினும் இந்த ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், சட்டம் செல்லும் என அறிவித்திருந்தது. தற்போது மதுரையில் பிராமணர் அல்லாத சாதியைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக பணியாற்றுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

குடும்ப ஆட்சி, ஊழல், ஈழத்தமிழர் விவகாரத்தில் எடுத்த சில சர்ச்சைக்குரிய முடிவுகள் என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர் தமிழ் மக்களின் தலைவராகவும், இந்திய அளவில் போராட்டக் குணம் கொண்ட தலைவராகவும் விளங்கினார் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் யார் யாரை தலைவராகவும் வழிகாட்டியாகவும் கொண்டிருந்தாரோ அவர்கள் ஆற்ற நினைத்தவற்றை கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில் ஆற்றி முடிக்கவும் செய்தார் என்பதோடு, தி.மு.க வகுத்து வைத்த தமிழ் மொழி மேன்மை, பகுத்தறிவு சிந்தனை மற்றும் சமத்துவ சமூகம் ஆகிய கோட்பாடுகளை சமூகத்தின் அடி நாதமாக ஆக்கி வைத்ததால் பின்னர் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவினால் அவ்வரைவிலக்கணங்களிலேயே பயணிக்க வேண்டியதாயிற்று. ஜெயலலிதா ஒரு பிராமணப் பெண்மணியாக இருந்த போதிலும் சமூக நீதி விஷயத்தில் அவர் எம்.ஜி ஆரை விட உறுதியான ஒரு நினையிலேயே இருந்தார்.

கலைஞர் பல முன்னோடித் திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினார். கை ரிக்‌ஷாவை ஒழித்தது, பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம், ஏழைகளுக்கான வீடமைப்பு, கண்பார்வை குறைந்தவர்களுக்கு இலவச கண்ணாடி, விதவைகள் மறுவாழ்வுத் திட்டம். உழவர் சந்தை, பல சாதியினர் ஒரே இடத்தில் கூடி வாழும் சமத்துவப்புரம், சைவ உணவாக மட்டும் இருந்த பள்ளி மாணவர் பகலுணவு திட்டத்தில் முட்டை சேர்ந்தது என்று அவரது சாதனைப்பட்டியல் நீண்டு கொண்டேபோகும்.

இலங்கைத் தமிழ்ப் பிரச்சினையில் கலைஞரே பல விஷயங்களை சாதித்திருப்பதோடு அதன் எதிர்மறைப் பலன்களை அனுபவிக்கவும் செய்தார். ஜூலை கலவரத்தின் போது தன் சட்ட மன்றப் பதவியை இராஜிநாமா செய்ததோடு, இலங்கைத் தமிழ் இயக்கங்களுடன் தன் நட்பை வளர்த்துக் கொண்டார். டெசோ என்ற அமைப்பை தொடக்கி, தமிழ் இயக்கங்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். புலிகள் பத்பநாபாவை கொலை செய்து தப்பியோடியபோது அதற்கான முழுப் பழியையும் அவரே ஏற்க நேர்ந்தது.

அடுத்த பழி, ராஜீவ் காந்தி கொலை வடிவத்தில் அவர்மீது விழுந்தது. தமிழக சட்ட மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு பத்து நாள் இருக்கையிலேயே, ஸ்ரீ பெரும்புதூரில் விடுதலைப்புலிகள் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தனர். இதையடுத்து மக்களின் சந்தேகம் தி.மு.கவின் பேரில் திரும்புவதற்கு உண்டான அனைத்து வழிகளையும் ஜெயலலிதா திறந்து வைத்தார். அப்போது நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் கலைஞர் வேட்பாளராக போட்டியிட்ட துறைமுகம் தொகுதியைத் தவிர ஏனைய அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க தோல்வியை சந்தித்தது. தனக்கு பல வழிகளிலும் உதவிய கலைஞரிடம் விடுதலைப் புலிகள் தன் நன்றியுணர்வை காட்ட மறந்தனர். தேர்தலில் தி.மு.க பெருந்தோல்வியை சந்திக்கும் என்பதைத் தெரிந்து தெரிந்தே. ஸ்ரீ பெரும்புதூர் வாய்ப்பைத் தவறவிட்டால் ராஜீவ் காந்தியின் கதையை முடிக்க மற்றொரு வாய்ப்பு கிட்டாது என்ற ஒரே காரணத்துக்காக அவரை புலிகள் படுகொலை செய்தனர். கலைஞர் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு 1983முதல் அளித்து வந்த பல்வேறு ஆதரவுகளையும், தியாகங்களையும், எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேர்ந்ததையும் முற்றிலுமாக மறந்துவிட்டு, வன்னி இறுதி யுத்தத்தை நிறுத்தும்படி மத்திய அரசுக்கு அவர் போதிய அழுத்தம் தரவில்லை என்ற ஒற்றைப் புள்ளியை மட்டும் எடுத்துக் கொண்டு கலைஞர் கருணாநிதியை நம்மவர்கள் தரக்குறைவாக விமர்சிப்பதையும் அவர் மரணத்தை கொண்டாடுவதும் மிகக் கீழ்த்தரமான பண்புகளாகவே பார்க்கப்பட வேண்டும்.

இதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

இந்திய சமாதானப் படை இந்தியாவுக்கு திரும்பிச் சென்றபோது சென்னை துறைமுகத்தில் கப்பல்கள் தரித்து நின்றன. அச் சமயம் முதல்வர் கலைஞர். அவர் இந்திய இராணுவத்தை வரவேற்க துறைமுகம் சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் செல்லவில்லை. தமிழர்களை கொன்று குவித்த இராணுவத்தை நான் வரவேற்க மாட்டேன் என அவர் அதற்கு துணிச்சலுடன் காரணமும் சொன்னார். இது, தேசத்துரோகத்துக்கு அல்லது தேச அவமதிப்புக்கு சமனான ஒரு விஷயம். இந்தத் துணிச்சல், கலைஞரின் 95 வருட வாழ்க்கையில் பல தடவைகள் வெளிப்பட்டு நின்றது.

அரசியலில் வெற்றியும் தோல்வியும் சகஜம், ஆனால் மீண்டெழுதல் என்பது சகல அரசியல் தலைவர்களுக்கும் சாத்தியமானதல்ல. ஆனால் பல்துறை ஆளுமைகளைப் பெற்றிருந்த கலைஞரால் சாம்பலில் இருந்து மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து அசுர சக்தியுடன் பணியாற்ற முடிந்தது.

திராவிட, சுயமரியாதைக் கோட்பாடுகளின் மிகச் சிறந்த மூவராக தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும் கலைஞர் கருணாநிதியையும் குறிப்பிடலாம். மூவருமே இன்றில்லை. திராவிட கோட்பாடுகளை வலுவுடன் முன்னெடுத்துச் செல்லும் வலிமை ஸ்டாலினிடம் உள்ளதா?

அடுத்துவரும் மாதங்கள்தான் இக் கேள்விக்கு பதில் சொல்லும் மு.க.ஸ்டாலின் என்ற தன் அழைக்கப்படும் பெயரை ஸ்டாலின் கருணாநிதி என மாற்றி அமைத்துக் கொள்வது பயனுடையதாகவும் வலுவுள்ளதாகவும் அமையும் என்பது எமது கருத்து.

அருள் சத்தியநாதன்

[email protected]

Comments