புகைப்படம் எடுப்பதை தவிர்த்த குட்டி ஏழை மாணவர்கள் | தினகரன் வாரமஞ்சரி

புகைப்படம் எடுப்பதை தவிர்த்த குட்டி ஏழை மாணவர்கள்

புளோரிடா சென்.பீட்டர்ஸ்பேர்க் நகரம் சுற்றுலாப் பயணிகளுக்கான உல்லாசபுரி. இரவுநேர களியாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது. நாம் தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரேயுள்ள சாலைகளில் உணவகங்கள், பப்கள் என உல்லாசப் பயணிகளைக் கவரும் இடங்களே அதிகமாக இருந்தன. அன்று சனிக்கிழமை, எமக்கு உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் எதுவும் இருக்கவில்லை. கலாசார நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்காக அனுமதித்திருந்தனர். இதுதான் தருணம் என அன்று எமது ஹோட்டலுக்கு அருகில் கூடும் சனிக்கிழமை சந்தைக்குச் செல்லத் திட்டமிட்டோம்.

ஹோட்டலுக்கு மிக அருகில் உதைபந்தாட்ட மைதானத்தின் கார் பார்க்கில் சந்தை கூடியிருந்தது. சிறிய சிறிய கூடாரங்கள் அமைத்து அனைத்து வகை பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான உணவு வகைகள் வித்தியாசம் வித்தியாசமாக காணப்பட்டன. பழங்கள், வீடுகளில் விளைந்த மரக்கறிகள், மிருகங்களுக்கான உணவுகள் என பலவகையான விற்பனைப் பொருட்கள் காணப்பட்டன. நடுப்பகுதியில் இசை நிழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்காக போடப்பட்டிருக்கும் ஆசனங்களில் வயதானவர்கள் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தனர். சந்தைக்கு வரும் சிறுவர்களைக் கவரும் வகையில் மாயாஜாலம் காண்பிப்பவர்கள், இசைக்கருவிகளை இசைத்து பணம் தேடுவோர் என பலரும் தமது திறமைகளை வெளிக்காட்டிக்கொண்டிருந்தனர். எமது சந்தைகளில் கேட்கும் கூவல் சத்தங்கள் இன்றி வித்தியாசமான சந்தை அனுபவமாக இருந்தது. எமக்குத் தேவையான சில பொருட்களைக் வாங்கிக் கொண்டு ஹோட்டலுக்கு திரும்பினோம்.

அன்று மதியத்தின் பின்னர் கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நாம் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சுமார் 30 மணித்தியாலங்கள் பயணிக்கும் தூரத்தில் கடற்கரை. கடற்கரைக்குச் செல்லும் வீதிகளின் இருமருங்கிலும் சிறியசிறிய அழகான வீடுகள். சுற்றுலாப் பயணிகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட வீடுகள், ஹோட்டல்கள், தங்குமிடங்கள் என வரிசையாக பல இடங்கள் காணப்பட்டன. வெள்ளை மணல் நிறைந்த கடற்கரை. பெரிய அலைகள் எதுவும் இல்லை. சூரியக்குளியலில் ஈடுபடுபவர்கள், மணலில் விளையாடுபவர்கள் என பலரும் மகிழ்ச்சியாக பொழுதைக் களித்துக்கொண்டிருந்தனர். இது தினமும் கடலையும், கடற்கரையையும் சந்திக்கும் எமக்கு வியப்பான அனுபவமாக இருக்கவில்லை என்றாலும், வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் சந்திப்புக்க்ள இருக்கவில்லை. அருகிலிருந்த சில அருங்காட்சியகங்களுக்குச் சென்று பார்வையிட்டோம்.

திங்கட்கிழமை ஊடக பாடசாலையொன்றுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அங்கிருக்கும் மெல்ரோஸ் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு சிறுவயது முதல் ஊடகத்துறைபற்றி பயிற்சிகள் வழங்கப்படுவதாக எமக்கு வழங்கப்பட்ட கையேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே குட்டி ஊடகவியலாளர்களை சந்திப்பதற்கான ஆர்வம் ஏற்பட்டது. எமது வான் நகரப்பகுதியிலிருந்து விலகி சற்று நடுத்தர மக்கள் வாழக்கூடிய வீடுகள் நிறைந்த இடத்தில் சென்றுகொண்டிருந்தது. தனித்தனியான வீடுகள் வரிசையாக இருந்தன. கட்டடமொன்றுக்கு முன்னால் எமது வான் நின்றது.

நாம் வந்திருப்பதை தெரியப்படுத்தியதும் அந்தப் பாடசாலையின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திருமதி கிரெட்செம் லெட்டர்மன் எம்மை வரவேற்று அழைத்துச் சென்றார். பாடசாலைக்குள் சென்றதும் ஊடகங்கள் பற்றிய வாசகங்களே சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்தன. நடந்துசெல்லும் பாதைகளில் ஊடகத்துறையின் அடிப்படையான 5 டபிள்யூஸ் மற்றும் எச் ஆகியவை பொறிக்கப்பட்டிருந்தன. படிகளிலும் ஒவ்வொரு வாசகங்கள் காணப்பட்டன.

நேரடியாக எம்மை அவர்களின் ஸ்டூடியோ இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். சிறிய அழகான ஸ்டூடியோ. வீடியோ செய்திகளை பதிவுசெய்வதற்கான வாய்ப்புக்கள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன. சிறிது நேரத்தில் எமது குழுவினரை நேர்காணல் செய்வதற்கு மாணவர்கள் விரும்புவதாக கிரெட்செம் கூற, இரண்டு குட்டிப் பெண்களும், ஒரு குட்டிப் பையனும் வந்தனர். இருவர் எம்மை பேட்டியெடுக்க ஒருவர் எம்மை புகைப்படமெடுக்கப் போகின்றார்களாம்.

முதல்முறையாக நாம் பேட்டிவழங்கும் பக்கத்தில். எம்முன்னால் ஊடகத்துறையை பயிலும் குட்டிகள் இருவர். கிரெட்செமின் உதவியுடன் அவர்கள் எம்மிடம் சின்னச்சின்ன கேள்விகளைக் கேட்டு அவற்றை குறிப்பெடுத்துக் கொண்டனர். நாமும் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டோம். வெட்கப்பட்டுக்கொண்டே பதில் வழங்கினார்கள். பேட்டியை முடித்துக் கொண்டு அவர்கள் தமது வகுப்பறைகளுக்குச் செல்ல, எமக்கு பாடசாலையைச் சுற்றிக் காண்பித்தார்கள். வகுப்பறையொன்றுக்குச் சென்றபோது அங்கு பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கிருந்த மாணவர்களை புகைப்படம் எடுக்க முற்பட்டபோது சிறுவர்கள் பலர் தமது முகங்களை மறைப்பதை அவதானிக்க முடிந்தது. அதனை உணர்ந்து அந்த முயற்சியை கைவிட்டுவிட்டோம். அவர்களின் அந்த நடவடிக்கை எமக்கு ஆச்சரியயமாக இருந்தது.

மெதுவாக இதுபற்றி கிரெட்செமிடம் வினவ, அவர் கூறிய பதில்கள் எம்மை சற்றுச் சிந்திக்க வைத்தது. அதாவது அந்தப் பகுதியில் இருப்பவர்கள் நடுத்தர அல்லது கஷ்டப்பட்ட கறுப்பினத்தவர்களைச் சேர்ந்த குடும்பங்கள். அவர்களின் பிள்ளைகளே இங்கு கல்வி பயில்கின்றனர். இங்கு பயிலும் பிள்ளைகளின் பெற்றோர் சிலர் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என்பதால் பிள்ளைகள் தமது முகங்களை காண்பிக்க விரும்புவதில்லையென அவர் விளக்கமளித்தார். அது மாத்திரமன்றி இப் பாடசாலை அங்குள்ள மாணவர்களுக்கு இலவசமாகவே கல்வி போதிக்கிறது. நம்பிக்கை நிதியத்தின் உதவியுடனும், மாநில அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் இந்தப் பாடசாலை நடைபெறுகிறது. பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு காலை மற்றும் மதியநேர உணவுகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

அண்மையில் அந்தப் பாடசாலைக்கு புதிய அதிபரொருவர் வந்திருப்பதாகவும், அவரின் முயற்சியின் கீழ் மாணவர்கள் சிறந்த முன்னேற்றத்தை காண்பிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அது மாத்திரமன்றி பாடசாலை மாணவர்களின் ஆக்கங்களைக் கொண்டு மாதாந்த பத்திரிகையொன்றும் அச்சிடப்படுகிறது. அதில் அவர்களின் ஆக்கங்கள், புகைப்படங்கள் என்பன வெளியிடப்படுகின்றன. சிறுவயது முதலே ஊடகத்துறை தொடர்பான நுட்பங்களையும், அவை தொடர்பான தொழில்நுட்ப அறிவையும் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. 5 வயது முதல் 12 வயது வரையான மாணவர்களுக்கே ஊடகத்துறை தொடர்பான கல்வி வழங்கப்படுகிறது. அரைநாள் சென்றதே தெரியாமல் குட்டி ஊடகவியலாளர்களுடன் அன்றைய நாள் கடந்தது.

நினைவுகள் தொடரும்

Comments