புதிய ஏற்பாடும் பழைய நற்செய்திகளும் | தினகரன் வாரமஞ்சரி

புதிய ஏற்பாடும் பழைய நற்செய்திகளும்

இந்த முதியவரின் வார்த்தைகளுக்குள் உள்ள வேதனை, கோபம், ஆற்றாமை, விமர்சனம், யதார்த்தம், உண்மை, பட்டறிவு, எச்சரிக்கை உணர்வு எல்லாம் சாதாரணமானவை அல்ல. மிகத் துயரமானவை. இந்த நாட்டின் பொறுப்பானவர்களால் விளைந்தவை.

சந்திரிகா குமாரதுங்க கூறுவதன்படி (அவருடைய நற்செய்தியின்படி) இந்தத் தீர்வு எப்படி அமையும்? அது எங்கிருந்து வரும்? அதற்கான சாத்தியங்கள், சாதக நிலைகள் என்ன? இதைச் சாத்தியப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் எங்கே நடக்கின்றன? யாரால் அவை முன்னெடுக்கப்படுகின்றன? இது நடக்கும் என்பதற்கான உத்தரவாதம் என்ன? ஏனென்றால், இதைப்போல இதற்கு முன்பு பல வாக்குறுதிகளும் கால எல்லைகளும் பகிரங்கமாகவே அளிக்கப்பட்டன. ஆனால் அவை எந்தப் பெறுமதியுமில்லாமல் கைவிடப்பட்டன. அல்லது கடந்து செல்லப்பட்டன. ஏன், சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியின்போதே அவ்வாறு நடந்துள்ளது.

அதைப்போலவே இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கால எல்லையும் எந்தப் பெறுமதியுமில்லாமல் கடந்து போகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதெல்லாம் அவநம்பிக்கையினால் எழும் கேள்விகளல்ல. அனுபவத்தினால் உண்டான கேள்விகள்.

ஆகவே, மறுபடியும் தமிழர்களின் காதிலே பூ வைக்க முனைகின்றார்களா?

இந்தப் பூவைப்புச் சாதாரணமானதல்ல. காதிலே ஓட்டை போட்டு, அதிலே பூவைச் சொருகி விட்டிருப்பதாகும். அதாவது தமிழர்களை படு முட்டாளாக்க முயற்சிப்பது. அதுவும் யாழ்ப்பாணத்தில் வைத்தே.

தற்போது நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கான தலைமைப்பொறுப்பிலிருக்கும் சந்திரிகா குமாரதுங்க, மெய்யான அர்த்தத்தில் நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்து நம்பிக்கை அளிக்கவில்லை என்று பகிரங்கமாகவே விமர்சிக்கப்படுகிறது. அப்படி நல்லிணக்க முயற்சிகள் நம்பிக்கை அளிக்கும் விதமாக முன்னெடுக்கப்பட்டிருந்தால், மேற்படி கேள்விகள் எழுந்திருக்க வாய்ப்பில்லை. தற்போதைய அரசாங்கத்தின் மீதான கேள்விகளும் நம்பிக்கையீனங்களும் கூட எழுந்திருக்காது.

இது தவறென்றால் இதை மறுத்து அந்தச் செயலகம் தனது வெற்றிகரமான செயற்பாடுகளைப் பட்டியலிட்டு வெளிப்படுத்தலாம். அல்லது இதை ஆதரிக்கும் வேறு எவரும் கூட அதைச் செய்யலாம். அந்த வெளிப்படுத்தலை தமிழ், முஸ்லிம், மலையக சமூகத்தினர் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பார்க்க முடியும்.

ஆனால், நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய சந்திரிகா குமாரதுங்க, இப்போதும் முன்னாள் ஜனாதிபதியாகவே நடந்து கொள்கிறார் என்றே தோன்றுகிறது. அதாவது சூதான சமாதானத்தை முன்னர் இந்த நாட்டிலே விளையாடியதைப்போல.

2015 இல் ராஜபக் ஷக்களை வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் பலரும் ஈடுபட்டபோது அந்த அணியில் சந்திரிகா குமாரதுங்கவும் இணைந்திருந்தார். அது சந்திரிகாவின் இரண்டாவது அரசியல் பிரவேசமாகும். அப்படி மீள் பிரவேசம் செய்தவர் சொன்னது, “இந்த நாட்டிலே ஊழலையும் அதிகார வெறியர்களையும் ஒழிப்பது மட்டுமல்ல, நிச்சயமாகச் சமாதானத்தையும் நிலைநாட்ட வேண்டும். அதைச் செய்வோம்” என்று. அப்படிச் சொல்லியே தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்களாகிய தமிழ்மொழிச் சமூகத்தினரின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட்டது.

அதற்கேற்றவாறே ஐ.தே.க – சு.க கூட்டாட்சியும் அமைந்தது. சந்திரிகா குமாரதுங்க தேசிய ஒருமைப்பாடு நல்லெண்ணம், நல்லிணக்கம் போன்ற செயற்பாடுகளுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்றார். தற்போது இலங்கையில் அதிக நிதிவளம் கொண்டிருப்பது, தேசிய ஒருமைப்பாடு நல்லெண்ணச் செயற்பாடுகளுக்கான நிலையமேயாகும். சர்வதேச சமூகமும் (குறிப்பாக மேற்குலகம்) தேசிய ஒருமைப்பாடு நல்லெண்ணச் செயற்பாடுகளுக்காக நிதியை தாராளமாகக் கொடுக்கிறது. ஆனால், இந்த நிலையத்தின் செயற்பாடுகள் எப்படி நடக்கின்றன?

இந்த நிலையத்தில் செயற்படுவோரில் எண்பது வீதத்திற்கும் அதிகமானவர்கள் புத்திஜீவிகள். இதில் குறிப்பிட்டளவானவர்கள் பல்வேறு சர்வதேச – உள்ளுர் அமைப்புகளில் செயற்பட்டவர்கள். இப்பொழுதும் அவற்றுடன் தொடர்பில் உள்ளவர்கள். ஆகவே NGO Mentality யில்தான் இவர்களுடைய செயற்பாடுகளும் அணுகுமுறைகளும் உள்ளன. தேசிய ஒருமைப்பாடு, நல்லெண்ணம், மீளிணக்க நிலையத்தையே இவர்கள் அப்படித்தான் பார்க்கிறார்கள். அதாவது, இது ஒரு NGO என. இதன் மறுவளம் என்பது இது ஒரு காசு சம்பாதிக்கக் கூடிய இடம் என.

ஆகவே இவர்கள் தேசிய ஒருமைப்பாடு, நல்லெண்ணம், மீளிணக்கம் போன்றவற்றுக்கான செயற்பாடுகளை கற்பனா நிலையிலேயே மேற்கொண்டு வருகிறார்கள். “ஏதோ செய்வோம் – அறிக்கையிடுவோம;” என்ற அளவில். இதன் பயன் குறித்த ஆர்வமும் புரிதலும் பெரும்பாலானவர்களிடத்திலே இல்லை. மட்டுமல்ல, இந்தச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரில் கணிசமானவர்கள் இனவாதிகளாக வேறு இருக்கிறார்கள். இந்த நிலையத்திலிருந்து கொண்டே அவர்கள் அவ்வாறு செயற்படுகிறார்கள்.

இவ்வாறான நிலையில் எப்படி தேசிய ஒருமைப்பாடும் நல்லெண்ணமும் மீளிணக்கமும் வெற்றிகரமாக முன்னேறும்? இதையிட்ட மதிப்பீட்டையும் அவதானத்தையும் இதற்குப் பொறுப்பான சந்திரிகா குமாரதுங்க கொள்ளவில்லை. அல்லது எந்தளவுக்குக் கொண்டிருக்கிறார்?

இந்தத் தோல்வியே தேசிய ஒருமைப்பாடு, நல்லெண்ணம் தொடர்பாக தமிழ் மொழிச் சமூகத்தினரிடத்திலே ஏற்பட்ட ஏமாற்றமாகும். அதே வேளை இதைச் சிங்களச் சமூகத்தினர் முக்கியமான ஒன்றாகக் கருதவும் இல்லை. ஆகவே நாடு தழுவிய ரீதியில் இது தோல்வி கண்டதொரு விடயமாகவே உள்ளது.

இந்த நிலையில்தான் திடீரென 02.08.2018 அன்று யாழ் மாவட்டச் செயலகத்தில், சந்திரிகா குமாரதுங்க தலைமையில் ஒரு சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லெண்ணத்திற்குமான அலுவலகத்தினால் வடக்கிலே முன்னெடுக்கப்படுகிற செயற்பாடுகளைப் பற்றி ஆராயப்பட்டது. இந்த அலுவலகம் அமைக்கப்பட்டு மூன்று வருடங்களாகின்றன. இந்த மூன்று வருடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள், குறிப்பாக வடக்கிலே தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் குறித்துப் பேசப்பட்டது. இதன்போதே சந்திரிகா குமாரதுங்க இந்தப் பத்தியின் தொடக்கத்தில் கூறப்பட்ட “2020 க்குள் இனப்பிரச்சினைக்கு (தமிழர்களுக்கு) தீர்வு” என்ற நற்செய்தியைக் கூறியுள்ளார்.

அவர் இப்படிக் கூறும்போது அங்கே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். இதையிட்டு யாரும் எந்தக் கேள்விகளையும் சந்திரிகா குமாரதுங்கவிடம் எழுப்பவில்லை. அரச உத்தியோகத்தர்கள் தமக்குரிய சட்ட திட்ட நெருக்கடி விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு அல்லது அவற்றை உணர்ந்து அமைதியாக இருந்திருக்கக் கூடும். ஆனால், அரசியல் தரப்பினர் அமைதி காத்திருக்க வேண்டியதில்லை. விக்கினேஸ்வரன் மட்டும் வழமையைப்போல தன்னுடைய கருத்தை அங்கே வலியுறுத்தியிருக்கிறார். “தமிழர்களுக்குச் சுயாட்சிக்குரிய அடிப்படையில் தீர்வைக் கொடுத்து (சமஸ்டியைக் கொடுத்து) விடுங்கள்” என. ஏனையவர்கள் (வாய்ச்சொல் வீரர்கள்) பாவைப் பிள்ளைகளாக இருந்து விட்டு வந்திருக்கிறார்கள். இது ஒரு புறமிருக்கட்டும்.

சந்திரிகா குமாரதுங்க எதற்காக இப்படித் திடீரென்று வந்து 2020க்குள் தீர்வு கிடைக்கும் என்று நற்செய்தியளித்தார்? இதுவே கவனிக்க வேண்டியது.

இது அடுத்து வரவுள்ள மாகாணசபைத் தேர்தலுக்கான ஒரு ஏற்பாடு. தேசிய ஒருமைப்பாடும் அதற்கான நல்லெண்ணமும் மீளிணக்கமும் சமாதான முன்னெடுப்புகளும் நடந்து கொண்டேயிருக்கின்றன. அதையிட்டு உங்களுக்கான – உங்கள் பிரதேசங்களுக்கான நிதியும் கிடைக்கப்போகிறது. கூடவே 2020 க்குள் தீர்வும் கிடைக்கப்போகிறது என்ற ஒரு நம்பிக்கை உணர்வை ஏற்படுத்துவதன் வழியாக அரசின் மீதும் அரசுக்கு ஆதரளவித்து வரும் கூட்டமைப்பின் மீதும் உள்ள கோபத்தையும் நம்பிக்கையீனத்தையும் குறைக்கும் முயற்சி. அல்லது அவற்றை இல்லாமலாக்கும் நடவடிக்கை.

ஆகவே, இது தேர்தலை நோக்கிய ஒரு அரசியல் முயற்சி. அதாவது மீண்டும் ஒரு நாடகம். மீண்டும் ஒரு ஏமாற்று.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளிநொச்சிக்கு தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க முயற்சிகளுக்கான அமைச்சர் மனோ கணேசனும் வந்திருந்தார் என்பதை இங்கே வாசகர்கள் நினைவு கொள்வது அவசியமாகும்.

எல்லாமே வரவுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள்தான். இதன் விளைவே “புதிய ஏற்பாடுகளும் இந்த நற்செய்திகளும்”

இதற்குப் பின்னணியில் இயங்குவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகும். தனது நெருக்கடி நிலையைக் கடப்பதற்கு அது அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கிறது. வடக்கு, கிழக்கில் அரசாங்கம் நம்பிக்கை அளிக்கக் கூடியவாறு எதையாவது செய்தால்தான் தம்மால் தொடர்ந்தும் தாக்குப் பிடிக்க முடியும். தேர்தலையும் எதிர்கொள்ள முடியும் என்று. இந்த நிகழ்வுகளில் பங்கேற்ற கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் ஏறக்குறையக் கையேந்திகளாகி விட்டனர். இந்த விமர்சனம் எதற்காக வைக்கப்படுகிறது என்றால், ஒரு காலம் இதை ஒத்த செயற்பாடுகளைச் செய்த ஏனைய அரசியல் தரப்பினரையெல்லாம் இவர்கள், இதே “கையேந்திகள்” என்ற சொல்லைப் பயன்படுத்தியே வீழ்த்த முற்பட்டனர்.

காலம் எப்படி மாறிச் சுற்றுகிறது பார்த்தீர்களா? மாமியார் செய்தால் குற்றமில்லை. மருமகள் செய்தால் குற்றம் என்ற விதியைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போகிறார்களா? அவர்களுடைய நீதித் தராசு எப்படி இருக்கப்போகிறது?

- கருணாகரன்

Comments