மனிதரில் இத்தனை நிறங்களா? | தினகரன் வாரமஞ்சரி

மனிதரில் இத்தனை நிறங்களா?

தலைப்பு வந்து ஒரு தமிழ்த் திரைப்படம் என்பது உங்களுக்குத் தெரியும். சிலபேர் படம் பிடிப்பார்கள்; சிலர் படம் காட்டுவார்கள். படம் காட்டுவோருக்குத்தான் சமூகத்தில் மதிப்பு கொடுக்கிறார்கள். அதுக்காக நாங்கள் படம் காட்டக்கூடாது!

முன்பு பணியாற்றிய ஒரு சகபாடிக்கு அடிக்கடி குரல் மாறும். கீச்சுக்குரல் என்போமே அப்பிடி. அவர்ட வேலையே அடுத்தவனைக் குறை சொல்றதுதான். பணியிலும் பொறுப்பில்லை. அப்பிடி இருந்திருந்தால், இன்று அவர் இருக்கும் இடமே வேறு. ஏய்... சும்மா போடு... உனக்ெகன்ன மெடலா குத்தப்போறான்? என்பார். கிடந்து மினக்ெகடாத; சமாளிச்சுவிடு! என்பது அவரின் அறிவுரை. ஆனால், அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோருக்கு என்ன வெகுமதி கிடைக்கும் என்பதையும் நாங்கள் தெரிஞ்சுகொள்ளேலும்.

அர்ப்பணிப்பு என்றால், தாய்லாந்துக்காரர்களிடம்தான் கற்றுக்ெகாள்ள வேண்டும். இன்று உலகம் போற்றும் உன்னத பணியைக் கச்சிதமாகச் செய்திருப்பவர்கள் அவர்கள்தான். ஒரு மனித உயிர் எவ்வளவு பெறுமதியானது என்பதை அண்மைய தாய்லாந்து சம்பவம் நமக்குக் கற்றுத்தந்திருக்கிறது.

காணாமற்போன பன்னிரண்டு சிறுவர்களையும் தொடர்ந்து தேடிக் ெகாண்டிருந்த மீட்புப் பணியாளர்கள் ஒன்பது நாட்களுக்குப் பின்னர், அவர்கள் குகையொன்றில் சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தார்கள். நமது நாட்டில் அப்பிடியொரு சம்பவம் நடந்திருந்தால், சிலவேளை ஒருவாரம் தேடிப்பார்த்துவிட்டுக் கைவிரித்திருப்பார்கள் என்கிறார்கள் நண்பர்கள். அப்பிடியும் சொல்லேலாது, நக்கிள்ஸ் மலைத்தொடருக்குச் சென்று காணாமற்போயிருந்த மாணவர்கள் சிலரை சில தினங்களுக்குப் பின்னர் கண்டுபிடித்தார்கள்தானே. யுத்தகாலத்திலை காணாமல்போன ஆட்களைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது வேறு பிரச்சினை. அதைக்ெகாண்டு வந்து இதிலை முடிச்சு போட ஏலாது. அதையும் ஒரு நாளைக்குக் கண்டுபிடிப்பாங்கள்.

அஃது இருக்கட்டும். மனித உயிரின் பெறுமதி மதிப்பிட முடியாதது என்பது என்னவோ நிதர்சனமான உண்மைதான். சில நாடுகள்ல நாயைச் சுட்டுச்சாக்காட்டுற மாதிரி மனிதர்களையும் சுட்டுத் தள்ளுறாங்க. ஒரு காலத்திலை எங்கடை நாட்டிலையும் அப்பிடித்தான் இருந்தது. இந்த மாதம் மாத்திரம் பாருங்க, எத்தனைபேரச் சுட்டுத்தள்ளியிருக்கிறாங்க. கடைசியாக செத்தவரு கிருஸ்ணா. அவர் செத்தாப்பிறகு அவரைப்பற்றிப் பலவிதமாகக் கதைக்கிறாங்க. அவர் என்னத்தைச் செய்திருந்தாலும், ஓர் உயிர் இல்லையா! அவர் நீண்டகாலமாக வாழ்ந்த இடத்திலை வைச்சே அவரைச் சுட்டுக்ெகான்றிருக்கிறாங்க.

முந்தியெல்லாம் ஊர்ல ஒருத்தருக்குப் பிரச்சினை என்றால், முழு ஊரே திரண்டு வந்திடும். வெளியாட்கள் ஆரையும் உள்ள வந்து எதையும் செய்யவிடமாட்டாங்கள். இப்ப துப்பாக்கிக்கும் ஆயுதங்களுக்கும் பயந்துபோய் மக்கள் பேசாமல் இருக்கிறார்கள் என்கிறார் வில்சன். ஆயுதத்திற்குப் பயப்பிடாமல் இருக்க ஏலுமா? முந்தி வந்தவங்கள் எல்லாம் கத்தி, பொல்லு, வாள்களுடன் வந்தாங்க. நம்மவங்க கையிலையும் அதுகளை வைச்சிருந்தாங்க. இப்ப வாறவங்க ரி56ஐயும் 47ஐயும் கொண்டு வாறாங்க. நம்ம கையிலை தடியும் பொல்லுந்தானே இருக்குது. எனக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் 'இதனால் சகலமானவர்களுக்கும்' கவிதை நூல்தான் நினைவிற்கு வருகிறது. அதிலை ஏ.கே.47ஐப்பற்றி ஒரு கவிதை இருக்கு. சரியா, இப்ப நான் சொன்னமாதிரித்தான் இருக்கும். ஏ.கே.47 ரகத்துப்பாக்கியை அவர் விலைமாதர்களுக்கு ஒப்பிட்டு இருப்பார். அந்தக் கவிதையைச் சொல்லேலாது, நீங்க வாசிச்சுத்தான் பார்க்கணும். விலைமாதர்கள்மேல் பித்துப்பிடித்தவர்களும் இல்லாமல் இல்லை.

இலங்கையிலிருந்து சென்னைக்குச் சென்ற ஒருவர், அங்கிருந்து ஒரு பெண்ணை அழைத்துக்ெகாண்டு வந்து கல்யாணமே செய்திட்டார். அந்தளவிற்கு அவருக்கு அந்தப் பெண்மேல் காதல், அன்பு, உருக்கம். இப்ப அவவைக்கூட்டிக்ெகாண்டு இந்தியாவில் செட்டில் ஆகிட்டார். அந்தமாதிரி, என்னதான் ஆயுதக்கலாசாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தாலும், சிலருக்கு அதில்லாமல் வாழ்க்ைக இல்லை. இந்த வசனத்தை எழுதும்போது அந்தக் கால நினைவு வந்து தொலைக்கிறது.

யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதும் கிழக்கில் வாகரை, கதிரவெளி, வெருகல் போன்ற இடங்களைப் படையினர் கைப்பற்றியிருந்தார்கள். அப்போது அந்தப் பகுதிகளின் கள நிலவரத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தபோது முகாம் ஒன்றில் நான் கண்டெடுத்த ஒரு காகிதத்தில் இருந்த ஒரு வாசகம், நெஞ்சை நெகிழச்செய்தது. அங்கு மிக இளவயது போராளிகள் இருந்திருக்கிறார்கள். 'யுத்தத்தை நாங்கள் விரும்பவில்லை; யுத்தமில்லாமல் வாழ்க்ைகயில்லை! என்பதுதான் அந்த வாசகம்.

இப்பிடி ஆயுதங்களை விரும்பாவிட்டாலும், நிர்ப்பந்தத்தின்பேரில், ஆயுதங்களை ஆராதனை செய்ய வேண்டிய நிலைக்குச் சிலர் தள்ளப்படுகிறார்கள். தேவையற்ற தொடர்புகளுக்குள் சிக்கிவிடுகிறார்கள். அந்தத் தொடர்புகள் ஆரம்பத்தில் சொகுசைத் தந்தாலும், பிற்காலத்தில் என்று சொல்வதற்குள் அதன் பிரதிபலனைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

இதற்கு என்ன செய்யலாம்? ஆயுதங்களின் பயன்பாடு சட்டபூர்வமானவர்களிடம் மட்டுமே இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும். யுத்தம் நிறைவடைந்ததன் பிறகு சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. எத்தனைபேர் மீள ஒப்படைத்திருக்கிறார்கள்? துணை இராணுவக்குழுக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது அவ்வாறான குழுக்கள் இல்லையாயினும் குற்றச்செயல்களைப் புரிவதற்காகச் சில குழுக்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றன. இவர்களின் ஆயுதங்களைக் களைந்தால், குற்றச்செயல்களையும் துடைத்தெறியலாம். ஒழுக்கமான சமூகமொன்றையும் கட்டியெழுப்பலாம்.

Comments