பெரும்பான்மை அரசியல் தளம் சிறுபான்மையினரின் அபிவிருத்திக்குத் தடை | தினகரன் வாரமஞ்சரி

பெரும்பான்மை அரசியல் தளம் சிறுபான்மையினரின் அபிவிருத்திக்குத் தடை

இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர்  ஆர். மோகன்

விசு கருணாநிதி...

தேசிய கட்சிகளின் பெரும்பான்மை அரசியல் தளம், சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பெரும் தடையை ஏற்படுத்துவதாக இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர் ஆர்.மோகன் விசனம் தெரிவிக்கின்றார்.

என்னதான் தனித்துவக் கட்சி என்று தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அந்தத் தேசிய கட்சியின் அமைப்பாளர்கள், தமிழ் உறுப்பினர்களைத் தங்களின் பிடிக்குள் வைத்திருக்கவே முயற்சிக்கிறார்கள் என்றும் அவர்களது அறிவுறுத்தலுக்குக் கட்டுப்பட்டே எந்தவோர் அபிவிருத்தியையும் முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது என்றும் மோகன் கூறுகிறார்.

தமிழர் முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஐக்கிய ​தேசிய கட்சியில் போட்டியிட்டுத் தெரிவான ஒரே ஓர் உறுப்பினர் மோகன். ஆனால், அவரால் தமிழர் முற்போக்கு கூட்டணி என்பதைவிட ஐக்கிய தேசிய கட்சியைப் பிரதி நிதித்துவப்படுத்துமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாகக் கூறுகிறார்.

”என்னை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்வதற்கு அந்தக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எம்.சந்திரகுமார் ஆசிரியரே காரணம். தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் சார்ந்த கட்சியின் சார்பில் செயற்படுவதற்கு எனக்குத் தடங்கலாக இருக்கிறது. தேசிய கட்சியை மீறி எந்தவொரு நகர்வையும் முன்னெடுக்க முடியாமல் உள்ளது.

இது மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விடயம். கடந்த காலங்களில் தேசிய கட்சிகளில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்களால், எந்த அபிவிருத்தியும் செய்யப்படாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.”

”அப்படியென்றால், கடந்த காலத்தில் இருந்தவர்கள் எந்தப் பணியையும் செய்யவில்லை என்கிறீர்களா?”

”நிச்சயமாக. அவர்கள் கோவில்களுக்கு அண்டாக்களையும் “டெண்டு“களையும் (கூடாரங்களையும்) மாத்திரமே பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். மற்றும்படி அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்துகொண்டுள்ளார்கள். இரத்தினபுரியில் குறிப்பாக அப்புகஸ்தன்னை தோட்டப்பகுதியில் நிறைய குறைபாடுகள் உள்ளன. பாடசாலை மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். பல வீதிகள் வருடக்கணக்காகக் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றன. அமுனுதென்ன, கீழ் இறத்கங்க, வேவல்கட்டி, மூக்குவத்தை போன்ற பாதைகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. இந்தப் பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோட்டையாக வைத்துக்கொண்டு இதுவரைகாலம் ஆட்சியமைத்து வந்தார்கள். இப்போதுதான் தமிழ் முற்போக்கு முன்னணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.”

நீங்கள் பிரதேச சபைக்குப் பிரவேசித்ததன் நோக்கம் என்ன, அங்கிருந்து உங்கள் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கா?

நிலைமை அப்படித்தான் போய்க் கொண்டு இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், பிரதேச சபையில் வெறும் வாய்ச்சவடால் மாத்திரமே நடக்கிறது. அபிவிருத்திப் பணிகள் நடைபெறுவதாகத் தெரியவில்லை. இரண்டு வருடத்திற்குப் பிறகுதான் ஏதாவது செய்ய முடியும் என்கிறார்கள். மத்திய அரசாங்கத்திடமிருந்து நிதி வரவில்லை என்று சபையின் தலைவர் சொல்கிறார். உறுப்பினர்களுக்கான தொலைபேசிக் கட்டணங்கள்கூட நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அப்படியென்றால், பெரும் எதிர்பார்ப்புகளுடன் சென்ற உங்களுக்குப் பிரதேச சபை ஏமாற்றத்தை அளித்திருப்பதாகச் சொல்கிறீர்களா?

நிச்சயமாக ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. தோட்டப்பகுதி பிரச்சினைகளை இதன் மூலம் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மூன்று தமிழ் உறுப்பினர்கள் இருக்கிறோம். சரியென்றால், எமக்குச் சபையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நாம் தேசிய கட்சிகளில் வந்திருப்பதால், எல்லாம் பெரும்பான்மை உறுப்பினர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

தமிழர் முற்போக்கு முன்னணி வாய்ப்பு வழங்கியதாகச் சொன்னீர்கள், ஏன் அவர்கள் உங்களைத் தெரிவுசெய்தார்கள்?

நான் இதற்கு முன்னரே பல சமூகப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றேன். பாடசாலை மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்துவதற்காகப் பல இலவசக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறேன். முக்கியமாகப் பாடசாலை விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தினேன். அதனால், எனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு ஏற்பட்டது.

அரசியலுக்கு வருவதற்கு முன்னரே சமூகப் பணிகளில் ஈடுபட்டதால், என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள். அரசியலுக்கு வரும் நோக்கத்தில் நான் இவற்றைச் செய்யவில்லை. எனக்குத் தெரியாமலேயே என்னைத் தெரிவுசெய்துவிட்டுக் கையொப்பம் வைப்பதற்குத்தான் அழைத்தார்கள். அப்போதுதான் எனக்குத் தெரியும். அதற்கு ஆசிரியர் சந்திரகுமார்தான் காரணம்.

பிரதேச சபை அரசியலுக்கு அடித்தளம் என்பார்கள். ஆனால், அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் இல்லையா?

ஆமாம். என்னை அரசியலில் புடம்போட்டுக்கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறேன். முதலில் மொழிகளில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறேன். கற்றுக்கொண்டிருந்தாலும், சிறந்த தொடர்பாடல் மூலமாகத்தான் எமது பிரச்சினைகளை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க முடியும். நாங்கள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் அரசியல் செய்வதால், மொழியைச் சரியாகக் கையாள வேண்டும் என நினைக்கிறேன்.

உங்களுடைய அடுத்த இலக்கு?

எனது இலக்கு என்பதைவிட இரத்தினபுரி மாவட்டத் தமிழ் மக்களின் இலக்கு அல்லது எதிர்பார்ப்பு என்னவென்றால், இந்தப் பகுதிக்கு ஒரு மாகாண சபை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினரும் அவசியம் என்பதாகும். அதற்காக உழைக்க வேண்டும்.

ஏற்கனவே இருந்தவர்கள் எதையும் செய்யவில்லை என்கிறீர்கள், மீண்டும் தமிழ் உறுப்பினர்களைக் கொண்டுவருவது மட்டுந்தான் நோக்கமா?

ஒன்றை நான் புரிந்துகொண்டிருக்கிறேன், புரிந்துகொள்ளவும் வேண்டும். இரத்தினபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தேசிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியாக இருக்கட்டும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருக்கட்டும் அவர்கள் தமிழர் ஒருவர் தலைமைக்கு வருவதை விரும்புகிறார்கள் இல்லை. இஃதுதான் உண்மை. உதாரணமாக ஏ. எம். டி. இராஜன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதற்குப் பிறகு புதிய ஒருவரை உருவாக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கம். இராஜன் இருந்தபோது தமிழ் மக்கள் எல்லோரும் அவர் பின்னால் இருந்தார்கள். ஆனால், தற்போது அந்த நிலையை உருவாக்க பெரும்பான்மை அரசியல் தளம் தடைகளை ஏற்படுத்துகிறது. அவர்களின் வாக்கு வங்கி சரிந்துவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதுதான் காரணம்.

இதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?

அரசியலுக்குப் புதிது என்றாலும், அவர்களுடன் இணைந்து பணியாற்றும்போது அவர்களின் கருத்துகளின் மூலம் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. ஐக்கிய தேசிய கட்சியில் நான் போட்டியிட்டு வெற்றிபெற்றிருப்பதன் காரணமாக அவர்கள் என்னை அடிக்கடி அழைக்கிறார்கள்.

அவர்களோடு இணைந்து செயற்படுமாறு வற்புறுத்துகிறார்கள். வேண்டிய உதவிளைச் செய்வதாகச் சொல்கிறார்கள். நான் தமிழர் முற்போக்கு கூட்டணியின் சார்பில் வந்தவன். இவர்கள் சொற்படி நடந்தால், எனது கட்சிக்கு நான் துரோகம் இழைப்பதாகத்தானே அமையும்! எனது அமைப்பாளர் சந்திரகுமார். அவருக்கு மாறாக என்னால் செயற்பட முடியுமா? அவர்கள் எதனைச் சொன்னாலும் அடுத்த தமிழ்த் தலைமையை உறுதியாக உருவாக்க வேண்டும்.

உங்களின் கருத்துப்படி சிறுபான்மை மக்களுக்கான அபிவிருத்தியைப் பெரும்பான்மை தேசிய அரசியல் தளம் தடுக்கிறது என்கிறீர்களா?

அதுதான் உண்மை. அவர்களை மீறி எந்தப் பணியையும் செய்ய முடியாது என்ற நிலைதான் காணப்படுகிறது. இரத்தினபுரியில் ஒரு தமிழ்ப் பாடசாலையை நிர்மாணிப்பதற்கான முயற்சி தடைப்பட்டதும் இதனால்தான் என நினைக்கின்றேன்.

இந்த நிலையை முறியடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

தமிழ் மக்களுக்குத் தெளிவையும் விழிப்பையும் ஏற்படுத்த வேண்டும். இதற்குப் படித்த புத்தி ஜீவிகள் முன்வர வேண்டும். தேசிய கட்சிகளிலிருந்து விடுபட்டுத் தனித்துவமான அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டும். பலாங்கொடையில் ஏணிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்ளுக்கு எந்தத் தலையீடும் இல்லை.

இதன்மூலம் எனக்குத் தனிவழிதான் சரியெனப்படுகிறது. ஓர் இடத்தில், யானைச் சின்னத்தில் நாய் வாக்கு கேட்டாலும் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று ஒரு முக்கியஸ்தர் தெரிவித்திருக்கிறார்.

அவர்களுடைய மனநிலை அவ்வாறுதான் இருக்கிறது. இதனைப் புரிந்து செயற்பட வேண்டும். எனவே, தேசிய ரீதியாகச் செயற்படுகின்ற தமிழ் அரசியல் தலைமைகள் இவ்வாறான பகுதிகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Comments