மாகாணசபைத் தேர்தல் பழைய முறையிலேயே நடத்தப்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

மாகாணசபைத் தேர்தல் பழைய முறையிலேயே நடத்தப்பட வேண்டும்

எம்.ஏ.எம். நிலாம்

 

மாகாண சபைகளுக்கான தேர்தல் பழைய முறையிலேயே நடத்தப்பட வேண்டுமென்பதில் தாங்கள் உறுதியான நிலைப்பாட்டைக்கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சிறுபான்மை பிரதிநிதித்துவத்துக்கு குறிப்பாக முஸ்லிம் சமூக அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு புதிய முறை பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். கண்டியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றின் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாகாண எல்லை நிர்ணயம் தொடர்பில் இன்னமும் தெளிவான முறை உறுதிப்படுத்தப்படாத நிலையில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப்படுத்துவதற்கு பழையமுறையே உகந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்விமான்கள், அரசியல்துறை சார்ந்தோர், புத்திஜீவிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடனான சந்திப்பில் பங்கேற்று தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோது அவர் மேலும் கூறியதாவது,

மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் தேசிய பட்டியல் என்ற பின் கதவு வழியாக அரசுக்குள் நுழைந்து அமைச்சராக வந்து மக்களின் ஜனநாயக உரிமையை மறுதலிக்கும் விதத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பை கேள்விக்குள்ளாக்குகின்ற கலப்புத் தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதில் அவர் விடாப்பிடியாக இருக்கின்றார். அவரது செயல் முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியில் மோசமாக பலவீனப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இந்த துரோகத்தைச் செய்ய அவருக்கு எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை.

முஸ்லிம் சமூகத்தின் வாக்கு வங்கியை சிதறடித்து சின்னா பின்னப்படுத்தும் முறையிலேயே கலப்புத்தேர்தல் முறை காணப்படுகின்றது. இதனை நாம் கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது வெளிப்படையாகவே காணமுடிந்தது. எல்லை நிர்ணயம் என்ற பெயரில் நாடு முழுவதிலும் சிறுபான்மைச் சமூகத்தின் வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டுள்ளது. தொகுதிவாரி அல்லது வட்டாரத்தேர்தல் முறையானது. முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தை மிக மோசமாகப் பாதிக்கச் செய்யும் ஒன்றாகவே அமைந்து காணப்படுகின்றது.

எல்லை நிர்ணயக்குழுவிலும், பாராளுமன்ற உபகுழு மற்றும் கட்சித்தலைவர்கள் கூட்டத்திலும் எமது காட்டமான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றோம். கலப்புத் தேர்தல் முறைக்கு கண்களை மூடிக் கொண்டு கை உயர்த்தவில்லை பல நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இணக்கம் தெரிவிக்கப்பட்டது. அந்த நிபந்தனைகளில் ஒன்று கூட நிறைவேறப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்தமுடியாது அதற்கு நாம் ஒருபோதும் இணங்கமாட்டோம்.

எமது நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றி எல்லை நிர்ணயத்தில் காணப்படும் குறைபாடுகளைத் தீர்த்ததன் பின்னரே புதிய கலப்புமுறையில் தேர்தலை நடத்த முடியும். அதற்காக மாகாண சபைகளுக்கான தேர்தலை பின்போட வேண்டிய அவசியம் கிடையாது, இன்றைய நிலையில் மாகாண சபைத்தேர்தலை பழைய முறையில் விகிதாசார அடிப்படையில் நடத்திவிட்டு எதிர்காலத்தில் புதிய முறையில் நடத்தமுடியும். இதில் ஒன்றும் தவறுகிடையாது.

உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் கூறுவதுபோன்று பழையமுறையில் மோசடிகளும், ஊழலும் நடக்கவில்லை. அண்மையில் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் நடந்த மோசடிகளும், ஊழலும் மிகப் பெரியதாகும். பணம், உறவுகள்தான் அங்கு தலைவிரித்தாடியுள்ளது. அமைச்சர் இந்த விடயத்தில் யாருக்காக பேசப் போகிறார் என்பது புரியவில்லை.

எனவேதான் தாம் பிரதான கட்சிகளிடம் பழைய முறையிலேயே இம்முறை மாகாணசபை தேர்தல் நடத்தப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சியும் வேறுபல கட்சிகளும், சிறுபான்மைத் தரப்புகளும் இந்த விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன” எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

Comments