மரண தண்டனை | தினகரன் வாரமஞ்சரி

மரண தண்டனை

மஹிந்த தரப்பினர் தாம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாதாள உலகக் குழு மற்றும் போதை கலாசாரம் நல்லாட்சியில் மீண்டும் தலைதூக்கியுள்ளது என்ற விசமப் பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். அரசியலுக்காக முன்னெடுக்கப்படும் பிரசாரமாகவே இதனைப் பார்க்க வேண்டும்

“மரண தண்டனை” நாட்டின் பட்டிதொட்டியெங்கும்

 

 

மகேஸ்வரன் பிரசாத்

பேசப்படும் வார்த்தையாகத் தற்பொழுது மாறியுள்ளது. சட்டவிரோத போதைப்பொருட் கடத்தல் வியாபாரச் செயற்பாடுகள் கட்டுக்கடங்காது அதிகரித்திருப்பதால் அவற்றைத் தடுப்பதற்கு மரண தண்ட னையை மீண்டும் நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளமையே இந்த பரபரப்புக்குக் காணமாகியுள்ளது. மரணதண்டனை பற்றி பல்வேறு தரப்பினர் பல்வேறு நிலைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். போதையை ஒழிக்க மரணதண்டனை சிறந்ததொரு தீர்வாக அமையாது என ஒருசாராரும், போதையிலிருந்து எதிர்கால சந்ததியைக் காப்பாற்றுவதாயின் மரணதண்டனை கொண்டுவரப்படவேண்டும் என்று பிறிதொரு சாராரும் வாத விவாதங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர். அரசியல் மேடைகள் மற்றும் ஊடகங்களில் இந்த விவகாரம் சூடுபிடிப்பதற்கான பின்னணி பற்றி ஆராய்வது பொருத்தமானதாகும்.

 

 

அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. போதைப்பொருட் கடத்தல் தொடர்பில் நாளாந்தம் பலர் கைது செய்யப்படுகின்றனர். இதற்கும் அப்பால் போதைப்பொருள் வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டு குழுமோதல்கள், துப்பாக்கிச்சூடுகள் போன்ற சம்பவங்களும் அண்மைய நாட்களில் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

குறிப்பாக கொழும்பு மாநகரசபையின் ஒரேயொரு சுயேச்சைக்குழு உறுப்பினரான நவோதய கிருஷ்ணா புறக்கோட்டையிலுள்ள தனது கடைக்குள்ளேயே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அவருக்கும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான பின்னணி இருப்பதால் அவர் சுடப்பட்டிருக்கலாம் என பொலிஸ் பேச்சாளர் கூறியிருந்தார். கிருஷ்ணா மாத்திரமன்றி அவரைப்போன்று மேலும் 4 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்குள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகளுக்கான காரணங்கள் பொலிஸ் தரப்பில் உறுதிசெய்யப்படாதபோதும் பாதாள உலகக் குழுக்களின் கைவரிசைகளாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் பொலிஸாரால் முன்வைக்கப்படுகின்றன.

மோசமடைந்திருக்கும் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவது அரசாங்கத்துக்குப் பெருந்தலையிடியாக மாறியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு இன்னமும் 15 மாதங்களே எஞ்சியிருப்பதால் அரசு இதுவிடயத்தில் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. மஹிந்த தரப்பினர் தாம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாதாள உலகக் குழு மற்றும் போதை கலாசாரம் நல்லாட்சியில் மீண்டும் தலைதூக்கியுள்ளது என்ற விசமப் பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். அரசியலுக்காக முன்னெடுக்கப்படும் பிரசாரமாகவே இதனைப் பார்க்க வேண்டும்.

ஏனெனில், கடந்த ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு கடத்தப்பட்டுவந்த எதனோல் கொள்கலன்களின் எண்ணிக்கை மற்றும் மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் எண்ணிக்கை என்பன கடந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என முற்றாகக் கூறிவிடமுடியாது. கடந்தகாலத்தில் இடம்பெற்றமையால் தற்பொழுதும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது சாதாரணமானது என நியாயப்படுத்திவிடவும் முடியாது. இந்த நிலையை வளரவிடுவது நாட்டின் எதிர்காலத்துக்கு நிச்சயமாக பாதகமாகவே அமையும்.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச்செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் தனது தரப்பில் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளன என்பது மறுப்பதற்கில்லை. சட்டம் ஒழுங்கு அமைச்சர் இந்தவார நடுப்பகுதியில் இராணுவத் தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபரை அழைத்து முக்கியமான கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தார். எதனைப் பயன்படுத்தியாவது இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே தமது எதிர்பார்ப்பு என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்திருந்தார்.

அது மாத்திரமன்றி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. போதைப்பாவனை அதிகரிப்பை கட்டுப்படுத்த மரணதண்டனையை நிறைவேற்றும் அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி சமர்ப்பித்திருந்தார். அவருடைய இந்த யோசனைக்கு அமைச்சர்கள் சகலரும் பூரண ஆதரவைத் தெரிவித்திருந்ததாக அறியக்கிடைக்கிறது. எதிர்கால சந்ததியை பாதுகாக்கும் நோக்கில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கும் யோசனையில் தனது கையொப்பத்தைப் பயன்படுத்தத் தயார் என்றும் ஜனாதிபதி மறுநாள் கண்டியில் கூறியிருந்தார்.

மரணதண்டனை வழங்குவது இந்தப் பிரச்சினைக்கான இறுதி முடிவாக அமைந்துவிடுமா என்பது பலராலும் முன்வைக்கப்படும் கேள்வியாகும். அப்படி மரண தண்டனை கொடுப்பதாயின் யாருக்கு அதனை வழங்குவது என்ற கேள்வி முன்னிற்கும். ஏனெனில், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் பல மட்டத்திலான செயற்பாடுகள் உள்ளன.

கடத்தல்களுக்குப் பொறுப்பானவர்கள் திரைமறைவிலிருந்து இயக்கிக் கொண்டிருக்கும் பலம்படைத்த கும்பலொன்றாக இருக்கும். பெருந்தொகை பெறுமதியான போதைப்பொருள் கடத்தல்களை மேற்கொள்வதற்கு அதிகாரம் மிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு நிச்சயம் அவசியம். இதனைவிட இடைத்தரகர்கள், விநியோகம் மேற்கொள்பவர்கள் என மற்றொரு தரப்பு செயற்படும். போதை வியாபாரத்துக்கு மரணதண்டனை வழங்குவதாயின் யாருக்கு அதனை வழங்குவது என்ற கேள்வி எழுகிறது. நிலைமை இப்படியாக இருக்கும்போது போதைப்பொருளுடன் பிடிபடுபவர்களை மாத்திரம் தூக்கில் போட்டால் பிரச்சினை முடிந்துவிடுமா என்பது ஜே.வி.பியினரால் முன்வைக்கப்படும் கேள்வியாகும். குற்றச்செயல்களில் ஈடுபட முடியாத சூழலொன்று உருவாக்கப்படுவதே காலத்தின் தேவையாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஏனெனில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தெஹிவளை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பகுதிகளிலிருந்து மொத்தம் 103 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. இதனுடன் கைதுசெய்யப்பட்ட நபர் ஒருவர், மரணதண்டனை விதிக்கப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ள ஒருவருடன் தொடர்புகளைப் பேணியிருந்தார் என்பது பொலிஸ் விசாரணைகளில் பகிரங்கமானது. ஜே.வி.பியினர் கூறியது இதுபோன்ற கட்டமைப்பையே.

சிறைச்சாலையில் உள்ள ஒருவரே வெளியில் உள்ளவர்களை வைத்துக் கொண்டு போதை வியாபாரத்தை முன்னெடுப்பது இதுபோன்று பல சந்தர்ப்பங்களில் புலப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் வெலிக்கடை சிறைச்சாலைக்குள்ளிருந்து 3950 தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் லதீப் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செயலமர்வொன்றில் கூறியிருந்தார். சிறைக்குள்ளிலிருந்து நாட்டின் சகல பகுதிகளுக்கும் அழைப்புக்கள் எடுக்கப்பட்டிருப்பது மாத்திரமன்றி மலேசியா மற்றும் நைஜீரியா போன்ற வெளிநாடுகளுக்கும் அழைப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளுக்குள் தொலைபேசிகள் எவ்வாறு கொண்டுசெல்லப்படுகின்றன? நிச்சயமாக அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் தொலைபேசிகள் உட்செல்ல முடியாது.

சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கருத்துப்படி சிறைக்குள்ளிருந்து எடுக்கப்படும் ஒரு அழைப்புக்கு 2000 ரூபா வீதம் அதிகாரிகளால் சட்டவிரோதமாக அறவிடப்படுகிறதாம். அது மாத்திரமன்றி சிறியதொரு போதை குற்றத்துக்காக சிறைக்குச் செல்லும் ஒருநபர் போதைப்பொருள் வியாபாரத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவரை போன்று வெளியே வருவதற்கு எமது பொறிமுறையே காரணம் என்கின்றார் அவர். இலங்கையில் சிறைச்சாலைகளே காணப்படுகின்றன, சிறைச்சாலைச் சீர்திருத்தகூடங்களாக மாற்றப்பட வேண்டும். அப்படி மாற்றப்படும் போதே இந்தப் போதைப்பொருள் விவகாரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபரின் கருத்தாகும்.

அவருடைய இந்தத் தகவல்களும், கருத்துக்களும் ஆச்சர்யப்படுவதாக இல்லாவிட்டாலும், பொறிமுறையில் பாரியதொரு மறுசீரமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற விடயத்தை அழுத்திக்கூறுகிறது. தமது கடமைகளை சரியாக மேற்கொள்ளாத அதிகாரிகள், பொறிமுறையில் காணப்படும் குறைபாடுகள் போன்றவற்றை வைத்துக்கொண்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருசிலரை மாத்திரம் தூக்கில் இடுவது எந்தளவுக்கு சாத்தியமாக அமையப்போகிறது?

மறுபக்கத்தில் உலக நாடுகள் பல மரணதண்டனையை கைவிட்டுவரும் சூழலில், இதுவரை கைவிட்டிருந்த இலங்கை மீண்டும் அதனை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறுவது சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள ஏற்கனவே போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளன. இதுபற்றியும் அரசாங்கம் சிந்திக்கவேண்டியிருக்கும்.

எதுவாக இருந்தாலும், வலுவான அதிகாரத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மூலம் நாடுகடந்த திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்க முடியும். இதற்கு நாடுகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பு அவசியமானது என பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றச்செயல்கள் தற்பொழுது நாடுகடந்து இடம்பெறுகின்ற திட்டமிட்ட குற்றச்செயல்களாக மாறியுள்ளன. இவற்றைத் தடுப்பதாயின் சகல மட்டத்தின் ஒத்துழைப்பும் அவசியம். அரசாங்கம், வர்த்த நிறுவனங்கள், சிவில் சமூகம், சர்வதேச சமூகம் உள்ளிட்ட சகல தரப்பிலும் ஒத்துழைப்பு அவசியமானது. சர்வதேசத்தில் மாத்திரமன்றி உள்நாட்டிலும் திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் வலுப்படுத்தப்படுவது அவசியமானது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கொழும்பில் நடைபெற்ற செயலமர்வில் சுட்டிக்காட்டியிருந்தார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கு உதவி செய்யும் இடைத்தரகர்கள் பலர் இருக்கின்றனர். கணக்காளர்கள், சட்டநிபுணர்கள், வங்கியாளர்கள் உள்ளிட்டவர்கள் பல்வேறு வகையில் உதவிசெய்து வருகின்றனர். மனித உரிமைகளைப் பேணுவதற்கு நாடுகள் முயற்சிகளை எடுக்கின்றபோதும் இவற்றைத் தடுக்கும் வகையில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றைத் தடுப்பதற்கு வலுவான அதிகாரத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன அவசியமாகும் என்பது அவருடைய கருத்தாகவிருந்தது.

அவருடைய கருத்துக்கு மாற்றுக்கருத்துக் கிடையாது. எனினும், திட்டமிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட சட்டங்கள் எதுவும் இலங்கையில் கிடையாது. ஏற்கனவே உள்ள குற்றவியல் சட்டக்கோவையின் கீழேயே திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் மரணதண்டனை வழங்குவது ஒருபுறமிருக்க, தற்போது தோன்றியுள்ள சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான சட்டத்திருத்தங்களும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவற்றுக்கும் அப்பால் தற்போது தோன்றியுள்ள நிலைமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அரசியல் ஆர்வம் சகல அரசியல்வாதிகளிடமும் இருக்கவேண்டும் என்பதே முக்கியமாகும்.

Comments