புத்திசாலித்தனமற்ற அணுகுமுறை கைவிடப்படவேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

புத்திசாலித்தனமற்ற அணுகுமுறை கைவிடப்படவேண்டும்

மட்டைகளைத் தூக்கிக்கொண்டு வீதியில் இறங்குவதால் எதுவும் நடக்கப்போவதில்லை

அன்புள்ள ஆசிரியருக்கு,

 

முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்துக்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் பத்திரிகைகளை நிறைத்துள்ளன. நானும் இது பற்றி என் பதிவுகளைக் கூற விழைகின்றேன்.

விஜயகலா எம்.பி இக்கருத்தை கூறியபோது அவர் அரசாங்கத்தில் ஒரு பிரதி அமைச்சராக இருந்தார். அவர் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். இந்நிலையில், அக்கட்சியின் பல சிறந்த தலைவர்களை அழித்த LTTE அமைப்பின் மீள் உருவாக்கத்திற்கு அவர் அழைப்பு விடுக்கிறார். ஓர் அரசாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் எப்படி அரசுக்கெதிராக யுத்தத்தில் ஈடுபட்ட ஓர் அமைப்பை மீள வேண்டும் என்று கேட்கமுடியும்? எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தால் அது வேறுவிடயம். ஆனால், அரசில் அங்கம் வகித்துக் கொண்டு இவ்வாறு பேசியது மிகவும் முட்டாள்தனமானது.

இது எல்லோரையும் விட எல்லாவற்றையும் விட இப்பொழுது ஐக்கிய தேசியக் கட்சியைத் தான் பாதிக்கப்போகிறது.

மகிந்த குழுவினர் ‘இனவாத’ பிரசாரம் செய்வதாகவும் தமிழ் மக்களுக்காக பேசினால் என்ன தவறு என்றும் குரல்கள் எழுகின்றன. இங்கு மகிந்த குழுவினர் ‘இனவாத’ மாகப் பிரசாரம் செய்வதாக நான் நினைக்கவில்லை. LTTE ஐ எதிர்ப்பது இனவாதமல்ல.

விஜயகலாவின் கருத்துக்களை வன்மையாக எதிர்க்காததன் மூலம் ஐ.தே.க வினரும் சு.கவினருமே இங்கு தவறிழைக்கிறார்கள். LTTE ஆல் கொல்லப்பட்ட சிங்கள மக்களின் நினைவுகளுக்கு அவர்களது மௌனம் களங்கம் விளைவிப்பதாக இருக்கும். அத்துடன் மகிந்த குழுவினர் அரசியல் இலாபமீட்டவும் இந்த மௌனம் வழி வகுத்துவிட்டது.

அடுத்தது தமிழ் மக்கள் LTTE உறவு தமிழ் மக்களின் பிரச்சினை என்பது LTTE உடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாதது. LTTE தமிழர்களுக்காக போராட என்று சொல்லி ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பு தான். ஆனாலும் அவ்வமைப்பின் பாசிசச் சுயநலப் போராட்டம் தமிழர்களை மிக மோசமாகப் பலவீனப்படுத்தி படுகுழியில் தள்ளியுள்ளது.

1987, 1989-−90, 1995, 2002-−4 காலப்பகுதியில் சமாதானத்திற்கான வாய்ப்புக்களைக் குழப்பி அடித்ததன் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கும் இன்னும் பல லட்சக்கணக்கானோர் புலம்பெயர்வதற்கும் LTTE காரணமாக உள்ளது. அது 2005இல் மூடத்தனமாக தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததால் சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டதுடன், இலங்கை கண்டறியாத தீவிரவாத, கொலைகார, இனவாத, ஊழல், பதவி வெறி பிடித்த மஹிந்த குடும்பத்தை இவ் அழகிய தேசத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தது.

(2005 நவம்பரில் LTTE இன் யாழ் பகிஷ்கரிப்பால் தான் மஹிந்த சுமார் 1 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். சுமார் 4 இலட்சம் மக்கள் LTTE இன் கட்டுப்பாட்டு பகுதியான வன்னியிலும் மற்றும் யாழ்ப்பாணத்திலும் அன்று வாக்களிக்கவில்லை) இப்படி வரலாறு இருக்கும் போது LTTE ஐ பற்றி பேசிவிட்டு தமிழர்களுக்காக கதைத்தேன் என்பது அபத்தமானது.

இன்று தமிழர்களின் பிரச்சினை அவர்களுக்கு ஒரு புதிய அரசியல் யாப்புக்கூடாக சம அந்தஸ்து கிடைக்கவேண்டும் என்பதுதான். துரதிஷ்டமாக அது இன்னும் நடக்கவில்லை. அது பற்றியே எமது தமிழ் அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும். அதை விட 2020க்குப்பின் நாட்டில் இனத்துவ தீவிரவாத இராணுவ ஆட்சி (Ethnocratic Radicad Military Government) மலர்ந்துவிடாமல் உயிரைக் கொடுத்து ஜனநாயக வழியில் போராட வேண்டிய நிலையில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களும் உள்ளனர். எமது சில அரசியல்வாதிகள் இதைப் பற்றிய புரிதல் இல்லாமல் பேசுவது ஆரோக்கியமானதல்ல.

இனி விஜயகலாவின் பேச்சுக்கு வருவோம். பெண்கள், சிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது என்பதே அப்பேச்சின் அடிப்படை. அதற்காக LTTE வரவேண்டும் என்பதாக ஒரு வசனம் இடம்பெற்றது என்று நினைக்கின்றேன்.

பெண்கள், சிறுவர்களுக்கான பாதுகாப்பு என்பது ஆயுதக்குழுக்களாலோ பொலிஸாராலோ இராணுவத்தாலோ ஒழுங்கு செய்யப்படுவதில்லை அதை அந்த சமூகம் தான் செய்ய வேண்டும். ஒரு சமூகம் பல இளைஞர்கள், யுவதிகள், இளம் குடும்பங்கள், நடுத்தர வயது குடும்பங்கள், சிறுவர் சிறுமியர் மற்றும் வயதானோரைக் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான சமூகம். பாதுகாப்பான சமூகம். இலங்கையில் தமிழர் (குறிப்பாக வடகிழக்கு தமிழர்) வாழும் பல பகுதிகளில் இச் சமூக அமைப்பு இன்று இல்லை. சில இடங்களில் வயதானோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. யாழ்ப்பாணத்திலோ நிலை பாரதூரமாக மோசமாக சில பகுதிகளில் காணப்படுகிறது.

பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு நிறைய பணத்தை, நகைகளை வைத்துக் கொண்டு வயதான பெற்றோர் இருக்கிறார்கள். சில வீடுகளில் வயதான திருமணமாகாத முதிர் கன்னிகள் தனித்திருக்கிறார்கள். இன்னும் சில வீடுகளில் வெளிநாடுகளில் திருமணம் பேசி பின்னர் குழம்பிய அல்லது இடையில் முறித்துக்கொண்டு நாடு திரும்பிய இளம் பெண்கள், முதிர் கன்னிகள் (சிலர் குழந்தைகளுடன்) தனித்துள்ளனர். இது பல சீரழிவுகளுக்கு வழிகோலுகிறது.

தமிழ் சினிமாவின் உபயத்தால் குடிப்பழக்கம் பரவலாகி விட்டது. கண்டித்து வழிநடத்துவதற்கு சரியான ஆசிரியர்களோ, பெற்றோரின் வழிகாட்டலோ இல்லை. சில சந்தர்ப்பங்களில் பெரியவர்களும் ஆசிரியர்களும் கூட குடிக்கிறார்கள். போதைவஸ்து பழக்கம் பத்திரிகைகளில் கூறுமளவுக்கு இல்லாவிட்டாலும் சில பகுதிகளில் ஊடுருவி இருக்கிறது. தமிழ் வீரம் பேசும் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் பெரும் குடிகாரர்களாக உள்ளனர். இதைவிட இளம் ஆண்களின் தொகை இளம் பெண்களின் தொகையை விட அதிகமாக உள்ளது. பெண்கள் பலர் புலம்பெயர்வது தொடர்கிறது. வேலைவாய்ப்பின்மை, நேரத்திற்குத் திருமணம் செய்து வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாமை போன்றன பரவலான விரக்தி நிலையை ஏற்படுத்தி உள்ளன.

சுழிபுரம் சம்பவம் இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கப்பட வேண்டும். வாள்வெட்டுக் குழுக்களுக்கு பின்னால் வெளிநாட்டு LTTE ஆதரவாளர்களும் மஹிந்த சார்பு புலனாய்வாளர்களும் உள்ளனர். “யாழ்ப்பாணத்தில் இப்ப எங்கட பெடியல் வாளுடனல்லோ சுத்துறாங்கள்) என்பது வெளிநாடுகளில் பொது வைபவங்களில் ஒரு சுவையான பேசு பொருளாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பிரச்சினை உள்ளது என்று காட்டுவது வெளிநாட்டுத் தமிழர்களுக்கு தேவையான ஒன்றாகும். அரசாங்கத்திற்குத் தலையிடிகொடுக்க மஹிந்த சார்பு இராணுவ, பொலிஸ் அதிகாரிகளும் இச்சம்பவங்களைத் திசை திருப்புவார்கள்.

சுழிபுரம் சம்பவம் கடைசியாக இருக்கப் போவதில்லை. இவை நடந்தவுடன் மட்டைகளைத் தூக்கிக் கொண்டுவந்து வீதியில் இருப்பதாலோ கடைகளை இழுத்து மூடுவதாலோ LTTE வர வேண்டும் என்று கூறுவதாலோ எதுவும் ஆகப்போவதில்லை. சமூகம் இப்படி சீரழிந்து போய் இன்று எல்லோரும் சிரிக்கும் நிலைக்கு வந்ததற்கும் LTTEயும் அதன் நீண்ட யுத்தமும் தான் காரணம். அந்தப் புரிதல் முக்கியமானது.

எதற்கும் முறைப்பாடு செய்கின்ற வீதியை மறிக்கின்ற, அரசியல் பேசுகின்ற புத்திசாலித்தனமற்ற அணுகுமுறை கைவிடப்பட வேண்டும். நாம் சுயபரிசோதனையில் இறங்க வேண்டும். பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்தாலே எமது சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்ற முடியும். LTTEஐ மீள உருவாக்குவதால் அல்ல. பெண்களின் மார்புக்கச்சையில் குண்டைக் கட்டி அனுப்பிய வரலாற்றையோ ராஜினி திரணகம, கவிஞர் செல்வி போன்ற பெண்களை படுகொலை செய்த வரலாற்றையோ யாராலும் மறந்து விடக்கூடாது.

 

 

மொழிஅரசன்

வெள்ளவத்தை.

Comments