பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மார் டி சில்வா | தினகரன் வாரமஞ்சரி

பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மார் டி சில்வா

ரஷ்யாவில் டந்த 14ம் திகதி ஆரம்பமான 21வது பிபா உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகின. இம்முறை கிண்ணம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் முன்னணியில் இருக்கும் அணிகளில் நெய்மார் தலைமையில் களமிறங்கும் பிரேசிலே முதன்மை அணியாகத் திகழ்கின்றது.

கடந்த சில மாதங்களாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்விலிருந்த அவ்வணியின் தலைவரும் கால்பந்தாட்ட உலகின் தற்போதைய ஜாம்பவான்களில் ஒருவருமான நெய்மார் கடந்த வாரம் பூரண குணமடைந்து மீண்டும் களத்தில் இறங்யுள்ளது பிரேசில் அணியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் ஏனைய அணியினரை கிலி கொள்ளச் செய்துள்ளது. காயத்திலிருந்து மீண்டு வந்த அவர் கடந்த வாரம் ஆஸ்திரியா வுடன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியிலும் கோல் அடித்து பிரேசில் அணியை வெற்றிபெறச் செய்துள்ளார்.

பிரான்ஸில் பாரிஸ் சென்ட் ஜெர்மையின் அணிக்காக விளையாடும் நெய்மார் கடந்த பெப்ரவரி மாதம் மார்ஷையில் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியொன்றின் போது முழங்காலில் காயமேற்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக தனது நாட்டுக்காகவோ தனது அணிக்காகவோ ஒரு போட்டியிலும் அவர் களமிறங்கவில்லை.

சில விமர்சகர்கள் அவர் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளிலும் விளையாடுவது சந்தேகம் என செய்திகளை வெளியிட்டிருந்தனர். ஆனால் அவர் கடந்த வாரம் குரோஷியாவுடன் நடைபெற்ற சிநேகபூர்வ ஆட்டத்துடன் மீண்டும் களமிறங்கி கோலொன்றையும் பெற்றுக்கொடுத்து தனது நாடு வெற்றி பெற உதவியுள்ளார்.

குரோஷியாவுடனான போட்டி நெய்மாருக்கு 84வது போட்டியாகும். இதுவரை அவர் பிரேசிலுக்காக 54 கோல்கள் பெற்றுள்ளார். மேலும் அவர் பிரேசில் அணிக்காக கோல் பெற்றவர்கள் வரிசையில் 4வது இடத்திலுள்ளார். இவ்வரிசையில் பிரேசிலின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான ரோமாரியோவை முந்திச் சென்று 3வது இடத்தைப் பிடிக்க நெய்மாருக்கு இன்னும் ஒரு கோல் மாத்திரமே தேவைப்படுகின்றது.

அண்மையில் பிரேசில் கால்பந்து நிர்வாகம் கோல் அடித்தவர் 10 பேரின் தரவரிசையை வெளியிட்டிருந்தது அதில் 26 வயது நெய்மார் நான்காவது இடத்திலுள்ளார். எனவே இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளின் போது ரோமாரியோவை முந்திச் செல்ல நெய்மாருக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. ரோமாரியோ கடந்த 1994ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் தங்கப்பந்து விருது பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலையில் நெய்மாருக்கு முன்னாலுள்ள இரு உதைப்பந்து ஜாம்பவான்களான பீலேயும், ரொனால்டோவுமேயாவர். இவர்களை முந்திச் செல்லும் எண்ணம் தன்னிடம் இல்லையென்று கூறும் நெய்மார் இன்னும் 5 வருடங்கள் கால்பந்தாட்ட உலகில் இருப்பாரேயானால் தானாகவே இவர்களை முந்திச் செல்லும் சந்தர்ப்பம் கிடைக்குமென்றே கூறப்படுகின்றது.

“பிரேசில் நாட்டுக்காக கூடிய கோல் பெற்றவர்களுடன் எனக்கு ஒரு போட்டியும் இல்லை. சாதனை என்பது வெறும் இலக்கங்கள் என்பதே எனது எண்ணம். அவர்கள்தான் எனது வழிகாட்டிகள். பிரேசில் நாட்டை உதைப்பந்தாட்டத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றவர்கள் அவர்கள். நான் அவர்களை விட திறமையானவன் என்று எண்ணவில்லை. ரொமாரியோ. ரொனால்டோ, பீலே போன்ற முன்னணி வீரர்களை நான் எப்போதும் மதிக்கின்றேன். அவர்கள் எங்கள் நாட்டின் சொத்து. அவர்கள்தான் என் கால்பந்தாட்ட வளர்ச்சிக்கு முன்மாதிரியானவர்கள். சாதனை என்பது வெறும் இலக்கம் மட்டுமே” என்று நெய்மார் த சில்வா தெரிவித்துள்ளார்.

எம். எஸ். எம். ஹில்மி

Comments