2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு! | தினகரன் வாரமஞ்சரி

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு!

ஆசிய நாடுகளில் முதன்முதலில் சர்வஜன வாக்குரிமை கிடைத்தது நமக்குத்தான். அவ்வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்காக வருடா வருடம் தயாரிக்கப்படுகின்ற வாக்காளர் இடாப்பில் தமது பெயரை சேர்ப்பது கட்டாயமென்பதை அறியாதவர்களும் இன்னும் பெருமளவில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வாக்குரிமை மற்றும் தேருநர் இடாப்புகளின் மீளாய்வு தொடர்பாக அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாகவும், கிராம அலுவலர் அல்லது பிரதேச செயலாளர் ஊடாக விளம்பரங்கள் மூலமாக அறிவுறுத்தல்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு இயக்கங்கள் ஊடாக அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறான அறிவித்தல்கள், அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்ற போதிலும் வாக்காளராகப் பதிவுசெய்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துகொள்கின்றார்களா? குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் இவ் விடயத்தில் போதிய தெளிவும் அக்கறையும் செலுத்தாதவர்களாகவே இருந்து வருகின்றனர்.

களுத்துறை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் அவ்வாறானதொரு நிலையே இருந்து வருகின்றது. ஒருவர் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டு அவர் வாக்களிக்க தகுதியுடையவர் என்பதை அறிந்துகொள்ளும் அரசியல் மற்றும் தொழிற்சங்கவாதிகள் தேர்தல் காலத்தில் மட்டும் வாக்காளர்களைத் தேடிச்சென்று வாக்கு கேட்கும்போதுதான் அந்த வாக்குகளின் பெறுமதி உணரப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் புதிதாக அங்கத்தவர்களைச் சேர்த்துக்கொள்ளும் நோக்குடன் தோட்டங்களுக்கு படையெடுக்கும் தொழிற்சங்கங்கள் அங்கத்தவர்களைச் சேர்ப்பதில் காட்டும் அக்கறை வாக்காளர்களாகப் பதிவு செய்வதில்லை.

தொழிலாளர்களும் காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்புவதிலேயே கவனம் செலுத்துகின்றனரே தவிர இதுபோன்ற முக்கிய விடயங்களில் தெளிவில்லாதவர்களாகவே இருக்கின்றனர்.

மறுபுறத்தில் ஓட்டுபோட்டு நமக்கென்ன பிரயோசனம் இதனால் எங்களுக்கு ஒரு நன்மையும் கிடையாது என்பதே அவர்களின் ஆதங்கமாகும். இவர்களின் உள்ளக்குமுறலும் நியாயமானதுதான். ஏனெனில் இந்த மாவட்டத் தமிழ் மக்கள் தங்களின் வாக்கு பலத்தால் எதையுமே சாதிக்க முடியாத வாக்காளர்களாகவே இருந்து வருகின்றனர். எதுவானாலும் வாக்காளராகப் பதிவுசெய்து கொள்ள வேண்டியது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

களுத்துறை மாவட்டத்தில் பல அரச சார்பற்ற அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. ஆனால் எந்தவொரு அமைப்பாவது முன்வந்து வாக்குரிமையின் பெறுமதி பற்றி மக்களுக்கு எடுத்துக்கூறி வாக்களராகப் பதிவுசெய்யும் நடவடிக்கையில் உதவுவதில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் கற்ற இளைஞர், யுவதிகள் இருப்பார்களேயானால் வாக்காளர் பதிவு குறித்து கவனம் செலுத்தி தத்தமது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களை பதிவுசெய்யும் முயற்சியில் ஈடுபடுவதுடன் அயலவர்கள் ஏன் இவர்கள் முயற்சியில் ஈடுபடுவார்களானால் அந்தந்த தோட்டத்தில் இருப்பவர்களுக்கும் கூட உதவ முன்வரலாம்.

ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் வாக்காளர் பதிவு மேற்கொள்வது வழக்கமாகும். தற்பொழுது 2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பதிவு செய்யும் நடவடிக்கை நாட்டின் 14, 730 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தம்மை வாக்காளராகப் பதிவுசெய்து கொள்வதில் அக்கறை காட்ட வேண்டும். தொழிற்சங்கவாதிகளும் இளைஞர் அமைப்புக்களும் இதில் பங்களிப்புச் செய்ய முன்வர வேண்டும்.

இங்கிரிய மூர்த்தி

Comments