நியதி! | தினகரன் வாரமஞ்சரி

நியதி!

என்னைத் தேடி வந்துஎன் நண்பன் இளங்கோ கூறிய செய்தி, என்னை திடுக்கிட வைத்தது! நான் துடித்துத் தடுமாறிப் போனேன், என்னால் நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவன் மிகவும் நல்லவன். நம்பத்தகுந்தவன். நான் அவனை ஏறெடுத்துப் பார்த்தேன். ஆழ்ந்த அனுதாபத்தோடு, அவன் என்னைப் பார்த்தான். தரையை பார்த்தபடி, நான் யோசித்தேன். அருகே வந்து, என் முதுகில் தட்டிய இளங்கோ, “ரவி கவலைப்படாத மனச தேத்திக்க” என்றான்.

அவனது கண்கள் கலங்குவதை என்னால் உணர முடிந்தது. அவன் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டு நின்றான். எனக்காக அவன் அழும்போது, என் நிலை எப்படி இருக்கும்? என் நெஞ்சுக்குள்ளிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளியே வந்தது.

“இளங்கோ இப்போ என்னடா செய்யலாம்?” நான் அவனை பார்த்து கேட்டேன். "நீ ஊருக்கு வா பிறகு யோசிக்கலாம்” என்றபடி அவன் என்னிடம் விடைபெற்றுச் சென்றான். நான் தனித்து நின்றேன்.

நான் தொழில் செய்யும் நிறுவனத்தில் மூன்று நாட்களுக்கு லீவு எடுத்துக் கொண்டு, கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் பஸ்ஸில் பண்டாரவளைக்கு ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு, பஸ்ஸில் காலியாகத் தெரிந்த இறுதி ஆசனத்தில், ஜன்னல் ஓரமாக சென்று அமர்ந்து கொண்டேன். எனக்கு இப்போது தனிமையும் அமைதியுமே தேவைப்பட்டது. சில வினாடிகளில் பஸ் பதுளை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. நான் நண்பன் இளங்கோ கூறிய செய்தியை பற்றி எண்ணிப் பார்த்தேன்.

அதாவது, நான் கடந்த ஐந்து வருடங்களாக உயிருக்குயிராக காதலித்து வந்த, என் காதலி மைதிலிக்கு ஊரில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டார்களாம்! திருமணத்திற்கான நாளும் நிச்சயிக்கப்பட்டு விட்டதாம். இனி என்ன செய்வது? என்னால் எந்தவொரு முடிவிற்குமே வரமுடியவில்லை. நானும் அவளும் நெருங்கிப் பழகிய அந்த நாட்களைப் பற்றி எண்ணிப் பார்க்கின்றேன். அவள் கொஞ்சம் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவள்.

அவளது அப்பா ஒரு வர்த்தகர். அவருக்கு நகரில் இரண்டு கடைகள் இருக்கின்றன. நானோ ஒரு தேயிலை தோட்ட உத்தியோகத்தரின் மகன். பொருளாதார ரீதியில் எங்களிடையே ஏற்றத்தாழ்வுகள் உண்டு.

இதை அவளிடம் நான் பல சந்தர்ப்பங்களில் விளக்கிக்கூறியிருக்கிறேன். அவள் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இருவரும் ஒரே கல்லூரியில் தான் படித்தோம்.

அதுவும் ஒரே வகுப்பில் அவளது துடுக்குதனமான பேச்சும், உதடுகளை குவித்து குவித்து கண்களை உருட்டி இமைத்து தலையை ஆட்டி அசைத்தும் பேசும்போது, நான் என்னையே மறந்து விடுவேன். காரணம் இருந்தும் இல்லாமலும் சிரித்துக் கொண்டே இருப்பாள்.

கல்லூரியில் நடக்கும் எல்லா விதமான நிகழ்ச்சிகளிலும் அவள் பங்குபற்றுவாள். “கூட்டுக் கல்வி நாட்டுக்கு நல்லதா” என்றதொரு தலைப்பில் பட்டிமன்றம் எங்கள் கல்லூரியில் நடைபெற்றது. அதில் அவளும் நானும் அதாவது, மைதிலியும் நானும் பங்குபற்றினோம்; அவள் நல்லது என்று வாதாடினாள்.

நான் நல்லதல்ல என்ற தலைப்பில் வாதாடினேன். நான் பல காரணங்களை ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டி அந்த பட்டிமன்றத்தில் வெற்றிபெற்றேன்.

இந்த நிகழ்ச்சிதான் என்னையும் மைதிலியையும் இறுகப் பிணைக்கும் ஒரு பாலமாக அமைந்தது. அவளே ஓடி வந்து, என் வலது கையை பிடித்து குலுக்கி, வாழ்த்து கூறினாள். அதன் பின் அவளே அடிக்கடி என்னை தேடி வந்தாள். இளங்கோ முதல் நண்பர்கள் மாணவர்கள் பலருக்கும் எங்கள் நட்பு தெரியவந்தது. நான் அவளிடம் நேரிடையாகவே கூறினேன். இந்த தொடர்பு நமக்கு பின்னர் பல சங்கடங்களை உண்டு பண்ணிவிடும் என்றும் கூறினேன்.

அவளோ கேட்ட பாடாயில்லை வந்தது வரட்டும் என்று நானும் மௌனமாக இருந்து விட்டேன். நாட்கள் செல்லச் செல்ல அவள் என்னிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்தாள் கைக்கடிகாரம், கைத்தொலைபேசி, படிப்பிற்கு தேவையான புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், பணம் இப்படி பலவிதமான வழிகளில் எனக்கு உதவினாள். இப்போது அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை என்ற நிலை உருவாகி விட்டது.

கால ஓட்டத்தால் ஏற்படும் மாற்றங்களை யாரால் தான் தடுக்க முடியும்? நாங்கள் படித்து பரீட்சை எழுதி முடித்துவிட்டு கல்லூரியிலிருந்து விலகிவிட்டோம்.

அவளொரு பக்கம் நானொரு பக்கம் நண்பர்களொரு பக்கமென பிரியும் நிலை வந்தது பிரிவுத்துயர் எப்படிப்பட்டது என்பதை அப்போதே எங்களால் உணர முடிந்தது.

இந்த காலகட்டத்தில் ஒரு நாள் காலையில் ஒன்பது மணியளவில் மைதிலி அவளது ஸ்கூட்டரில் என்னைத் தேடி எங்கள் வீட்டிற்கே வந்துவிட்டாள்.

நல்ல வேளையாக அப்பா, அம்மா அண்ணன்மார் யாருமே அப்போது வீட்டில் இருக்கவில்லை. அவள்தான் பேசினாள், “ரவி மனிதர் வாழ தொழில் தேவை; வீடு வாசல் பொருளாதாரம் இவைதான் முக்கியம். அதனால் எங்காவது போய் ஒரு தொழிலை செய்யப்பாருங்கள். அதற்குப் பிறகு நம் திருமணத்தைப் பற்றி யோசிப்போம்” என்ற மைதிலி ஒரு கடிதக் கவரை என் கையில் திணித்துவிட்டு, என்னிடம் எந்த பதிலையும் எதிர்பாராமலேயே ஓடிச்சென்று, அவளது ஸ்டுட்டரில் ஏறிச்சென்று விட்டாள் நான் தடுமாறி நின்றேன்.

அவள் கையில் திணித்துவிட்டுச் சென்ற அந்த கடிதக் கவரை பிரித்துப் பார்த்தேன். அதில் பல ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பளிச்சிட்டன.

“காதல் புனிதமானது தெய்வீகமானது, அது நெஞ்சை விரிவுபடுத்தும்” என்று நான் எங்கோ எதிலோ எப்போதோ படித்த ஞாபகம் எனக்கு இப்போதே வந்தது. மைதிலியின் அந்த அழகே உருவான உருவம் என் மனதுக்குள் நிறைந்து நின்றது.

அவளோடு வாழ வேண்டும்; அவளுக்கு எந்த விதமான குறையையும் வைக்கக்கூடாது; அவளை என் உயிர்போல பாதுகாக்க வேண்டும்; அவளை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்ற அவளைப் பற்றிய பல விதமான எண்ணங்களோடு தொழிலுக்காக நான் கொழும்பு வந்து வனராஜா நிறுவனத்தின் பாதுகாவலனாக கடமையேற்றேன். காலம் ஓடியது மைதிலியும் அடிக்கடி தொலைபேசி மூலமாக என்னோடு தொடர்பு கொண்டபடியிருந்தாள். நானும் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்துக் கொண்டே வந்தேன். மைதிலியை மணமுடித்து வாழ்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்த போது தான் இளங்கோ ஓடி வந்து இப்படியொரு செய்தியை கூறினான்.

ஓடிக் கொண்டிருந்த பஸ் நின்றது. பண்டாரவளை நகருக்கு வந்தாகிவிட்டது.

எனக்கு அக்கா, தங்கை யாரும் இல்லை. அண்ணன்மார் இருவர்; கோபு, தயாளன், அப்பா, அம்மா! திண்பண்டங்களோடு அவர்களுக்கு தேவையான உடுப்பு துணிமணிகளோடு வீட்டினுள் நுழைந்தேன்.

அம்மா தடுமாறிப் போனார், ஓடியாடி உபசரித்தார். சுமார் நான்கு மணியளவில் இளங்கோவைத் தேடி அவனது வீட்டுக்கு போனேன். ஓடிவந்து என்னை வரவேற்றான்.

இருவருமாக அவனது மோட்டார் சைக்கிளில் மைதிலியின் வீடு நோக்கிச் சென்றோம். அவளைக் காணவேண்டுமென்ற ஆவல் என்னை உந்தித்தள்ளியது திருமண வீட்டில் அதிக ஜனநெரிசல் தெரிந்தது.

மைதிலியின் திருமணத் தினத்தன்று தான் நானும் வந்திருக்கிறேன் என்பது இப்போது எனக்கு புரிந்தது.

நானும் இளங்கோவும் உள்ளே சென்றோம். மைதிலியை கண்டதும் என் நெஞ்சு படபடத்தது. என்னைக் கண்டதும் அவள் மறுபக்கம் திரும்பிக் கொண்டாள். அவளது கணவன் எங்களை வரவேற்று அமர வைத்தான். நான் அவளது கணவனை ஏறெடுத்துப் பார்த்தேன். என்னை விட பல மடங்குகளில் அவன் மேலானவன் என்று எனக்கு தெட்டத்தெளிவாக விளங்கியது. திருமண வீட்டில் பிரமாதமாக எங்களையும் உபசரித்தார்கள். விடைபெறும் போது நான் கடிதக் கவரை மைதிலியிடமே நீட்டினேன். அவள் தன் கணவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி அதனை பெற்றுக்கொண்டாள்.

என்னை தொழில் தேடி செல்லும்படி அவள் கொடுத்த கடிதக் கவரில் ரூபாய் இருபத்தைந்தாயிரம் இருந்தது. இப்போது நான் அவளுக்கு கொடுத்த கவரில் ஐம்பதாயிரம் இருந்தது. இறுதியாக அவளை பார்த்தேன். என் கண்களில் நீர் மல்கியது. சட்டென்று என் சட்டைப் பைக்குள்ளிருந்த கறுப்புக் கண்ணாடியை எடுத்து அணிந்தபடி வெளியே வந்தேன். நண்பனும் என் பின்னேயே வந்தான் இருவரும் வீதிக்கு வந்தோம்.

கண் கலங்கி நின்ற என்னை ஏறிட்டு பார்த்த இளங்கோவின் முகமும் வாடியிருந்தது. அவன் என் நிலை கண்டு பெரிதும் வருந்தினான். ஏதோ நடக்கக் கூடாத காரியம் நடந்து விட்டதால் “எல்லாம் நன்மைக்கே” என்று கூறிவிட்டு என் அப்பா மௌனமாக இருப்பார். இப்போது என் அப்பாவின் அந்த வார்த்தைகள் என் மனதிற்கு ஓரளவிற்காவது ஆறுதல் தருவது போல் தெரிந்தது.

பலவிதமான எண்ணங்களோடு தடுமாறி நின்ற என்னை நெருங்கிய இளங்கோ “ரவி இள வயதில் பெண்கள் தமக்கு பிடித்த இளைஞர்களோடு நெருங்கிப் பழகுவார்கள். காதல் தொடர்பு வைத்துக் கொள்வதும் உண்டு. ஆனால் தமக்கு தகுந்த துணை கிடைக்கும்போது பழகிய காதலித்த பலவிதமான உதவிகளை செய்த எவரையுமே மறந்து விடுவார்கள்.

"இது பெண்களுக்கே உரித்தான கூடப் பிறந்த குணமடா ஆனா ஆண்கள் அப்படியில்லடா. தம்மோடு பழகிய காதலித்த நெருக்கமான உறவு கொண்ட பெண்களை நினைத்து நினைத்து வருந்தி வருந்தி வாடுவது ஆண்களின் குணம். இத புரிஞ்சுக்கடா ரவி” என்று இளங்கோ ஆறுதல் கூறினான்.

அவன் என்னை விட அனுபவசாலி. அவன் சொல்வதில் நூற்றுக்கு நூறு உண்மையிருப்பதை என்னால் உணர முடிந்தது. கெட்ட பின்பு தானே புத்தி வருகிறது.

பெண்களின் குண இயல்பு பற்றி இளங்கோவின் கூற்று சரியானால் இளம் பெண்களை மனதார நேசித்து இறுதியில் ஏமாந்து நிற்கும் இளைஞர்கள் அப்பாவிகளா? இது தான் நியதியா? என் எதிர்காலம் என்ன? என் தலை சுற்றியது.

இரா. மோசஸ்

Comments