பேச்சுவார்த்தையூடான தீர்வுக்கு வருமாறு தபால் மாஅதிபர் அழைப்பு | தினகரன் வாரமஞ்சரி

பேச்சுவார்த்தையூடான தீர்வுக்கு வருமாறு தபால் மாஅதிபர் அழைப்பு

வேலை நிறுத்தத்தை கைவிட்டு முடிந்தவரை விரைவாகப் பணியிடங்களுக்குத் திரும்புமாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்குத் தபால் மாஅதிபர் ரோஹன அபயரட்ண அழைப்பு விடுத்துள்ளார்.

பேச்சுவார்த்தையூடான தீர்வொன்றுக்காக வருமாறும் தபால் மாஅதிபர் அழைப்பு விடுத்துள்ளார். தபால் சேவைகள் அமைச்சர், அமைச்சரின் செயலாளர் மற்றும் தபால் மாஅதிபராக தானும் தொழிற்சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நியாயமானவை என்பதை ஏற்றுக் கொள்வதாகவும், இவ்விடயங்களுக்கு ஒரு மாதத்துள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிரந்தர தீர்வொன்றுக்குச் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதாகவும்

அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 200 வருடங்களாகத் திறம்பட சேவை செய்து வந்த தபால் துறையினால் வேலை நிறுத்தம் காரணமாக மக்களுக்கு சேவை செய்யமுடியாத ஒரு நிலை ஏற்படுமானால், அதன் முழுப்பொறுப்பும் தபால் திணைக்களத்தையே சாரும், என்பதுடன் இதன் பிரதிபலிப்புகள் அங்கு சேவைசெய்யும் ஊழியர்களை வந்தடையும் என்பதையும் மறந்துவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று சந்தையில் போட்டித் தன்மை கொண்ட பல நிறுவனங்கள் உள்ள நிலையில் தபால் திணைக்களத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பாரிய கடப்பாடும் உள்ளது. இதற்கு கடமையை செயற்திறன் மிக்கதாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் தெரிவித்துள்ளார்.

எனவே சகல தொழிற்சங்க நடவடிக்கைகளையும் கைவிட்டுத் திணைக்களத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சகஜ நிலைக்கு கொண்டுவர ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் பேச்சுவார்த்தையூடான தீர்வொன்றுக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

Comments