‘சிறுவர்களை பாதுகாப்போம்’ | தினகரன் வாரமஞ்சரி

‘சிறுவர்களை பாதுகாப்போம்’

சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சாசனம் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். 18 வயதுக்குட்பட்டவர்கள் அனைவரும் பிள்ளைகள் என்று அந்த சாசனம் குறிப்பிடுகின்றது. சாசனத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து உரிமைகளையும் அனுபவிக்க 18 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் உரிமை உண்டு. மேற்குறிப்பிட்ட உரிமைகள் மூலம் கிடைக்கும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை சாசனம் வரைமுறைப்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் பற்றிய அணுகுமுறையில் ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் செயற்பாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளமையை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் இலங்கையின் அணுகுமுறை சிறப்பாக உள்ளது. இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரம் ஆகிய மூலம் இதனை உறுதிப்படுத்த முடிந்திருக்கின்றது.

ஆயினும் காலப்போக்கில் இலங்கையில் சிறுவர்கள் பெறும் இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் ஆகிய திறந்த பொருளாதார கொள்கையின் கீழ் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு வறுமையே காரணமாகிறது.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கின்றனர். இவ்வாறான வறுமை நிலை யுத்தம் நடைபெற்ற வடக்கு கிழக்கு பிரதேசங்கள், கிராமப் பகுதிகள், மலையக தோட்டங்கள் ஆகிய பிரதேசங்களில் அதிகளவில் காணப்படுகின்றது.

இலங்கையில் கிட்டத்தட்ட அறுபதாயிரம் மாணவர்கள் தமது ஆரம்ப மற்றும் இடை நிலைக் கல்வியில் பாதியில் விட்டுவிடுவதற்கு வறுமை காரணமாகிறது. அதே நேரம் போசாக்கும் இதற்கு மற்றுமொரு காரணமாகும்.

மலையக மக்களை பொறுத்த வரையில் விலைவாசி அதிகரிப்பு, குடும்பத்தை வாழவைக்க வேண்டிய தேவை ஆகியவை காரணமாக மாணவர்கள் பாடசாலை கல்வியை கைவிட்டு வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.

வறுமை மற்றும் தொடர்ச்சியான விலைவாசி உயர்வு காரணமாக சிறுவயதிலேயே வேலைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக இலங்கையில் 10 முதல் 14 வரையுள்ள 35 ஆயிரம் சிறுவர்கள் கடைகள், பண்ணைகள், மீன்பிடி மற்றும் கைத்தொழில் நிலையங்கள் ஆகியவற்றில் கூலி வேலை செய்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. இதேவேளை சுமார் 10 ஆயிரம் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பற்றிய சாசனம் பின்வரும் நான்கு பிரிவுகளில் சிறுவர் உரிமைகள் இடம்பெறுவதாக கூறுகிறது. அவையாவன

உயிர் வாழ்வதற்கான உரிமை

ஒரு நாட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உயிர் வாழ்வதற்காக அந்த நாட்டு அரசாங்கம் அவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள், இருப்பிட வசதிகள், உணவு, குடிநீர் ஆகிய உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

மேம்பாட்டுக்கான உரிமைகள்

ஒவ்வொருவரினதும் தனித் திறமைகளுக்கு ஏற்ப அனைத்து சிறுவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கான உரிமையை வழங்குதல் இதில் உள்ளடங்குகிறது.

பாதுகாப்பு உரிமை

உடல், உள ரீதியில் ஊனமுற்ற சிறுவர்கள், அநாதைகள், பெற்றோரை விட்டுப் பிரிந்த சிறுவர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்களை பாதுகாப்பதும், துஷ்பிரயோகத்திற்கு இலக்காவதை தடுப்பதும் சிறுவர் பாதுகாப்பினை குறிப்பிடுகிறது.

பங்குபற்றும் உரிமை

பங்குபற்றதல் என்பது பிள்ளைகள் மற்றும் சிறுவர்களை சுயமாக சிந்திக்க செய்தலாகும். ஏனையோருடன் ஆக்கபூர்வமாக பழகுதல் சமுதாய நிகழ்வுகளில் தீவிர ஈடுபாடு காட்டுதல், ஏனைய சிறுவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் ஆகியவை இதில் அடங்குகின்றன.

ஒரு சிறுவனுக்குரிய உடை, உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை தேவைகள் இல்லாதபோது அல்லது கிடைக்காதபோது அவன் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றான். அவ்வாறான நிலையில் அவனது உரிமைகள் இல்லாது போகின்றன. ஒரு சிறுவன் தொழிலில் அமர்த்தப்படும்போதும் இதே நிலை தான் ஏற்படுகின்றது.

அதேவேளை நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் இடம்பெறும் அதிக அளவிலான இணையத்தள பாவனை சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் இடம்பெற வைக்கின்றன.

உடல், உள, உணர்ச்சி மற்றும் புறக்கணிப்பு ரீதியிலான சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு சமூகங்களின் பொறுப்பற்ற தன்மை, சூழல் நெருக்கடி, குடும்ப நெருக்கடி பொருளாதார சிக்கல், தனியொரு பெற்றோரின் பராமரிப்பு போதாமை, சுகாதார பிரச்சினைகள், கல்வியில் தெளிவின்மை, மது போதைவஸ்து பிரச்சினை, கோபம் மற்றும் வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை, யதார்த்தமற்ற எதிர்பார்ப்புக்கள், தவறான வழிகாட்டல் ஆகியவை மூலம் சிறுவர்கள் முன்னேறுவதற்கு தடைகளை ஏற்படுத்துகின்றன. மேற்கூறிய காரணங்களால் அல்லது இதனுடன் தொடர்புபட்ட ஏனைய காரணங்களால் சிறுவர்களின் முன்னேற்றம் தடைபடுகின்றது. இதனைத் தடுப்பதற்கு மக்கள் விழிப்புணர்ச்சி பெறுவதுடன் இதனை தத்தமது பொறுப்பாகவும் உணர வேண்டும்.

பொது மக்களிடையே இவ்விடயத்தில் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ என்ற செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

சிறுவர்களில் வெற்றிகரமான ஆளுமை அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் மேற்கொள்ள வேண்டியவை என்னென்ன என்பதை இந்த செயற்திட்டம் விளக்குகிறது. எதிர்கால உலகின் சவால்களை வெற்றிகொள்ளக்கூடிய நற்பண்பும், அறிவும் நிறைந்த பலம்மிக்க பிள்ளையை நாட்டுக்கு வழங்குவதற்காக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் செய்ய வேண்டிய கடமைகளை இந்த செயற்திட்டம் கூறுகிறது.

தேசத்தின் உயிர் நாடியான சிறுவர் சமுதாயத்தை பாதுகாத்தல் மற்றும் அவர்களது உடல், உள விருத்திக்கு ஏற்ற சிறந்த சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் எண்ணத்திற்கேற்ப ஜனாதிபதி செயலகம் நடைமுறைப்படுத்தும் “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு நாளை 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரியின் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார். அன்றைய தினம் கிளிநொச்சி கனகபுரம் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் மாணவர்களிடம் கையளிக்கப்படுகின்றது.

வட மாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்களிலும் தடுப்பு இல்லங்களிலும் தங்கியிருக்கும் சிறுவர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர் இல்லங்களுக்கும் தடுப்பு இல்லங்களுக்கும் புனரமைப்பு நிதி வழங்கப்பட உள்ளது.

விசேட தேவைகளையுடைய பிள்ளைகள் கற்கும் 25 வட மாகாண பாடசாலைகளுக்கு பாதை வசதி உள்ளிட்ட பிற வசதிகளை ஏற்படுத்துவதற்காக நிதி வழங்கப்படவுள்ளது. சிறுநீரக நோய் எச்சரிக்கையிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க 1000 குடும்பங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட முன்பள்ளிக்கு புத்தகத் தொகுதிகள், மரத்தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பற்ற சூழலில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்குவதும் நாளைய நிகழ்ச்சியில் இடம்பெறும்.

ரவி ரட்னவேல்

Comments