ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

"உது என்னண்ண படம். உலகத்தலைவர்கள் சந்திச்சினம் என்டு டி.வி யில் சொல்லிக் கொண்டிருக்கினம். இது உந்தப் படமே.?” “அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜான் உன் சிங்கப்பூரில் சந்திச்சினமே. உது அந்தப் படம்தான்”.

“முக்கியமான சந்திப்பு என்டு சொன்னவை.”

“அமெரிக்க ஜனாதிபதி ஒருவரை முதல் முறையா வடகொரிய ஜனாதிபதி ஒருத்தர் சந்திக்கிறது. உதுதான் முதல்தடவை. 1993ல அப்போது இருந்த அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனின்ட மேற்பார்வையில பாலஸ்தீன தலைவர் யசர் அரபாத்தும் இஸ்ரேலின்ட பிரதமர் ராபிக்கும் சந்திச்சவை. உந்த சந்திப்புதான் உலக ரீதியில முக்கியமான தலைவர்களின்ட சந்திப்பு என்டு சொல்லுகினம். இந்த டிரம்ப்-கிம்சந்திப்பும் அந்த அளவு முக்கியமான சந்திப்புத்தான்.”

“எங்கண்ண சந்திச்சவை”.

“சிங்கப்பூரில சென்டோசா என்டொரு தீவு இருக்குது. அதில உள்ள கேபல்லா என்ட நட்சத்திர விடுதியில் தான் உந்த சந்திப்பு நடந்தது. சந்திப்புக்கு முதலில வந்தவர் 34 வயதான கிம் தான். ஏழு நிமிஷத்துக்கு பின்னால 71 வயதான டிரம்ப் வந்தவர். இருவரும் முதல் முறையா நேருக்கு நேர் சந்திச்சவை”.

‘கை குலுக்கியிருப்பினம் என்ன”.

“பின்ன 12 வினாடிகள் ரெண்டு பேரும் கைகுலுக்கினவை 45 நிமிஷங்கள் பேசிப்போட்டு விருந்து சாப்பிட்டவை. விருந்து சாப்பிட்டு போட்டு பிறகும் பேசினவை”.

“என்னண்ண பேசினவை.?”

“கொரிய தீபகற்பத்திலயும் அது மூலமா உலக அளவிலயும் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்த வேணும். இதுக்கு 4 அம்ச திட்டத்தை செயற்படுத்த வேணும் என்டு இணங்கிக் கொண்டவை. அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில புதிய நட்புறவை ஏற்படுத்த வேணும். கொரிய தீபகற்பத்தில அமைதியை ஏற்படுத்த ரெண்டு நாடுகளும் இணைந்து செயற்படவினம், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதம் இல்லாத பிரதேசமாக்குறது. அதோட போர் கைதியளை பரிமாறிக் கொள்கிறது என்ட நாலு அம்சங்களுக்கு ரெண்டு தலைவர்களும் இணங்கப் போட்டினம்.”

“உந்த சந்திப்புக்கு நல்ல செலவாகியிருக்குமென்ன?”

“பின்ன உதுக்கு 135 கோடி ரூபா செலவென்டு சிங்கப்பூர் கவர்மனட் சொல்லிக்கிடக்குது. உது மட்டுமில்ல உந்த சந்திப்புக்கு ரொம்ப வேலை செஞ்சவை சிங்கப்பூரின்ட வெளியுறவுத் துறை அமைச்சர் விலியன் பால கிருஷ்ணன்; கே.சண்முகம் என்ட ரெண்டு பேரும்தான்”.

“அது சரி உந்த சந்திப்பை ஏனண்ண சிங்கப்பூரில நடத்தினவை.”

“சரியா கேட்டனீ உதை ஏன் அமெரிக்காகவில இல்ல கொரியாவில நடத்தேல்ல என்டு கேட்காமல் இருந்தனீ. இங்க பார் ஒருத்தருக்கொருத்தர் நம்ப வேணுமென்டா முதலில நடுநிலை நாடொன்றிலதான் பேச வேணும். உதுக்கு பிறகுதான் சொந்த நாட்டில பேச்சுஇ கண்டியோ. அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் சிறந்த நட்பு நாடுகளாக ஒரு சில நாடுகள்தான் இருக்குது. இதில சிங்கப்பூர் முக்கியமானது என்டபடியாதான் உந்த சந்திப்பை சிங்கப்பூரில நடத்த ஏற்பாடு செஞ்சவை. உந்த பால கிருஷ்ணன் சிங்கப்பூரில மக்கள் செயற்கட்சியில உள்ளவர். மருத்துவம் படிச்சவர் கண்பார்வை சிகிச்சையில பிரபலம் பெற்றவர் மற்றவர் சண்முகம் சிங்கப்பூரின்ட அரசியல் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருக்கிறவர். உந்த சந்திப்புக்கு 135 கோடி செலவாகிப் போட்டுது. 5 ஆயிரம் பொலிஸார் 3 ஆயிரம் ஊடகவியலாளர்கள் என்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தவை. சந்திப்பு முடிஞ்ச கையோட அந்த இரவிலயே அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவுக்கு திரும்பிப் போனவராம்”.

“சிங்கப்பூரை சுத்திப் பாக்கேல்லயே?”

“அவையள் என்ன ஊர் பார்க்கப் போயினமே. வடகொரிய ஜனாதிபதியை சந்திக்க வந்தவை. சந்திச்சவை. சோழி முடிஞ்சுது திருப்பிப் போயினம்.”

“ஒன்டு தெரியுமோ. தன்னோட பாதுகாப்பில கிம் மொத்தக் கவனமாக இருப்பார். எவ்வளவு கவனமொன்டா ஹோட்டல் கக்கூசுகளை பாவிக்காம மனுஷன் கொரியாவில இருந்து தனது சொந்தக் கக்கூசை சிங்கப்பூருக்கு கொண்டு வந்தவர் என்டா பாத்துக்கொள்ளன்.”

“என்ன சொல்லுறியள். கக்கூசையே கொண்டு வந்தவரோ?”.

“இந்தா கிடக்கு படம். சந்தேகமிருந்தா பாரன்”.

“ஓமண்ண கொமோட்டை தூக்கி வந்தவரே? உதை ஏனண்ண கொண்டு வந்தவர”.

“தன்னோட ரகசியங்கள் எதுவும் பிறரிட்ட சிக்கக்கூடாது என்ட தற்பாதுகாப்புதான்.”

“கக்கூசுக்குள்ள என்னண்ண ரகசியம்.”

“இங்கபார் சின்னராசு வடகொரிய ஜனாதிபதி கிம் பேச்சுவாரத்தைக்கு சிங்கப்பூர் வந்தவரில்லோ. அவர் வாறதுக்கு முன்னால ரெண்டு விமானங்கள் சிங்கப்ப+ருக்கு வந்தவை உதில உணவுப்பொருட்கள், கிம்மின்ட உடைகள், குடிநீர், குண்டு துளைக்காத கார் எல்லாம் வந்துபோட்டவை. உதிலதான் உந்த ரெடிமேட் டொய்லட் கொமேட்டும் வந்துது. சிங்கப்பூரில உவர் அதைத்தான் பாவிச்சவராம”.

“அதிக்குள்ள ஏதும் விசேஷம் கிடந்துதோ?”

“அதுக்குள்ள விசேஷம் இல்லயப்பா. அதுதான் விசேஷமே”.

“என்ன சொல்லுரியள்.”

“தனக்கு ஏதும் நோய் கிடக்குதோ என்பதை எதிரி நாட்டு ஆக்கள் கண்டு பிடிச்சுப்போடுவினம் என்டு ஒரு பயம் உவருக்கு எப்பவூம் இருந்து கிடக்கு. தன்னோட சிறுநீர்இ மலம் ஆகியவையள் கிடைச்சுதென்டா எதிரிகள் தன்னைப் பத்தி தெரிஞ்சி கொள்ளுவினம். என்டபடியா உந்த கொமேட்டில விஷயத்தை முடிச்சுக்கொண்டு உதை வட கொரியாவூக்கே கொண்டு போகினம் என்டுதான் கதைக்கினம். உது மட்டுமில்ல சிங்கப்பூரில் தங்கியிருந்த ஹோட்டலில கொடுத்த சாப்பாட்டை ஜனாதிபதி கிம் தொடக்கூட இல்லையாம். தன்னோட சமையற்காரரை அவர் கொரியாவில இருந்தே கூட்டிவந்தவர். அவையிட்;ட சொல்லிச் சமைச்ச சாப்பாட்டைத்தான் சாப்பிட்டவர். உது மட்டுமில்ல சந்திப்பு முடிஞ்ச கையோட வைட் ஹவுசிக்கு வாங்கோவன் என்டு கிம்மை டிரம்ப் அழைச்சவராம”.

“உது எதுக்கு?”

“ஒருத்தரோட விருந்து சாப்பிட்ட பிறகு எங்க வீட்டுக்கு ஒருக்கா வாங்கோவன் என்டு அழைக்கிறதில்லயே. அது போலத்தான் டிரம்ப் உப்பிடி கிம்மை அழைச்சவராம். உந்த அழைப்பை கிம் ஏற்றுக்கொண்டதோட அப்ப நீங்களும் ஒருக்கா எங்கட நாட்டுக்கு வாருங்கோ என்டு ஜனாதிபதி டிரம்புக்கு வடகொரிய ஜனாதிபதி சொன்னவராம்”.

“இனி ரெண்டு பேரும் சண்டை போட மாட்டினமே?”.

“மாட்டினம் என்டுதான் தோணுது. உதுதான் சின்னராசு உந்த சந்திப்பின்ட முக்கியத்துவம். அஞ்சாறு மாசத்துக்கு முன்னால ரெண்டு பேரும் அடிச்சிப்பிடிச்சிக் கொண்டு நின்டவை. சண்டை வரலாம் என்டுதான் நிலைமை இருந்துது. சரியாச் சொன்னமென்டா முழு உலகமும் கொஞ்சம் பரபரப்படைஞ்சி போய்த்தான் கிடக்குது. ஆனா நல்லூர் கந்தனின்ட கிருபையால கிம்மின்ட மூலையில சமாதான நினைப்பொன்டு தோனிப் போட்டுது. உதால உலக மக்கள் தப்பினம்”.

“பாத்தியளே. பிரச்சினையள பேசி சரிக்கட்டி போட்டினம”.

“அவையைப்பாரத்து எங்கட ஆக்களும் பிரச்சினையள பேசித் தீர்த்துக் கொண்டினமென்டா எவ்வளவு நல்லது”.

“நல்லம்தான் ஆனா எங்கட ஆக்கள் பேசுவினமே?”

Comments