போலி எழுத்துக்களால் பட்டதாரிகள் திசை திருப்பப்படக்கூடாது | தினகரன் வாரமஞ்சரி

போலி எழுத்துக்களால் பட்டதாரிகள் திசை திருப்பப்படக்கூடாது

அன்புள்ள ஆசிரியருக்கு,

இந்த வாரமும் கருணாகரன் ஒரு சுவாரசியமான தலைப்பை வைத்து பிதமரையும் அரசாங்கத்தையும் தாக்கி இருக்கிறார். அரச பத்திரிகையில் அரசை தாக்கி எழுத அவருக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்திற்கு முதலில் இவர் நன்றி கூற வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொடுக்கப்படும் சந்தர்ப்பம் “எலும்புத்துண்டு” என்று கருணா மட்டமாகக் குறிப்பிடுகிறார். இது மிகவும் தவறான கருத்தாகும். நமது பல்கலைக்கழக மாணவர்களின் தரம் பற்றி இவருக்கு தெரியாது போலும்.

இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் வணிகப் பிரிவுகளில் (Arts and commerce) மிக அதிகளவான மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இவர்களுக்கான பாடப்பகுதிகள் அநேகமாக தாய் மொழியில் (தமிழ், சிங்களம்) கற்பிக்கப்படுகிறது. சில விரிவுரையாளர்கள் பாடப்பகுதிகளை ஒரு கேள்வித் தொகுதியாக (Tute) தயாரித்து கொடுத்து பின்னர் விளக்கமளிக்கிறார்கள். இதனால் பரந்த வாசிப்பு ஊக்குவிக்கப்படுவதில்லை. கேள்வித் தொகுதிகளை படித்து பரீட்சையில் சித்தி எய்தும் ‘தனியார் கல்வி நிலைய மனநிலை’ (Tuition Syndrome) வளர்க்கப்படுகிறது. இதனால் தமது படிப்பை முடிக்கும்போதும் இம் மாணவர்கள் தேர்ந்த ஒரு பட்டதாரியின் மட்டத்தை அடைவதில்லை. ஆங்கிலத்தில் பாடங்கள் கற்பிக்கப்படாததாலும் ஆங்கிலம் ஒரு பாடமாக உள்வாங்கப்படாததாலும் ஆங்கில அறிவு மிக தாழ் மட்டத்தில் உள்ளது. கணனி அறிவு, சிங்கள மொழித் தேர்ச்சி (தமிழ் மாணவர்களுக்கு) போன்றனவும் மிக குறைவாக உள்ளன. ஆங்கில அறிவும் கணனி அறிவும் குறைவாக இருப்பதால் பொதுவாக இம் மாணவர்கள் உலக அறிவு, யதார்த்த அறிவு போன்றவற்றிலும் பின்தங்கி உள்ளார்கள். உதாரணமாக நேர்முகப் பரீட்சைக்கு முகம் கொடுத்தல், ஒரு குழு உரையாடலை தொடங்கி நடத்துதல், தலைமைத்துவப் பண்புகள், தொடர்பாடும் ஆற்றல் போன்றனவற்றில் மிக பின்தங்கி உள்ளார்கள். இதனால் இவர்கள் தனியார் நிறுவனங்களால் திரும்பிக்கூட பார்க்கப்படுவதில்லை. ஒப்பீட்டளவில் சிங்கள மாணவ மாணவியர் தமது மொழித்திறன் காரணமாக சில சிறிய நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் மேற்சொன்ன அத்தனை பிரச்சினைகளும் அவர்களுக்கும் உண்டு. சிங்கள மொழி புலமையின்மை தமிழ் மாணவர்களுக்கு ஒரு மேலதிக எதிர்மறை ஆகும்.

இந்நிலையில் தான் இவர்கள் சங்கங்களை அமைத்துக் கொண்டு அரசியல் ரீதியான போராட்டங்களை ஆரம்பிக்கிறார்கள். சிங்கள மாணவ மாணவியர் பொதுவாக தமது இளமைக் காலம் முழுவதும் JVP சார்ந்த சங்கங்களில் இயங்குகிறார்கள். தமிழ் மாணவர்களின் நிலை அதுவல்ல.

‘பட்டதாரி மாணவர்களின் சங்கங்கள்’ 2015க்கு பின்னரே தமிழ் சூழலில் திடீரென முளைத்தன. வடமாகாண சபைக்கு எதிராக இவர்கள் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். மாகாண சபை முன்றலில் மறியல் செய்தார்கள். முதலமைச்சரையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் அசௌகரியப்படுத்தும் முயற்சி போல இது தோன்றியது. இவர்கள் வேலையற்றவர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் போராட்டத்தை ஒழுங்கு செய்துவதற்கும் பிரசாரப்படுத்துவதற்கும் யார் நிதி வழங்கினார்கள்? தமிழ் பத்திரிகைகள் விழுந்தடித்துக் கொண்டு இப்போராட்டங்களை தூக்கிப் பிடித்தன. இந்த பட்டதாரிகளுக்கும் கிளிநொச்சியில் வீதியில் இருக்கும் ‘அன்னையருக்கும்’ எனக்கு பெரிய வித்தியாசம் தெரியவில்லை. இரண்டும் அரசியல் ரீதியான கபட போராட்டங்களே.

இது பிரதமருக்கு தெரியாததல்ல. ஆனால் பிரச்சினையின் அடிப்படையை அவர் புரிந்து கொண்டுள்ளார். அதனால் பட்டதாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் முன்வைக்கப்படுகிறது. ஆங்கில புலமைத்துவப் பயிற்சி, கணனி பயிற்சி மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்தெடுக்கும் பயிற்சி போன்றன வழங்கப்பட்ட பின்னரே இவர்கள் அரச சேவைக்குள் உள்வாங்கப்பட முடியும். தமிழ் மாணவர்கள் எனில் சிங்கள மொழிப் புலமையும் சிங்கள மாணவர்கள் எனில் தமிழ் மொழிப் புலமையும் அவசியமானவையாகும்.

பிரதமரின் திட்டம் வரவேற்கப்பட வேண்டியது. பட்டதாரிகள் பயிற்சியில் முன்வந்து இணைந்து கொள்ள வேண்டும். கருணாகரன் போன்றோரின் போலி எழுத்துக்களால் திசை திருப்பப் படக்கூடாது.

மொழி அரசன்

 

Comments