தந்தை - அவர் என்றென்றும் கௌரவிக்கப்பட வேண்டியவர் | தினகரன் வாரமஞ்சரி

தந்தை - அவர் என்றென்றும் கௌரவிக்கப்பட வேண்டியவர்

இன்று தந்தையர் தினம். ஒரு குடும்பத்தின் அச்சாணியாக இருந்து பல தியாகங்கள், விட்டுக் கொடுப்புகள், அவமானங்கள் எனப் பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்து குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுபவரைப் பற்றியே, தந்தையைப் பற்றியே, இங்கே பேசப் போகிறோம். ஏனெனில் பல குடும்பங்களினாலும் சமூகத்தின் நினைவுகளில் இருந்தும் எளிதாக மறந்து, மறக்கப்பட்டுவிடும் நபராக தந்தை இருப்பதினால், அவரைப் பற்றிப் பேசத்தானே வேண்டும்!

தந்தை என்றதும் அவர் பற்றி நம் சமூகம் தரும் படிமங்கள் மகிழ்ச்சி தருவதாக இல்லை. தந்தை என்பவர் ஒரு கொடுங்கோலன், சர்வாதிகாரி. தனக்குப் பின்னரே மற்றவர்களுக்கு என்ற சிந்தனை கொண்டவர், பிள்ளைகள் மீது கடுமையாக நடந்து கொள்பவர், குடிகாரர், முரட்டு மனிதர், வேண்டப்படாதவர், குடும்பத்தை தான் தோன்றித்தனத்தால் குட்டிச் சுவராக்குபவர் எனப் பல முகங்களை சமூகம் தந்தைக்கு அணிவித்து வந்துள்ளது. கணவனும் மனைவியும் சேர்ந்தே தாய் – தந்தையராக ஒரு குடும்பத்தை சம பங்கு அடிப்படையில் உருவாக்குகிறார்கள். இது தந்தை வழிச் சமூகமாக இருப்பதால் தந்தை குடும்பத்தலைவராகிறாரே தவிர, குடும்பம் பெரும்பாலும் கூட்டு அடிப்படையிலேயே இயங்குகிறது. வீட்டில் அன்னையர் எடுக்கும் பெரும்பாலான முடிவுகளுக்கு தந்தை கட்டுப்படவே செய்கிறார். பெரும்பாலான குடும்பங்களில் தந்தையே பிரதான வருமானம் தேடுபவராக இருப்பதால் வருவாய் – செலவு தொடர்பாக அவரே சில முடிவுகளை எடுக்க வேண்டியதாகிறது.

ஆனால் வெளியுலகம், அன்னைக்கே முதலிடம் தந்து, தந்தையை புறக்கணித்து விடுவதைப் பார்க்கிறோம். குழந்தைகளும் சரி, ஏன் வீட்டு வளர்ப்பு மிருகங்களும் சரி, சமையலறையில் சமைக்கும், வீட்டு வேலைகளைச் செய்யும் மனைவி (அன்னை) யைத்தான் பாசத்துடன் பார்க்கின்றன; எதிர்பார்க்கின்றன. ஏனெனில் சமைத்துக் கொடுப்பவரும், தீனி வைப்பவரும் அவரே. சமையலுக்கான பொருட்களை வாங்குவதற்கான பணத்தைத் தேடும், அவற்றை வாங்கி சமையல் மேசையில் வைக்கும், வீட்டுக்கு பாதுகாப்பு, ஆரோக்கியம், பிரச்சினைகளுக்கான தீர்வு, குடும்பச் செலவுகளை நிர்வகித்தல் போன்ற பல விஷயங்களை கையாளும் அந்த அப்பாவை பிள்ளைகள் பொருட்டாகக் கொள்வதில்லை. பிள்ளைகளுடனான நேரடித் தொடர்பில் இல்லாததால் தந்தை என்பவரின் ஆகிருதி, பணம் சம்பாதிப்பவர், பொருட்கள் கொண்டுவருபவர் என்ற மட்டத்தில் நின்றுவிடுகிறது அல்லது சிறுமைப்பட்டு விடுகிறது.

இது தந்தைக்கு நிகரான தாயாரின் கடமைகளை குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ள வேண்டியதில்லை. குடும்பங்களின் யதார்த்த நிலை இதுதான். தந்தை என்ற மந்திரம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதற்கான ஒரு உளவியல் பார்வையாக மட்டுமே இது முன்வைக்கப்படுகிறது.

பிள்ளைகளின் முன்னேற்றம், பெரும்பாலும், தந்தையின் அயராத உழைப்பு மற்றும் தியாகத்தின் மூலமாகவே நிகழ்கிறது. வீதியில் வேலை செய்பவராக, விவசாயியாக, இரண்டு, மூன்று இடங்களில் ஓயாது உழைப்பவராக தந்தைமார் உள்ளனர். குழந்தைகளின் நல்வாழ்க்கைக்காக தனது விருப்பங்களைத் துறந்து வாழும் பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனினும் பெரும்பாலான தந்தைமாருடன் பிள்ளைகள் புரிந்துணர்வுடன், வாஞ்சையுடன் பழகுவதில்லை. மரியாதை என்ற பெயரில் அவரை ஒதுக்கி ஓரங்கட்டி வைத்துவிட்டு, அவர் என்னென்ன கொண்டுவந்திருக்கிறார் என்பதிலேயே குறியாக இருப்பார்கள். சில குடும்பங்களில் குடும்ப அரசியல் அரங்கேறுவதும் உண்டு. மனைவி, கணவனுக்கு எதிரான அபிப்பிராயங்களை பிள்ளைகளின் காதுகளில் போட்டு ஒரு வகையான ‘தந்தை எதிர்புணர்வை’ கிளப்பி விடும் சந்தர்ப்பங்களும் உண்டு.

கீதையில், கடமையை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்காதே எனச் சொல்லப்பட்டுள்ளதைப்போல கடமைகளை விருப்பத்துடனும், வாஞ்சையுடனும் செய்துவிட்டு பலன்களை எதிர்பாராமல் மூலையில் ஒதுங்கிக் கொள்பவர் எப்போதும் தந்தையாகவே இருப்பார். குடும்ப வைபவங்களை எடுத்துக் கொண்டால், எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஓரமாக நிற்பவர் தந்தையாகவே இருக்கிறார். திருமணத்தில் மட்டுமின்றி பிள்ளைகளின் சாதனைகள், பட்டமளிப்பு விழாக்களிலும் அவர் அப்படித்தான் இருப்பார். இங்கு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் தான் சாதித்தவற்றுக்கான பெருமைகளை மனைவிக்கோ, மூத்த பிள்ளைக்கோ வழங்கிவிட்டு ஓரமாகி விடுவார் தந்தை. இதற்குக் காரணம், கூச்சமல்ல, பாசப்பிணைப்பு, அளவற்ற அன்பு. தனக்கான கௌரவத்தையும் பெருமையையும் தனக்கு பதிலாக தன் மனைவியோ அல்லது பிள்ளைகளோ எடுத்துக் கொள்ளும் போது அதை அந்தத் தந்தை தனக்குக் கிடைத்த கௌரவமாகவே கருதுகிறார். இது, தந்தைக்கே உரிய ஒரு அருங்குணம்.

ஒரு தந்தை தன் உணர்வுகளை சுலபமாக வெளிப்படுத்துவதில்லை. பிள்ளைகள் இந்தப் பண்பை, முசுடு, கல்லுளி மங்கன், வாயில் என்ன பிட்டா? என்றெல்லாம் விமர்சிப்பார்கள். தந்தை ஏன் தன் உணர்வுகளை எல்லாம் வெளிப்படுத்தாது மௌனமாக இருக்கிறார். என்பதை அவரின் ஆண் குழந்தைகளுக்கு எப்போது புரிகிறது என்றால், அவர்கள் ஒரு சமயத்தில் தந்தையாகி தன் குடும்பத்தை நடத்தத் தொடங்கும்போதுதான். திருமணமாகி குடியும் குடித்தனமுமாகப் போன பின்னர்தான், அப்பா எவ்வளவு நல்லவர், எவ்வளவு விஷயங்களை வெளியே சொல்லாமல் பொறுத்துக் கொண்டார், எங்களை ஆளாக்க எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை எல்லாம் வெளிப்படையாக பேசுவார்கள். ஆனால் எத்தனை பேர் தந்தையின் காதுபட இதைச் சொல்வார்கள்? அப்படியே சொன்னாலும் அந்தத் தந்தை என்ன தான் செய்துவிடப் போகிறார்? ஒரு புன் சிரிப்பு, ஒரு தலையாட்டல், அவ்வளவுதான். ஏனெனில் அனுபவம், அறிவு, பட்டறிவு என்பன அவரை அப்படி ஆக்கி வைத்திருக்கும். எவ்வளவு சந்தோஷமானாலும் ஒரு புன்சிரிப்புடன் முடித்துக் கொண்டு, அவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று கூர்ந்து பார்ப்பவரே தந்தை.

ஒவ்வொரு வீட்டிலும் அதிகம் விமர்சிக்கப்படுவர் தந்தைதான். ஏனெனில் அவர்தான் குடும்பத்தின் அச்சாணியாக இருப்பதால், விமர்சனம் தவிர்க்க முடியாதது. இங்கே இத்தகைய விமர்சனங்கள் தாயார் மீது எழுவதில்லை. பிள்ளைகளுடன் எப்போதும் நேரடித் தொடர்பில் இருப்பதாலும், பெரும்பாலும் அவரும் பிள்ளைகளைப் போலவே தங்கி வாழும் குடும்ப உறுப்பினராக விளங்குவதாலும் பிள்ளைகள் தமது தாயாரையும் ‘நம்முடைய ஆளா’கத்தான் கருதி, தந்தைக்கு ‘எதிரான’ ஒரு வியூகத்தை வகுக்கிறார்கள். ஒரு வகுப்பறையில் வகுப்பு ஆசிரியருக்கு, பாடசாலை அதிபருக்கு, வேலைத் தளத்தில் தமது உடனடி மேலாளருக்கு எதிராக மாணவர்களும் ஊழியர்களும் எடுக்கும் நிலைப்பாட்டைப் போலத்தான் இதுவும். வகுப்பாசிரியரும், மேலாளரும் எப்படி இதைப் பொருட்டாகக் கொள்வதில்லையோ அவ்வாறே ஒரு தந்தையும் ஒரு புன்முறுவலும் இந்த வியூகங்களை ஒதுக்கி விடுகிறார். ஏனெனில் அவர் ஒரு தந்தை!

தந்தைமாரின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது. இதனால்தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர். குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.

வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத்தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய்திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும். மது அருந்தும் பழக்கம் உள்ளவரானால் மாதமொன்றுக்கு இவ்வளவு என வழங்குங்கள். வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள். சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள். மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள். பேரன் பேத்திகளை அவரிடமிருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள். குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்துச் செய்வதற்கு.

ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி செய்யுங்கள். வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.

ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.

தன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற்போல வளைந்து கொடுப்பாள். குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் என வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்!

கரடியனாறு தர்மரத்தினம்

 

Comments