இடைத் தரகர்களால் ஏமாற்றப்படும் விவசாயிகளும் நுகர்வோரும் | தினகரன் வாரமஞ்சரி

இடைத் தரகர்களால் ஏமாற்றப்படும் விவசாயிகளும் நுகர்வோரும்

சில வருடங்களுக்கு முன்னர் வெளிமடை பிரதேசத்தில் உருளைக் கிழங்குப் பயிர்ச் செய்கையாளர்கள் ஒரு போராட்டம் நடத்தினார்கள். தமது உருளைக்கிழங்கு விளைச்சலை கிலோ ஒன்று 36 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுவதனால் உற்பத்திச் செலவுக்கு ஏற்ற விலையாக அது இல்லை என்றும் தாம் நட்டமடைவதாகவும், ஆகவே அரசாங்கம் தலையிட்டு உதவவேண்டும் என்றும் அரசை கோரினார்கள்.

இந்தச் செய்தி காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பான அதே நாள், கொழும்பிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் ஒரு கிலோ உருளைக்கிழங்கை 165 ரூபாவுக்கு நான் கொள்வனவு செய்திருந்தேன். ஆகவே உற்பத்தியாளரிடம் கொள்வனவு செய்யப்பட்ட உருளைக் கிழங்கு நுகர்வோரைச் சென்றடையும்போது அதன் விலை நான்கு மடங்கு அதிகரிப்பது எவ்வாறு?

அதேபோல பால் பண்ணையாளரிடமிருந்து ஒரு லீற்றர் பால் 77 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு பதப்படுத்தப்படுகிறது. அவ்வாறு பதப்படுத்தப்பட்ட பால் லீற்றரொன்று 210 ரூபாவுக்கு நுகர்வோருக்கு விற்கப்படுகிறது. சாதாரண ஒரு லீற்றர் பாலின் விலை நுகர்வோரைச் சென்றடையும்போது, இருமடங்கிற்கும் கூடுதலாக அதன் விலை அதிகரிப்பது எப்படி? இது போன்ற பல உதாரணங்களை நாம் கூறலாம்.

இலங்கையில் விவசாயிகள் என்றாலே வறியவர்கள் என்ற கருத்து ஆழமாக வேரூன்றி விட்டது. மேற்குலக நாடுகளில் விவசாயி என்றாலே செல்வாக்குமிக்கவராகவும், செல்வந்தராகவும் சமூகத்தில், அரசியலில் அதிமுக்கிய பிரமுகராகவும் கருதப்படுகிறார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தன்னை நிலக்கடலை விவசாயி என்றே அழைத்துக்கொண்டார்! ஏனெனில் அவர் தம் விளைபொருட்களுக்கு உரிய விலைகள் கிடைப்பதும் அரச அனுசரணையும் மானியங்களும் தாராளமாகவே அவர்களைச் சென்றடைவதும்தான்.

இலங்கை விவசாயிகளைப் பொறுத்தமட்டில் அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு அடிமட்ட விலையே வழங்கப்படுவதோடு, சமூக மட்டத்தில் அவர்கள் தங்கி வாழும் சமூகமாகவும் கருதப்படுகிறார்கள். விவசாயப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் இடைத்தரகர்கள் அவற்றை அடிமட்ட விலைக்கு கொள்வனவு செய்து சந்தைப்படுத்தி, அவற்றை உயர் மட்ட விலைக்கு விற்று கொள்ளை இலாபம் திரட்டுகின்றனர். நுகர்வோரோ அதிக விலைக்கு விவசாய விளைபொருட்களைக் கொள்வனவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவ்வாறான ஒரு நிலை ஏற்படக் காரணமென்ன?

01. விவசாயிகளிடம் நேரடியாக சந்தைப்படுத்தல் வசதிகள் இல்லை.

02. விவசாயிகளிடம் விளைபொருட்களை போக்குவரத்து செய்யும் வசதிகள் இல்லை.

03. விவசாயிகளிடம் களஞ்சியப்படுத்தும் வசதிகள் இல்லை.

04. விவசாயிகளுக்கு தமது உற்பத்திப் பொருட்கள் தொடர்பான சந்தை விலை விபரங்கள் போதியளவு கிடைக்கப் பெறுவதில்லை.

05. இடைத் தரகர்கள் கூட்டாக இணைந்து விலைகளை குறைந்த மட்டத்தில் நிர்ணயிக்கின்றமை.

06. விலைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மேற்பார்வை போதியதாக இல்லாமை,

07. சந்தையில் நிலவும் கேள்வி பற்றிய தகவல்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமை.

08. விவசாய விளைபொருட்கள் வானிலை மாற்றங்களால் அதிகளவு பாதிக்கப்படுகின்றமை.

09. போக்குவரத்தின் போதும் களஞ்சியப்படுத்தலின் போதும் அதிகளவு சேதாரங்கள் ஏற்படல்.

10. விவசாயக் கைத்தொழில்கள் பிரதான விவசாய உற்பத்திப் பிரதேசங்களை அண்டியதாக தாபிக்கப்படாமை.

11. விவசாய ஆய்வு நடவடிக்கைகள் போதியளவு இடம்பெறாமை. அத்துடன் ஆய்வுகள் தொடர்பான தகவல்கள் விவசாயிகளைச் சென்றடையாமை.

12. விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள் வலுவானவைகளாக இல்லாமை போன்ற பல்வேறு காரணங்களை நாம் குறிப்பிடலாம்.

பொதுவாக, விவசாயப் பொருளொன்றின் விலை அதிகரிக்கும்போது அவ்விலைத் தூண்டலால் கவரப்பட்டு அப்பொருளை உற்பத்தி செய்ய பலரும் முயற்சிப்பர். அதேவேளை விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அதிகளவில் அப்பொருள் இறங்குமதியும் செய்யப்படும். உள்ளூர் விவசாயிகளின் உற்பத்திகள் சந்தைக்கு வர குறைந்தது 3 மாதங்கள் செல்லும். அதுவரை இறக்குமதிகள் மூலம் சந்தை நிரம்பல் செய்யப்படும் 3 மாதங்களின் பின்னர் உள்ளூர் விவசாய உற்பத்திகள் பெருந்தொகையில் சந்தைக்கு வர சந்தை பெருக்கெடுத்து விலைகள் சடுதியாக வீழ்ச்சியடையும். உடனடியாக இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்க அரசாங்கம் ஒரு இறக்குமதி வரியை அறவிடும் சந்தையில் பொருளின் விலை பிடிப்படியாக அதிகரிக்கும். ஆனால் உள்ளூர் விவசாயிக்கு அதன் நன்மை கிடைக்காது அல்லது கிடைக்க நீண்ட காலமெடுக்கும். விலை அதிகரிப்பின் நன்மையை உடனடியாக அனுபவிப்பது இடைத்தரகர்களான வியாபாரிகளே. பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற உற்பத்திகள் மேற்படி விலைத்தளம்பல்களுக்கு சிறந்த உதாரணங்களாகும். இவை சிறிது காலம் களஞ்சியப்படுத்தி வைத்துவிற்பனை செய்யக்கூடிய பொருட்களாகும்.

தக்காளி, கரட், போஞ்சி, லீக்ஸ் போன்ற மரக்கறி வகைகள் இவ்வாறு களஞ்சியப்படுத்தி வைக்கும் காலப்பகுதி மிகமிகக் குறைவாகும். அதுவும் இலங்கையில் போக்குவரத்தின்போது கணிசமான அளவு சேதாரங்களை சந்திக்கும் மரக்கறி வகைகள் ஏராளம். எனவே சுமார் 30 முதல் -40% வரையிலான விவசாய உற்பத்திகள் நுகர்வோரைச் சென்றடையும் போது பழுதடைவது அகற்றப்பட வேண்டியனவாகினறன.

போக்குவரத்தின்போது ஏற்படும் சேதாரங்களைக் குறைக்க அரசாங்கம் பெட்டிகளை அறிமுகப்படுத்தியபோதும் இலங்கையில் எப்போதும் நடைபெறுவது போல, ஒருசில மாதங்கள் அவ்வித முறை நடைமுறையில் இருந்து பின்னர் பழையபடி மூட்டைகளில் கட்டி விவசாய விளைபொருட்கள் சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் போக்குவரத்தின்போது சேதத்துக்குள்ளாகும் விவசாய விளைபொருட்களின் பெறுமதியையும் இடைத்தரகர்கள் நுகர்வோர் மீது சுமத்தி அதிக விலையை அறவிடுகின்றனர்.

சில மரக்கறிவகைகள் சில காலப்பகுதியில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு அதிகளவில் மரக்கறிகள் சந்தைக்கு வரும்பொழுது அவற்றின் கேள்வி அதற்கேற்ப அதிகரிப்பதில்லை. எனவே அவற்றை விற்பனை செய்யமுடியாமல் வீசியெறிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. தக்காளி மற்றும் வேறுசில மரக்கறி வகைகள் இலங்கையில் பெருந்தொகையில் வீசி எறியப்படுவதை அடிக்கடி காணமுடிகிறது.

நெல்லுக்கு உத்தரவாத விலையொன்றை அரசாங்கம் விதித்திருந்த போதும் நெல் அறுவடைக்காலங்களில் விளைச்சலை கொள்வனவு செய்யும் அரச நிறுவனங்கள் கையறு நிலைக்கு உள்ளாவதாலும் களஞ்சியப்படுத்தல் வசதிகள் போதியளவு இல்லாத படியாலும் உத்தரவாத விலையில் நெல்லை விற்க முடியாத நிலை ஏற்படுகிறது. தனியார் வியாபாரிகள் தவித்த முயல் அடிப்பது போல தாம் நிர்ணயிக்கும் விலையில் அவற்றைக் கொள்வனவு செய்கிறார்கள். நெல் விவசாயிகள் கடன்பட்டே உற்பத்தியை மேற்கொண்டிருப்பர். எனவே, அக்கடன்களை உடனடியாக செலுத்த வேண்டியுள்ளதால் கிடைக்கும் விலைக்கு தமது விளைச்சலை விற்பனை செய்வர் இடைத்தரகர்களும் வியாபாரிகளும் நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியத்தில் வைத்து சந்தையில் தட்டுப்பாட்டை செயற்கையாக ஏற்படுத்துவார்கள். சந்தைவிலை அதிகரிக்கும்போது நெல்லைச் சந்தைக்கு விட்டு அதிக இலாபம் உழைப்பார்கள். எனவே, நெல் விவசாயிகளுக்கு உத்தரவாத விலை மூலம் கிடைக்க வேண்டிய நன்மை கிடைப்பதுமில்லை, நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசி கிடைப்பதுமில்லை.

அரசாங்கம் மானியம் போன்ற உதவிகளைச் செய்கின்ற போதிலும் முறையான சந்தைப்படுத்தல் மற்றும் களஞ்சிப்படுத்தல் இல்லாமையால் சிறு விவசாயிகள் அதிகளவு இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். விவசாய விளைபொருட்கள் விரைவில் அழிவடையும் பொருள்களாகும் அத்துடன் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான பொருட்களும் கூட. எனவே விலையதிகரிப்புக்கு ஏற்ப அவற்றை உடனடியாக உற்பத்தி செய்வதோ அல்லது அவற்றின் நுகர்வை உடனடியாக அதிகரிப்பதோ சாத்தியமில்லை.

எனவே விவசாய விளைபொருட்கள் சந்தைப்படுத்த விதிகளை மேம்படுத்துவதோடு விவசாயக் கைத்தொழில்களை விஸ்தரிப்பதன்மூலம் இலகுவில் அழிவடையும் விளைபொருட்களை பதப்படுத்தி விற்பனை செய்யலாம்.

முறையான கண்காணிப்பின் மூலம் இடைத்தரகர்கள் கொள்ளை இலாபம் அடிப்பதையும் கட்டுப்படுத்தலாம்.

உணவுப் பொருள் என்பது ஒரு அத்தியாவசிய தேவை. அதனைக் குறைந்த விலையில் நுகர்வோருக்கு கிடைக்கச் செய்வது அரசாங்கத்தின் கடமை. அதேவேளை அவற்றை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளருக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வது அதன் பொறுப்புமாகும். இவ்விரண்டையும் நிச்சயமாக தனியார் துறையிடம் ஒப்படைக்க முடியாது. தனியார் துறையினால் அதைச் செய்யவும் முடியாது.

ஒரு சமூகத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது அரசாங்கமொன்றின் முக்கிய பொறுப்பும் கடமையுமாகும். மேற்குலக நாடுகள் இதையே செய்கின்றன. அது அதிக செலவு கூடியதாக இருந்த போதிலும் கூட...!

 

Comments