தமிழ் அரசியலுக்கு தண்டனையே விஞ்சி நிற்கும் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் அரசியலுக்கு தண்டனையே விஞ்சி நிற்கும்

“மாற்றம் என்ற சொல்லைத் தவிர அனைத்துமே மாற்றம் பெறும்” இயங்கியல் தத்துவத்தின் வரலாற்றுப் பொன் மொழி இது.

போர் நடந்த மண்; போரில் அனைத்தையும் இழந்த மக்கள்; இராணுவமே கொடூரம் இழைத்தது என சர்வதேசம் வரை உரக்கச் சொன்னவர்கள்; இராணுவமே தாயக மண்ணிலிருந்து வெளியேறு என கோஷம் எழுப்புபவர்கள்....

இப்படிப்பட்டவர்கள் அழுது புலம்பி, ஒப்பாரி வைத்து இராணுவ வீரர் ஒருவருக்கு விடை கொடுத்ததென்பது சாதாரண விடயமல்ல.

கடந்த வாரம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி மட்டுமல்ல; அனைவர் உள்ளங்களையும் நெகிழ வைத்த சம்பவமாகவும் இருந்தது. இரத்த ஆறு ஓடிய மண்ணில் இப்படியும் நடக்கிறதா? என்று பேதலித்து போனவர்கள் ஏராளம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு என்ற இடத்தில் இராணுவ அதிகாரிக்கு நடந்த பிரியாவிடை நிகழ்வுதான் தமிழர் அரசியலிலும் சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விசுவமடுவில் சிவில் பாதுகாப்பு படை அதிகாரியாக பணிபுரிந்தவர் கேர்ணல் டபிள்யூ. டபிள்யூ. ரட்ணப்பிரிய பண்டு. இராணுவ விதிமுறைகளின் படி, இடமாற்றம் பெற்றுச் செல்லுகிறாரென அறிந்த விசுவமடு மக்கள், அல்லோல கல்லோலப்பட்டு கண்ணீர் சிந்திய நிலையில் சிவில் பாதுகாப்பு படை அலுவலகம் முன் திரண்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (10.06.2018) இந்தச் சம்பவம் நடந்தது.

அவரைத் தோளில் சுமந்து ஊர்வலமாக வந்த மக்கள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததோடு, மலர்மாலைகளால் அவரை மூடி கேர்ணல் ரட்ண பிரியவையே திக்குமுக்காடச் செய்தனர் என்பது நீங்கள் அறிந்தவை தான். இராணுவத்தையும் பாதுகாப்புப் படைகளையும் வெறுத்த மக்கள் இப்போது இராணுவ அதிகாரியொருவரை தோளில் சுமந்து கண்ணீர் சிந்தி விடைகொடுத்த நிகழ்ச்சி, நம்மத்தியில் ஆழமான கேள்விகளை எழுப்புகிறது.

போர் நடந்த மண்ணில், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் சிந்தி விடைகொடுத்த நிகழ்வை சாதாரண விடயமாக நாம் பார்க்க முடியாது. இந்த மக்களின் மனமாற்றம் ஏற்பட அடிப்படையில் ஏதோ தாக்கம் நடந்திருக்கிறதென்றே உணர முடிகிறது.

படைவீரர்கள் மீது இருந்த வெறுப்பையும் கோபத்தையும் மாற்றி, பெரும் மதிப்புக்குரியவராக கேர்ணல் ரட்ணப்பிரிய தன்னை அடையாளப் படுத்தியிருக்கிறார் என்றால், ஏதோ ஒரு காரணி இல்லாமல் இருக்காது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டளைத் தலைமையகம் (கிளிநொச்சி, முல்லைத்தீவு) விசுவமடுவில் இருக்கிறது. மனிதநேயம் எங்கிருக்கிறதோ அங்கே மனிதர்களும் இருப்பார்கள் என்பதுதான் யதார்த்தம். யுத்தம் முடிவுக்கு வந்தபின் எஞ்சிய மக்கள் சகலதையும் இழந்த நிலையில் மீள்குடியேறி பெரும் துன்பங்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டனர். பொருளாதார நெருக்கடி அவர்களை வாட்டி வதைத்தது.

புனர்வாழ்வு பெற்ற போராளிகள் தொழில் வாய்ப்பின்றி தவிர்த்தனர். பலர் உயிர்வாழ முடியாமல் தற்கொலையும் செய்து கொண்டனர். புனர்வாழ்வு பெற்று சமூக மயப்படுத்தப்பட்ட போராளிகள் தன்னுடைய சமூகத்தினாலேயே ஒதுக்கப்பட்டார்கள். இந்த நிலையில் தான் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் அவர்களுக்குக் கைகொடுத்தது.

முன்னாள் போராளிகளும், இளைஞர் யுவதிகளும் சிவில் திணைக்களத்தில் இணைந்து செயற்பட்ட போது, அவர்களது வாழ்வுக்கு வழிகாட்டப்பட்டது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்டு குருடாகி, செவிடாகி, கையிழந்து, காலிழந்து, உடல் முழுவதும் துப்பாக்கிச் சன்னங்களுடன் வலுவிழந்து, நம்பிக்கையிழந்து நின்ற விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகளை அரவணைத்து வாழ்வுக்கு ஆதாரம் கொடுத்தவர் கேர்ணல் ரட்ணப்பிரிய என்று முன்னாள் போராளி ஒருவர் கூறுகின்றார்.

இதேபோல, 3000 ரூபா வேதனம் பெற்று வந்த முன்பள்ளி ஆசிரியர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கி கிட்டத்தட்ட 30,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுவதற்கு வழிவகுத்தவர் கேர்ணல் ரட்ணப்பிரிய. அந்த ஆசிரியர்களே கண்கலங்கி இதனைக் கூறுகிறார்கள்.

இந்தப் பிரதேசத்து மக்களின் இயலுமைக் கேற்ப விவசாயம், கைப்பணி, மேசன் வேலை, தச்சுவேலை, உட்பட பல்வேறு துறைகளில் மக்களை நெறிப்படுத்தியவர் கேர்ணல் ரட்ணப்பிரிய என்பதை பிரியாவிடை நிகழ்வே நமக்கு சான்று பகர்கிறது.

ஆனால், அரசியல் கள நிலைமை மாற்றமடைந்திருப்பது தமிழ் அரசியல் தரப்புக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்தி இருக்க வேண்டியது தமிழ் அரசியல் தலைமைகளுக்குரியது. அதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பெரும் பங்கு இருக்கிறது.

யுத்தப் பாதிப்பு என்பது ஒரு சில இலட்சங்களாலோ, வேலைவாய்ப்புக்களாலோ தீர்த்து வைக்கக் கூடியதல்ல. எந்த அளவு கோலுக்குள்ளும் மதிப்பிட முடியாதது.

தமிழ் சமூகத்தினதும், தமிழ் அரசியல் தலைமைகளினதும் பலவீனங்களை கேர்ணல் ரட்ணப்பிரிய மனிதாபிமானத்தோடு அணுகி இருக்கிறார் இதுதான் யதார்த்தமான உண்மை.

மக்கள் வாழ்விழந்து நிற்கும் போது தமிழ்த் தேசியம்.... தமிழ்த் தேசியம்.... என்று ஒப்பாரி வைப்பதில் அர்த்தம் இல்லை. “பசி வந்தால் பத்தும் பறந்துவிடும்” என்பார்கள். அனைத்தையும் இழந்து நிற்பவனுக்கு அரசியல் பேசி உறைக்கவா போகிறது? பசியைப் போக்கிய பின்புதான் அடுத்த கட்டத்தை யோசிக்கலாம்.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டுமென்பது வேறு. மக்களின் அன்றாடப் பிரச்சினை என்பது வேறு. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் புரியாததால்தான் இன்று எல்லாமே குழம்பிப் போய்க்கிடக்கிறது.

வடமாகாண சபையும், தமிழ்க்கூட்டமைப்பும், புலம்பெயர் அமைப்புக்களும் (டயஸ்போரா) தமிழர்களின் இன்றைய நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததும் அரசியல் போராட்டம் என்றார்கள். வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்த போதும் அரசியல் தீர்வு.... தமிழ்த் தேசியம் என்று பேசிப்பேசி இருப்பது காலத்தை நகர்த்தும் செயல்.

தமிழ் மக்கள் தொடர்பில் கள நிலவரத்தை அறிந்து, அரசியல் போராட்டவடிவங்களும் மாறவேண்டும். மக்களையும் மண்ணையும் இழந்த நிலையில், முன்னெடுக்கப்படும் எந்தவொரு போராட்டமும் வெற்றி பெறுவதற்கான சாத்தியமே இல்லை.

அப்படித்தான் சாத்தியமானாலும் அதில் பிரயோசனமும் இல்லை. புலம்பெயர் அமைப்புகளுக்கு அரசு கதவைத் திறந்து விட்டிருக்கிறது. அப்படி இருந்தும், வடக்கு, கிழக்கில் அல்லலுறும் உறவுகளுக்கு புலம்பெயர் அமைப்புக்களால் சரியான உதவிகள் கிடைப்பதில்லை. அவர்கள் அனுப்பினாலும் அவைகள் கூட ஏப்பம் விடப்படுகிறது. குதூகலங்களுக்கும் சொகுசு வாழ்வுக்கும் கோடி கோடியாய் செலவிடும் புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள் இந்த மண்ணில் அல்லல்படும் மக்கள் மீது கொஞ்சம் கரிசனை காட்டினால் என்ன?

ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள், தமிழ்த் தேசிய உணர்வு உணர்ச்சி மயமாகவே ஊட்டப்பட்டது. அதே உணர்வை இராணுவமும் தனக்குச் சாதகமாக்கியிருக்கிறது.

ஒரு இராணுவ வீரருக்காக கதறி அழும் அளவுக்கு தமிழ்ச் சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதென்றால், தமிழ்த் தேசிய உணர்வு இல்லாமல் போய்விட்டது என குறை கூறமுடியாது. தமிழ் அரசியல் தலைமைகள் காரணம் கண்டறிந்து இனியாவது பொறுப்புடன் செயற்படாவிட்டால், வரலாற்றுப் படிப்பினை பெரும் தண்டனையாகவே இருக்கப்போகிறது.

 

 

Comments