சிறப்பு தொடர்கதை | தினகரன் வாரமஞ்சரி

சிறப்பு தொடர்கதை

கொழும்பு நகரம் இனிய ஓர் உதயத்துக்காக அன்றும் வழமை போல உறக்கம் கலைந்து விழித்துக் கொள்ளத் தொடங்கியிருந்தது. நாள் முழுவதும் இரைதேடிப் பறந்து திரிந்து களைத்துத் துயில் கொண்ட பறவையினங்களின் “கீச்கீச்” ஒலிகளை மிகைத்துக் கொண்டு வீதிகளில் வாகனங்களின் ஹோர்ன் சத்தம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

புறக்கோட்டை பஸ்தரிப்பு நிலையம் உறக்கத்தில் எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக கலகலப்பாகிக் கொண்டிருந்தது.

இ.போ.ச பஸ் வண்டிகள் அடுத்தடுத்து பிரயாணிகளோடு புறப்பட்ட வண்ணமிருந்தன. கண்டி நோக்கிச் செல்லும் முதலாம் இலக்க பஸ்வண்டியின் சாரதி தன் இருக்கையில் அமர்ந்து அதை ஸ்டார்ட் பண்ண முனையும் போது தனது வண்டியை நோக்கி, அதனை நிறுத்துமாறு சைகை செய்த வண்ணம் ஓட்டமும் நடையுமாக விரைந்து வரும் பிரயாணியைக் கண்டு மெதுவாக பஸ்வண்டியை நிறுத்தினான்.

வந்தவர் நடுத்தர வயதான ஒரு பெண்மணி, வண்டிக்குள் ஏறியவளின் விழிகள் இரண்டும் காலியான இருக்கை எங்குள்ளது என நோட்டமிட்டன. இரண்டு பேர் அமரக்கூடிய, அதுவும் சாரதிக்கு எதிர்ப்பக்கமாக உள்ள ஆசனம் ஒன்று வெறுமையாகக் காணப்படவே, அவளுக்குப் பரம திருப்தி. இல்லையேல் உதய சூரியனின் வெப்பத்துக்கு ஆளாகி முகம் சிவக்க வேண்டி வருமே... என நினைத்தவாறுதான் அவள் வண்டிக்குள் ஏறினாள்.

நிம்மதிப் பெருமூச்சு.. அவளிடமிருந்து வெளிப்பட்டது. ஆசனத்துக்கு கீழே கையில் இருந்த பயணப்பொதியை வைத்தவள் யன்னல் பக்கமாகப் போய் தொப் என அமர்ந்தாள். பஸ் வண்டியில் டிரைவருக்கு முன்னால் பொருத்தப்பட்டிருந்த வட்டமான கடிகாரம் வைகறை மணி ஐந்து பதினாறு எனக் காட்டியது.

பேருந்து நிலையத்திலிருந்து வண்டி மெதுவாக, புறப்பட்டது. மெதுவாக பிரதான வீதிக்கு வந்து இடது பக்கமாக லாவகமாக திருப்பி வலப்பக்கமாக திருப்பும்போது மறுபுறத்தே கண்டி நோக்கிச் செல்லும் தனியார் போக்குவரத்து பஸ்ஸும் புறப்படத் தயாராவதை இ.போ.ச பஸ்வண்டியின் டிரைவர் கடைக்கண்ணால் நோட்டமிட்ட வண்ணம் வேகத்தை சற்று விரைவு படுத்தினான்.

டெக்னிகல் சந்தியில் சிக்னல் விளக்கு பச்சை காட்டியது. ‘விர்’ரென அதைத் தாண்டி பஞ்சிகாவத்தை சுற்றுவட்டத்தில் வளைந்து மாளிகாவத்தை சந்தி ஊடாக பஸ் விரைந்தது. சமந்தா திரைப்படமாளிகைக்கு அருகில் வரும்போது ‘சிக்னல்’ விளக்கு மயக்கும் மஞ்சள் காட்டி நிறுத்து என சிவப்பை உமிழ்ந்தது. வண்டி வேகத்தைக் குறைத்து நிதானமாக நின்றது.

பஸ்ஸின் இடது பக்க யன்னலோரம் இருக்கையில் உட்கார்ந்திருந்த பெண் சற்று தலையைத் திருப்பி மாளிகாவத்தை மையவாடியை நோக்கினாள். செடிகளுக்கு இடையே ‘மீஸான்’ பலகைகள் மீளாத் துயில் கொண்டோர் இங்கே அடக்கப்பட்டுள்ளனர் எனச் சொல்லாமல் சொல்லிய வண்ணம் புதிதாகப் பூசப்பட்ட பச்சை வர்ண பெயின்ட்டில் பளிச்சென காட்சியளித்தன.

‘புதைகுழிக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களே! நானும் வெகு சீக்கிரம் உங்களோடு வந்து சேர்ந்து கொள்வேன். எப்போது என அறியேன். அனைத்து சிருஷ்டிகளையும் படைத்த வல்ல இறைவன் உங்களுக்கு நிம்மதியைக் கொடுக்கட்டும். உங்கள் அனைவரது பாவங்களையும் மன்னிக்கட்டும்’. என உள்ளூர பிரார்த்தித்துக் கொண்டாள்.

முச்சந்தியில் சிக்னல் விளக்கு பச்சை கொடி காட்டவே, சாரதி இடதுபக்கமாக பஸ்ஸை திருப்பி பேஸ்லைன் வீதிவழியாக வந்து ஒருகொடவத்த நாற்சந்தியை தாண்டியதும் வண்டியின் வேகம் படிப்படியாக அதிகரித்தது. வண்டியின் யன்னலூடாக காலைப்பனிக்காற்று இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணின் முகத்தில் வேகமாக மோதி விளையாடியது. அப்படியே முகம் விறைத்துப் போன மாதிரியான ஓர் உணர்வு அவளுக்கு... யன்னல் கண்ணாடியை இழுத்து மூடி விட்டு சிந்தனை வயப்பட்டாள்.

மூன்றெழுத்துக்குள் அடங்கிய முத்தான பெயர் கொண்ட இந்த வஹிதா தான் புது இடம் நோக்கி பஸ்வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் பெண்மணி. சாதாரண நிலையில் இயங்கிக் கொண்டிருந்த ஓர் அரசாங்கப் பாடசாலையை, முதல்தரமான நிலைக்கு பலராலும் புகழப்படும் அளவுக்கு தன் ஆற்றலால், விவேகத்தால் பிரபல்யமாக்கிய ஆளுமை மிக்க கல்லூரி அதிபர். கல்வியமைச்சினால் சிறந்த அதிபர் எனப் பாராட்டப் பட்டவள். ஏராளமான கல்வித் தகைமைபெற்ற துடிப்பான பெண் அதிபர்...

தெளிந்த நீரில் கல்லெறிந்தாற்போல் குழம்பிய உள்ளத்தோடு இன்று புதிய இடம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறாள். நீண்டகாலம் சகல வசதிகளோடு கூடிய விடுதியில், பாடசாலை குவாட்டர்ஸில் தங்கி பணியாற்றியவள், இப்போது சௌகரியங்கள் அற்ற ஒரு சாதாரண பள்ளிக்கூடத்தை நாடி சென்று கொண்டிருக்கிறாள்.

தனித்தனியாக ஒவ்வொரு மாணவனது திறமை, ஆற்றல், குடும்பப் பின்னணி பற்றி அறிந்து வைத்திருந்ததால், எந்த ஒரு மாணவனது கற்றலுக்கும் இடையூறு என்பது வரும் பட்சத்தில், அதனை களைந்து குறிப்பிட்ட மாணவன் தொடர்ந்து கல்வி பயில ஆவண செய்வதில் அவளுக்கு நிகர் அவளே...

புதிய மாடிக்கட்டடங்கள், நவீன பாணியில் அமைந்த வாசிகசாலை, விஞ்ஞான ஆய்வுகூடம், விளையாட்டு மைதானம், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான விசேட வகுப்பறை, மனையியல் பிரிவுக்கென்றே தனியான ஒரு கட்டடம், விசேட பிரமுகர்களை சந்திப்பதற்காக குளிரூட்டப்பட்ட விருந்தினர் அறை, பழைய மாணவர்கள் பெற்றோர் தத்தமது திறன்களுக்கு ஏற்ப சிறு கைத்தொழில்களை பயிலத்தக்க வகையில் உருவாக்கப்பட்ட ‘டிரெய்னிங் சென்டர்’, பிரார்த்தனை கூடம், கலை இலக்கிய விழாக்களை நடத்துவதெற்கென அழகான இருக்கைகள் கொண்ட பெரியதொரு மண்டபம், தொலைத் தொடர்பு ஊடக தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ளவென பிரத்தியேகமாக விசாலமான அறை, அதுமட்டுமன்றி, மொண்டிசூரி பாடசாலை....

இன்னோரன்ன வசதிகளை தனது பாடசாலைக்குப் பெற்றுக் கொடுக்க வஹிதா பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு தசாப்தகாலத்துக்கும் மேலாக எவரும் எண்ணிப் பார்க்க முடியாத உச்சத்துக்கு அந்தப் பாடசாலை வளர்ச்சி கண்டது.

எனவே அதிபரது புகழ் பலர் மத்தியில் பேசப்படுவதை சிலரால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. அதிபரது செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவி விரும்பியவர்கள் வஹிதாவோடு மிக நெருக்கமாக உறவாடும் ஆசிரியர்கள் சிலரை தமது வலைக்குள் வீழ்த்தி சதுரங்கம் விளையாட முனைந்தனர். அதிபருக்கு எதிரான போலியான குற்றச்சாட்டுக்கள் நோட்டீஸாக சிறகடித்தன. முகவரியற்ற முகங்களாக பல இடங்களில் உலா வந்தன. ஏனைய பாடசாலைகள், கல்விக் கந்தோர் பிரதேச சபை என இவ்விடயம் கழுவிக் கழுவி ஊற்றப்படுவது அதிபரது செவிகளுக்கும் எட்டியது.

பிறர் மத்தியில் தான் ஒரு பேசுபொருளாகி விட்டது கண்டு சுருண்டு விட்டாள். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில் தான் இந்த விடயம் இடியாக அவள் தலையில் இறங்கியது. இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர (சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் அனைவருமே சிறந்த பெறுபேறுகளோடு சித்தியடைந்திருந்தனர். நாடளாவிய ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மூவர் இவர்களுள் அடங்குவர். பெற்றோர் பெருமிதம் கொண்டனர். ஊடகங்களில் இந்த விபரம் வெளியானது.

இவர்களில் இரண்டு மாணவர்களது தந்தையர் தனவந்தர்கள் ஆனதால் அதிபருக்கும், பொறுப்பாசிரியர்களுக்கும் மனம் விரும்பி பெறுமதிவாய்ந்த அன்பளிப்புகளை வழங்கினர்.

பிரத்தியேக ‘டியூஷன் வகுப்புக்களை நடத்தும் பாடசாலை ஆசிரியர்களுக்கு இவை எரிச்சலையூட்டின.

அதிபர்களது நிர்வாகத்திறமை, கைசுத்தம், நிதிக்கையாடலின்மை, நன்நடத்தை, ஆசிரியர்களை வழிநடாத்தும் பண்பு மற்றும் பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகளை பொறுத்துத் தான், தம் அருமை பிள்ளைச் செல்வங்களை முதலாந்தரத்தில் குறித்த பாடசாலையில் சேர்க்க என்னென்னவோ பிரயத்தனங்களை பெற்றோர் மேற்கொள்கின்றனர்.

அதேவேளை குறித்த ஒரு பள்ளிக்கூடம் உச்சத்துக்கு ஏற்றம் பெறும் போது, அதனை சறுக்கி விழச்செய்யும் பணியை கச்சிரதமாகச் செய்ய சமயம் பார்த்திருக்கும் ஒரு கூட்டம் எங்கும் இருக்கத்தான் செய்கிறது. நாடெங்கிலும் உள்ள பல பாடசாலைகளில் இத்தொற்றுநோய் பரவிக் காணப்படுவது கண்கூடு.

அதிபர் வஹிதாவின் நிலையும் அப்படித்தான் அமைந்தது.

“ஒரு நல்ல பிரின்ஸிபலை எப்படியும் நெடுங்காலம் ஒரு இடத்தில வேலை செய்ய விடமாட்டாங்களே...”

“நான்கு பேர் பல்கலைக்கழகத்துக்கு மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டிருக்காங்க”.

“க.பொ.த (சாதாரண தர பரீட்சையிலே கடந்த மூன்று வருசமா பரீட்சை எழுதின அத்தனை பேரும் பாஸ் பண்ணியிருக்கிருங்க”.

“எந்தப் போட்டிக்கு எங்கட ஸ்கூல் பிள்ளைகள் போனாலும் முதலாம் இடம் எங்கட ஸ்கூலுக்குத் தான் அது மண்ணை அள்ளிப் போடப் பார்க்குறாங்க.”

“போர்ட் மெம்பஸாம்... கொமிட்டியாம்... இவங்களுவல்ட பிள்ளைகள், பேரன் பேத்தியெல்லாம் இன்டர்நேஷனில படிக்கிதுகள்...”

“இந்த மாவட்டத்திலேயே முதல்தரமான லீடிங் ஸ்கூல் என்ற பெருமை யாரால வந்தது... எந்த ஒரு பள்ளிக்கூடத்தையும் முன்னேற்றமடைய விடுகிறதில்லையே... இது எங்கட முஸ்லிம் ஸ்கூல்ஸ்ஸூக்கு யாரோ... கொடுத்த சாபக்கேடு...”

“இனி ஸ்கூல்ட கதி... அவ்வளவு தான்”.... கொதித்தனர் பெற்றோர்... கூடிக் கூடிக் கதைத்தனர்.

வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை அடுத்து அதிபருக்கு அவதூறு கூறும் நோட்டீஸ்கள் பகிரப்பட்டமையை பலர் வன்மையாகக் கண்டித்தனர்.

வெள்ளிக்கிழமை... ஒரு புனிதமான நாள்.... ஜும்மாத் தொழுகையை கூட்டாகத் தொழுது ஒருத்தருக்கொடுத்தர் ஸலாம் கொடுத்திட்டு சந்தோஷமா எங்க எங்கட வேலை வெட்டியள பார்க்க பள்ளிவாசல விட்டு கௌம்புறநேரம்... இந்த வீணாப்போற நோட்டீஸ்கள எங்கட கையில திணிக்கிறது. என்ன ஞாயம்? இல்லாட்டி... ஏதாவது ஆர்ப்பாட்டமாம்... எதுக்காவது... எதிர்ப்பாம்?... அதுஅதுகளை அந்தந்த எடத்துல பேசித்தீர்த்துக்கொள்ளனும்... இந்த எழவுகளை ஜும்மாவோட இணைத்து பெரிசுபடுத்த நினைக்கப்படா... கூட்டமா வெளியே வார நேரம்... ஒரு கல் யார் மேலாவது விழுந்தா... எத்தனை பிரச்சினை? மூசா கெட்டவனுக’ பொரிந்தார் அட்வான்ஸ் லெவல் படிக்கும் ஒரு மாணவரின் தந்தை.

பாடசாலையின் சிறந்த பரீட்சைபெறுபேறுகளுக்கு வஹிதாவின் சீரிய நிர்வாகம் தான் காரணம் என்பதை தெரிந்து வைத்திருந்தவர்களுக்கு, அதிபர் இடமாற்றம் பெறப்போகிறார் எனும் செய்தி மிகுந்த வேதனையைக் கொடுத்தது. (தொடர் 29ம் பக்கம்)

Comments