சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் தெரிவுக்கான விண்ணப்பங்கள் கோரல் | தினகரன் வாரமஞ்சரி

சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் தெரிவுக்கான விண்ணப்பங்கள் கோரல்

ஆண்டின் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் 2017 விருது வழங்குவதற்கான விண்ணப்பங்களை பெண்கள் வர்த்தக சம்மேளனம் கோரியுள்ளது. இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு அண்மையில் கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பெண்கள் வர்த்தக சம்மேளனத்தின் தலைமை அதிகாரி சத்துரி ரணசிங்க, மாற்றத்துக்காக குரலெழுப்பும் மற்றும் பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பாக பெண்கள் வர்த்தக சம்மேளனம் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இரண்டு வருடங்களுக்கொரு தடவை ஏற்பாடு செய்யப்படும் இந்நிகழ்வினூடாக, உலகை மாற்றியமைத்த சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு கெளரவம் வழங்கப்படும். பெண்களின் வர்த்தக சமூகத்தை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளதுடன், அவர்களின் வியாபாரத்தை மேம்படுத்துவது மற்றும் ஏனைய பெண்களுக்கு பின்தொடர்வதற்கான சிறந்த செயன்முறைகளை கட்டியெழுப்பவும் முன்வந்துள்ளது. விருதுகள் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து சகல விண்ணப்பதாரிகளுக்கும் ஆலோசனை வழங்கும் நிகழ்வு இடம்பெறும். இதன்போது தமது வியாபாரத்தின் அளவை மதிப்பிடுவது, சமூகத்தில் ஆலோசகர்கள் மற்றும் முன்மாதிரியானவர்களாக தமது பெறுமதியை அதிகரித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றார்.

இன்று ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் இலங்கையின் சிறந்த பெண் தொழில்முயற்சியாளர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம். அவர்களை இனங்கண்டு, அவர்களின் திறமைகளுக்கு கிடைக்க வேண்டிய கெளரவிப்பையும், நன்மதிப்பையும், ஊக்குவிப்பையும் பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

5 பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதை வழங்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் வைபவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நுண் அளவிலான வியாபாரங்கள், சிறிய, நடுத்தர அளவிலான வியாபாரங்கள், பாரியளவிலான வியாபாரங்கள் மற்றும் மிகப்பாரியளவிலான வியாபாரங்கள் இதில் அடங்குகின்றன. பிரதான பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு விண்ணப்பதாரியும் விருதை பெறுவதற்கான தகைமையை கொண்டிருப்பார்.

ஆண்டின் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர், சிறந்த இளம் தொழில் முயற்சியாளர் மற்றும் ஆண்டின் சிறந்த ஆரம்ப நிலை வியாபாரம் போன்ற விருதுகள் இவற்றில் வழங்கப்படவுள்ளன. மொத்தமாக 31 பெண் தொழில்முயற்சியாளர்கள் 21 விருதுகளை பெற்றுக் கொள்வார்கள்.

Comments