நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு | தினகரன் வாரமஞ்சரி

நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு

நமது நிருபர்

அதிகமழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அனர்த்தங்களுக்குள்ளான மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் கண்டறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (26) பிற்பகல் சிலாபத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது மகாவெவ பிரதேச செயலகத்தில் பிரதேச அரசியல் பிரதிநிதிகளையும் அரச அதிகாரிகளையும் சந்தித்த ஜனாதிபதி, மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண செயற்திட்டங்கள் தொடர்பாக கண்டறிந்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, விபத்துக்குள்ளான மக்களை மீட்கும் பணிகளில் முப்படையினரது ஒத்துழைப்புடன் முறையான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

நிவாரண செயற்திட்டங்கள் இரு கட்டங்களாக

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன். அனர்த்த நிலைமைகளின்போது வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களை போன்றே அனர்த்தத்தின் பின்னரான காலத்தில் மக்களின் நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் அமுல்படுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

அத்துடன், அனர்த்தங்களுக்குள்ளான ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் மற்றும் அரச சேவையில் உள்ள கீழ்மட்ட பணியாளர்களுக்காக விசேட நிவாரண செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, இவ்வனைத்து நிவாரண செயற்பாடுகளின்போதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுற்று நிரூபங்களைத் தடையாக கொள்ள வேண்டாம் எனவும் மக்களின் தேவைகளுக்கேற்ப உரிய தீர்மானங்களை மேற்கொண்டு தேவைக்கேற்ப அவற்றை நடைமுறைப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

திடீர் அனர்த்தம் காரணமாக தமது வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக பிரதேச மக்கள் இதன்போது ஜனாதிபதிக்குத் தெரிவித்ததோடு, தமது வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மானிய அடிப்படையில் கடன் உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்ததுடன், இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, உரிய தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றினை தமக்கு பெற்றுத்தருமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த அனர்த்த நிலைமையின்போது மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக அரச சேவையாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையினர் நிறைவேற்றும் பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, வெள்ள நீரில் சிக்கியிருந்த மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும்போது காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தருக்கு அனுதாபம் தெரிவித்தார். அவ் உத்தியோகத்தரின் குடும்பத்தினரது நலன்புரி தேவைகளை நிறைவேற்றவும் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

வெள்ளப்பெருக்கு காரணமாக தாழிறங்கிய மெதகொட பாலத்தையும் ஜனாதிபதி இதன்போது பார்வையிட்டார்.

இதன்போது பொதுமக்களை சந்தித்த ஜனாதிபதி, அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன், பாலத்தின் நிர்மாணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

அதன்பின்னர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நாத்தாண்டிய ஸ்ரீ புஷ்பாராம விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, அம்மக்களின் குறைபாடுகள் தொடர்பாகவும் கண்டறிந்தார்.

பிரதேசத்தில் இடம்பெயர்ந்த 40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 250 பேர் இங்கு தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அம்மக்களின் தேவைகளை கேட்டறிந்த ஜனாதிபதி, அவர்களோடு சுமூக உரையாடலிலும் ஈடுபட்டார்.

 

 

Comments