தாம்பத்திய வாழ்வை சிறப்பித்துக் கூறும் ‘உயிர்த் தீ’ கவிதை நூல் | தினகரன் வாரமஞ்சரி

தாம்பத்திய வாழ்வை சிறப்பித்துக் கூறும் ‘உயிர்த் தீ’ கவிதை நூல்

இலங்கையில் பிறந்து, பிறநாடுகளின் பிரஜைகளாக வாழ்ந்து வரும் பெண் எழுத்தாளர்கள் சிலருடன் எனக்கு முகநூல் மூலமான தொடர்பு உண்டு. இவர்களில் சிலர் தமது முதிர்ந்த பட்டறிந்த அனுபவங்களைக் கவிதை வடிவத்தில் முகநூலில் எழுதி வருகின்றனர். இவர்களுக்கு வாய்த்திருக்கும் தமிழ் வளமிக்க கவிதைப் பாங்கு என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

இவர்களில் சிலர் சமூகப் பிரக்ைஞ கொண்டவர்கள். வேறு சிலர் தாம் பிறந்த தாயகமான ஈழத்து அவலநிலைகளையும், தாம் அனுபவித்த வலிகளையும் நினைவுபடுத்தி எழுதுபவர்கள்.

முகநூலில் அதிகம் எழுதாவிட்டாலும், தாம் எழுதிய கவிதைகளை ஒரு நூலாக வெளியிட்டிருப்பவர் நளாயினி தாமரைச் செல்வன். சில வருடங்களுக்கு முன்னர், தமது கணவர் மற்றும் சிறு பிள்ளைகளுடன் இலங்கை வந்திருந்தார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில், டொமினிக் ஜீவாவுடனும், என்னுடனும் கதைத்துக் கொண்டிருந்தபோது, எனது நண்பர்களில் ஒருவராகிய கலாநிதி தேவராசா முகுந்தன் அதைப் புகைப்படமாக்கினார்.

நளாயினி தாமரைச் செல்வன் எழுதிய கவிதை நூலின் பெயர் ‘உயிர்த்தீ’ சென்னை உயிர்மை பிரசுரம் அதனை வெளியிட்டு இருக்கிறது.

இந்தப் புத்தகம் ஒருவகையில் வித்தியாசமானது. 144 பக்கங்களில், தலைப்புகளின்றி, சிறுசிறு அனுபவங்களை ஒரே தொடராகக் கொண்ட வரலாறு ரீதியான ஒரு படைப்பாகும்.

இக்கவிதைகளில் என்ன சொல்லப்படுகிறதென்றால், கவிதை சொல்பவர், தனது கணவனை விளித்துப்பாடுகின்ற தாம்பத்திய அனுபவங்களை காதலை சொல்லும் பாங்கில் அமைந்துள்ளது.

இந்த விதமான கவிதைகளினால், சமூகத்துக்கு என்ன பயன் என்று சில காரசாரமான விமர்சனங்கள் கேட்கக் கூடும். அதாவது சமூக அக்கறைகளை மாத்திரம் தான் கவிஞர்கள் எழுதவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது போல இருக்கிறது இவர்கள் கேள்வி.

தனிமனித உணர்வுகளும் இலக்கியங்களில் இடம்பெறுவதை இத்தகைய விமர்சகர்கள் அறிந்திரார் போல சில பிரெஞ்சு மொழியின் கவிதைகளை ஆங்கில மொழி மூலம் வாசித்துப் படித்தபோது நான் வியப்புற்றிருக்கிறேன். மிகவும் நுணுக்கமாக, உன்னத அனுபவங்களை வரிக்கு வரியாக அந்நாட்டுக் கவிஞர்களும், எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர்.

அது போலவே, நனாயினி தாமரைச் செல்வனின் இந்தக் கவிதைத் தொகுப்பை நான் இரசித்து மகிழ்கிறேன்.

இவருடைய கவிதை நடை யாருமே இலகுவில் புரிந்து கொள்ளத்தக்க, பேச்சு மொழித் தொனியமைந்ததாக அமைகிறது.

தாம்பத்திய வாழ்க்கை பொதுவாக கரடு முரடாக இருப்பதை இலக்கியங்கள் மூலம் நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அதில் இன்பமயமான காலப்பகுதிகளும் உண்டு. அந்த இன்சுவையை, தன் கணவனின் சுயநலமற்ற அன்பு வெளிப்பாட்டை, இக்கவிதையில் விவரணம் செய்பவராக நின்று கவிஞர் நளாயினி தாமரைச் செல்வன் செயற்பட்டிருக்கிறார்.

இவர் தமது நீண்ட கவிதையான உயிர்த் தீயை முடிக்கும் விதம் அலாதி இவர் கூற்று இதுதான்:

“மோகம் தொலைத்து

மோனம் தவமிருக்கும்

மௌன மொழிதான் காதல்”

கூருணர்ச்சி மிக்க வாசகர்கள் இந்த நூலை வாசித்து இன்புறுவர் என நம்புகிறேன்.

இனி, இவருடைய கவிதைகளில் நான் விரும்பும் வரிகளை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அங்கொன்றும், இங்கொன்றுமாக, என் கண்களில் பட்டவற்றை மாத்திரம் இங்கு தருகிறேன்.

இந்நூலின் ஆரம்பத்தில் வரும் இந்த வரிகளைப் பாருங்கள்:

“ஒத்த உணர்வலைகள் நிச்சயம் தொடர்ந்து வரும். சுவாரஸ்யமும் துன்பமும் ஏக்கமும் ஆசைகளுமாய் பயணம் நீண்டுதான் போகிறது.” “காமக்கிளர்வுகள் ஏதுமின்றி உன் பாதச் சுவடுகளையும் நினைவுகளையும் சிரிப்பொலிகளையும் துன்பங்களையும் தாங்கியபடி. நட்பா? காதலா? பிரித்துப் பார்க்க முடியவில்லை. எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இப்போதாவது கண்டுபிடித்தானே, எந்தன் மனசை உந்தன் நினைவுகளோடு. நீர்த்தடாகத்துள் விழும் மழைத்துளிபோல் கண்மூடி கிறங்கி ரசிக்கிறேன்.”

“குமிழ்கள் உடையும் போது

ஏற்படும் நீர்ச்சலனம்

மெதுமெதுவாக எங்கும் வியாபித்து

தடாகத்துள் அலைபோன்ற

அசைவைத் தருவது போல்

உயிரின் அந்தம் வரை நீயும்

அதிர்வைத் தரத்தான் செய்கிறாய்”

“வெறும் உடம்போடு பனிக்கால சுகத்தை அணுவணுவாய் ரசித்து கிறங்கிப் போய் இருக்கும் இயற்கையும், ஒரு மரக்கிளையில் குளிரில் நடுங்கியபடி எங்கோ பார்த்திருக்கும் ஒற்றைக் குருவி”

“ஊசியாய் பலதுளைகள் உடல் எங்கும் அறையும் குளிர்போல்

முள்ளந் தண்டிற்கூடாக குளிர்

உடலெங்கும் பரவுவதை நன்கு

உணரமுடிகிறது...”

“நாம் எல்லாம் காதலை மட்டுமே சுவாசித்து பழகியவர்கள், ஆண் பெண் நட்பை சுவாசிக்கப் பழக வேண்டும்.”

“காதல் தனது ஆட்சியை பள்ளியறையில் முடித்துக் கொண்டு மூச்சடங்கிப் போகிறது. நட்பு அப்படியல்ல இதயத்தின் இதயத்துள் உணர்வின் உணர்வுகள் புதுப்புது அர்த்தங்களை வாழ்வின் எல்லை வளர தருவதாய்.”

“காமம் என்கின்ற கருப்பொருளுடாக மட்டுமே பார்க்கத் தெரிந்த இந்த சமூக சாம்ராச்சியத்தால் புணர்ந்து அழிக்கப்பட்ட உள்ளங்களாய்”

“நட்புக்கு ஏது பால்? எல்லோரும் தாராளமாக நட்பைக் காதல் செய்வோம்.”

“இந்த அலைகளின் தழுவல் போல் எப்படி எனக்குள் அப்படி ஒரு சுகத்தை உன்னால் தர முடிந்தது?”

“என் சுயநினைவை இழக்கச் செய்தவனே படந்திடு இனி என்மீது நட்புக் கொடியா”

“உயர்ந்து நிற்கும் பல கலைஞரைப்பார், வீழ்ந்தெழும்பியதால் தான் நிமிர்ந்து நிற்கிறார்கள்.”

“ஆணுக்குள்ளும் மென்மையுண்டு

ஆணுக்குள்ளும் பெண்மையுண்டு

ஆணுக்குள்ளும் நளினமுண்டு

ஆணுக்குள்ளும் அடக்கமுண்டு

ஆணுக்குள்ளும் பெண்ணை பலமேற்றும் வல்லமையுண்டு

ஆணுக்குள்ளும் நந்தவனமுண்டு

ஆணுக்குள்ளும் தாய்மையுண்டு

ஆண்களால்தான் பெண்கள்

மிளிரக் கற்றுள்ளார்கள்”

மேற்கண்டவாறு அருமையான கவித்துவ வரிகளை நளாயினி தாமரைச் செல்வன் தந்திருக்கிறார்.

அவருக்கு எமது பாராட்டுகள்

நூலில் நான் கண்ட ஒரு குறை, கவர்ச்சியற்ற அட்டைப்பம். இப்படிப்பட்ட ஒரு படத்தை ஏன் இவர் தெரிவு செய்தார் என்பதுதான் புரியவில்லை.

கே.எஸ். சிவகுமாரன்

Comments