இன்று தேவைப்படுவது இன நல்லுறவும் மனிதாபிமானமுமாகும் | தினகரன் வாரமஞ்சரி

இன்று தேவைப்படுவது இன நல்லுறவும் மனிதாபிமானமுமாகும்

சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை மனிதாபிமானத்தையும் மனித நேயத்தையும் வலியுறுத்தி நிற்கின்றது என சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தேசமான்ய ஏ.எல்.எம்.மீராசாகிப் தெரிவித்தார்.

தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கேள்வி: சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் என்றால் என்ன?

பதில்: பல நூறு வருடங்களுக்கு முன்னர் உலகில் பல யுத்தங்கள் நடைபெற்றுள்ளன. அந்த யுத்தங்களில் நிறையப் பேர் பாதிக்கப்பட்டனர். வைத்திய வசதிகள் வாகன வசதிகள் எல்லாம் மிகவும் குறைந்த அந்தக் காலத்தில் ஜோன் என்பவர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட மனிதாபிமான திட்டம் தான் இந்த சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை எனும் திட்டமாகும்.

கேள்வி: சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை நிறுவனத்தினால் பிரதான மாக மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்ன?

பதில்: பிரதான பணியாக முதலுதவி வழங்குவதையே மேற்கொண்டு வருவதுடன் மனிதாபிமான தொண்டர் சேவைகளையும் வழங்கி வருகின்றனர்.

கேள்வி: இலங்கையிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் சென்ஜோன்ஸ் அம்புலன் ஸ்சேவை எப்படியான பணிகளை ஆற்றி வருகின்றது?

பதில்: இலங்கையைப் பொறுத்த வரை பல ஆயிரக்கணக்கான அங்கத்தவர்கள் இதில் அங்கம் வகிக்கின்றார்கள்.

இந்த நிறுவனத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. சிறுவர்களுக்கான பிரிவு மாணவர்களுக்கான பிரிவுகள் உள்ளன. இதனுடைய பிரதான நடவடிக்கையாக தங்களையும் பாதுகாத்து முதலுதவியின் மூலம் மற்றவர்களையும் பாதுகாப்பதை இலக்காக கொண்டு பணியாற்றிகின்றது. பாதிக்கப்படும் ஒருவரை அண்மையிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வரைக்கும் முதலுதவியை வழங்குவது சென் ஜோன்ஸினுடைய நவடிக்கையாகவும் உள்ளது.

இலங்கையிலுள்ள அங்கத்தவர்கள் மற்றும் அதன் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் முதலுதவி பயிற்சியை பெற்றுள்ளதுடன் முதலுதவி பயிற்சியை வழங்கியும் வருகின்றது. இதன் தலைமையலுவலகம் கொழும்பில் அமைந்துள்ளது. இலங்கையில் 120 வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு நிறுவனமாக இந்த நிறுவனம் திகழுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் பலர் இந்த நிறுவனத்தின் மூலம் முதலுதவி பயிற்சியை பெற்றுள்ளனர்.

இந்த முதலுதவி பயிற்சியை வழங்குவது அந்தந்த பகுதியிலுள்ள ஆணையாளர்களேயாகும். அந்த ஆணையாளர்கள் பாடசாலைகளுக்கும் சென்று மாணவர்களுக்கு தேவையான முதலுதவி பயற்சியையும் வழங்கி வருகின்றனர்.

இந்த நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களின் போதெல்லாம் எமது சென் ஜோன்ஸ் நிறுவனம் களத்தில் நின்று தொண்டர் சேவையாற்றியுள்ளது.

2004 டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்தத்தின் போது அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென் ஜோன்ஸ் அம்புலன் ஸ்சேவை நிறுவனத்தின் சகல அங்கத்தவர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலுதவி பயிற்சியை வழங்கினார்கள்.

சுனாமி அனர்தத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு சென்று அங்கு அகதிகளாக இருந்த மக்களுக்கும் நோய் வாய்ப்பட்ட மக்களுக்கு முதலுதவிகளை வழங்கியதுடன் காயப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளித்தோம். அதே போன்று பல்வேறு தொண்டர் சேவைகளை புரிந்தோம். ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக 125 மணித்தியாலங்கள் எமது தொண்டர்கள் பணியாற்றினார்கள்.

கேள்வி: மட்டக்களப்பு மாவட்டத்தில் நீங்கள் தனிப்பட்ட ரீதியாக ஆற்றி வரும் மனித நேய சமூக செயற்பாடுகள் குறித்து கூற முடியுமா?

பதில்: என்னைப் பொறுத்த வரைக்கும் தனிப்பட்ட ரீதியாகவும் இந்த சென்ஜோன்ஸ் நிறுவனத்துக்கு ஊடாகவும் பல சமூக நல வேலைகளை செய்து வருகின்றேன்.

சென் ஜோன்ஸ் நிறுவனத்துக்கு ஊடாக மாணவர்களுக்கு உதவி செய்து வருகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைவராக நான் இருந்து இந்த பணிகளை ஆற்றி வருகின்றேன். வறிய மாணவர்களுக்கு இலவசமாக பாடசாலை உபகரணங்கள் அவர்களில் சில மாணவர்களுக்கான பாதணிகளை வழங்கி வருகின்றேன்.

இது தவிர கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சை மற்றும் உயர் தரப்பரீட்சைகளில் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெறுகின்ற சில தமிழ்; முஸ்லிம் மாணவர்களை பாராட்டி அவர்களை கௌரவித்து வருகின்றேன்.அவர்களின் சாதனைகளை பாராட்டுவதன் மூலம் அடுத்த மாணவர்களை ஊக்கு விப்பது எனது விருப்பமாக உள்ளது.

கேள்வி: வேறு என்ன சமூக வேலைத்திட்டங்களை மேற் கொண்டு வருகின்றீர்கள்?

பதில்: கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராகவும் இருக்கின்றேன். அந்த நிறுவனத்தின் மூலம் கடந்த நான்கு வருடங்களில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த கிழக்கு மாகணத்தின் மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 3000 மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி அம் மாணவர்களை ஊக்குவித்து வருகின்றோம்.

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் 15 வருடங்கள் சேவையாற்றி வருகின்ற ஒரு நிறுவனமாகும். அதில் நான் இணைந்து நான்கு வருடங்களாக மாணவர்களுக்கான இந்த கௌரவிப்பை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடத்தியுள்ளேன்.

கேள்வி: இன நல்லுறவுக்கு நீங்கள் தனிப்பட்ட ரீதியாகவும் சென்ஜோன்ஸ் ஊடாகவும் ஆற்றிய பங்களிப்பு என்ன?

பதில்: இன ரீதியாக நாங்கள் பார்த்து வேலை செய்வது கிடையாது. சென் ஜோன்ஸ் எமக்கு கற்றுத்தந்த பாடம் என்னவென்றால் சென் ஜோன்ஸ் என்பது மனித நேயமாகும்.

முக்கியத்துவம் மனிதம் இதனை வைத்துத்தான் இந்த பணிகளை ஆற்றி வருகின்றேன். இனம் மதம் கலாசாரம் வேறுபாடின்றி மனிதாபிமானமாக நான் பணியாற்றி வருகின்றேன்.

எங்களிடம் இன மதம் மொழி என்ற வேறு பாடுகள் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அது இன நல்லுறவை பாதிக்கும். இன்று இந்த நாட்டில் தேவைப்படுவது நல்லிணக்கமாகும். அந்த நல்லிணக்கத்தை சமூக உறவையும் கட்டி வளர்க்க வேண்டிய தேவைகள் இருக்கின்றன.

அந்த இன நல்லிணக்கத்திற்கு என்னால் முடிந்த பங்களிப்பை செய்து வருகின்றேன்.

கடந்த சில வருடங்களாக ஐந்தாம் தர பரீட்சைக்குரிய மாதிரி வினாத்தாள்களை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தினூடாக வழங்கி வருகின்றேன்.

இதனை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் மாணவர்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக தமிழ் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நேரடியாக சென்று அதனை வழங்கி வருகின்றேன் இதுவும் இந்த மாவட்டத்தின் இன நல்லிணக்கத்திற்கு நான் செய்யும் வேலைத்திட்டத்திற்கு ஒரு உதாரணம் என குறிப்பிட விரும்புகின்றேன்.

(தொடர் 22ஆம் பக்கம்)

எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

Comments