ஊழல் ஒழிப்பு மலேசியா கற்று தந்திருக்கும் மற்றொரு பாடம் | தினகரன் வாரமஞ்சரி

ஊழல் ஒழிப்பு மலேசியா கற்று தந்திருக்கும் மற்றொரு பாடம்

இலங்கையின் நேச நாடாகிய மலேசியாவில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் உலகளாவிய ரீதியில் ஊழல் எதிர்ப்பு சக்திகளுக்கு ஒரு உந்துசக்தியை பெற்றுக் கொடுத்திருக்கின்றது. மலேசியா சுதந்திரம் அடைந்தது முதல் அந்நாட்டை ஆட்சி புரிந்த ஐக்கிய மலே தேசிய அமைப்பு எனும் மாபெரும் கட்சி பொதுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது இதுவே முதல் முறையாகும். 2009 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான 10 வருட காலப்பகுதியில் பிரதமராக இருந்த ரசாக் நஜீப் மலேசியாவின் இரண்டாவது பிரதமராகத் தெரிவான அப்துல் ரசாக் ஹுசெய்னின் மூத்த புத்திரராவார். இம்முறை அவர் தோல்வியுற்றது மலேசியாவின் அபிவிருத்திக் கனவை நனவாக்கி 1981 முதல் 2003 வரை அந்நாட்டின் பிரதமராக இருந்த வரும் இன்று 92வது அகவையில் அடியெடுத்து வைத்திருப்பவருமான மகதீர் மொஹமட் இடமே ஆகும்.

ஒரு காலத்தில் நஜீபுக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கி அவரை நெறிப்படுத்தியவரும் மஹதீரே ஆவார். இதனை இன்றைய யுகத்தின் குரு - சீடர் கதை எனக் கூறலாம். மலேசியாவில் ஏற்பட்ட இந்த குரு - சீடர் மோதல், ஊழலுக்கு எதிரான கோபத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலில் வெற்றி கண்ட ஒரு நாடு என்ற வகையில் எங்கள் நாட்டுக்கும் முக்கியமானதாக அமைகின்றது. அரசியல் முக்கியத்துவத்திற்கு அப்பால் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றிருக்கும் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் ஆறிலொரு பங்கு மலேசியாவிலிருந்தே கிடைக்கப் பெற்றிருக்கின்றது என்ற வகையிலும் மலேசியா முக்கியத்துவம் பெறுகின்றது. அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த மஹதிர் மொஹமட்டை இரகசியமாக சந்தித்தார். இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கின்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்வது சிறந்ததாகும்.

ஊழலின் அளவு

மலேசியாவை சுதந்திரத்தின் பின்னர் தொடர்ச்சியாக ஒரே கட்சி ஆட்சி செய்து வந்ததற்கு எதிராக மக்களின் கருத்து வெளிப்பட்டு வந்த போதிலும் அதனை ஒன்றுதிரட்டி அரசு அமைக்கும் சக்தியாக உருவாக்கும் சூழ்நிலை அங்கே இருக்கவில்லை. நஜீபினாலேயே அபிவிருத்தி பணிகளுக்கென ஆரம்பிக்கப்பட்ட ஐஎம்டிபி எனும் அரச நிதியிலிருந்து நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்த சம்பவம் 2016 ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து மக்கள் மத்தியில் பிரதமர் மீது இருந்துவந்த நம்பிக்கை சிதைய ஆரம்பித்தது. மக்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் நஜீபின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 681 மில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 900 கோடி ரூபாய் சேமித்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்பணம் தமக்கு கிடைத்த விதத்தை அவரால் நியாயப்படுத்த முடியவில்லை.

பதிலாக, அரசியல் எதிரிகள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவ்வாறான செய்திகளை பரப்பி வருவதாகக் கூறினார். எவ்வாறாயினும் மலேசியாவின் பிரதமரும் அவரது சகாக்களும் அவர்களது சொந்தப் பெயரில் அமெரிக்காவில் மாளிகைகளை விலைக்கு வாங்கியிருந்தனர். பிரதமரின் ஒரு புதல்வர் ஹொலிவூட் திரைப்படத் தயாரிப்பாளராகியிருந்தார். பிரதமரின் மனைவியாரின் தங்கம் வெள்ளி முத்து மாணிக்க ஆபரணங்கள் எவராலும் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பெறுமதி வாய்ந்தவை.

இதன் விளைவாக மலேசிய பொலிஸ் நஜீபின் தனிப்பட்ட வாசஸ்தலத்தை பரிசோதித்தது. தேர்தல் இடம்பெற்று மூன்று தினங்களின் பின்னர் அவரது வாசஸ்தலத்திலிருந்து மில்லியன் கணக்கில் பணக்கட்டுக்களும் மிகவும் பெறுமதியான ஆடம்பர தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. இது பற்றிய ஒளிநாடாக்கள் இணையத்தளங்களில் பரவத் தொடங்கின. நஜீபுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு

மக்கள் பணத்தை திருடும் எந்தவொரு அரசும் அதற்கு எதிரான கருத்துக்களை அடக்கி ஒடுக்குவது இயல்பான விடயமாகும். எனவே பாரிய மக்கள் எதிர்ப்பை ஒடுக்கு முகமாக நஜீபின் அடக்குமுறையும் களமிறக்கப்பட்டது. அவரது பிரதிப் பிரதமர் முஹைதீன் யசினையும் சட்டமா பதவிவிலக்கிய நஜீப் தான் தெரிவு செய்த புதிய சட்டமா அதிபரை நியமித்து, அக்கொடுக்கல் வாங்கலில் எந்தவிதத் தவறும் இல்லையெனவும் அப்பணம் சவூதி மன்னர் ஒருவரிடமிருந்து பரிசாக கிடைக்கப்பெற்றது எனவும் அறிவிக்கச் செய்தார். எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிமை சர்ச்சைக்குரிய சிறுவர் துஷ்பிரயோக சம்பவத்தை வைத்து சிறையிலடைத்தார். ஊடகங்களை அடக்குவதற்கு முயன்ற அரசு, சமூக ஊடகங்களில் வெளிவந்த அரச எதிர்ப்பை அடக்குவதற்கு தேவையான புதிய சட்டதிட்டங்களை கொண்டு வந்தார். பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதிய சட்டங்கள் மிக வேகமாக செயற்படுத்தப்பட்டதுடன் இவ்வருட ஆரம்பத்தில் கைதுகள் ஆரம்பிக்கப்பட்டன.

மக்கள் ஆணைக்கு எதிரான சவால்

இம்முறை நடந்து முடிந்த மலேசிய தேர்தல் மிக முக்கியமானதாக அமைந்தது. பொது எதிர்க்கட்சியை சிறந்த முறையில் ஒழுங்கமைக்க முடியாத நிலையிலேயே ஆரம்பத்தில் இருந்தது. அரசியல் விமர்சகர்களினதும் சாதாரண பொதுமக்களில் பெரும்பாலானோரினதும் எதிர்ப்பு பெரியளவாக இருந்த போதிலும் பலனளிக்க வேண்டுமாயின் அது மிக உறுதியான அமைப்பொன்று தேவையாக இருந்தது. எதிர்க்கட்சிக்கு தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுப்பதற்கு மஹதீர் மொஹமட் இப்பின்னணியிலேயே முன்வந்தார்.

மஹதீரின் வருகையை அடுத்து முன்னொருபோதும் காணாத அளவு தேர்தல் செயற்பாடுகள் ஊக்கம் பெற்றதுடன் புத்தாக்கமும் படைப்பாக்கமும் மிக்க தேர்தல் பிரசார உத்திகள் கையாளப்பட்டன.

கடந்த 09 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் உலகின் மிகவும் வயது முதிர்ந்த பிரதமராக மஹதீர் முகமட் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டமை மக்களின் இவ்வாறான அர்ப்பணிப்பினாலேயே ஆகும். மக்களின் இந்த அர்ப்பணிப்பினால் அமையப்பெற்ற அரசாங்கங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் சவால்களைப்பற்றி இலங்கையர்களாகிய நாம் நன்கு அறிவோம்.

வரலாற்று முக்கியத்துமிக்க சந்திப்பு

2016 டிசம்பர் 16 ஆம் திகதி மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் இன்டகொன்டினன்டல் ஹோட்டலில் வைத்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மஹதீர் மொஹமடுக்கும் இடையிலான சந்திப்பு மிக முக்கியமானதாகும். உண்மையில் அச்சமயம் அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த ஒரு தலைவரை சந்திப்பதற்கு மஹதீருக்கு எந்த வாய்ப்பையும் வழங்க அன்றைய ஆட்சி விரும்பவில்லை. இத்தகைய பின்னணியிலேயே மைத்திரிபால சிறிசேன மஹதீரை சந்தித்தார். இச்சந்திப்பைப் பற்றி இலங்கையின் பெரும்பாலான உத்தியோகத்தர்கள் அறிந்திருக்கவில்லை. அந்த சந்திப்புக்காக ஜனாதிபதி தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற மஹதீர் மொஹமட், ஹோட்டலின் பிரதான நுழைவாயிலை தவிர்த்து, வேறு வழியாகவே உள் நுழைந்தார்.

இச் சந்திப்பின்போது மலேசியாவை அபிவிருத்தி செய்வதற்காக மஹதீர் முன்னெடுத்த செயன்முறை இலங்கைக்கும் மிகவும் பொருந்துவதாக கூறினார். நாட்டின் கடனைக் கையாளுவது மிக முக்கியமானதாகும் எனவும் எவர் எவ்வாறான கடனை பெற்றுக்கொடுக்க முன்வந்த போதிலும் அவை தமது நாட்டுக்கு பொருந்தாத வகையில் இருக்குமாயின் அவற்றை நிராகரித்துவிட வேண்டும் எனவும் மஹதீர் மொஹமட் கூறினார். குறிப்பாக மலேசிய பொருளாதார நெருக்கடியின்போது தாம் உலக வங்கியின் கடனை நிராகரித்த விதத்தை ஞாபகப்படுத்திய மஹதீர் மொஹமட் தனது 90ஆவது வயதிலும் தாம் மிகுந்த அறிவுபூர்வமாகவும் ஞாபக சக்தியுடனும் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இலங்கையில் கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் நாட்டுக்கு சுமையாக அமையுமென்பதை எடுத்துக் காட்டினார். அதனை அவரது வார்த்தைகளிலேயே கூறுவதாக இருப்பின் “அவர்கள் கடனைத் தருவார்கள், கையாட்களையும் கொண்டுவருவார்கள் வேலையையும் செய்வார்கள் ஆயினும் திரும்பிச் செல்லமாட்டார்கள்” என்பது மஹதீரின் வாக்காக இருந்தது.

இச்சந்திப்பின்போது எதிர்காலத்தில் மஹதீர் மொஹமட்டை இலங்கைக்கு வரும்படி தாம் அழைக்கவிருப்பதாக அன்று கூறியிருந்தார்.

மேலும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தைப் பற்றியும் மஹதீர் கேட்டறிந்தார். அன்று ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் வெற்றிகண்டு இலங்கை கற்ற பாடத்திலிருந்து பாடம் கற்ற ஒரு வேலைத்திட்டத்தினையே நாம் இன்று மலேசியாவில் காண்கின்றோம். இலங்கையிலும் தேர்தல் தினத்திற்கு மறுநாள் இரவில் வெளியே எடுத்துச் செல்லப்பட்ட பெருமளவு சொத்துக்கள் பற்றிய கதைகள் ஏராளமாகவே இருந்து வருகின்றன. ஆயினும் அதையடிப்படையாகக் கொண்டு அச்சமயம் எவரையும் கைது செய்யாத எமது தவறினை இன்று மலேசியா திருத்தியிருக்கின்றது. ஊழல்மிகு ஆட்சியாளர்கள் திருட்டுப் பொருட்களுடன் கையும் களவுமாக பிடிபடுவதற்கு காரணம் அதுவேயாகும்.

மலேசியாவின் அனுபவம் எமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம், மக்கள் தொடர்ந்தும் இலஞ்ச ஊழல் மற்றும் வீண்விரையத்திற்கு எதிராக செயற்பட வேண்டுமென்ற கொள்கையுடன் கைகோர்த்திருக்கிறார்கள் என்பதேயாகும். இலங்கையிலும் மலேசியாவிலும் தமது அரசியல் எதிரிகளை அழிப்பது மற்றும் சட்டத்தை கையிலெடுப்பது ஆகியனவற்றையே வெற்றியாகக் கருதிய யுகம் முடிவுக்கு வந்திருக்கின்றது. ஆயினும் இந்த இரு நாடுகளும் முகம் கொடுத்திருக்கும் சவால்கள் ஒன்றேயாகும்.

ஹரீந்திர பீ தசநாயக்க

தமிழில்: ரவி ரத்னவேல்

Comments