இ.தொ.காவை பலப்படுத்தினால்தான் மலையகத்திற்கு விமோசனம் | தினகரன் வாரமஞ்சரி

இ.தொ.காவை பலப்படுத்தினால்தான் மலையகத்திற்கு விமோசனம்

எம்.சிவகுமார்
எம்.சிவகுமார்

பன்வில பிரதேச சபை உபதலைவரான

எம். சிவக்குமார் தனது ஆரம்பக்கல்வியை

ஆகலை தமிழ் வித்தியாலயம் மற்றும்

இரத்மலானை இந்துக் கல்லூரியிலும்,

உயர் கல்வியை வத்தேகம பாரதி தமிழ்

வித்தியாலயத்திலும் கற்று பின்னர் கொட்டகலை

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர்

பயிற்சியை முடித்தவர். தற்போது நக்கிள்ஸ் தமிழ்

வித்தியாலய அதிபராக இருக்கிறார். கடந்த

உள்ளூராட்சித் தேர்தலில் பன்வில பிரதேச சபைத்

தேர்தலில் இ.தொ.காவின் சார்பில் போட்டியிட்டு

வெற்றிபெற்றவர். அவர்

தினகரன் வாரமஞ்சரிக்கு

வழங்கிய நேர்காணல்

இங்கு தொகுத்து தரப்படுகிறது.

 

நேர்கண்டவர் :

நாவலப்பிட்டி

டி. வசந்தகுமார்

கேள்வி : எவ்வாறு அரசியலுக்கு பிரவேசித்தீர்கள்?

பதில் : பொதுச் சேவையில் அதிக ஈடுபாடு கொண்ட நான், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இ.தொ.காவில் இணைந்து இப்பகுதி மக்களுக்காக பல்வேறு சேவைகளை ஆற்றி வருகிறேன். இதனால் அரசியல் ரீதியில் செயற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. இந்நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளிவந்ததும் இப்பகுதி மக்கள் தேர்தலில் போட்டியிடுமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று களமிறங்கினேன். இ.தொ.காவின் தலைமை போட்டியிடுவதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியது. கண்டி மாவட்டத்தின் பன்வில பிரதேச சபைத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றேன். தவளந் தன்னை வெற்றிபெற்ற என்னுடன் மேலும் இருவர் விகிதாசார அடிப்படையில் பன்வில பிரதேச சபை உறுப்பினர்களாகத் தெரிவாகியுள்ளனர். இதன் மூலம் பன்வில பிரதேச மக்களுக்கு சேவையாற்ற கிடைத்தமையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தோட்டத் தொழிலாளர்களின் மகனாகப் பிறந்து இந்த மக்களுடனேயே வாழ்ந்து பழக்கப்பட்டுள்ளதால் அவர்களின் நிலைமைகளை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறேன்.

கேள்வி : உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டபோது எவ்வாறான வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றீர்கள்?

பதில் : எமது மக்களின் அடிப்படைத் தேவைகள் என்னவென்பதை நன்கு அறிந்தவன் என்றவகையில் நான் வெற்றி பெற்றால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உதவியுடன் அபிவிருத்தி வேலைகளை முன்னின்று செய்வேன் என உறுதியளித்திருந்தேன். அதுபோல் அந்த மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளேன். இனி வரும் காலங்களில் பன்விலை பிரதேச சபையில் தொழிலாளர்களுக்காக குரல்கொடுப்பேன்.

கேள்வி : நீங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை இந்த ஐந்து வருட காலத்திற்குள் செய்து முடிப்பீர்களா?

பதில் : நிச்சயமாக! எனக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் மீது முழு நம்பிக்கையிருக்கிறது. மலையக மக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்றக்கூடிய வல்லமை இ.தொ.காவிற்கு இருக்கிறது. பன்வில பிரதேச சபையின் ஊடாக இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அது மட்டுமல்லாமல் மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சர் ரமேஷ் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினரும் சபாநாயகருமான மதியுகராஜா ஆகியோர் எமது பிரதேச மக்களுக்கு சிறந்த சேவைகளைச் செய்து வருகிறார்கள். தொடர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கேள்வி : பன்விலை பகுதி மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

பதில் : மக்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கும் அரசியல் ரீதியான சலுகைகளை பெற்றுக்கொள்வதற்குமே எதிர்பார்க்கிறார்கள். ஏனைய இனத்தவர்கள் அரசியல் ரீதியாக என்ன சலுகைகளையும், உரிமைகளையும் பெறுகிறார்களோ அவையனைத்தும் எமது சமூகத்தவருக்கும் அரசியல் ரீதியாக கிடைக்க வேண்டுமென்பதே.

கேள்வி : உள்ளூராட்சித் தேர்தல் மூலம் நீங்கள் கற்றுக்கொண்டதென்ன?

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை காலமும் பிரதேசசபைத் தேர்தலில் விருப்பு வாக்குகளின் மூலமே அந்தந்த பிரதேச சபைக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

மக்கள் யாருக்கு வாக்களித்தாலும் அவர் வெற்றிபெற்ற பின் அவர் மூலம் சேவையை பெற்றுக் கொள்வது கஷ்டமாகும். பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுபவர் கட்சி, அரசியல் பேதமின்றி அனைத்து தரப்பினருக்கும் சேவையாற்ற வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் புதிய உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வட்டார அடிப்படையில் பிரநிதிகளை தெரிவு செய்யும் முறை அறிமுகமானது. இப்புதிய முறைப்படி வாக்காளர்களுக்கு எந்த வேட்பாளர்கள் நமது வட்டாரத்தில் போட்டியிடுகிறார்கள். யாருக்கு நாம் வாக்களிக்க வேண்டும். அவ் வட்டாரத்திலிருந்து வெற்றி பெறும் வேட்பாளர் நிச்சயமாக அவ் வட்டார மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தேர்தலில் மக்கள் அவரை நிராகரித்துவிடுவர். இந்தத் தேர்தல் முறையானது தோல்வியடைந்தவரை உறுப்பினராக்கியிருக்கிறது. வெற்றிபெற்றவருக்கு எதுவும் இல்லாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுபான்மையைப் பொறுத்தவரையில் ஒருபுறம் சாதகமாகவும் இன்னொரு புறம் பாதகமாகவும் அமைந்துள்ளது.

கேள்வி : பன்வில பிரதேச சபை உறுப்பினராகவும் பாடசாலை அதிபராகவும் இருந்துகொண்டு எவ்வாறு மக்களுக்கு சேவையாற்ற முடிகிறது?

பதில் : கடந்த காலங்களில் மக்களுக்கு ஆற்றிய பணிகளுடன் ஒப்பிடும்போது பெரிய சிரமமாக இருக்காது. பன்வில பிரதேச சபைக்குட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகள் இருக்கின்றன.

இவற்றில் பெருந்தோட்டங்களும் உள்ளடங்குகின்றன. 63 வீதம் தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பதுடன் கண்டி மாவட்டத்தில் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள ஒரேயொரு பிரதேச சபை பன்வில பிரதேச சபையாகும்.

கல்வியைப் பொறுத்தவரையில் அதிபராக இருந்து பாடசாலையை நல்லதொரு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறேன். மேலும் கண்டி மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெறக்கூடிய வகையில் பாடசாலையை அபிவிருத்தி செய்து வருகிறேன். எமது பாடசாலையில் தரம் 11 வரை இருக்கிறது.

3 வருடங்களுக்கு முன்னர் 222 மாணவர்களே இருந்தனர். தற்போது 384 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். பெறுபேறுகளின் அடிப்படையில் முதலிடத்தில் பாடசாலையை கொண்டு வருவதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறேன். கடந்த மூன்றாண்டுகளில் 80 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தெரிவாகியதுடன் பல்கலைக்கழகங்களிலும் கல்வியைத் தொடர்வது பெருமையாக இருக்கிறது.

மத்திய மாகாண கல்வியமைச்சின் உதவியுடன் 2 கோடி ரூபா செலவில் இரண்டு மாடி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. பாடசாலை செயற்பாடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்றின் உதவியுடன் மாணவர்களுக்கு கணனி அறையை நிர்மாணிப்பதுடன் முதலாம் இரண்டாம் தர மாணவர்களுக்கென நவீன வசதிகள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் ஏனைய வகுப்பறைகளையும் மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுற்றுப்புறச் சூழலும் மாணவர்கள் அனுபவிப்பதற்கேற்ற வகையில் மாற்றியமைக்கப்படும். அதேபோல் பிரதேச சபை உப தலைவராக இருந்து எமது மக்களின் வாழ்விலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்.

கேள்வி : எதிர்காலத் திட்டங்கள் என்ன?

பதில் : பன்வில பிரதேச சபையூடாக வீதி உட்கட்டமைப்பு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு மத்திய மாகாண சபையுடன் இணைந்து வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளேன். படித்த இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. பிரதேச அபிவிருத்தியில் இ.தொ.காவிற்கு பெரிய பங்கிருக்கிறது. கடந்தகாலங்களில் பன்வில பகுதி பெருந்தோட்ட மக்களுக்கு இ.தொ.கா ஆற்றிய சேவைகளை அந்த மக்கள் மறந்துவிடவில்லை.

கேள்வி : கண்டி மாவட்டத்தில் பெரும்பாலான தோட்டங்கள் அரச நிறுவனங்களின் கீழ் உரிய பராமரிப்பு இல்லாமல் மூடப்படும் அபாயம் நிலவுவதாகவும் தோட்டக் காணிகளை தனியாருக்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறதே!

பதில் : கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை ஆகிய அரச நிறுவனங்களின் கீழ் பெரும்பாலான தோட்டங்கள் இயங்கி வருகின்றன. உடபுசல்லாவை பகுதியில் சில தோட்டங்கள் பெருந்தோட்டக் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. தேயிலைத் தோட்டங்கள் உரிய பராமரிப்பில்லாமல் காடுகளாக மாறி வருகின்றன. புதிதாக தேயிலை பயிரிடப்படுவதில்லை. வருமானத்தை மட்டுமே நோக்காகக் கொண்டு செயற்படும் இந்நிறுவனங்கள் தொழிலாளர்களின் வேலை நாட்களை குறைத்து அவர்களை மேலும் கஷ்டத்திற்கு உள்ளாக்கியுள்ளன. இதனால் அவர்கள் வேலைதேடி வெளியிடங்களை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு தொழிலாளர்கள் வெளியேறினால் எதிர்காலத்தில் அவர்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.

காலங்காலமாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணியை பகிர்ந்தளிப்பதன் மூலம் அவர்கள் வெளியேறுவதை தடுப்பதுடன் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் நக்கிள்ஸ் தோட்டக் காணிகளை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் வீதம் 108 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார். அதுபோன்று இ.தொ.காவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானைப் பலப்படுத்துவதன் மூலம் தோட்டக்காணிகளை தொழிலாளர்களுக்கே சொந்தமாக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

இ.தொ.கா தலைவரும் அமைச்சருமான காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான் என்ற தனிமனிதரை 1977ஆம் ஆண்டுதேர்தலில் வெற்றிபெற்றச் செய்து அமைச்சராக்கினர் பெருந்தோட்ட மக்கள். அவர் கட்சி, தொழிற்சங்க பேதமின்றி மக்களுக்கு சேவை செய்த பெருந்தலைவர். இன்றும் அவர் பேசப்படுவதற்கு காரணம் மக்கள் மத்தியிலிருந்த ஒற்றுமையேயாகும். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து இ.தொ.கா வை பலப்படுத்துவதன் மூலம் நமது உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

சாராயத்திற்கும் சாப்பாட்டுக்கும், பணத்திற்கும் அடிபணிந்தோமானால் நமது எதிர்காலம் இருள் சூழ்ந்ததாகவே இருக்கும்.

Comments