மூதாதையர்களின் சுகாதார வாழ்வு | தினகரன் வாரமஞ்சரி

மூதாதையர்களின் சுகாதார வாழ்வு

ஜே. அந்தனி

இன்றைய அவசர உலகில் மக்கள் தம் சுகாதாரத்தைப் பற்றி அக்கறை கெள்வதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமில்லை. என்ன உண்கிறோம்? எங்கே உண்கிறோம்? எப்படி உண்கிறோம்? என்ற விவஸ்தையே கிடையாது. அதனால் நாமும்,நமது பிள்ளைகளும் பலவித நோய்களால் பீடிக்கப்பட்டு சில சந்தர்ப்பங்களில் மரணத்தைத் தழுவவும் காரணமாகின்றது.

நமது முன்னோர்கள் அவ்வாறு வாழவில்லை. சுகாதாரம் பேணி நீண்ட காலம் உயிர் வாழ்ந்தனர். அவர்கள் என்ன உணவு எப்போது, எப்படி புசிக்க வேண்டுமென்ற நியதியை ஏற்படுத்தினர். உதாரணமாக, இரவில் புசிக்க உகந்ததாய் புதிய அன்னம், பால், நெய், புதிய மாமிசம், சுடுநீர் போன்றவை ஆயுளை விருத்தியாக்குமென்றனர். நாட் கடந்த மாமிசம், தயிர் போன்றவை இரவல் கூடாதென்றனர். அவரைப் பிஞ்சு, அத்திக்காய் பிஞ்சு, பசுப் பால், முருங்கைப் பிஞ்சு, துவரம் பருப்பு போன்றவை இரவில் உண்ணக்கூடிய தென்றனர். அறைக்கீரை மட்டுமே இரவிலும் உண்ணலாம். பகலிலும் உண்ணலாமென்று கண்டறிந்தனர்.

கபநோய், காய்ச்சல், சந்தி முதலிய நோய்களுக்கு அறைக்கீரை அல்லது அறுகீரை சிறந்த மருந்தெனக் கண்டறியந்தனர். மற்றைய கீரை வகைகளும், கிழக்கு, காய் போன்றவை இரவில் உண்ணத்தக்கதல்ல என்றனர்.

துவரம் பருப்பை நீரில் வேகவைத்துக் கறி, குழம்பு, ரசங்களில் சேர்த்துக்கொண்டால் வாய்வை விருத்தி யாக்குமென்றும், வறுத்தரைத்த துவையல் நோயாளிகளுக்குப் பத்திய மாகுமென்றும் கூறினர். இரவில் சுடுநீரேயன்றி குளிர்ந்த நீர் அருந்தலாகாது என்றனர்.

இரவில் குளிக்க நேர்ந்தால் வெந்நீரில் குளிக்க வேண்டுமென்றும், குளிர்ந்த நீரில் குளிப்பதால் வாத கபங்கள் அதிகரித்து அஜீரணத்தையுண்டாக்கி பல வித நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றனர். எந்தத் தயிரையும் இரவில் அருந்தக் கூடாதாம்.

அருந்தினால் ஆயுளை அபகரிக்குமாம். பகலில் பாலருந்துவதும், இரவில் தயிர் அருந்துவதும் சமமான கெடுதியுள்ளனவாம். பால் இல்லவிட்டால் இரவில் சுடுநீரே அருந்தவேண்டும். பாலையாவது, நீரையாவது அண்ணாந்து குடிப்பதும் குனிந்து குடிப்பதும் கூடாதாம். அண்ணாந்து குடித்தால் காது மந்தமாம். குனிந்து குடித்தால் காசநோய் உண்டாம்.

நமது வீடுகளில் ஒருவர் குடித்த கோப்பையில் மற்றவர் குடிப்பது வழக்கம். இது பாசம், அன்பு என்ற பண்புகளால் ஏற்பட்ட பழக்கமாயிருக்கலாம்.

ஆனால் இந்தப் பழக்கம் சுகாதாரத்துக்கு ஏற்றதல்ல. நமது முன்னோர்கள் இதுபோன்ற பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒருவர் குடிக்கும் பாத்திரத்தை அவரே உபயோகிக்க வேண்டும். மற்றவர் அருந்தினால் நோய்க்கிருமிகள் பரவிட வாய்ப்புண்டு. எமது முன்னோர் பிறர் குடித்த பாத்திரத்தைத் தொடுவதுமில்லை.

எமது முன்னோர் பால் அருந்தும்போது அதில் கொஞ்சும் சர்க்கரை சேர்த்துக் கொள்வார்கள். அது பாலிலுள்ள ஒருவித வாயுவைப் போக்குமென்றனர். பாலைத் தனியாக அருந்துவதால் நீரிழிவு போன்ற வியாதிகளுண்டாவதால் அன்னத்துடன் கலந்து சாப்பிடுவதே மேல் என்றும் பாலண்ணம் உண்ணும்போது புளி சேர்த்துக்கொள்ளக் கூடாது என்றனர். புளி சேர்த்தால் பாலுடனே உறைந்து திரிந்து பலநோய்களை உண்டாக்குமென்றனர். உண்டபின் குளிர்ந்த நீர் அருந்தக் கூடாதென்றும் வெந்நீரே அருந்தவேண்டுமென்றனர். சாப்பிட்டதும் நித்திரை கொள்ளக் கூடாதென்றனர்.

படுக்கை

ஒருவர் படுக்கையை மற்றவர் உபயோகிக்கக் கூடாது.

படுக்கும்போது கைகால்களை நன்கு கழுவிக் கொண்டு படுக்கவேண்டும். கால்களில் புழுதியிருக்கக் கூடாது. அழுக்கு வியர்வை வெளிப்படுதலைத் தடுத்துவிடும். அதனால் கீல்வாதம் உண்டாகலாம். படுக்கும்போது கிழக்கு அல்லது தெற்குத் திசையில் தலைவைத்துப் படுக்கவேண்டும். வடக்கிலும், மேற்கிலும் தலைவைத்துப் படுக்கக்கூடாதாம். காரணம், வடதிசையிலிருந்து தென் திசைநோக்கி மிக்க வேகமாய் செல்லும் பூமியின் சக்தி மூளையின் ஆற்றலை அபகரித்துவிடுமாம். மேலும், படுக்கும்போது இடதுபுறம் கீழிருக்கும்படி படுக்கவேண்டும். வலதுபுறத்தை கீழேவைத்துப் படுப்பதால் அஜீர்ணம் ஏற்பட வாய்ப்புள்ளதாம். மேலும், இடது புறத்திலேயே இதயம், பித்தாசயம், பாசாசபம், ஆமாசயம் இருக்கின்றன.

இடது புறத்தில படுத்தால் அடியில் ஆமாசயமும், மேலே பித்தாசயமும் உள்ளதால் பித்தாசயம் உண்ட உணவை சீக்கிரம் பாகம் செய்யும். வலதுபுறம் படுத்தால் மேலே ஆமாசயமும், கீழே பித்தாசயமும் நிற்கும். அதனால் உண்ட உணவு ஜீரணமாகாது.

தலையணை பற்றி கூட எம் முன்னோர் கூறியுள்ளனர். தலையணை இலவம் பஞ்சிட்டுத் தைக்கப்பட வேண்டும். கழுத்துக்கும், தோளுக்கும் மத்தியிலுள்ள உயரமுள்ளதாயும், நீளமுள்ளதாயும் இருக்கவேண்டுமாம். அவ்வாறு தூங்கினால் பாதம் முதல் சிரசுவரையுள்ள எல்லா நம்புகளும் சமனாகவும், பிசகாமலுமிருக்குமாம். சிரசு சம்பந்தப்பட்ட நோய்களும் நீங்குமாம். அவ்வாறு நித்திரை செய்வதினால் பஞ்சேந்திரியங்களும் சுகமுறும்; மனம் உற்சாகமடையும்; சரீரக்களை தீரும்; ஆயுள் விருத்தியாகும். நித்திரை செய்வதற்குமுன் தத்தம் இஷ்ட தெய்வங்களுக்கு தியானம் செய்துகொள்வது மேலாகும்.

Comments