பெருந்தோட்டங்களுக்குள் பிரதேச சபைகள் என்ன செய்யப்போகின்றன? | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்டங்களுக்குள் பிரதேச சபைகள் என்ன செய்யப்போகின்றன?

சி.கே. முருகேசு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் கூச்சல் – குழப்பங்கள் கைகலப்புகளுக்கு மத்தியில் பிரதேச சபைகள், நகர சபைகள், மாநகர சபைகளின் முதல் அமர்வுகள் தொடங்கி, அவற்றின் பணிகளை ஆரம்பித்துள்ளன. நுவரெலியா, பதுளை மாவட்டங்களுக்கு வெளியிலும் ஏராளமான பிரதேச சபை உறுப்பினர்கள் பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதிகளாக தெரிவாகியுள்ளனர்.

பட்டின சபைகளையும், கிராம சபைகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பிரதேச சபைகள் 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்டன. அதற்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகம் குடியுரிமையோடும் வாக்களிக்க தகுதியற்றோராயிருந்தனர். தோட்டங்களில் மாதாந்த வேதனம் பெறும் உத்தியோகத்தர்களும், தோட்ட முகாமையாளர்களும் கிராமசபை தேர்தலில் வாக்களிக்கும்போது நாட்சம்பளம் பெறுவோர் அவ்வுரிமையை இழந்தவர்களாயிருந்தனர். கணவன் மாதச் சம்பளம் பெறும் காவலாளியாக இருந்து மனைவி மலையேறி தொழில் புரியும் நாட்கூலி தொழிலாளியாயிருப்பின் கணவனுக்கு மாத்திரம் கிராமசபைத் தேர்தலில் பங்கு கொள்ளும் உரிமை இருந்தது.

1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத்தேர்தல் 1991ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தபோது கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட அனைத்து வாக்காளர்களும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் வாக்களிப் போராயினர். இஃது நமது அரசியல் தலைவர்கள் போராடி பெற்றுக்கொண்ட வெற்றியன்று. இயல்பாகவே இந்நிலை உருவாகியது.

கிராமசபைத் தேர்தல்களில் பெருந்தோட்ட மக்களும் வாக்களிக்கும் வாய்ப்பு வேண்டுமென ஓரிரு தொழிற்சங்கங்கள் நீண்ட காலத்திற்கு முன்னர் அறிக்கைகள் விட்ட போதும் அரசியல் பிரவேசம் கிடைத்த பின்னரும் எமது தலைமைகள் இவ்விடயத்தில் கரிசனை எடுத்துக் கொள்ளவில்லை.

1991ம் ஆண்டு பெருந்தொகையான பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதிகள் பிரதேச சபைகளுக்கு தெரிவாகி புதியதோர் உலகம் படைப்போமென மார்தட்டினர். ‘மலையக புதிய கிராமங்கள்’ இதன் மூலம் மலரப் போவதாக மக்கள் எண்ணினர். எனினும் 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைகளின் நிதி ஒதுக்கீடுகள் பெருந்தோட்டங்களுக்குள்ளான அபிவிருத்திப் பணிகளுக்கு கிட்டாத நிலை தோன்றியது. இச்சட்டத்தின் எந்த ஒரு பந்தியிலும் பெருந்தோட்டங்களுக்குள் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளக் கூடாதென குறிப்பிடப்படாவிட்டாலும் ‘பிரதேச சபையினால் பெருந்தோட்டங்களில் வேலை செய்ய முடியாது’ என்ற கூற்று சகல தரப்பினராலும் பேசப்பட்டு அதுவே நடைமுறையாயிற்று.

எனினும், பிரதேச சபைகளும், மாகாண சபைகளும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இயங்குபவை. மாகாண சபைகள் இந்த விவகாரத்தில் மாற்றுவழிகளைக் கையாண்டிருக்கலாம். அவை இது பற்றி எதுவும் மேற்கொள்ளவில்லை.

சப்ரகமுவ மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சராக இருந்த தனன்சூரிய மற்றும் செயலாளர் கொடித்துவக்கு ஆகியோரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கிணங்க எட்டியாந்தோட்டை பிரதேச சபையில் தலைவருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் அந்ததந்த தோட்ட நிர்வாகங்களின் அனுமதியுடன் இப்பிரதேச சபை வட்டாரத்தில் பெருந்தோட்டங்களுக்குள்ளும் பிரதேச சபை நிதியைப் பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை சட்டவிரோதமாக பார்க்கப்படவில்லை. மாகாண சபைகளுக்கும் பிரதேச சபைகளுக்கும் வேட்பாளர் பட்டியலிடும் போது தகுதியானவர்களை மலையக அரசியல் கட்சிகள் தெரிவு செய்யாமையே இதற்கான காரணமாக கருதலாம்.

பிரதேச சபை தனது நிதியை அச்சபைக்குச் சொந்தமான காணியிலேயே பிரயோகிக்க முடியுமென இருப்பதால் பெருந்தோட்ட காணிகள் பிரதேச சபைக்குச் சொந்தமானவையல்ல என்பதால் தோட்டங்களில் மலையக உறுப்பினர்கள் பணியாற்றாமல் இருந்துவிட்டனர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான காணிகளில் மாத்திரமெனில் 1991ம் ஆண்டு முதல் பிரதேச சபைகள் மேற்கொண்ட பணிகள் அனைத்தும் பிரதேச சபையின் அசையாச் சொத்தாகிய நிலங்களில் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டனவா? நம்மவர்கள் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர ஆக்கபூர்வ பணியில் ஈடுபடவில்லை.

சரி, இம்முறை நடைபெற்ற தேர்தலின் போது மேடைகளில் இரு விடயங்கள் ஒலித்தன. ஒன்று நுவரெலியா மாவட்டத்திற்கு மேலும் பல பிரதேச சபைகள் கிடைத்தமை. இரண்டாவது பெருந்தோட்டங்களுக்குள் பிரதேச சபைகள் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதாகும். புதிய சபைகள் அமைக்கப்பட்டு விட்டன. இரண்டாவது விடயமாகிய பெருந்தோட்ட அபிவிருத்தி பற்றி இதுவரையிலும் சரியான விளக்கங்கள் இல்லை. பிரதேச சபைச் சட்டத்தில் எந்த இடத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதென விளக்கமாக தெரிவித்தால் நல்லது.

வாக்களித்த பெருந்தோட்ட மக்கள் இப்போது தமது உறுப்பினர்கள் மூலமாக எதையெதையோ நிறைவேற்றிக் கொள்ளலாதென நினைக்கிறார்கள். பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சம்பந்தமில்லாத சமுர்த்தி நிவாரணம் தொடர்பாகவும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் முதல் சாதாரண தொழிற்சங்க பிரதிநிதிவரையிலான பணிகளை தமது சமூகத்துக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பிரதேச சபையினரிடம் இம் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

‘மலையக புதிய கிராமங்கள்’ என்னும் பெயரில் பெருந்தோட்டங்கள் பரிணமிப்பதற்கான பெரும்பங்கு பிரதேச சபைகளைச் சார்ந்துள்ளது. ஏனெனில் மனித வாழ்க்கையின் பிறப்புமுதல் இறப்புவரையிலான சகல விடயங்களும் உள்ளூராட்சி மன்றங்களுடன் தொடர்புபட்டு இருப்பதனால் பிரதேசசபையினால் மேற்கொள்ளப்படும் கர்ப்பிணித்தாய்மார்களின் சுகாதார சேவைகள், குழந்தைகளுக்கான முன்பள்ளிச் சேவை மற்றும் கிராம வைத்திய நிலைய சேவைகள் என்பனவும் சிறுவர்களுக்கான சிறுவர் (விளையாட்டு) பூங்காக்கள், இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் என்பனவும் பிரதேச சபைகளின் வருடாந்த கட்டளைக்குரியவை.

குடிநீர் வசதிகள், குளிப்பிட வசதிகள், கழிப்பிட வசதிகள், கழிவு முகாமைத்துவம், பாதைகள், படிக்கட்டுகள், அனர்த்த முகாமைத்துவம் என பிரதேச சபை பல்வகை மக்கள் தேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

நிரந்தர மற்றும் நடமாடும் வியாபாரங்களுக்கான அனுமதிப்பத்திரம், சுற்றாடல் பாதுகாப்பு எனவும் வாசிகசாலைகளும் அவற்றினூடாக கல்வி, கலை, இலக்கிய அபிவிருத்திப்பணிகளும் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் மயானபூமி தேவைகளும் பிரதேச சபைகளையே சார்ந்துள்ளன. வருடாந்தம் பிரதேச சபைகளின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் மாகாணசபை உறுப்பினர்களினதும் மாகாண அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களினதும் நிதி ஒதுக்கீடுகளின் மூலம் தமது மக்களின் தேவையறிந்தும்,

அபிவிருத்தியுடனான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும் பிரதேச சபைகளும், உறுப்பினர்களும் முன்வர வேண்டும்.

வாசிகசாலைகள் பெருந்தோட்டங்களுக்குள் அமையப்பெறல் இலகுவானதல்லவெனில் பக்கத்து நகர வாசிகசாலைக்கு ஆண்டுதோறும் புதிய நூல்களைக் கொள்வனவு செய்வதற்கு ஆவண செய்தலும் வாசிகசாலையின் உறுப்பினர் தொகையை அதிகரிக்கச் செய்தலும் இவர்களால் முடியும். வாசகர் வட்டங்கள் மூலமாக வருடாவருடம் வாசிப்பு மாத வைபவங்களை பிரதேச சபை மூலமாகவும் நலன்விரும்பிகளின் ஒத்துழைப்புடனும் மேற்கொண்டு கருத்தரங்குகள், கதை – கவிதை – கட்டுரை – சித்திரப் போட்டிகளை நடத்தி தமது வட்டார சிறுவர் முதல் பெரியவர் வரையிலான அனைவர் மத்தியிலும் நூலக தேவைகளை உணர்த்துவதும் கலை – இலக்கிய – கல்வி வளர்ச்சிக்காக பிரதேச சபையை பயன்படுத்துவதும் இலகுவாக மேற்கொள்ளக் கூடிய பணிகளாகும்.

கிராமங்களிலும் நகரங்களிலும் காணப்படும் சிறுவர் பூங்காக்களையொத்த சிறுவர் அபிவருத்தி மையங்களை பெருந்தோட்டங்களுக்குள் உருவாக்குதல் காலத்தின் தேவையாகும்.

கிராமங்கள் தோறும் பிரதேச சபைகளின் முன்பள்ளிகள் உள்ளன. பிரதேச சபையினால் வேதனம் வழங்கி இங்கு முன்பள்ளி ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு முதலான மாவட்டங்களில் பெருந்தோட்ட ‘சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்’ எனப்படும் பிள்ளை மடுவங்களில் தமிழ் தெரியாத தாதியர் சிங்களம் அறியாத குழந்தைகளோடு ஆற்றுகின்ற குருட்டுத்தனமானதும் செவிட்டுத் தனமானதுமான சேவைகளை தோட்ட நிர்வாகங்களே வழிநடத்துகின்றன. இச்சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை ஏன் பிரதேச சபைகளின் முன்பள்ளிகளாக மாற்றக்கூடாது. ‘யூனிசெப்’ சர்வதேச நிதியத்தின் உதவியுடன் நிகழ்த்தப்படும் தொழில்தரு நிறுவனமாகிய இதற்கென கிடைக்கும் சர்வதேச உதவியை பிரதேச சபைக்கே வழங்கி தகுதியுடைய தாய்மொழி தாதியர்களை நியமிக்க புதிய பிரதேச சபைகள் வழி வகுக்கவேண்டும்.

பெருந்தோட்டங்களின் முக்கியமான இடங்களில் தெரு விளக்குகளை பொருத்துதல் பிரதேச சபையின் கடமையாகக் கொள்ளல் வேண்டும். இதற்கான மின்சாரக் கட்டணம் பிரதேச சபையைச் சார்ந்தது. கிராமங்களிலும் பட்டினங்களிலும் தெருவிளக்கு முகாமைத்துவத்தை உள்ளூராட்சி சபைகளே மேற்கொள்கின்றன.

குடிநீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான குழாய்க் கிணறு முறைகளையும் அமுல்படுத்தவும், மின்னியக்கத்திலான குழாய் நீர்த்திட்டங்களையும், உயர்ந்த பிரதேசங்களிலிருந்து குழாய்வழி நீர் வழங்கல் திட்டங்களையும் தேவைப்படும்போது மனித வள ஒத்தாசையை குடியிருப்பாளர்களிடமிருந்தும், தோட்ட நிருவாகங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சிப்பதும் கையாளப்படவேண்டியவையாகும்.

இறப்பர் மரத் தோப்புகளிலும், தேயிலை மலைகளிலும் இறந்தவர்களை புதைத்துவிட்டு வீடு திரும்பும் பெருந்தோட்ட மக்களின் இறுதிக்கிரியைகள் இனிமேலாவது நகரத்திலும் கிராமத்திலும் நிகழ்வது போன்று அழகிய மயான பூமிகளில், சிறியதாயினும் ஒரு மண்டபத்தில் நிகழ்த்தப்பட பிரதேச சபைகளைத் தூண்ட வேண்டும். அண்மையில் ரூவன்வெல்ல ஸ்டின்போர்ட் தோட்டத்தில் பாம் ஒயில் மரநடுகைக்காக புதைகுழிகளைத் தோண்டி எலும்புக் கூடுகளை காட்சிப்படுத்தியமை போன்ற சம்பவங்கள் இனிமேலும் நிகழாதிருக்க வழி வகுக்க வேண்டும்.

மிகப்பெரியதோர் மாற்றத்தை பெருந்தோட்டத்துறைக்குள் எடுத்துவருவதற்காக பிரதேச சபை உறுப்பினர்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கும் ‘கௌரவ உறுப்பினர்’ என்னும் நாமத்தையும் சமாதான நீதவான் எனும் உயர்ந்த அந்தஸ்தையும் பயன்படுத்த வேண்டும். மேலும் சிகரெட் மது பழக்கங்களில் இருந்து தூர விலகி நிற்கும் நற்பிஜைகளாக விளங்க வேண்டுமென மலையக சமூகமும் இச் சமூகம் சார்ந்த புத்திஜீவிகளும் எதிர்பார்க்கின்றனர். 

Comments