எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோர எந்தக்கட்சிக்கும் தார்மீக உரிமை இல்லை | தினகரன் வாரமஞ்சரி

எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோர எந்தக்கட்சிக்கும் தார்மீக உரிமை இல்லை

விசு கருணாநிதி

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கவோ அல்லது அதற்கான உரிமைக் கோரிக்ைகயை முன்வைக்கவோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தவிர வேறு எந்த ஒரு கட்சிக்கும் தார்மிக உரிமை கிடையாது என்று எதிர்க்கட்சித் தலைவரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

தம்மை எதிர்க்கட்சித் தலைவர் அல்லர் என்றும் ஆளுந்தரப்பின் கொறடாபோன்று செயற்படுகிறவர் என்றும் எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு அமைச்சுப் பதவியை வழங்குமாறு சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துக்குப் பதில் அளித்த அவர். "அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எதிர்பார்த்து விஷமத்தனமான கருத்துகளைத் தெரிவிப்பதாகவும், அவர்களின் கூற்றுக்குப் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

கூட்டு எதிரணியைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாகவே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். அவர்கள் தற்போது அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கிறார்கள். அரசாங்கத்திலும் இருந்துகொண்டு எதிர்க்கட்சியாகவும் செயற்பட முடியாது என்று சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், ஆதலால், அவர்கள் தெரிவிக்கும் பெறுமதியற்ற கருத்துக்குப் பதில் கொடுக்க தேவை தமக்குக் கிடையாது என்றும் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்ைகயில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்காக வாக்களித்தமைக்காகக் கூaட்டு எதிரணியினர் திரு.சம்பந்தன் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ஓர் ஆளுந்தரப்பு உறுப்பினராகச் செயற்படுகிறார் என்று தெரிவித்துள்ள அக்கட்சியினர், சம்பந்தனின் பதவிக்குப் பொறுத்தமானவர்கள் தாமே என்றும் கூறி வருகின்றனர். எனினும், இஃது அரசியல் ரீதியாகச் செல்லாது என்று திரு.சம்பந்தன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தனித்துச் சென்றாலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்துடன் தொடர்ந்திருக்கிறார்கள். எனவே, எந்த நிலையிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதற்கு அவர்களால் முடியவே முடியாது என்ற அரசியல் வியாக்கினத்தை அவர் விளக்கினார்.

Comments