பெண்களின் உரிமைகளை அடுத்த நகர்வுக்கு பயன்படுத்த வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

பெண்களின் உரிமைகளை அடுத்த நகர்வுக்கு பயன்படுத்த வேண்டும்

தமிழில் : வயலட்

கேள்வி: உள்ளூராட்சி மன்றங்களுக்கான 25% பெண்கள் பிரதிநிதித்துவத்தின் ஊடாக எதிர்பார்த்தது என்ன?

 

எமது நாட்டு மக்களுக்கு 1931ம் ஆண்டே சர்வஜன வாக்குரிமை கிடைத்தது. ஆனால் அண்மைக்காலம் வரை உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமல்ல மாகாண சபைகள்,பாராளுமன்றத்தில் கூட பெண்கள் பிரதிநிதித்துவம் பூஜ்ய நிலையிலேயே காணப்பட்டது. ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும் தங்களின் கொள்கைப் பிரகடனத்தில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான காத்திரமான எந்த செயற்பாட்டையும் எடுக்கவில்லை.

அதனால் பல காரணங்களுக்காக இந்நடவடிக்கை தள்ளிப்போனது.நல்லாட்சி அரசு தனது தேர்தல் பிரசார கொள்கைப் பிரகடனத்தில் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள், பாராளுமன்றத்தில் 25வீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம் என தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் முகமாகவே உள்ளூராட்சி மன்றங்களின் 25% பெண்கள் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த சட்டத்திருத்தை மேற்கொண்டது.

 

கேள்வி: கடந்த காலங்களில் மூன்று அரசியல் மன்றங்களையும் பிரதிநிதித்துவம் செய்த பெண்கள் தங்களுடைய பொறுப்புகளை சரியாக நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறதே?

மூன்று மன்றங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் இருந்தது. ஆனால் அது எந்தளவு இருந்தது என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். ஏனென்றால் உள்ளூராட்சி மன்றங்களில் 18வீதமே இருந்தது. அவ்வாறான நிலைமையில் அவர்களால் குரல் எழுப்ப இயலுமா என சிந்திக்க வேண்டும். எல்லா வேலைகளிலும் பெண்களின் குரல்களுக்கு மேலாக ஆண் பிரதிநிதிகளின் குரல்களே ஓங்கி ஒலித்தன. ஆனால் தற்போது ஒப்பீட்டளவில் 25% அதிகரித்துள்ளதால் தற்போது அவர்களால் ஓரளவேனும் செயற்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் 70 வீதமான ஆண் உறுப்பினர்களின் குரலுடனேயே தங்களின் குரல்களை எழுப்ப வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 

கேள்வி: உள்ளூராட்சி தேர்தலில் குறைவான பெண் பிரதிநிதிகளே தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலைமைக்கு என்ன காரணம்?

இது எமது நாட்டில் தொன்று தொட்டு வரும் அரசியல் கலாசாரம் தொடர்பான பிரச்சினையாகும். தெற்காசிய நாடுகளில் ஒன்றான எமது நாட்டிலும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்து நல்ல கருத்துக்கள் நிலவுவதில்லை. இதை நாம் நீண்ட காலமாக உணர்ந்த ஒன்றாகும். இவ்வாறான நிலைமைகளும் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதற்கு தடையாக இருக்கலாம்.

நடைமுறையிலுள்ள நிலைமையை ஆராய்ந்தால் எமது நாட்டில் வீட்டின் பொறுப்புகள் அனைத்தையும் பெண்கள் தான் கவனிக்கிறார்கள். இதனால், ஏற்பட்ட பயம் காரணமாகவும் அவர்களுக்கு வாக்குகளை அழிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இம்முறை அதிகளவு பெண்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிப்பதை காணக்கூடியதாக இருந்தது. 25% பெண்களின் பிரதிநிதித்துவம் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

 

கேள்வி: நகரசபை, உள்ளூராட்சி சபைகளுக்கு தலைவர்களாக பெண் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவது குறைவாக உள்ளதல்லவா?

இந் நாட்டில் முதன் முறையாக கொழும்பு மாநகர சபைக்கு பெண் மேயர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு ஏனைய உள்ளூராட்சி சபை சிலவற்றுக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டத்தின் மூலம் 25% கோட்டா வழங்கப்பட்டிருந்தாலும் எமது நாட்டு அரசியலில் பெண்களுக்கு இன்னும் உரிய இடம் கிடைக்கவில்லை. அதனால் தெரிவுசெய்யப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு தலைமைப் பதவிகள் கிடைக்கும் சந்தர்ப்பம் அரிதாகவே உள்ளது. ஆகவே கட்சிகள் எப்போதும் பெண்களுக்கு பதவிகளை வழங்குவதில் சிரத்தை காட்ட வேண்டும். ஜனநாயகம் மூலம் எதிர்காலத்தில் பெண்களுக்கு உரிய இடம் கிடைக்கும் என எண்ணுகின்றேன். ஏனென்றால் 25% மூலம் நல்ல தலைவிகள் உருவாக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

 

கேள்வி: தேர்தல் நடத்தப்பட்ட 340 உள்ளூராட்சி மன்றங்களிலும் 25% பெண்கள் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளதா?

எமக்கு கிடைத்த தகவல்களின்படி 325 மன்றங்களில் 25% பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. சட்டத்தின் மூலம் 25% பெண்கள் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்ட சிக்கல்கள் ஏற்படும் போது 25% பிரதிநிதித்துவம் இல்லாமற் போகலாம். எத்தனை உள்ளூ. சபைகளில் 25வீதம் பேணப்பட்டுள்ளது என்ற விபரங்கள் இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஏனென்றால் பெண் உறுப்பினர்கள் பற்றிய சரியான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால் பெண்கள் எத்தனை பேர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் தெளிவில்லை.

 

கேள்வி: உள்ளூ. சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட பெண்களின் கடமைகள் எவ்வாறு அமைய வேண்டும்?

தெரிவுசெய்யப்பட்ட பெண்கள் தங்களால் நாட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். ஊழல் மோசடி இல்லாமல் அரசியல் புரிவது எப்படி என்று நாட்டுக்கு எடுத்துக்காட்ட வேண்டும். அப்போதுதான் எதிர்வரும் தேர்தல்களில் பெண் பிரதிநிதிகளை அதிகரிக்கச் செய்ய முடியும். இப்பதவி எச்சந்தர்ப்பத்திலும் இல்லாமல் போகலாம். அதனால் மக்களுக்காக நல்ல சேவையை ஆற்ற வேண்டும். அதற்காக வழிகாட்ட எமது மாகாண சபைகள், உளளூராட்சி அமைச்சு எப்போதும் தயாராகவுள்ளது.

 

கேள்வி: தகுதியற்ற பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதான முறைப்பாடுகள் தொடர்பான உங்கள் கருத்து?

இவ்வாறான முறைப்பாடுகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஆண்களில் எத்தனை பேருக்கு சரியான தகுதி உண்டென்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்படும். இந்த முறைப்பாட்டுக்கு பதிலளிக்க வேண்டுமானால் தெரிவு செய்யப்படும் பெண் பிரதிநிதிகள் நாட்டிற்கு முன் மாதிரியான தூய்மையான அரசியலில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். தெரிவு செய்யப்பட்ட பெண் பிரதிநிதிகள் முன்மாதிரியாக செயற்படுவார்களாயின் எதிர்வரும் தேர்தல்களில் பொது மக்களின் விருப்பத்துடன் அதிகளவு பெண் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியும்.

 

கேள்வி: மாகாண சபைத் தேர்தலிலும் பெண் பிரதிநிதித்துவ கோட்டா கிடைக்குமா?

எனக்குத் தெரிந்த வரையில் மாகாண சபைத் தேர்தல் சட்டத்திலும் நிச்சயமாக பெண்கள் பிரதிநிதித்துவம் உண்டு. ஆனால் எதிர்காலத்தில் எவ்வகையான மாற்றம் ஏற்படுமென தற்போது கூற முடியாது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிடைத்த அனுபவங்களைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம். அதேபோல் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக எமது அமைச்சர்களுக்குப் பொறுப்பில்லை. அதனால் அதுபற்றி எதுவும் கூற முடியாது.

 

கேள்வி: பொது மக்களுக்கு சேவையாற்றும் மக்கள் பிரதிநிதியை உருவாக்க என்ன செய்ய வேண்டும்.

உள்ளூராட்சி மன்றங்களின் பணி ஏனைய இரண்டு மன்றங்களிலுமிருந்து வேறுபட்ட பணியாகும். ஏனென்றால் கீழ்மட்டத்தில் பொது மக்களுக்கு சேவையாற்றும் மன்றமாகும். இது சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆகவே அந்த சட்டத்துக்குட்பட்டு மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டுமென்பது பற்றி அறிவுறுத்த வேண்டும். பொதுவாக அவர்களின் பணி என்ன என்பதை பயிற்சிப் பட்டறைகளை நடத்தி அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டும். சபைகள் அமைத்த பின்னர் எமது அமைச்சின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாக இலங்கை நிறுவனத்தினூடாக உள்ளூராட்சி மன்ற நிர்வாகம் குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.

 

கேள்வி: உள்ளூராட்சி தேர்தல் முடிந்து இரண்டு மாதம் கடந்தும் சில சபைகளின் அமர்வு இன்னும் நடத்தப்படவில்லை ஏன்?

புதிய முறை மூலமே தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் கூட பிரச்சினைகள் ஏற்பட்டன. எவ்வாறாயினும் அதற்காக நீண்ட காலம் எடுத்ததை நானும் உணர்கின்றேன். காலதாதம் மக்களின் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்வரும் காலங்களில் தேர்தல் அணைக்குழு சரியான வழிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் முடிவுகளை வெளியிடும். ஏனென்றால் தேர்தல் முடிவுகள் வெளிப்படுவது குறித்து எமது அமைச்சருக்கு எதுவும் குறிப்பிட முடியாது. முடிவுகளை வெளியிடுவதற்கான பொறுப்பு தேர்தல் ஆணையாளருக்கே உள்ளது.

 

 

Comments