குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க ஜோடி தங்கம் வென்று சாதனை | தினகரன் வாரமஞ்சரி

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க ஜோடி தங்கம் வென்று சாதனை

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் அணிக்கான பனிச்சறுக்கு ஸ்பிரின்ட் பிரீஸ்டைல் பிரிவில் கிக்கன் ரான்டால், ஜெசிகா டிஜின்ஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழு தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது.

குளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்க ஜோடி தங்கம் வென்று சாதனை

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ‘டவுன்ஹில்’ பிரிவில் இத்தாலி வீராங்கனை சோபியா கோஜியா தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். பனிஉச்சியில் இருந்து மின்னல்வேகத்தில் சீறிப்பாய்ந்து பிரமிக்க வைத்த சோபியா இலக்கை 1 நிமிடம் 39.22 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.

அவரை விட 0.09 வினாடி பின்தங்கிய நார்வே வீராங்கனை ராக்ஹில்டு வெள்ளிப்பதக்கமும், 2010-ம் ஆண்டு சம்பியனான அமெரிக்காவின் லின்சே வோன் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.

பெண்கள் அணிக்கான பனிச்சறுக்கு ஸ்பிரின்ட் பிரீஸ்டைல் பிரிவில் கிக்கன் ரான்டால், ஜெசிகா டிஜின்ஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழு தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. கடும் சவால் அளித்த சுவீடன் ஜோடியை விட 0.19 வினாடி முன்பாக வந்த இவர்கள் 15 நிமிடம் 56.47 வினாடிகளில் இலக்கை எட்டினர். 1976-ம் ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் கிராஸ்-கன்ட்ரி பிரிவில் அமெரிக்கா பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். இதன் ஆண்கள் பிரிவில் நோர்வேயின் மார்ட்டின் ஜான்ஸ்ரட்-ஜோகன்னஸ் ஹோஸ்பிளாட் ஜோடி 15 நிமிடம் 56.26 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர்.

ஐஸ் ஹொக்கி போட்டியின் பெண்கள் பிரிவில் நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பின்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரஷியாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றது. 

Comments