நேசம் மறவா நெஞ்சங்கள் | தினகரன் வாரமஞ்சரி

நேசம் மறவா நெஞ்சங்கள்

ஏ.எம்.எம்.பாரூக்..

மருதமுனை

பார்வதியம்மா வழக்கம் போல பக்கத்து வீட்டு பாத்தும்மாவின் வீட்டுக்கு அதிகாலையில் சென்றாள். நித்திரையை விட்டும் எழும்பாமல் இருந்தவளை தட்டி அதட்டினாள். அப்போது கண்விழித்த பாத்தும்மா நேரத்தைப் பார்த்து விட்டு அவசர அவசரமாக சுபஹூ தொழுகையை முடித்துக் கொண்டு வெளியே வந்து பேசிக் கொண்டிருந்தாள்.

பிள்ளை குட்டிகளுக்கு உணவளிக்க வேண்டுமென்பதற்காக சொந்தக் கிராமத்தில் வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் வெளியூருக்குச் சென்ற கணவன் இன்னும் வரவில்லையே என்று பார்வதியிடம் சொன்னாள்.

“எவ்வளவு உழைச்சாலும் போதாமல் தானே இருக்கிறது. என்ன உலகமடா இது “என்று வேதனையுடன் பார்வதி சொன்னாள்.

பார்வதியும், பாத்தும்மாவும் வெவ்வேறு மதத்தவர்களாக இருந்தாலும், அவர்களிடையே வேற்றுமையோ, பாகுபாடோ இருக்கவில்லை. அவர்கள் இணைபிரியாத் தோழிகள் போல் இருந்து வந்தார்கள்.

வெளியூருக்குச் சென்ற வாப்பாவின் வருகையை எதிர்பார்த்து பிள்ளைகள் வீட்டின் முன்னால் உள்ள வீதியில் காத்துக் கொண்டு நின்றார்கள். வாப்பா வராமல் இருப்பதை எண்ணி கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளே வந்தார்கள். இருந்தாலும் வாப்பா கூடிய சீக்கிரம் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை வீண் போகாமல் இருக்க வேண்டும் என்று அவர்களுடைய தாய் ஆண்டவனை வேண்டிக் கொண்டாள். தாயோடு சேர்ந்து பிள்ளைகளும் தகப்பனை எதிர்பார்த்த வண்ணம் இருந்தார்கள்.

“பாத்தும்மா, பாத்தும்மா ஒண்ட ஊட்டுக்காரர் வாறார் கெதியா வாவேன்” பார்வதியின் அழைப்பைக் கேட்டு பிள்ளைகளோடு சேர்ந்து வீதிக்கே சென்றுவிட்டாள் பாத்தும்மா. அவளுடைய கணவனின் வருகையைக் கண்டு பிள்ளைகளோடு சேர்ந்து சந்தோசப்பட்டாள். ஓடோடிச் சென்று வாப்பாவின் கையிலிருந்த பார்சலை வாங்கிக் கொண்டே வேகமாக நடந்தான் மூத்த மகன்.

அவனுடைய வருகையால் பார்வதியின் பிள்ளைகளும் சந்தோசப்பட்டார்கள். அக்கம் பக்கத்து வீட்டுக்கார் என்றால் அப்படி இருப்பதுதான் எல்லோருக்கும் நல்லது. அவர்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டதே இல்லை. ஒருவரையொருவர் புரிந்து கொண்டு புரிந்துணர்வோடு வாழ்வதற்கு பழகிக் கொண்டார்கள். இவ்வாறான செயற்பாடுகள் அருகிப் போனதே வேற்றுமைக்கான வித்தாக அமைந்தது.

வீட்டுக்கு வந்த கணவனை அன்போது வரவேற்று ஆறுதல் கூறி, உணவு பரிமாறுதலுக்கு ஏற்பாடு செய்தாள். சொந்தப் பிள்ளைகளோடு மட்டுமல்லாது அயல் வீட்டுப் பிள்ளைகளையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு சாப்பாட்டை ஆயத்தம் செய்தாள்.

தூரத்தில் நின்ற பார்வதியை பெயர் சொல்லி அழைத்தபோது எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் வந்து அருகில் நின்றாள். அப்போது பாத்தும்மாவின் கணவருக்கு ஒரு புறம் சந்தோசமும், மறுபுறமும் துக்கமும் ஏற்பட்டது. அப்போது கண்களிலிருந்து மங்கிய நீரை மெதுவாகத்துடைத்துக் கொண்டார்.

சாப்பிட்டு முடிந்ததும் பார்வதிகளையும், மனைவியையும் வைத்துக் கொண்டு வாழ்க்கைச் செலவு, பிள்ளைகளுடைய படிப்பு, டிவிசன் பணம் போன்றவற்றைப் பேசி உழைப்புக்கேற்ற கூவியும் கிடைக்கவில்லையே என்று மனம் திறந்து பேசினான் கணவனுடைய வருமானம் போதாதென்று வருமானத்துக்குள் ஓரளவு வாழப்பழகிக் கொண்டாள் பார்வதி.

வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள எவ்வளவு முயற்சித்தாலும் அதில் வெற்றிகாண முடியாமல் போனதையிட்டு எவரிடத்திலும் சொல்லியும் பயன் கிடைக்கப் போவதில்லை என்பதை அவள் உணர்ந்தாள். இவற்றையெல்லாம் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு வந்த பார்வதிகூட வேதனைப்பட்டாள்.

திருமணத்தின் போது பாத்தும்மாவின் வீட்டார் எதையுமே கொடுத்ததில்லை. அப்படிக் கொடுத்தாலும் அதைப் பெற்றுக்கொள்ள அவரின் கணவன் விரும்பவும் இல்லை. பெண்ணை மட்டும் கொடுத்தால் போதும் என்ற நிலையில் இருந்தான். பார்வதியும் பாத்தும்மாவும் தங்களுடைய குடும்ப விவகாரங்களை மனம் திறந்து பேசிக்கொள்வார்கள். இவர்களைப் பற்றித் தெரியாதவர்கள் இரட்டைப் பிறவிகள் என்று நினைப்பதுமுண்டு.

“பாத்தும்மா உன்னுடைய குடும்பம் மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கிறதை எண்ணில் பார்த்தால் எனக்கு வேதனையாக இருக்கிறது. நீயும் உன் கணவனும் விரும்பினால் நான் சொல்வதைக் கொஞ்சம் கேட்டுக் கொள் முடிந்தால் உன்னுடைய விருப்பத்தைச் சொல்லு” என்று அன்பாகச் சொன்னாள்.

“எனக்குத் தெரிந்தவர் உறவுக்காரர் வெளிநாட்டுக்கு அக்களை அனுப்புகிறார். அவரோடு பேசி உன் கணவனை வெளிநாட்டுக்கு அனுப்பினால் என்ன.”

“பார்வதி பணத்துக்கு என்ன செய்வது, யாருக்கிட்ட கேட்கிறது. யாருமே உதவி செய்ய முன்வரமாட்டாங்களே”

பயப்படாதே வெளிநாட்டுக்கு அனுப்புவர் எனது உறவினர்தான். நான் பேசிப்பார்க்கிறன் உன்னுடைய சம்மதத்தைச் சொல்லு’ என்று கேட்டாள்.

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவருடைய வீட்டை நோக்கி பார்வதியும், பாத்தும்மாவும், அவளுடைய கணவிலும் சென்றார்கள். மனத்துக்குள்ளே பதட்டம் ஒரு வேளை மறுத்துவிட்டால் என்ற ஒரு கற்பனை.

யாருக்குமே செய்யாத உதவியைச் செய்ய முன்வந்த பார்வதியை எண்ணி சந்தோசப்பட்டார்கள். அவள் கள்ளங்கபடம் அறியாதவள் யாரையும் ஏமாற்றாதவள். யாருக்குமே தீங்கு செய்யாதவன் இப்படிப்பட்டவள் ஏமாற்றமாட்டாள் என்பதில் நூறு வீதம் சந்தேகம் இல்லாமல் இருந்தார்கள்.

வெளிநாட்டு முகவரின் இல்லத்தை அடைந்ததும் அவர்களுக்கு சந்தோசமாக இருந்தது. நீண்ட நேரம் காத்திருந்து உரியவரை சந்தித்து விட்டுப்போக வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தார்கள். வீட்டின் உள்ளே அவர்களோடு சேர்ந்து இன்னும் பலர் காத்திருந்தார்கள். அவர்களெல்லாம் கஷ்டத்தைப் போக்கிக் கொள்ள வேலை வாய்ப்புப் பெற்றுக் கொள்ள வந்தவர்கள் இடை இடையே பலரும் பலதையும் பற்றிப் பேசிக் கொண்டார்கள்.

வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்ள வந்தவர்கள் முகவரின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்தார்கள். நம்பிக்கையும் நாணயமும் உடையவர் என்பதால் அவர் மீது நன்மதிப்புக் கொண்டிருந்தார்கள்.

முகவர் காரியாலயத்தில் வந்து அமர்ந்தபோது ஒவ்வொருவராக அழைத்து வேலையை முடித்தார். பார்வதி பாத்தும்மாவின் கணவரையும் அவரது மனைவியையும் உள்ளே அழைத்துச் சென்றாள். முகவர் பாத்தும்மாவின் கணவனைக் கண்டதும் இருக்கையை விட்டு எழுந்து அன்போடு வரவேற்று கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டான். இச்செயல் பார்வதிக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு காலத்தில் இணை பிரியா நண்பர்களாக இருந்தவர்கள், காலத்தின் மாற்றத்தால் ஏதேதோ நடந்து மாற்றம் ஏற்பட்டதை எண்ணி இருவரும் பேசிக் கொண்டார்கள்.

“தம்பி ஒரு நல்ல வேலையா பாத்து போட்டுக்கொடு கஷ்டப்பட்டு போனாங்க”

“அம்மா அவர் என்னுடைய வாழ்க்கையில் உறுதுணையாக இருந்தவர். அவரை எப்படி நான் மறப்பன்”

பேச்சுக்கள் முடிந்தவுடன பாத்தும்மாவின் கணவன் தான் கொண்டு வந்த பணத்தை எடுத்துக் கொடுத்தான்.

“டேய் யாரிடத்தில என்னடா கொடுத்தாய்” என்று கோபமாகக் கேட்டாள்.

“பரவாயில்லை இது உன்னுடைய தொழில் அதில் குறை வரக்கூடாதே எதற்கும் பணத்தை வாங்கிக் கொள்” என்று வினயமாக கேட்டாள்.

கடந்து வாழ்க்கையை ஒரு கணம் மீட்டி அவனோடு உரையாடினாள். அதில் எத்தனையோ துன்பங்கள் எல்லாம் முட்டி மோதிக் கொண்டன.

பக்கத்தில் நின்ற பார்வதியைப் பார்த்து “அம்மா நீங்க கூட்டிக் கொண்டு வந்தவர் யாரு, எவர், என்றெல்லாம் எனக்கு தெரியும். அவன் என் பள்ளித்தோழன். ஓர் இடத்திலிருந்து சாப்பிட்டவர்கள். எனக்காக தோள் கொடுத்தவன். அப்படிப்பட்டவன் இன்று வறுமைக்குள்ளாகி இருப்பதை உங்களாலேயே அறிந்து கொண்டேன்.

“தம்பி இந்தக் காலத்தில உதவி செய்தவர்களை எண்ணி பார்ப்பவர்கள் குறைந்து போய் விட்டார்கள். உங்கட நண்பன் புள்ள குட்டிக்காரன். எனக்கு பக்கத்து வீட்டுக்காரன், அவன் நல்லா இருந்தால் நான் நல்லா இருந்த மாதிரிதான்.

முகவர் பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டான். அது எல்லோருக்கும் சந்தோசமாக இருந்தது. கூடியவிரைவில் ஒரு நல்ல வேலைக்காகச் செல்ல ஆயத்தமாகுமாறு நண்பனைப் பணித்தான். பார்வதி தன் கண்ணில் இருந்து அரும்பிய நீரை மெல்ல துடைத்துக் கொண்டு வாழ்த்தினார். இதனைக் கண்டு பாத்தும்மாவும் சந்தோசப்பட்டாள். இந்த நேசம் மறவாத செயலுக்கு என்ன கைம்மாறு செய்யலாம் என்றபடி வீட்டை நோக்கி நடந்தார்கள். 

Comments