காய்நகர்த்தல் ஆரம்பம்; ஒருமாதத்தினுள் அதிரடி மாற்றங்கள் | தினகரன் வாரமஞ்சரி

காய்நகர்த்தல் ஆரம்பம்; ஒருமாதத்தினுள் அதிரடி மாற்றங்கள்

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை இன்னும் ஓய்ந்ததாக இல்லை. அமைச்சரவை மாற்றத்துடன் நல்லாட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் இழுபறி நிலை ஓரளவு தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூடுதலான சபைகளை மஹிந்த சார்பு அணி கைப்பற்றியதோடு அரசியல் அரங்கும் சூடு பிடித்தது. தேசிய அரசாங்கத்தில் இணைந்துள்ள இரு பிரதான கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில் தோல்விக்கு காரணம் மறு தரப்பே என இருதரப்பும் மாறி மாறி அடுத்த தரப்பின் மீது குற்றஞ்சாட்ட ஆரம்பித்திருந்தன தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்கள் கடந்தும் இன்னும் அரசியல் குழப்ப நிலை ஓய்ந்ததாக இல்லை. ஆரம்பத்தில் ஆட்சி மாற்றம் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. அடுத்து பிரதமர் மாற்றம் பற்றி பேச்சடிபட்டது.இறுதியாக இந்த சர்ச்சை அமைச்சரவை மாற்றத்தில் வந்து முடிந்துள்ளது.

கிராம ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தலாக இருந்தாலும் அதனை ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலாக மாற்றியது மஹிந்த சார்பு அணியும் முன்னாள் ஜனாதிபதியும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மஹிந்த தரப்பு வெற்றி கண்டிருந்த நிலையிலும் சுதந்திரக் கட்சி சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரை முன்னாள் ஜனாதிபதி தூண்டிவிட்டதாலே சுதந்திரக் கட்சி அரசாங்கம் மற்றும் தனி ஐ.தே.க அரசாங்கம் என்ற பேச்செல்லாம் பரபரப்பாக பேசப்பட்டது.

தனியான ஐ.ம.சு.மு அரசாங்கம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் சு.க அமைச்சர்கள், மஹிந்த ஆதரவு அணி எம்.பிகளிடையே பேச்சு நடந்தது. ஜனாதிபதியும் சு.க அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் பேச்சு நடத்தினார்கள்.மறுபக்கம் பிரதமர் தலைமையில் ஐ.தே.க அமைச்சர்கள், எம்.பிகள் இடையிலான பேச்சுக்கள் பல சுற்றுக்கள் நடந்தன. ஐ.ம.சு.மு அரசா ஐ.தே.க அரசா உருவாகும் என முழு நாடும் விழிப்போடு காத்திருந்தது.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பிரிவு வந்தால் இறுதியில் விவாகரத்து நடந்து கணவன் வேறு திருமணம் செய்வார். அல்லது மனைவி வேறு மணம் செய்வார்.இங்கும் இப்படி தான் நடந்து இறுதியில் பிள்ளைகளுக்காக சேர்ந்தே இருப்பது என்று முடிவாவது போல நல்லாட்சியும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

இது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என சில தரப்பினர் சாடுகையில் எதிர்ப்பை சமாளிப்பதற்காக மக்களின் கவனத்தை திசை திருப்பும் நாடகம் இது என மற்றொரு தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

இது நாடகமா? இல்லையா? என்பது ஒருபக்கமிருக்க சு.க ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக இங்கும் அங்கும் ஓடித்திரிந்த சிலர் நல்லாட்சி தொடரும் என்ற அறிவிப்புடன் நடு வீதியில் விடப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இவர்கள் முன்னாள் ஜனாதிபதியுடனும் ஒன்றிணைந்த எதிரணி முக்கியஸ்தர்களுடனும் பல தடவை பேசியிருந்தனர். பிரதமரின் கீழ் அமைச்சரவையில் இனி அமரப்பேவதில்லை என்று கூறியவர்களுக்கு இந்த முடிவினால் மெல்லவும் முடியாமல் ஜீரணிக்கவும் முடியாமல் திண்டாட நேரிட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அமைச்சர்கள் அடங்கலான சில சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையவோ அல்லது சுயாதீனமாக செயற்படவோ தயாராவதாக நம்பகரமாக தெரிய வருகிறது.

இதே வேளை, சு.க அரசாங்கம் உருவாக வேண்டும் என ஓடித்திரிந்த விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர கடந்த சில நாட்களாக பொது நிகழ்வுகளில்பங்கேற்காது ஒதுங்கியிருந்தார். கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவரும் மற்றொரு அமைச்சரான சுசில் பிரேம ஜயந்தும் பங்கேற்றிருக்கவில்லை.

இந்த நிலையில், அமைச்சர் தயாசிறி ஜெயசேகரவினால் தேர்தல் தோல்வி தொடர்பில் ஜனாதிபதிக்கு விரிவான அறிக்கையொன்றை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கையளிக்கப்பட்டது. சு.க பின்னடைவிற்கு ஐ.தே.கவின் கொள்கைகளும் திட்டங்களும் தான் காரணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

ஏமாந்த புதுப் பிரதமர்

சுதந்திரக் கட்சி தனி அரசமைக்க ஒன்றிணைந்த எதிரணி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பிரதமராகலாம் என பரவலாக நம்பப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியை கோரமாட்டார் என மஹிந்த ஆதரவு அணி அறிவித்திருந்தது. இந்த நிலையில் பிரதமர் கனவுடன் சுற்றி வந்தார் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா.

2015 தேர்தலின் போதும் அவர் பிரதமர் கனவுடன் உலாவந்த போதும் அது கனவாக மட்டுமே நிறைவடைந்திருந்தது.இந்த நிலையில் இரண்டாவது தடவையும் பிரதமர் கனவை சுமந்த அவருக்கு மீண்டும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. நல்லாட்சி தொடரும் என்ற அறிவிப்பு அவரின் ஆசையில் மண்ணள்ளிப் போட்டது.

பிரதமர் பதவி தொடர்பாக ஊடகங்களும் வேறு சிலரும் அவரிடம் வினவியபோது அமைச்சர் எரிந்து விழுந்ததாக தெரிய வருகிறது.

அமைச்சரவை மாற்றம்

ஐ,தே.கவுக்கும் சு.கவுக்குமிடையிலான ஒப்பந்தத்தின் பிரகாரமே அமைச்சு பதவிகள் பிரித்து வழங்கப்பட்டிருந்தன. ஜனாதிபதி பிரதமர் அடங்களான 47 அமைச்சுக்களில் 32 அமைச்சுக்கள் ஐ.தே.கவிற்கும் 15 அமைச்சுக்கள் சு.கவுக்கும் வழங்கப்பட்டன. சு.கவுக்கு அமைச்சு பதவி குறைவாக வழங்கப்பட்டாலும் முக்கிய பல அமைச்சுகள் அந்த தரப்பிற்கே ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், புதிய அமைச்சரவை மாற்றத்தின் போதும் ஐ,தே.கவுக்குரிய அமைச்சுக்கள் அதற்கே வழங்கப்பட இருப்பதாகவும் அமைச்சர்களே மாறுவர் எனவும் அறிய வருகிறது.

கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

நிதி அமைச்சின் கீழ் வர வேண்டிய பல நிறுவனங்கள் வேறு அமைச்சுக்களின் கீழ் உள்ள நிலையில் அதனை ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிய வருகிறது. பிரதமர் விரும்பினால் அதனை அவரின் கீழ் கொண்டு வருமாறும் ஜனாதிபதி கூறியிருந்ததாக தெரிய வருகிறது.

கடந்த ஆட்சியில் நடந்த கொலைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவது தாமதமாகி வருவதாக பரவலாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு அமைச்சை பீஃல்ட்மாசல் அமைச்சர் சரத் பொன்சேகவுக்கு வழங்குமாறு பரவலாக கோரப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. ஒருவருட காலத்திற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சை பொறுப்பேற்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடமும் ஜனாதிபதி கோரியிருந்தாராம்.

டொக்டரையும் பொலிஸையும் ஒன்றாக கவனிக்க முடியாது என அவர் மறுத்திருந்த நிலையில் வேறு சில பெயர்களும் அடிபட்டிருந்தன.

நெடுஞ்சாலை அமைச்சின் கீழ் இருக்கும் கிராமிய வீதிகளை தனது அமைச்சின் கீழ் கொண்டுவர வேண்டும் என அமைச்சர் சம்பிக இங்கு கோரியதால் அவருக்கும் அமைச்சர் கிரியெல்லவுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டதாம். இறுதியில் கொழும்பு மாவட்டத்திலுள்ள கிராமிய வீதிகளைத் தான் கோரியதாக சம்பிக கூறிய போதும் இதற்கு யாரும் உடன்படவில்லையாம். இதேவேளை, கண்டி அதிவேக நெடுஞ்சாலை தொடர்பிலும் இருவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாம். நெடுஞ்சாலை மூன்றாம் கட்டத்திற்கு 200 பில்லியன் ஒதுக்குவது உகந்ததல்ல என சம்பிக குற்றஞ்சாட்டினாராம். இதற்கு ஆதரவாக அமைச்சர்களான பைசர் முஸ்தபா, மஹிந்த அமரவீர போன்றவர்கள் கருத்து கூறினாலும் பிரதமரும் அமைச்சர் ராஜிதவும் நெடுஞ்சாலைக்கு ஆதரவாக பேசியிருந்தனராம். இறுதியில் குறித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

சரத் பொன்சேகாவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு செல்லும் கதையினால் ராஜபக்‌ஷ குடும்பத்திலுள்ள பலரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக அறிய வருகிறது.நாமல் ராஜபக்‌ஷ எம்.பி இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பிலுள்ள தனக்கு நெருக்கமான சிலரிடம் இது பற்றி வினவியிருந்தாராம். ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைய இன்னும் இரண்டு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில் இக்காலத்தினுள் பாரிய பல மாற்றங்களை நிகழ்த்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான காய் நகர்த்தல்களை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்க இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்தன. அரச நிறுவனங்களிலும் அரசின் திட்டங்களிலும் பல மாற்றங்கள் நடக்க இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

இந்த நிலையில், அமைச்சரவை கூட்டம் முடிந்த கையோடு ஜனாதிபதி, சு.க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களை தனி அறையில் சந்தித்தார்.

பிரதமர் பதவியை விட்டுச் செல்லுமாறு தான் ரணில் விக்ரமசிங்கவுக்கு கூறியது பற்றி அவர் இங்கு விளக்கியதாக அறிய வருகிறது. கட்சித் தலைவர் பதவியில் இருந்து கொண்டு பிரதமர் பதவியை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு விட்டுக் கொடுக்குமாறு ஜனாதிபதி முன்வைத்த யோசனையை பிரதமர் நிராகரித்தாராம். ஐ.தே.க முக்கியஸ்தர்கள் சிலரும் தன்னிடம் பிரதமர் பதவி மாற்றப்பட வேண்டும் என கோரியிருந்ததையும் அவர் பிரதமரிடம் விளக்கியிருந்தாராம்.

இதன் போது ஐ.ம.சு.மு அரசு அமைப்பதற்கு ஆதரவாக பலர் கருத்து வெ ளியிட்டார்களாம். துமிந்த திசாநாயக்க தேசிய அரசு தொடர வேண்டும் என கோரினாராம். இந்த நிலை இவ்வாறே தொடரட்டும் எனவும் ஒரு மாத காலத்தினுள் அரசில் பல மாற்றங்களை செய்வதாகவும் ஜனாதிபதி சு.க அமைச்சர்களிடம் குறிப்பிட்டாராம்.

இதே வேளை, கடந்த வியாழக்கிழமை பிரதமர் தலைமையில் ஐ.தே.க அமைச்சர்கள் முக்கியஸ்தர்களின் சந்திப்பு அலரி மாளிகையில் நடந்தது.

தற்போதைய அரசியல் நிலைமை அமைச்சரவை மாற்றம் என்பன பற்றி இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது.இருக்கும் சிரேஷ்ட அமைச்சர்களுக்கு அமைச்சு பதவி வழங்குவதோடு அமைச்சு பதவி இல்லா மாவட்டங்களுக்கு எவ்வாறு அமைச்சு பதவி வழங்குவது என்பது பற்றி கவனம் செலுத்தப்பட்டதாம். ரவி கருணாநாயக்கவுக்கு மீள அமைச்சு பதவி வழங்கப்படுவது குறித்தும் சிலர் வினவினராம்.

ஐ.தே.க பட்டியலில் அவரின் பெயரையும் உள்ளடக்கிய பின்னர் அதனை ஜனாதிபதி நீக்கினால் சிக்கலாம். பிணைமுறி விவகாரம் தொடர்பில் ரவியின் பெயரும் இருக்கிறது. ரவி தொடர்பில் சட்டமா அதிபர் சுமூகமான அறிக்கையொன்றை வழங்கும் வரை காத்திருப்பது உகந்தது என சிலர் இங்கு கூறியிருந்தனராம். அதனை பலரும் ஆமோதித்ததாக தெரிய வருகிறது.இந்த கூட்டத்தின் பின்னர் ஐ.தே.க பட்டியலில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.

கடந்த வாரத்தில் அமைச்சரவை பதவியேற்கும் தினங்கள் பற்றி அறிவிக்கப்பட்டாலும் இறுதிப்பட்டியல் தொடர்பான இழுபறியினாலேயே இது தாமதமானது. ஐ.தே.க பட்டியிலில் உள்ள சில அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எதிர்ப்பு வெளியிட்டிருந்ததாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில், இன்று அமைச்சரவை பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிலவேளை, கடைசி நேர மாற்றங்களால் ஒத்திவைக்கவும் படலாம்.

Comments