ஐ.நா: இலங்கை வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஊனா காலமானார் | தினகரன் வாரமஞ்சரி

ஐ.நா: இலங்கை வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஊனா காலமானார்

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் திருமதி ஊனா மக்கொலி காலமானாரென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 54 வயதுடைய திருமதி மக்கொலி மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதலாவது பெண் ஐ.நா வதிவிட ஒருங்கிமைப்பாளரான திருமதி மக்கொலி ஒரு தைரியமும் உறுதியும் கொண்ட ஒரு தலைவராவார். அதி சிரேஷ்ட ஐ.நா உத்தியோகத்தராக ஊனா மக்கொலி 21 வதிவிட, வதிவிடமல்லாத ஐ.நா முகவரகங்களை கொண்ட குழுவுக்கு தலைமை தாங்கியதுடன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இலங்கைப் பிரிதிநியாகவும் கடமையாற்றினார். மனித நேயமுள்ள ஒரு பெண்மணியாக அவரது வாழ்க்கை உலகின் மக்களுக்கு அர்ப்பணித்த ஒருவராக அவர் திகழ்ந்தார்.

திருமதி மக்கொலி, இலங்கையில் ஆறு வருடங்கள் கடமையாற்றியிருந்தார்.

இரண்டு வருடங்கள் ஐ.நா வதிவிட ஒருங்கமைப்பாளராகவும், UNDP இலங்கைப் பிரதிநிதியாகவும் கடமையாற்றியிருந்தார். அதற்கு முன்னர் அவர் பனாமா மற்றும் டோகோ நாடுகளின் UNICEF அலுவலராகவும் பணிபுரிந்தார். 17 வருடங்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் 7 வருடங்கள் அபிவிருத்தி துறையில் சிறுவர்களுடனும் பணியாற்றிய திருமதி மக்கொலி பல கொள்கைகளை வடிவமைத்ததிலும் பல நாடுகளில் நிலவும் உலகளாவிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சட்டகத்தை வடிவமைத்ததிலும் பெரும் பங்காற்றியிருந்தார்.

இவர் அயர்லாந்து, ஐக்கிய இராட்சியத்தை தனது சொந்த ஊராக கொண்டிருந்ததுடன் இரண்டு மகன்களின் பாசமுள்ள அன்னையும் ஆவார்.

ஐக்கிய நாடுகள் குடும்பமானது அவரின் நகைச்சுவை, தாழ்மையான குணம், உத்வேகம், சேவை மனப்பான்மை, மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பு என்பவற்றை துயரத்தோடு எண்ணிப்பார்க்கிறது. அன்னாரது குடும்பத்துக்கும் எங்கள் ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம் என ஐ.நா. தூதரகம் அறிவித்துள்ளது.

Comments