தலைப்பாகையோடு ​ போன சேதாரம் | தினகரன் வாரமஞ்சரி

தலைப்பாகையோடு ​ போன சேதாரம்

கருணாகரன்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் உண்டாக்கியிருந்த அரசியல் நெருக்கடிகளும் குழப்பங்களும் முதற்கட்டமாக மெல்லத் தணிந்திருக்கின்றன. அல்லது “தணிய” வைக்கப்பட்டுள்ளன. எனவே நாடு மெல்ல நிம்மதியாக மூச்சு விடுகிறது.

இதனால் “நல்லாட்சி” – ஐ.தே.க + சு.க = கூட்டாட்சி அல்லது “தேசிய அரசாங்கம் தொடரும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது வேறு கதை. இப்போது வந்துள்ள ஆபத்து, தலைக்கு வந்த சேதாரம், தலைப்பாகையோடு போயுள்ளது. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற மாதிரி, இரண்டு வாரத்துக்குப் பிறகு, இப்பொழுதுதான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரியும் நிம்மதியடைந்துள்ளனர்.

ஆனால், இன்னும் அமைச்சர்களுக்குக் காய்ச்சலும் பதற்றமும் குறையவில்லை. நல்லாட்சி நீடித்தாலும் அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழலாம் என்ற கதைகள் நாலா பக்கமும் பறக்கும் தட்டுகளைப் போலப் பறந்து திரிகின்றன. இதனால் தூக்கமேயில்லாமல் முகம் வீங்கிப்போயிருக்கிறார்கள் அமைச்சர்கள் எல்லோரும். “பலருடைய முகங்களையும் பார்க்கச் சகிக்கவில்லை” என்று சொல்கிறார் பாராளுமன்றச் செய்தியாளராக இருக்கும் நண்பர் ஒருவர்.

அடுத்ததாக என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை. “நல்லாட்சி அரசாங்கம் நீடிக்குமா நீடிக்காதா” என்று தொடர்ந்து கொண்டிருந்த பதற்றம், எந்தச் சலனமும் இல்லாமல் புஸ்வாணமாகிப் போனதைப்போல “அமைச்சரவை மாற்றம்” பற்றிய பதற்றங்களும் சத்தம் சலாரில்லாமல் அடங்கிப் போகலாம்.

“எல்லாம் அவன் செயல்” என்கிற மாதிரியே எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. பின்னணியில் இருந்து இயக்கும் சக்திகள் வலுவாகச் செயற்படுவதை நாம் துல்லியமாகப் பார்க்க முடிகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிந்த கையோடு, அரசாங்கத்துக்குள்ளும் வெளியிலும் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து, அமெரிக்கத் தூதரும் இந்தியத் தூதரும் நேரடியாகவே ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்திருந்தனர். இந்தச் சந்திப்பு ஒன்றும் சம்பிரதாயமானதல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த சங்கதி. அரசியல் விவகாரங்கள் சம்பந்தப்பட்ட சந்திப்புகள். குறிப்பாக ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முயற்சிகள்.

இலங்கை போன்ற நாடுகளில் அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த மாதிரிப் பென்னாம் பெரிய நாடுகளின் பிரதானிகள் நம்முடைய தலைவர்களைச் சந்திப்பார்கள். அறிவுரைகள் சொல்வார்கள். நம் தலைவர்களும் அதையெல்லாம் தட்டாமல், மீறாமல் அப்படியே கேட்டுக் கொள்வார்கள். உள் நாட்டிலுள்ள மக்களுக்கும் சமூகச் சக்திகளுக்கும் காது கொடுக்காத தலைமைகள், தலை வணங்காத கட்சிகள் எல்லாம் வெளிக் காற்றுக்கு தலையாட்டும், தலைசாய்க்கும்.

எல்லாம் “அவன் செயலே” என்ற கதைதான்.

நல்லாட்சி அரசாங்கத்தின் உறுதிப்பாடும் இப்படித்தான், உள் நாட்டுச் சூழலால் உருவாகியது என்பதை விட வெளிச்சூழலினால் ஏற்பட்டது ஒன்றாகியிருக்கிறது. இந்த அரசாங்கமே வெளிச்சக்திகளின் சமையல் மூலமாக உருவாகிய ஒன்றுதான். ஆகவே அதைத் தொடர்ந்து பேண வேண்டிய தேவை அந்தச் சக்திகளுக்கு உண்டு. அதை அவை கன கச்சிதமாகச் செய்கின்றன.

இது தனியே இன்றைய ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் ஏற்பட்ட நிலை என்றில்லை. மகிந்த தரப்புக்கும் இதே நிலைதான்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிகளில் மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கு கிடைத்த அமோக வெற்றி, பொதுஜன பெரமுனவினரையும் விட சீனாவுக்கே கூடுதலாக இனித்தது.

இப்படி இன்றைய உலக வல்லாதிக்க சக்திகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரப்பைத் தமக்கிசைவாக வைத்திருக்கின்றன. இது இலங்கையில் மட்டுமல்ல, இலங்கை போன்ற நாடுகளின் தலைவிதியாகி விட்டது.

இதேபோன்ற ஒரு நிலை இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ ஏற்பட்டால், அங்குள்ள இலங்கைத் தூதர்கள் அந்த நாடுகளின் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் ஆலோசனை சொல்ல முடியுமா? அதை அவர்கள் கேட்பார்களா? கேட்டு நடப்பார்களா?

இதனால்தான் நாம் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைச் சொல்ல வேண்டியுள்ளது. இந்த நாடுகளின் ஆட்சிகள் எல்லாம் சொந்த மக்களுக்குச் சேவகம் செய்வதை விட, பிற சக்திகளுக்குச் சேவகம் செய்வதாகவே இருக்கிறது என.

இதற்கு என்ன செய்ய முடியும்? இன்றைய உலகப் பொருளாதாரப் போக்கானது, நவதாராளவாதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து இலங்கை போன்ற நாடுகள் எப்படித் தனித்துச் சுயாதீனமாக நிற்க முடியும்? என்ற கேள்வியை யாரும் எழுப்பலாம்.

ஆனால், இப்படி ஒரு எதிர்க்கேள்வியைக் கேட்டு விட்டு யாரும் தப்பி விட முடியாது. சுறாக்கள் வாழ்கின்ற கடலில்தான் சிறிய மீன்களும் கோடிக்கணக்கில் வாழ்கின்றன. சிங்கங்கள் வாழ்கின்ற காட்டிலேயே சிங்கங்களையும் விட பலத்தில் குறைந்த மிருகங்கள் உள்ளன. ஆகவே, இங்கே வலுச்சமநிலையோ, வேறு விதிகளோ அதனதன் இயல்பின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன.

ஆகவே அதற்குத் தக்கமாதிரியான பொறிமுறையை நாம் வகுத்துக் கொள்ள வேணும். உலகத்தில் இரண்டு பிரதான போக்குகள் உண்டு. ஒன்று சுயாதீனமாக தமது நாடு, தமது மக்கள் என்பதை மனதில் கொண்டு, அதற்குத் தக்கதாக அரசியல், பொருளாதார, வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துச் செயற்படுத்துவது. இன்னொன்று அடிக்கிற காற்றுக்கேற்ப, பலமான வெளிச் சக்திகளோடு இணைந்து கொண்டு தரகுத்தனமாகச் செயற்பட்டு ஆட்சி நடத்துவது. இந்த மாதிரியான நிலையினால் சிதைந்து சீரழிந்த நாடுகள் ஏராளமுண்டு. ஆனால், இந்தப் போக்கே இன்றைய நிலையில் கூடுதலாக உள்ளது. இதற்குத் தோதாக சர்வதேச தொண்டு நிறுவனங்களும் சர்வதேச ஊடகங்களும் மனித உரிமைகள் அமைப்பும் தொழிற்படுகின்றன.

இவற்றின் ஒன்றிணைந்த – ஆனால் மறைமுகமான நிகழ்ச்சி நிரலின்படியே பல நாடுகளில் அரசியல், பொருளதார, பண்பாட்டு நடவடிக்கைகள் அமைகின்றன. வெளித்தோற்தத்துக்குச் சிறப்பாகவும் நல்லமாதிரியும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தோன்றும் ஆட்சியின் கீழே அடிப்படைக்கட்டுமானங்கள் சிதைந்து கொண்டிருக்கும். இலங்கையின் இன்றைய நிலை இப்படித்தான் உள்ளது.

புறத்தோற்றத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆயுள் நீடிப்பதைப்போலத் தோன்றினாலும் தலைக்குமேல் சுற்றிக் கொண்டிருக்கும் அபாயச் சக்கரமும் காலடியில் தோண்டப்படும் சவக்குழியும் அப்படியேதான் இருக்கப்போகிறது.

இந்த நிலையில் நாட்டில் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. நாடு உறுதியாக இருந்தால்தான் முன்னேற்றத்தை எட்ட முடியும். நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண இயலும். அப்படியில்லாமல் குழப்பமும் தடுமாற்றமும் இழுபறியுமாக இருந்தால், அதனால் ஒரு அடி கூட முன்னகர முடியாது.

இவ்வாறான நிலையைத்தான் வெளிச் சக்திகள் விரும்புகின்றன. அதற்காகவே அவை சிறப்பாகத்திட்டமிட்டு தங்கள் விருப்பப்படி ஆட்சிகளை ஒவ்வொரு நாடுகளிலும் நடைமுறைப்படுத்துகின்றன. இலங்கையில் ஸ்திரத்தன்மை இல்லை என்றால் அரசியல் நெருக்கடி நீடிக்கும். அந்த அரசியல் நெருக்கடியை வைத்துக் கொண்டு தாம் தலையீடுகளைச் செய்ய முடியும். பொருளாதார வளர்ச்சி ஏற்படாது. இதனைப் பயன்படுத்தி தமது பொருட்களுக்கான சந்தையை இங்கே திறக்கலாம். இப்படிப் பல அனுகூலங்கள் பெரியவர்களுக்குக் கிடைக்கிறது.

இதெல்லாம் பழைய – எல்லோருக்கும் தெரிந்த சூத்திரம். பொறிமுறை. ஆனால், அதிலிருந்து மீளும் வழியைத்தான் யாரும் கண்டறியவில்லை. இதற்குள்தான் ஏகப்பட்ட பிரச்சினைகளும் போட்டிகளும்.

இந்த நிலையில்தான் இந்த ஆண்டின் இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தலும் வரப்போகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்த 2009 க்குப் பிறகான எட்டு ஆண்டுகளுக்குள் ஏழு தேர்தல்கள் வந்து விட்டன. இதோ அடுத்த தேர்தல் வரப்போவதாக சொல்லப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் அதுவும் வந்து நம் காலடியில் நிற்கப்போகிறது.

நாட்டில் எத்தகைய வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் காணாமலே மக்கள் வாக்களிக்கும் இயந்திரமாக்கப்படுகிறார்கள். பிரச்சினைகள் எதுவுமே தீர்க்கப்படாமல் அப்படியே உள்ளன. பதிலாக மேலும் மேலும் மேலும் புதிய பிரச்சினைகள் உருவாக்கப்போகின்றன.

இனப்பிரச்சினை என்பது ஏராளம் தீர்க்க முடியாத – தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதைப்போல இன்று நாட்டில் ஏராளம் பிரச்சினைகள். எதற்கும் தீர்வில்லை. சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கே போராட வேண்டியுள்ளது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் மக்கள் தெருவில் இறங்கிப் போராடினால்தான் தீர்வு என்ற நிலை. அப்படியிருந்தும் பல போராட்டங்கள் தீர்வில்லாமல் நீடிக்கின்றன.

இந்த நிலையில்தான் நல்லாட்சியின் நீடிப்புப் பற்றிய அறிவிப்பும் வந்துள்ளது. இனி அமைச்சரவை மாற்றம் வரலாம். இதெல்லாம் சனங்களுக்கு இனிக்கப்போவதில்லை.

சுருக்கமாகச் சொன்னால், நிறத்தை மாற்றுவதோ தலையணையை மாற்றுவதோ மாற்றங்கள் அல்ல. அடிப்படையில் மாற்றங்களை நிகழ்த்த வேண்டும்.

அதுவே தேவையானது. அதை எப்படிச் செய்வது? அதற்கான ஆளுமைகள் நம்மிடம் உண்டா? நமது பங்களிப்பு என்ன? இதைக் குறித்துச் சிந்திப்பதே இன்றைய – நாளைய அரசியல்.

Comments