குமார் சங்கக்கார | தினகரன் வாரமஞ்சரி

குமார் சங்கக்கார

இவ்வார நட்சத்திரம்
ஏ.அகீல் சிஹாப்...
 

குமார் சங்கக்கார 1977 ஒக்டோபர் 27ஆம் திகதி மாத்தளையில் பிறந்தார். தனது சிறுவயது முதல் வாழ்கையை கண்டி பிரதேசத்தில் ஆரம்பித்தார். கண்டி திரித்துவக் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியையும், உயர் கல்வியையும் தொடர்ந்தார்.

பாடசாலை காலங்களில் கிரிக்கெட், பெட்மின்டன், டென்னிஸ், நீச்சல் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபாடு காட்டினார். பின்னர் 22 வயதில் சட்டத்துறை மாணவனாக வெளியானார். இலங்கை அணிக்காக விளையாடிய இடது கை துடுப்பட்ட வீரரும், விக்கெட் காப்பாளரும், முன்னாள் அணித்தலைவரும், சர்வதேச ரீதியில் கிரிக்கெட் விளையாட்டில் 'த லெஜென்ட்' என்றழைக்கப்படுபவரும் தான் இந்த குமார் சங்கக்கார. தற்போது 40 ஆகின்றது.

சிறு வயதில் கிரிக்கெட் விளையாட்டில் தனது முழு கவனத்தையும் திருப்பினார். குறிப்பாக அர்ஜூன ரணதுங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோரின் துடுப்பாட்டம், இவரை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட வைத்தது.

பாடசாலை ரீதியில் 13,15,17,19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடது கை துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட் காப்பாளராகவும் திகழ்ந்தார்.

1998-\99 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை ஏ அணியில் இடம்பெற்றிருந்தார். அப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 156 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதன் மூலம், இலங்கை தேசிய அணியில் இடம் கிடைத்தது. 'கவர் டிரைவ்' சங்கக்காரவுக்கென்று தனிச்சிறப்பு வாய்ந்த புகழ் பெற்ற துடுப்பாட்ட ஷொட் ஆக காணப்படுகின்றது. அத்துடன் 'புல்' மற்றும் 'கட்' ஆகியவையும் பெயர் போன ஷொட்ஸ்களாக காணப்படுகின்றது.

2000 ஜூலை 5ஆம் திகதி பாக்கிஸ்தான் அணியுடன் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கையின் 105வது ஒருநாள் வீரராக முதன் முதலில் கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார். இதுவரையில் 404 போட்டிகளில் விளையாடி 14,235 ஓட்டங்களை பெற்றுள்ளார். ஒருநாள் போட்டியின் சராசரியாக 41.9 விகிதம் காணப்படுகின்றது. 25 சதங்களையும், 93 அரைச்சதங்களையும் பெற்றுள்ளார். அதிகபடியாக 166 ஓட்டங்களை பெற்றுள்ளார். அத்துடன் விக்கெட் காப்பாளராக 402 பிடியெடுப்புக்களையும், 99 ஸ்டம்பிங்களையும் செய்துள்ளார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியின் 'சுப்பர் எயிட்' சுற்றில் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணியுடனான போட்டியிலிருந்து ஒருநாள் போட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

2000 ஜூலை 20ஆம் திகதி தென்னாபிரிக்காவுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கையின் 84வது டெஸ்ட் வீரராக அறிமுகமானார். 134 டெஸ்ட் போட்டிகளில் 12,400 ஓட்டங்களை ஓட்டங்களை பெற்றுள்ளார். இவரின் டெஸ்ட் சராசரியாக 57.4 விகிதம் காணப்படுகின்றது. 38 சதங்களும், 52 அரைச்சதங்களும் உள்ளடங்கும். அதிகபட்சமாக 319 ஓட்டங்களை பெற்றுள்ளார். அத்துடன் விக்கெட் காப்பாளராக 182 பிடியெடுப்புக்களையும், 20 ஸ்டம்பிங்களையும் செய்துள்ளார்.

2006ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணியுன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், மூன்றாவது விக்கெட்டுக்காக மஹெல ஜயவர்த்தனவுடன் இணைந்து பெற்ற 624 ஓட்டங்கள், கிரிக்கெட் வரலாற்றில் இன்று வரை முறியடிக்கப்படாத இணைப்பாட்டமாக காணப்படுகின்றது. இதில் சங்கக்கார 287 ஓட்டங்களையும், மஹெல 374 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

8,000 9,000 11,000 12,000 டெஸ்ட் ஓட்டங்களை விரைவாக குறைந்த இன்னிங்ஸ்களில் கடந்த வீரராக காணப்படுகின்றார்.

2015ஆம் ஆண்டு இந்தியாவுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது டெஸ்ட் ஓய்வை அறிவித்தார்.

2006ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் டி20 அறிமுகத்தை பெற்றுக் கொண்டார். இலங்கையின் 10வது டி20 வீரராவார். இதுவரையில் 56 போட்டிகளில் 1,382 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் 8 அரைச்சதங்கள் உள்ளடங்கும்.

2014ஆம் ஆண்டு இலங்கை கைப்பற்றிய டி20 உலக்கிண்ணம், இவரது இறுதி டி20 போட்டித் தொடராக அமைந்திருந்தது. இவருடன் சேர்ந்து மஹெல ஜயவர்த்தனவும் இதே தொடரில் ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2000-2015 ஆண்டு வரையான 15 வருட காலப்பகுதியில் மூவகையான சர்வதேச போட்டிகளிலும் 28,016 ஓட்டங்களை குவித்துள்ளார்.

260 முதல்தர போட்டிகளில் 20911 ஓட்டங்களை குவித்துள்ளார். 64 சதங்களும், 86 அரைச்சதங்களும் உள்ளடங்கும். அதிகபட்சமாக 319 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இதுவரையில் 5 ஐ.பி.எல் பருவகாலங்களில் விளையாடியுள்ள இவர், 62 போட்டிகளில் 1,567 ஓட்டங்களை பெற்றுள்ளார். அத்துடன் சன் ரைஸஸ் ஹைதராபாத் அணியின் தலைவராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று வரையில், இலங்கை, ஆசிய பதினொருவர், டெகான் சார்ஜஸ், துர்ஹம், ஹோபாட்ர் ஹரிகென்ஸ், ஐ.சி.சி உலக பதினொருவர், ஜமெக்கா தலாவஹஸ், கந்துரட்ட மெரூண்ஸ், கிங்ஸ் இலவன் பஞ்சாப், மெல்போர்ன் கிரிக்கெட் கிளப், நொன்டெஸ்க்றிப்ஸ்ட் கிரிக்கெட் கிளப், சன் ரைஸஸ் ஹைதராபாத், செரி வார்விக்சியர், கராச்சி கிங்ஸ் போன்ற அணிகளுக்காக இவர் விளையாடியுள்ளார். அத்துடன் இவ்வாண்டு நடைபெறவுள்ள பி.எஸ்.எல் போட்டி தொடருக்கு முல்டன் சுல்டதன்ஸ் அணிக்காக ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2006 பங்களாதேஷ் அணியுடனான சுற்றுப் பயணத்தின் போது, அப்போதைய அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து உபாதைக்குள்ளானமையினால் தற்காலிக தலைவராக மஹேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டார். அத்தொடரில் உப தலைவராக குமார் சங்கக்காரவே நியமிக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மஹேல இராஜனாமா செய்ததை தொடர்ந்து, மூவகையான போட்டிகளுக்கும் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டி வரை இலங்கை அணியை கொண்டு சென்றிருந்தார். அப்போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அணித்தலைவர் பதவியிலிருந்து இராஜனாமா செய்தார். அதனைத் தொடர்ந்து திலக்கரத்ன டில்சான் தலைவராக நியமிக்கப்பட்டார். சங்கக்கார அணித்தலைவராக இலங்கைக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். 15 டெஸ்ட் போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி, 45 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 27 வெற்றி, 14 தோல்வி, 21 டி20 போட்டிகளில் 12 வெற்றி, 9 தோல்வி. 2015ல் சகல சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றிருந்தாலும், தான் டெஸ்ட் போட்டியை அதிகம் விரும்பியதன் காரணமாக, தொடர்ந்தும் கழகங்களுக்கிடையில் ஒப்பந்த அடிப்படையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தார்.

 

Comments