பிரஜா உரிமை | தினகரன் வாரமஞ்சரி

பிரஜா உரிமை

கனகா கந்தசாமி...
புசல்லாவை

அவனின் ஓர் அசைவு தென்படுகின்றது. சுய நினைவுக்கு திரும்பி கொண்டிருக்கின்றானா...! மூன்று தினங்கள் எவ்விதமான அசைவுகளுமின்றி கிடந்தவனின், ‘அது’வாகிப் போய் விடுவானோ என்று நினைக்க வைத்தவனில் இன்று ஆச்சரியமான ஒரு மாற்றம்... அவன் கட்டிலருகே நின்று கொண்டிருக்கும் பாலாவும், கௌரியும் அவன் கண்விழிக்க வேண்டுமே என்ற எதிர்பார்போடு ஏக்கத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மெதுமெதுவாக திறக்கின்றன இமைகள். மீண்டும் மூடிக்கொள்கின்றன. சில நிமிடங்களில் மீண்டும் திறக்கின்றன. எதிரே மங்களாகத் தெரியும் ஒரு முகம், அவன் முகத்தருகே குனிக்கின்றது.

“பெரியப்பா”... பாலாதான் அழைக்கின்றான்.

பாலாவின் குரலை அவனால் இனங்காண முடிகின்றது. சில கணங்களில் பாலாவின் முகமும் தெளிவாகத் தெரிகின்றது. உதடுகளை அசைக்க முயலுகிறான். ஒலியெழும்ப மறுக்கின்றது. அவன் பார்வை கட்டிலைச் சுற்றி வலம் வருகின்றது. அவன் காலடியருகே அழுத விழிகளுடன் அவனையே பார்த்தவாறு நின்றிருக்கும் கௌரி. அவர்களிருவரைத் தவிர வேறு ஒருவரும் அவனருகே இல்லையே!...

அவனது ராதா, மகள் பூஜா எங்கே... எங்கே... ! மீண்டும் குழப்பம் தலைக்குள்...! சோர்ந்து போகிறவன் மீண்டும் கண்களை மூடிக் கொள்கின்றான். கண்ணீர் கன்னங்களில் வழிந்தேடுகின்றது.

அவன் கண்ணீரை துடைத்துவிடும் பாலா, ‘பெரியப்பா, பெரியப்பா....’ என்றழைத்தவாறு அவன் கைகளைப் பற்றி ஆட்டுகின்றான். மீண்டும் கண்களை திறந்த அவன், பாலாவின் கைகளை இறுகப் பற்றிக் கொள்கின்றான்.

“அம்மா பெரியப்பா கண்விழிச்சா தனக்கு அறிவிக்கச் சொல்லி மாதவன் சொன்னார்தானே. அவருக்கு சொல்லிட்டு வாங்களேன்...” பாலா சொல்ல, கௌரி மருத்துவர் மாதவனை அழைத்து வர விரைகின்றாள்.

“பாலா” நலிந்து ஒலிக்கின்றது. அவன் குரல்.

“பெரியப்பா.... குடிக்க ஏதாவது தரட்டா...” பரிவோடு கேட்கிறான்.

“வேண்டாம்” என்பவன் “எனக்கு என்ன நடந்தது. ராதாவோட போன்ல பேசிக் கொண்டிருந்தது மட்டும் ஞாபகமிருக்குது....” கேட்கிறான்.

“உங்கள் ஹொஸ்பிட்டில” சேர்த்து இன்றோடு நாலு நாளாச்சு. பெரியம்மாவோட ‘போன்ல’ பேசிக் கொண்டிருந்த நீங்க மயங்கி விழுந்திட்டீங்க... மூன்று நாள் மயக்க நிலையிலதான் இருந்தீங்க. நல்லா பயந்து போயிட்டம்....” பாலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வைத்தியர் மாதவன் அவனது அறைக்குள் நுழைகின்றார்.

அவனருகே வந்தவர் “குட்மோனிங் சிவா அங்கிள்” என்ற போது புன்னகைத்தபடி தலையசைக்கிறான் சிவா என்றழைக்கப்படும் சிவராஜா.

“இப்போது எப்படி ‘பீல்’ பண்றீங்க அங்கிள். கனக்க யோசிக்காதீங்க. உங்களுக்கு நாங்கள் எல்லோரும் இருக்கிறம்...” கதைத்தக் கொண்டே சிவாவை பரிசோதிப்பவர் முகத்தில் ஒருவித திருப்தி தென்படுகின்றது.

“ஓ.கே. அங்கிள். இன்னும் இரண்டு நாட்களில் நீங்கள் வீட்டுக்கு போகலாம். ஒரு வாரத்துக்குப் பிறகு அப்பாவோட காலையில் ‘வோக்’ போகலாம். முதல்ல சூடாக ஏதாவது குடிச்சிட்டு, பிறகு சாப்பிடுங்க. தைரியமாக இருங்க அங்கிள் ‘கோட் பிளஸ் யூ’ அங்கிள்....” என்பவர் அறையை விட்டு வெளியேறும் போது கௌரியை அழைத்து சிவாவுக்கு கொடுக்க வேண்டிய உணவு முறை பற்றிய விளக்கங்களைச் சொல்லிச் செல்கிறார்.

வைத்தியர் மாதவனைப் பின் தொடரும் பாலா ‘டொக்டர் ரொம்ப தேங்ஸ். உங்கள்ட தீவிர கண்காணிப்பாலதான் பெரியப்பா இவ்வளவு சீக்கிரமாக பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறார்....’ கண்கலங்கிப் போகின்றான்.

“அது என்ட கடமை பாலா. சிவா ‘அங்கிள்’ என்ட அப்பாட நண்பர் எண்டுமட்டும் தானே உங்களுக்குத் தெரியும். எண்ட அப்பாவும், அம்மாவும் வெளிநாட்டில மூன்டு வருஷம் இருந்த காலத்தில் நான் கல்முனையில் ‘அங்கிள்’ வீட்டிலதான் வளர்ந்தன். ‘அங்கிள்’ என்ட ‘கோட் பாதர்’ பாலா. ஆமாம் ‘ஆன்டியும்’, பூஜாவும் எப்ப வருவினமாம்....” மாதவன் கேட்க,

“பெரியம்மா எப்ப வருவாங்க என்றது தெரியாது பூஜா அக்கா நாளைக்கு வர்ராங்களாம்...”

“ம்.... நீங்க எல்லாரும் உடன் இல்லாம இருந்திருந்தால் ‘அங்கிள்’ட நிலைமை பரிதாபமாக இருந்திருக்கும். உங்கட அப்பாவுக்கு ‘கோல்’ எடுத்துச் சொல்லிடும். இன்டைக்கும் இரண்டு முறை எனக்கு ‘கோல்’ எடுத்து ‘அங்கிள்’ பற்றி விசாரிச்சவர்....” சொல்லிவிட்டு மாதவன். செல்கிறார்.

தனது தந்தைக்கும், அத்தை மங்களாவுக்கும் அழைப்பெடுத்து, சிவாவின் உடல்நிலை பற்றி சொல்லிவிட்டு அறைக்குத் திரும்புகின்றான் பாலா. சிவாவை தூக்கி தலையணையில் சாய்ந்து அமரச் செய்கின்றான். சுடுநீரில் ‘டவலை’ நனைத்து அவன் முகத்தை துடைத்து விடுபவன் ‘டவலா’ல் உடம்பை ஒற்றி எடுத்த பின் சிவாவுக்கு அருந்த பானம் கொடுக்கின்றான். சூடான பானம் தொண்டைக்குள் இறங்கியபின் சின்னதாய் ஒருவித தெளிவு சிவாவின் முகத்தில்.

சிறிது நேரத்தில் காலையில் தாயார் ஹொட் பேக்கில் கொண்டு வந்திருந்த கஞ்சியை கரண்டியால் ஊட்டுகின்றான். கஞ்சி வயிற்றை நிரப்ப உடம்பில் ஒருவித தெம்பு வந்தாற் போன்றிருக்கிறது. அவனுக்குரிய மருந்துவில்லைகளை பாலா தர அதை விழுங்கி விட்டு லேசாக கண்ணை மூடுகிறான்.

காலடி ஓசைகள்... கண்விழிக்கச் செய்கின்றது...!

பாலாவின் தந்தை சண்முகமும், அக்கா மங்களாவும் வந்திருக்கின்றனர். மங்களா சிவாவின் கைகளைப் பற்றி அழத் தொடங்கி விடுகின்றாள். “தம்பி பதற வைச்சிட்டியோடா, நான் வேண்டாத தெய்வமில்ல... அந்த தெய்வம் என்னை கைவிடல்ல...” அவளால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

“அத்தை ஆழாதீங்க. பாருங்க பெரியப்பாவும் அழுகிறார். அவரை பலவீனப் படுதத்தாதீங்க...” பாலாவின் குரவில் கண்டிப்பிருந்தாலும் கண்கள் கலங்குகின்றன. மங்களாவை அணைத்து கதவருகே இருக்கும் கதிரையில் அமரச் செய்கின்றான் பாலா.

கௌரி கணவனிடம் ஏதோ மெதுவாக சொல்ல, சண்முகமும் பாலாவும் சேர்ந்து சிவாவை மெதுவாக கட்டிலிலிருந்து இறக்கி சாய்வு நாற்காலியில் அமர்த்துகின்றனர். கௌரி படுக்கை விரிப்பு தலையணையுறை, எல்லாவற்றையும் மாற்றுகின்றாள். சண்முகம் அவனது உடையை மாற்றிவிட எல்லாவற்றையும் ஒரு பையில் வைத்துக் கொள்கிறாள் கௌரி. துவைப்பதற்காக கொண்டு செல்கிறாளா! அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் சிவாவும் குற்றவுணர்வு மனதில் முள்ளாய்க் குத்தகின்றது. மனைவி ராதா அவனுக்காக செய்ய வேண்டிய பணிவிடைகள் இவை.... ஆனால் இன்றவன் மனைவி அவனருகில் இல்லையே...!

ராதாவுக்காக தன் மனசாட்சியைக் கொன்று, அவனுக்காக நிச்சயிக்கப்பட்டிருந்த இந்த கௌரியைத் தானே தூக்கி எறிந்து விட்டு. சென்றான்... ஆனால் இன்று அவளும் அவள் கணவனும், மகனும் அவனருகில் அவனுக்கு ஆதரவாக...! எப்படி இவர்களால் தன் மீது அன்பைச் சொரிய முடிகின்றது. அவர்களது களங்கமில்லாத அன்புக்கு தான் தகுதி அற்றவன் என்ற உணர்வு. அவன் செய்த துரோகத்திற்கு தண்டனையாகி அவனை வருத்துகின்றது.

“சண்முகம்...” அழைக்கின்றான்

“என்னண்ணா ஏதாவது வேணுமா....” சுண்முகம் கேட்க,

வேண்டாம் என்பது போல தலையாட்டுபவன். “கௌரி, பாலா உங்களுக்கெல்லாம் நான் ரொம்ப கஷ்டம் கொடுத்திட்டேன். என்னை மன்னிச்சிடுங்க...”கை கூப்புகின்றான். கண்ணீர் வழிகிறது.

மூவரும் பதறிப் போகின்றனர். “வேண்டாம் அண்ணா. இப்பிடியெல்லாம் சொல்லி எங்கள அந்நியப் படுத்திறாதீங்க...” கூப்பிய கரங்களைப் பற்றக் கொள்கிறான் சண்முகம். கௌரியும், பாலாவும் வீட்டுக்குச் செல்ல, சண்முகமும், மங்களாவும் அவனருகில் இருக்கின்றனர். சிறிது நேரத்தில் நன்றாக உறங்கி விடுகின்றான்.

ஆழ்ந்த நித்திரையில் இருப்பவன், மாதவன் அழைப்பில் கண் விழிக்கின்றான். மாதவனின் பரிசோதித்து முடிய, பகலுணவு, மருந்து வில்லைகள... மீண்டும் நித்திரை. மாலையில் அவனது அறை, நண்பர்களின் வருகையில் கலகலக்கிறது. அவர்களின் அன்பு விசாரிப்புகள், ஆறுதலான வார்த்தைகள் அவனுள் புதுத் தெம்பை வரவழைக்கிறது. இரவு மங்களா வீட்டுக்குப் போய்விட, சண்முகம் அவனுக்கு துணைக்கு நிற்கிறான். இரவுச் சாப்பாட்டின் பின்னரான மருந்து வில்லைகள் அவனை அமைதியான நித்திரைக்கு அழைத்துச் செல்கிறது.

மறுநாள் பூஜா வந்து விடுகின்றாள். மகளைக் கண்டதும் அவளை கட்டியணைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்கிறான். மக்களின் அணைப்பு, அவனுக்குள் புது இரத்தம் பாய்ந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. ராதா வராதது குறித்து வருந்துகிறான். ராதாவுக்கு விசா கிடைக்காததால் வர இயலவில்லை என்பவள். அம்மா விரைவில் வருவாள் என்று ஆறுதல் கூறுகின்றாள். வீட்டுக்குச் சென்று உடைமாற்றி, சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு வரும் பூஜை நாள் முழுவதும் சிவாவோடு இருந்து அவனைக் கவனித்துக் கொள்கிறான்.

இரவு பூஜா வீடு செல்லும் போது சண்முகத்தையும் வீட்டுக்குச் செல்லும்படி சிவா கேட்டுக் கொள்ளும் போது, சண்முகம் மறுத்து விடுகின்றான். சண்முகம், சிவா நித்திரை கொள்வதற்காக மின் விளக்கை அணைத்து விட்டு இரவு விளக்கை ஒளிரச் செய்வதோடு கதவைச் லேசாக சாத்துகின்றான்.

“சண்முகம் நீ தூங்கப் போறியா... உன்னோட கொஞ்சம் மனம் விட்டு கதைக்க வேணும்” சினா கேட்கிறான்.

“எனக்கு தூக்கம் வரல்ல. நீங்க ஓய்வெடுக்கணும் அண்ணா. நாளைக்கு வீட்டுக்கு போன பிறகு கதைக்கலாமே’... சண்முகம் இதமாக மறுக்க,

“வீட்டுக்குப் போய் கதைக்க வசதிப்பாது. சண்முகம். என் பக்கத்தில வந்திரு...” என்றழைக்க. சண்முகம் பக்கத்தில் அமர்கிறான்.

“நான் அப்பாவை இப்போ அடிக்கடி நினைக்கிறேன். அப்பாவுக்கும், அக்காவுக்கும் நம்பிக்கை துரோகம் செய்திட்டன். ஒரு தோட்டத்தில கணக்கப்பிள்ளையாக வேலை செய்து கொண்டு அம்மா இறந்த பிறகு மறுமணம் செய்யாமல், மண்சரிவில இறந்து போன தங்கச்சியின் பிள்ளைகளையும் தானே பொறுப்பெடுத்து எங்கள வளர்த்தெடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்...! எனக்கு வங்கியில வேலை கிடைச்சதும். நான் குடும்பப் பொறுப்பெடுப்பேன், அக்காவுக்க கல்யாணம் செய்து வைப்பேன்... தான் ஓய்வெடுக்கலாம் என்று எப்படியெல்லாம் கனவு கண்டிருப்பார்...! ஆனால் நான் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டேன்...” கண் கலங்குகிறான்.

“அண்ணா இப்ப பழசையெல்லாம் நினைச்சு ஏன் கவலைப்படுறிங்க. நீங்க மனசை குழப்பிக் கொள்ளாமல் தூங்குங்க...” சண்முகம் ஆறுதல் சொல்கிறான்.

“இல்ல சண்முகம் என்ன கதைக்கவிடு. மனசில பெரும்பாராமா நான் செய்த துரோகம் அழுத்திக் கொண்டேயிருக்குது. இந்த மன அழுத்தத்திலிருந்து எனக்கு விடுதலை கிடைக்கணும். வேலைக்குப் போய் ஆறு மாதத்திலேயே காதல் வசப்பட்டு ராதாவுக்காக, அவங்க ஆசை. கனவையெல்லாம் கலைச்சிட்டுட்டு, அவங்கள தூக்கி எறிஞ்சிட்டு அவ பின்னால போயிட்டேனே. ‘நோய்வாய்பட்ட அப்பாவ வந்து பார்த்தேனா... இல்லையே...! அப்பா என்னை எதிர்பார்த்து எப்படி ஏங்கியிருப்பார் என்பதை இப்போது உணர முடியுது. அப்பாட செத்த வீட்டுக்கு வந்தும் அந்நியன் போலத்தான் நடந்து கொண்டேன் ராதாட தங்கைக்கு ஒரு வாரத்தில கல்யாணம் நடக்க இருந்ததால அவருக்கு செய்ய வேண்டிய இறுதிக் கருமங்களை கூட நான் செய்யல்லையே! அப்பாவுக்குப் பிறகு அக்காட நிலைமை பற்றி யோசிச்சேனா இல்லையே...”

“நான் அப்பாவுக்கு செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் நீதானே செய்தாய். பெரியப்பாட சொல்ல மீறக்கூடாது என்று கௌரியை கல்யாணம் முடிச்சதோ் அக்காவையும் பார்த்துக் கொண்டாய். அவரோட ஆசீர்வாதத்தாலதான் இன்றைக்கு நீங்க நல்லா வாழுறீங்க. என்னைப் பார் தனியாக கிடந்து உத்தரிக்கிறேன்...” மேலே தொடர இயலாமல் இருமுகிறான்.

“அண்ணா போதும்... இனிப் படுங்க” என்றவாறு சிவா அருந்த தண்ணீர் கொடுக்கிறான் சண்முகம்.

தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் சிவா, மீண்டும் தொடர்கிறான். “சண்முகம் காதல் நம்ம வாழ்க்கையையே தலை கீழா புரட்டிப் போட்டுறும். ஒரு பெண்ணை விரும்பிய அவளை நம்ம விரும்பச் வைச்சு, கல்யாணம் முடிச்ச பிறகு. அவளை திருப்தி படுத்திறதுக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுக்கிறம். நம் அன்னை நிரூபிக்க விட்டுக்கொடுத்து. விட்டுக்கொடுத்து, சுயமாக சிந்திக்கிற தன்மையையையே இழந்துடுறம். மொத்தத்தில ஒரு அடிமை மாதிரி மாறிடுறம். அதுக்குப் பிறகு அவங்க பெற்ற நமக்கு பிடிக்காத விசயங்களையும்... பிழைகளை தட்டிக் கேட்க இயலாதவங்களாகி மனசுக்குள்ள புழுங்கிச் சாகிறம். பார் இப்ப ராதா என்னோட ஒரு என்று சொல்ல வலிமை இல்லாமதான் இருக்கிறன்.

கல்முனையில ராதாட வீட்டுக்கு மாப்பிள்ளையாப் போய், தகப்பன் இல்லாத அந்த குடும்பத்த முன்னேற்றத்துக்குதானே பாடுபட்டேன். ராதாட தங்கைகள் இரண்டு பேரையும் வசதியான இடத்தில கல்யாணம் முடிச்சுக் கொடுக்க இன்றைக்கு அவங்க வெளிநாட்டில...! எனக்கு ஒரு ‘கோல’ எடுத்தாவது சுகம் விசாரிக்கிறதில்லையே. ராதாட வீட்டில அவங்க முன்னேற்றத்துக்காக என்னை பயன் படுத்திக்கொண்டாங்க என்று இப்பதான் புரியிது. எண்ட அக்காவுக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு தோனாத அடிமை வாழ்வு வாழ்ந்திருக்கிறான்.

அவங்க மட்டுமில்ல... நானும் எவ்வளவு மோசமான சுயநலக்காரன். பூஜாவுக்கு கொழும்பு ‘கெம்பஸ்’சுக்கு அனுமதி கிடைச்சு இங்க வந்து ‘செட்டிலான’ பிறகு, நீங்க எல்லோரும் கொழும்புக்கு வந்தது தெரிஞ்சும் உங்கள தேடி நான் வரல்லையே...! ஆனால் ராதாவுக்கு ‘எக்சிடன்ட்’ ஆகி நடக்க முடியாம போன போதுதான் எனக்கு உங்கட ஞாபகம் வந்தது. அக்காவ உதவிக்கு கூப்பிட்டதும் மறுப்ப சொல்லாமல் வந்துதவியது அவங்கட பெருந்தன்மை.

(தொடர் 20ஆம் பக்கம்)

Comments