கொழும்புக்கு புது மெருகு தரும் துறைமுக நகரம் | தினகரன் வாரமஞ்சரி

கொழும்புக்கு புது மெருகு தரும் துறைமுக நகரம்

ராம்ஜி

கொழும்பு துறைமுக நகரம் ஆரம்பிக்கப்பட்ட போது ஆசியாவின் ஆச்சரியத்துக்கான பயணத்தின் கேந்திரமாக கருதப்பட்டது. அடுத்து தெற்காசியாவின் நிதி நிலை மையமாக கருதப்பட்டது. இப்போது கொழும்பு நகரம் தாழ்வடைவதற்கு ஒரு காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கொழும்பு நகரின் வரைபடத்தை மாற்றும் வகையில் அதனுடன் சேரவிருக்கும் இந்த சிறு நிலப்பகுதியான கொழும்பு துறைமுக நகரத்துக்கு 2014 செப்டம்பர் 16 ஆம் திகதி சீன ஜனாதிபதி சிங்பின் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.

இப்போதைக்கு துறைமுக நகரத்கின் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட வேலைகள் பூர்த்தியடைந்துள்ளன. இந்த நிலையில் கடந்த மாதம் சிங்கள பத்திரிகையொன்றில் வெளிவந்த ஒரு செய்தி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு பொறியியலாளரை மேற்கோள்காட்டி துறைமுக நகரத்தின் நிர்மாண வேலைகள் காரணமாக கொழும்பு நகரம் பூமியில் அமிழ்வதாக முதல் பக்க செய்தி கூறியது.

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் பிரசாரத்தின்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இவ்விடயத்தை பற்றி கூறியதையடுத்து இவ்விடயம் பரவலாகியது.

இந்த விடயத்தில் ஓரளவு உண்மை உள்ள போதிலும் அது பாரதுாரமானது அல்ல என்கிறால் சம்பந்தப்பட்ட அமைச்சர்.

கொழும்பு துறைமுக நகரத்தை அமைக்க வேண்டியதன் நோக்கத்தை முதலில் பார்ப்போம். கொழும்பு நகரம் இப்போது இருக்கும் நிலையில் சர்வதேச வர்த்தக பிரமுகர்களையும் உயர்மட்ட உல்லாசப் பயணிகளையும் ஈர்க்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனவே, நவீன நகரமொன்றின் அவசியம் உணரப்படுவதால் பிராந்திய வர்த்தகத்தை கேந்திரப்படுத்தும் வகையிலும் சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் வசதிகளுடனும் கூடிய துறைமுக நகரம் திட்டமிடப்பட்டது.

இதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் கொழும்பு துறைமுகத்தின் தென்முனையிலுள்ள அலைதாங்கியுடன் கூடிய இடமாகும். இந்த இடத்தை கொழும்பு நகரின் மத்திய வர்த்தக பிரதேசமாக மாற்றுவதானால் குறிப்பாக சிங்கப்பூர், டுபாய் மற்றும் ஹொங்கொங் ஆகிய இடங்களில் உள்ள வர்த்தக கேத்திரங்களின் தரத்தை எட்டவேண்டுமானால் குறிப்பிட்ட அந்த இடத்தை ஸ்திரப்படுத்த வேண்டும். இதற்காகவே கடலில் மண்ணை நிரப்பி அதனை புதிய நகரத்துக்கான காணிப்பிரதேசமாக மாற்றுவதென தீர்மானிக்கப்பட்டது.

புதிதாக உருவாக்கப்படும் துறைமுக நகரம் கடலில் நிரப்பப்பட்ட 269 ஹெக்டயர் நிலத்தில் நிர்மாணிக்கப்படும. கொழும்பு துறைமுகத்தை ஒரு புறமாகவும் பிரபலமான காலிமுகத்திடல் முற்ற வெளியை மறு புறமாகவும் துறைமுக நகரத்தின் மற்றைய பகுதி கடலை ஒட்டியதாகவும் இருக்கும்.

இலங்கையின் மிகப் பெரிய உட்கட்மைப்பு நிர்மாணம் என்ற வகையில் இந்த துறைமுக நகர திட்டம் அமைந்தது. சுமார் 1.4 மில்லியன் டொலர்கள் நிதியுதவியில் வானளாவிய கோபுரங்கள், உல்லாச ஹோட்டல்கள், கடைத்தொகுதிகள், பூங்காக்கள் ஆகியவை இதில் உள்ளடக்கப்படவுள்ளன.

துறைமுக நகரத்தின் மொத்த நிலப்பபரப்பு 269 ஹெக்டயர் கடலில் நிறைக்கப்பட்ட நிலமாக இது அமையும். 2014 செப்டம்பரில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சீன ஜனாதிபதி சிங் பின்னும் வைபவரீதியாக கொழும்பு துறைமுக நகர திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

சீனாவின் சீன தொலைத்தொடர்புகள் நிர்மாண நிறுவனம் (CCCC), இலங்கையின் துறைமுக நகர நிறுவனம் (CHEC) ஆகியவை இணைந்து நிர்மாண வேலைகளில் இறங்கின.

கொழும்பு துறைமுக நகரத்தில் 3 கிலோமீட்டர் நீளமான செயற்கையாக உருவாக்கப்பட்ட கடற்கரை, நீர் விளையாட்டுக்கள் ஆகியவற்றுடன் 45 ஹெக்டயர் நிலப்பரப்பில் பூங்காக்களும் அமைகின்றன. இந்த பூங்காக்கள் தற்போது மக்களிடையே பிரபல்யமாக உள்ள காலிமுகத்திடல் வெளியை விட 9 மடங்கு அதிகமானதாகும். காலிமுகத்திடலின் பரப்பளவு வெறும் 5.7 ஹெக்டயர் மட்டுமே

இப்போது 61 சதவீத வேலைகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 2020இல் துறைமுக நகரம் திறந்து வைக்கப்படவுள்ளது.

துறைமுக நகர நிர்மாணத்திற்கு சுமார் 3.85 மில்லியன் கனமீட்டர் பாறாங்கல் தேவைப்படுகிறது. கொழும்பிலும் கம்பஹாவிலும் உள்ள பாறைகளில் இருந்து இவை வெட்டியெடுக்கப்படவுள்ளன. அதேநேரம் 65 மில்லியன் கனமீட்டர் மணலும் தேவைப்படுகிறது.

நிர்மாண வேலைகள திட்டமிட்டபடி நடந்தால் 2020 இல் கொழும்பு துறைமுக நகரம் திறக்கப்படும். இதன் மூலம் கொழும்புக்கு மேலும் 269 ஹெக்டயர் சேரும். கொழும்பு துறைமுக நகர காணி ஒரு பேர்ச் 8.5 மில்லியன் (85 இலட்சம் ரூபா)வுக்கு விற்பனையாகக் கூடும்.

கொழும்பு நகரின் பொலிவை இது முற்றிலும் மாற்றியமைக்கும். சிங்கப்பூர் மற்றும் மொரோக்கொவில் இருப்பதைப் போல இங்கு ஒரு போர்முலா 1 கார் ரேஸ் அரங்கும், பாரிய சூதாட்டங்கள் மற்றும் கொல்ப் மைதானம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நவீன வசதிகளுடன் கூடிய துழைமுக நகரத்துக்கு புதிய போக்குவரத்து பாதைகளும் தேவைப்படுகின்றன. எனவே, கட்டுநாயக்க நெடுஞ்சாலையை கொழும்பு கோட்டைக்கூடாக துறைமுகத்துடன் தொடர்புபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மரைன் டிரைவ் சாலையுடன் சுரங்கமொன்றுக்கூடாக துறைமுக நகரம் மறுபுறம் தொடர்புபடுத்தப்படவுள்ளது. அதேநேரம் கல்கிசை வரையிலான கடலோரத்தை துறைமுக நகரத்தின் விஸ்தரிப்பாக மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

Comments